8/17/2008

வீட்டு வேலைக்காரி கிட்டாள்

அன்னை தெரசா போல், அடுத்த வீட்டுக் குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல் பாவித்து மனித குலத்தின் மாண்பு காக்கும் 'கிட்டாள்'களும் 'மயிலாள்'களும் வேலைக்காரி, தாதி, ஆசிரியை என்றெல்லாம் வேறு வேறு போர்வையில் பாரெங்கும் வியாபித்து இருக்கிறார்கள். குறிப்பாக, கொங்கு நாட்டில் ஏராளம்! ஏராளம்!! அவர்களுக்கு இந்த எளியவனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!!! மேலும் எனது நினைவுகளை அவர்களுக்கு நன்றிக் கடனாய் காணிக்கை ஆக்குகிறேன்.

ஊட்டுக் கொல்லையில ஆசையா
நான் நட்டு வெச்ச துளுக்குமல்லி
செடிஒன்னை மயிலை மாடு
மேஞ்சுருச்சுன்னு ஒக்காந்து நான்
அழுவ, கெடங்கு வீட்டு தோட்டத்து
நாத்து கொண்டாந்து ஒரு பாத்தி வெச்சு,
அந்த மஞ்ச நெறப்பூவ பாக்க வெச்சு
என்னை அழகு பாத்தியே
நல்ல மனசு கிட்டா!

செட்டுக்காரஊட்டுப் பயலுவ எட்டு
மூலைப் பட்டம் விடுறாக, எனக்கும்ஒரு
பட்டம் வேணுமுன்னு நானழுவ, ஊட்டு
மரத்துல இருந்த பப்பாளி பழம்நாலும்
ஊட்டு சனம் யாருக்குந் தெரியாம
கோயிந்தங்கிட்ட குடுத்து அவனோட
பட்டத்த பறிச்சுவந்து, ஊரோரம் இருக்குற
எங்க கட்டக்காட்டுப் புழுதியில
பறக்க விட்டு வேடிக்கை காமிச்சயே
நல்ல மனசு கிட்டா!

அப்பனாத்தாவுக்கு தெரியாம
பெரியதோட்டத்து கெணத்துல
ஊர்ப்பசங்க கூட சேந்துட்டு கண்ணு
முண்ணு தெரியாம தண்ணியில
நீந்தப் போன என்னை, அம்மணமா
நிக்கவெச்சு எங்கம்மா என்னையடிக்க,
பதறி ஓடியாந்து என்னைத் தூக்குனயே
நல்ல மனசு கிட்டா!

தைப்பூசத்தேருக்கு ஊருசன மெல்லாம்
வண்டிகட்டி செஞ்சேரி மலைக்கு
படை படையாப்போக, திண்ணையில
ஒக்காந்து கண்ணக் கசக்கிகிட்டு
நானழுவ, நான் கூட்டிட்டு போயிட்டு
வாறன்னு சொல்லி கூட்டிக்கிட்டுப்
போயித் தேரு சந்தையில உன்னோட
கொங்கு முடிச்சவுத்து அதுல இருந்த
காசுக்கு சருபத்து வாங்கித் தந்தயே
நல்ல மனசு கிட்டா!

நல்லதண்ணி புடிக்க வரிசையில
நின்னப்ப, என்னை ஒதுக்கிஉட்டு

ஒதுக்கிஉட்டு ஊருசனம்
கொழாயில தண்ணி புடிக்க,
வந்து எல்லார்த்தையும், எந்தாயி
அம்முலு அம்மா பேரன் கால்
கடுக்க நிக்க, நீங்க எந்த சாமி
புள்ளைகன்னு தட்டிக் கேட்டயே
நல்ல மனசு கிட்டா!

மேல்படிப்பு படிக்க வேணுமின்னு எங்கப்ப
னாத்தா என்னை லட்சுமிநாய்க்கன்
பாளையத்துல கொண்டாந்து உட்டதுல
கண்ணு கலங்கி சோந்து போன ஊன்வுசுரு
கொஞ்ச நாளைக்கப்புறம் நெஞ்சு வலியின்னு
போயர் வளவுல போயுருச்சாம்; அப்புறம்

என்னைவுட்டுப்போட்டு பாடையில வடக்க
போயிட்டயே நல்ல மனசு கிட்டா!

என்னைவுட்டுப்போட்டு பாடையில வடக்க
போயிட்டயே நல்ல மனசு கிட்டா!


5 comments:

வேளராசி said...

அற்புதம்.

பழமைபேசி said...

//வேளராசி said...
அற்புதம்.
//


எல்லாம் பழைய ஞாபகந்தாங்க..... உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி!

பழமைபேசி said...

நல்ல மனசு எளிதில் கிடைக்காதுன்னும், வேலைக்கார அம்மாவின் பெயர் 'கிட்டா'ன்னும் இரு பொருள்பட எழுதினது.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக அருமை. எப்பவோ மறைந்த என் பாட்டியை நினைவு படுத்திவிட்டீர்கள். பாட்டி மட்டுமா,அம்மாக்கள் இன்னும் அன்பு உள்ளம் கொண்ட அனைத்துக் ''கிட்டாக்களு''ம்தான். மிக மிக நன்றி, பழமை பேசி.

பழமைபேசி said...

//வல்லிசிம்ஹன் said...
மிக மிக அருமை. எப்பவோ மறைந்த என் பாட்டியை நினைவு படுத்திவிட்டீர்கள். பாட்டி மட்டுமா,அம்மாக்கள் இன்னும் அன்பு உள்ளம் கொண்ட அனைத்துக் ''கிட்டாக்களு''ம்தான். மிக மிக நன்றி, பழமை பேசி.
//

பத்திரமா ஊர் போய்ச் சேந்துட்டீங்ளா?! நொம்ப நன்றிங்க ஐயா!