8/30/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 7

வாவா பாடுபா மாயாநீ,
நீயாமா பாடுபா வாவா!

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு நாளா, நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்' ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல நாம அடுத்து பாக்கப் போறது மாலை மாற்று! "ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி!". அதாவது கடைசி எழுத்துல இருந்து திரும்பி படிச்சாலும் அதே பாட்டு வரணும். அதாவது மணி மாலையை இட வலமாப் போட்டாலும், வல இடமா மாத்திப் போட்டாலும் ஒரே மாதிரி இருக்கு இல்லீங்களா? அது மாதிரிதான் இதுவும். இட-வலம், வல-இடம்னு எப்படிப் படிச்சாலும் ஒரே பாட்டு வரும். வழக்கம் போல எம்மோட செல்ல மகளை மனசுல இருத்தி, மாலை மாற்று அடிப்படைல எழுதினதுதான், மேல சொன்ன பாட்டு.

பொழிப்புரை:
வா - வருவாய்
பாடு - பாடு
பா - பாட்டு
மா - சிறப்பு
ஆயா - காப்பவள்
நீ - நீயே
நீ - நீ
யாம் - யாங்கள்
மா - மேன் நிலை
பாடு - பாடு
பா - அழகு
வா - வருவாய்

கருத்துரை: எங்கள் சிறப்பே, பாடல் பாட வருவாய் நீ, நாங்கள் மேன்மை அடைவதற்குப் பாட, அழகாய் வா! வா!!

இந்த வகைல பெரியவங்க அவங்க காலத்துல, பெரிய அளவுல பாடி இருக்காங்க. அதுல இருந்து உங்க கவனத்துக்கு ஒண்ணு:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா!

காலேமேலே = முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = காத்தருள்க

(.........இன்னும் வரும்........)

2 comments:

Mahesh said...

அருமை... இவ்வளவு படிச்சப்பறந்தான் 'சித்திரகவி' வகைகள உருவகம் (visualise) பண்ணிப் பாக்க முடியுது. உங்க முயற்சி வெற்றிதான்...

பழமைபேசி said...

//Mahesh said...
அருமை... இவ்வளவு படிச்சப்பறந்தான் 'சித்திரகவி' வகைகள உருவகம் (visualise) பண்ணிப் பாக்க முடியுது. உங்க முயற்சி வெற்றிதான்...
//
நன்றிங்க! நீங்க எல்லாம் கொடுக்குற ஊக்கந்தான்............