8/25/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 4

கவி காளமேகம் எல்லா விதமான கவிதைகளையும் எழுதுவதில வல்லவர். அவருடைய தாக்கம் நம்மளையும் இந்த முயற்சிக்கு தள்ளி விட்டு இருக்கு. நீங்க இதுக்கு முந்தைய மூணு பதிவுகளைப் படிச்சுட்டு இந்த பதிவைப் படிச்சீங்கன்னா மேலும் பயனுள்ளதா இருக்கும். சித்திரக் கவியில மெல்லினப் பாடல், இடையினப் பாடல், வல்லினப் பாடல், நீரோட்டகம், ஒட்டியம் பாத்தாச்சு. அந்த வகைல இப்ப பாக்கப் போறது கோமூத்திரி (ஆநீர் நடை). பாட்டுல முதல் அடிய மேலயும், அடுத்த அடிய கீழயும் எழுதிட்டு, ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து மேலடியிலயும் கீழடியிலயும் படிக்கும் போது அதே அடி வரணும். இப்ப நீங்க மேலயும் கீழயும் ஒரு எழுத்து விட்டு எழுத்துப் படிக்கிறது ஒரு ஆ(மாடு) நடக்கும் போது சிறுநீர் கழிச்சுட்டுப் போனா, தரையில எப்படி இருக்குமோ அந்த சாயல்ல இருக்கும். சிரிக்கப் படாது, சரசுவதி கண்ணைக் குத்தீரும்! ஆம்மா... சொல்லிட்டேன்!! அதனால தான் இந்த வகைக்குப் பேரு கோமூத்திரி (கோ + மூத்திரம்). வழக்கம் போல என்னோட செல்ல மகளை மையமா வெச்சு ஆநீர் நடையில ஒரு கவிதை.

புகழும் வாக்கும்
பெற்று விடு!
நிகழும் போக்கும்
உற்று விடு!!

வீடு வாழ
நல்லது செய்து விடு!
நாடு வாழ
வல்லது உய்து விடு!!

வீட்டைக் காக்கப்
பூட்டைப் போடு!
நாட்டைக் காக்கப்
பாட்டைப் பாடு!!


பொருளுரை: செல்ல மகளே, புகழையும் உண்மை பேசும் வாக்கையும் கொண்டு, பின் இப்போது இருப்பது போலவே நல்லதொரு நிலையை எப்போதும் அடைந்து விடு. வீட்டார் நல்லபடியாக இருக்க நல்ல காரியங்களைச் செய்தும். நாடு நல்லபடியாக இருக்க வலிமை பெற்றும் இருப்பாயாக!. மேலும் வீட்டைப் பாதுகாக்க நல்லதொரு பூட்டைப் பூட்டுவது போல் நாட்டைப் பாதுகாக்க எழுச்சி மிக்க பாட்டைப் பாடு.

(இனியும் வரும்....)

10 comments:

Mahesh said...

கவி காளமேகம் உங்களை கனவிலயும் கூட தாக்கறார் போல இருக்கு. நீங்களும் சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டு பட்டுன்னு படைக்கிறீங்க. பாரட்டுக்கள். நானெல்லாம் பாராட்டத்தான் முடியும். சாதாரண கவிதையே எனக்கு சிங்கப்பூருக்கும் சார்லெட்டுக்கும் உள்ள தூரம்.

அது போகட்டும்.... இந்த பாட்டுல முதல் பகுதில 'அடைந்து விடு' 2 முறை பிரயோகம் ஆகிருக்கு. வேற மாதிரி இருந்தா நல்லாயிருக்குமோ?

என்னோட 2 பைசா...

புகழும் வாக்கும்
கடைந்து எடு

சரி சரி .... அடிக்க வராதீங்க

பழமைபேசி said...

//கவி காளமேகம் உங்களை கனவிலயும் கூட தாக்கறார் போல இருக்கு. நீங்களும் சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டு பட்டுன்னு படைக்கிறீங்க. பாரட்டுக்கள். நானெல்லாம் பாராட்டத்தான் முடியும். சாதாரண கவிதையே எனக்கு சிங்கப்பூருக்கும் சார்லெட்டுக்கும் உள்ள தூரம்.

அது போகட்டும்.... இந்த பாட்டுல முதல் பகுதில 'அடைந்து விடு' 2 முறை பிரயோகம் ஆகிருக்கு. வேற மாதிரி இருந்தா நல்லாயிருக்குமோ?

என்னோட 2 பைசா...

புகழும் வாக்கும்
கடைந்து எடு

சரி சரி .... அடிக்க வராதீங்க
//
மகேசு, நாம ஒரே ஊர்ங்றது நல்லாவே புலப்படுது..... ஒரே சிந்தனை, அதுக்கு சொல்ல வந்தேன்..... நான் மொதல்ல இகழும் போக்கும் கடைந்து விடுன்னு எழுதி இருந்தேன். அதாவது, இகழ்வதையும் நட்பை போக்கிவிடுகிற செயல்களையும் துவம்சம் செய்து விடுங்ற பொருள்ள. ஆனா அப்படி, எதிர்மறையா
பாட வேண்டாம்னு "புகழும் வாக்கும் அடைந்து விடு!". இதுல கடைந்து பிரயோகம் செஞ்சா பொருள் மாறுது பாருங்க. கடைதல்னா
பிரித்தால், துளை போடுதல் அல்லது நிர்மூலம் செய்தல்ங்ற பொருள் தூக்கி நிக்க்கும்ங்றது என்னோட தாழ்மையான அபிப்பிராயம்.

" புகழும் வாக்கும் கொண்டுவிடு!
நிகழும் போக்கும் கொண்டுவிடு!!
நட்பும் பண்பும் கொண்டுவிடு!!!
செல்வமும் கல்வியும் கொண்டுவிடு!!!!
.................
................."
உதாரணத்துக்கு, இப்படி ஒரு அடிக்கு மேல பாட்டு இருந்து ஒரு சந்தத்துல முடியுற மாதிரி இருந்தாலும் அது இடிக்காது.
ஆகவே, இங்க இசைக்கு முக்கியத்துவம் தராம, கணக்கு பிழைக்காமலும் ஒரு முயற்சி!
கூடவே உதாரணத்துக்கு மேல சொன்ன பாட்டு கூட ஒரு வகை சித்திர கவிதான்.

Mahesh said...

ரொம்ப சரிங்க.... எதிர்மறையை தவிர்ப்பது நல்லதுதான்.....

நான் 'கடைந்து எடு'ன்னு சொன்னது - நல்லவற்றை சுலபமாக அடைய முடியாது.... கடைந்துதான் மேன்மையான்வற்றை பெற முடியும் (உ.ம். தயிர் கடைந்து வெண்ணை எடுப்பது)

பழமைபேசி said...

//
Mahesh said...
ரொம்ப சரிங்க.... எதிர்மறையை தவிர்ப்பது நல்லதுதான்.....

நான் 'கடைந்து எடு'ன்னு சொன்னது - நல்லவற்றை சுலபமாக அடைய முடியாது.... கடைந்துதான் மேன்மையான்வற்றை பெற முடியும் (உ.ம். தயிர் கடைந்து வெண்ணை எடுப்பது)
//
இது ஒட்டக்கூத்தரும் கம்பரும் விவாதம் பண்ணுற மாதிரி இல்ல இருக்கு.... நீங்க குடுத்த விளக்கம் சரி.... ஆனா, ஆநடைக்கு உண்டான இலக்கணம் பிழைத்து விடுமே?
அடுத்த அடியில இருந்து உங்களுக்கு 'வி' தான் வரும். சரியான வேள்வி தான்..... நொம்ப நன்றீங்க..... கூச்சம் இல்லாம இது போலக் கேட்டுகிட்டே இருங்க....

பழமைபேசி said...

மகேசு அய்யா, இது உங்களுக்கு அல்ல!

பொதுவா, இந்த பதிவை பாக்குறவங்க, போட்டு இருக்குற அந்த ரெண்டு படத்தையும் நல்லா கவனியுங்க....

Mahesh said...

பின்னூட்டம் போட்ட பிறகு நான் அந்த பிழைய பார்த்துட்டேன். நீங்க சுட்டுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் 2வது அடிய 'எ'ன்னு மாத்த முடியுமான்னு யோசிச்சு பாத்தேன்.

பழமைபேசி said...

//Mahesh said...
பின்னூட்டம் போட்ட பிறகு நான் அந்த பிழைய பார்த்துட்டேன். நீங்க சுட்டுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் 2வது அடிய 'எ'ன்னு மாத்த முடியுமான்னு யோசிச்சு பாத்தேன்.
//
மகேசுவோட ஆர்வத்தை பாராட்டுகிறேன். அவரோட கருத்தையும் நாம மதிக்கணும் இல்லையா?
அதான் "கடைந்து", "அடைந்து" கடாசிட்டு "உற்று" "பெற்று" னனு மாத்தி ஆச்சு.

Mahesh said...

மிக்க நன்றி.....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆகா இந்தக் கவிவடிவம் எனக்கு முற்றிலும் புதியது. தமிழில் இவ்வாறான நயங்களெல்லாம் எங்கே போய்விட்டது என கவலை கொள்ளவேண்டியுள்ளது. மணி, உங்கள் பதிவுகள் மெருகேறிக்கொண்டே வருகின்றன். மிக்க மகிழ்ச்சி,

மகேஷின் பின்னூட்டங்களும் நன்று. இறுதியில் கவி பொலிவு பெற்றுள்ளது.

மதுவதனன் மௌ.

பழமைபேசி said...

//மதுவதனன் மௌ. said...
ஆகா இந்தக் கவிவடிவம் எனக்கு முற்றிலும் புதியது. தமிழில் இவ்வாறான நயங்களெல்லாம் எங்கே போய்விட்டது என கவலை கொள்ளவேண்டியுள்ளது. மணி, உங்கள் பதிவுகள் மெருகேறிக்கொண்டே வருகின்றன். மிக்க மகிழ்ச்சி,

மகேஷின் பின்னூட்டங்களும் நன்று. இறுதியில் கவி பொலிவு பெற்றுள்ளது.

மதுவதனன் மௌ.

//
உங்கள் அன்பும் ஆதரவும் ஊக்குவிப்பும் தான் காரணம். இன்னும் நிறைய இருக்கிறது பதிவு செய்வதற்கு! மிக்க நன்றி மதிவதனன்!!