8/27/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 5

"சிலேடை நயம் இல்லாம, கவி காளமேகத்தோட தாக்கம் இவனுக்கு எப்படி வரும்?". இப்படிக் கேக்க ஆரம்பிச்சுட்டாங்கையா, கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! இப்படியான பொறகு, நாம சிலேடைல பாட்டு எழுதித்தான ஆகணும். சரி, அந்த வகைல எளிதான சொல்லுகளை வெச்சு எழுதின, இரட்டுற மொழிதல் (சிலேடை) பாட்டு ஒன்னைப் பாக்கலாங்க.

சோலை யழகு துள்ளி யோடும்
உள்ளம் கவர்ந்த பொன் வளர்
மாசறு மணி
மேனித் தளிர்
மான் மகவு மேஅது!

முதற்ப் பொருள்: சோலையைப் போல் அழகான, துள்ளி ஓடுகிற, உள்ளத்தை கவரக்கூடிய பொன்னாய் அரும்புகிறவள்; கெடுதல் இல்லாத, மணியைப் போல் உயர்ந்த மேனியுடன் வளர்ந்து வருபவள்; மான் போன்ற எழில் கொண்டவளுமாய் இருப்பது என் மகளே!

இரண்டாவது பொருள்: சோலை போன்றதொரு அழகாய், துள்ளி ஓடுவதும், உள்ளத்தைக் கவரக் கூடியதும், பொன்னான இளம் தளிர் போன்றதும், எந்த விதமான தீங்கு இழைக்காத, மேலான, இளமையான உடலைக் கொண்டதுமாய் இருப்பது மான் குட்டியே!

(இனியும் வரும்....)

4 comments:

Mahesh said...

காளமேகம்னா சிலேடை இல்லாமயா? நேயர் விருப்பம் : "வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன...." போட முடியுமா?

பழமைபேசி said...

//
Mahesh said...
காளமேகம்னா சிலேடை இல்லாமயா? நேயர் விருப்பம் : "வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன...." போட முடியுமா?
//
வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன
இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே.

இதை இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.
1. மளிகைக்கடைக்காரர், பெரு வியாபாரியிடம்: வெங்காயம் சுக்காக காய்ந்து விட்ட பின் வெறும் வெந்தயத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு வியாபாரம் செய்வது. வீணாகாத நல்ல சீரகம் கொடுத்தீர்களானால் பெருங்காயம் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடையை கொண்டு செலுத்தி விடலாம்.

2. கடவுளின், முன் அடியான்: வெம்மையான இவ்வுடம்பு வற்றிக் காய்ந்து விட்ட பின் இவ்வுலகில் இவ்வுடம்பைச் சுமந்து வாழ்ந்திருப்பதால் என்ன பயன். சீர் பொருந்திய இடமாகிய உன் திருவடிகளை எனக்குக் கொடுத்து விடுவீரேயானால் இவ்வுடம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்

Mahesh said...

அட... உடனே போட்டதுக்கு நன்றி....

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு "டேக்" பண்ணியிருக்கேன்... நம்ம வலைப்பக்கத்துக்கு வரவும்

பழமைபேசி said...

//Mahesh said...
அட... உடனே போட்டதுக்கு நன்றி....

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு "டேக்" பண்ணியிருக்கேன்... நம்ம வலைப்பக்கத்துக்கு வரவும்
//
கொக்கிக்கு நன்றி! அதை விட, நீங்க சொன்னதுல ஒரு சில வலையகம் எனக்கு அறிமுகம் இல்லாதது. அந்த வகைல தந்த தகவலுக்கு மேலும் நன்றி!!