8/08/2008

காளமேகம் போல், தகரத்தில் வேள்வி!

வணக்கம்! பெரிய அளவில் ஒரு கட்டுரை எழுத வேண்டுமென எண்ணி, குழுமத்தாருக்கு எமது படைப்புகளில் இருந்து சிறிது காலம் விடுதலை அளிப்பதாய் கூறி இருந்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. என்றாலும் இந்த ஒரு படைப்பு முடியும் தருவாயில் உள்ள படியால் இந்த மடலை சமர்ப்பிக்க நேரிட்டது. குழுமத்தார் ஆமோதிப்பீராக!

15 ஆம் நூற்றாண்டில் வைணவப் புலவராய் ஒருவர். சைவப் புலவராய் ஒருவர். இவர்கள் அவ்வப்போது இலக்கிய வேள்வியில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் வாதிட்டுக் கொள்வது உண்டு. ஒருவர் வில்லிபுத்தூரார், மற்றவர் அருணகிரிநாதர்.

வில்லிபுத்தூரார் மகாபாரதத்தைத் தமிழில் பாடினார். இவரது பாரதம் வில்லிபாரதம் எனப்படுகின்றது. வில்லிபுத்தூரார், தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள சனியூர் என்னும் ஊரில் பிறந்தவர். வைணவர்களான இவரது பெற்றோர், பெரியாழ்வாரின் இன்னொரு பெயரான வில்லிபுத்தூரார் என்பதை இவருக்கு இட்டனர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.

அருணகிரிநாதர், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்த(ராக)ங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இப்படியாக ஒரு தருணத்தில், கீழ் வரும் அருணகிரிநாதர் பாடலுக்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூற முடியாமல் தோற்றதாகச் சொல்லப்படுகிறது.

திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!


திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

நடராச மூர்த்தியாகிய சிவபெருமானும், பிரம்மனும், இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த மூலப் பொருளே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.

(சேர, சோழ, பாண்டியன்னு பத்த வெச்சான்! இப்ப வைணவர், சைவர்னு பத்த வெக்க ஆரம்பிச்சுட்டான்?! யார்யா இவன்??)

4 comments:

கோவி.கண்ணன் said...

மணிவாசகம்,

நீங்கள் இருக்கும் அதே நார்த் காரோலினாவில் தான் ஆத்திகம் என்ற பெயரில் பதிவு எழுதும் டாக்டர் சங்கர் குமாரும் (http://www.blogger.com/profile/02228683159559020853) இருக்கிறார், முடிந்தால் அவரை தொடர்பு கொள்ளுங்கள், சுவாரிசியமாக பேசி பழகக் கூடியவர்.

வெற்றி said...

நல்ல பதிவு. மிக்க நன்றி.

பழமைபேசி said...

// கோவி.கண்ணன் said...
மணிவாசகம்,

நீங்கள் இருக்கும் அதே நார்த் காரோலினாவில் தான் ஆத்திகம் என்ற பெயரில் பதிவு எழுதும் டாக்டர் சங்கர் குமாரும் (http://www.blogger.com/profile/02228683159559020853) இருக்கிறார், முடிந்தால் அவரை தொடர்பு கொள்ளுங்கள், சுவாரிசியமாக பேசி பழகக் கூடியவர்.
//ரொம்ப நன்றீங்க! அவசியம் தொடர்பு கொள்கிறேன்!!

பழமைபேசி said...

//வெற்றி said...
நல்ல பதிவு. மிக்க நன்றி.
//
பாராட்டுக்கு நன்றி நண்பா....