8/21/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 1

...ச்சும்மா, எல்லாப் புலவர்களும் வல்லினம்(க,ச,ட,த,ப,ற), இடையினம்(ய,ர,ல,வ,ழ,ள), மெல்லினம்(ங, ஞ, ந, ண, ம, ன)னு பல விதமா போட்டுத் தாக்கி இருக்காங்களே.... நாமளும் பொழுது போகாத இந்த நேரத்துல அதை மையமா வெச்சி, எதனாச்சும் கிறுக்குவோமே?! ன்னு நினைச்சேன். அப்ப பாருங்க, பெத்த பொண்ணு தூங்கி எழுந்து "அப்பா"ன்ட்டு ஓடி வந்தா. அப்புறம் என்ன, அவளை வெச்சே எதோ எழுதி இருக்கேன்.

மெல்லினத்துல மெதுவா மென்மையா ஆரம்பிச்சு, அப்புறம் இடைப்பட்ட வாக்குல வாழ்த்துற மாதிரி வாழ்த்தி, கடைசியா வல்லினத்துல வலுவா புத்திமதி சொல்லுற மாதிரி எழுதி, இல்ல இல்ல, கிறுக்கி இருக்கேன்.

மௌனமணி யாம்! நன்னி யாம்!!
நின்நன்மனம் யாம்! நின்நும்மே யாம்!!
எம்மனம்நீ! ஞானம்நீ!! நாணம் நீ!!!
மினன்மின்னி மானம்நீ! மாமணி மா!! (மெல்லின வெண்பா)

வாயார ரருளுரை யுரைய வல்லவரும்
வாழுரை யுரைய வேல்விழியா ளைவெல்ல
வருவார் யாரோ? வரவுவழிய விழியொளிர்
வாழ்வு வாழிய, வாழிய வாழியவே! (இடையின வெண்பா)

கடுகடு தடு கிடக்குது பாடு,
பகடற கசடற தோடக் கேடு!
சிறுபாதை தேடா, தப்புச் செப்பா,
தசபதி துதி தீதது சாடாது!!
(வல்லின வெண்பா)


பொருளுரை:
மௌனசாமியின் மைந்தன் மணியாகிய யாம் உம்மைப் பெற்றதில் இறைவனுக்கு நன்றிக் கடன்பட்டோம். உமது அன்பைப் பெற்றவனும், உமது நன்மை ஒன்றையே நோக்குக்கிறவனுமே யாம். எம்மனதில் குடி கொண்டு உள்ளவளும், அறிவும், வெட்கிப் புன்முறுவல் பூக்கும் அழகுடையவளும், குலம் போற்ற வந்தவளும் நீ. நீ மாமணி போல் வாழ்வாய்.

அன்பாய் நீயிருக்க, வாழ்ந்த வல்லமையுடைய பெரியோர் உன்னை வாழ்த்த, அழகிய கண் கொண்ட உன்னைத் துன்புறுத்த யாரும் வரார். வளம் பொங்க, ஒளி மயமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

எத்தகைய கடுமையான இடர் வந்தாலும் உண்டாகும் கோபத்தை தணித்துக் கொள்; வீண் பெருமைக்காகவும் தவறானதுக்காகவும் செய்கிற செயல்களை விட்டொழி; எந்தவித துன்பமும் உன்னை அண்டாது ஓடிவிடும். மேலும் குறுக்கு வழியில் பொருள் தேடாமலும் தவறாக எதையும் பேசாமலும் இருந்து, பத்து அவதாரங்கள் கொண்ட திருமாலை வணங்கி வருகிறபட்சத்தில் தீங்கெதுவும் உன்னை அண்டாது.

(.....இல்ல, இவனுக்குக் கொஞ்சம் முத்தித்தான் போச்சோ?!.....)

5 comments:

மதுவதனன் மௌ. said...

மிக மிக அருமை. மிக இலாவகமாக தமிழைக் கையாண்டிருக்கிறீர்கள்.

மணி, நேரம் கிடைக்கும் வேளைகளில் இவ்வாறான் கவிதைகள் எழுதி சேர்த்துவைத்துக்கொண்டால் புத்தகமாக வெளியிடலாம் அல்லவா..

இவ்வாறான் கவிதைகள் தமிழில் அருகித்தான் போய்விட்டது.

மீண்டும் ஒரு முறை வியப்புடன் கூடிய அளவுகடந்த பாராட்டுக்கள்.

மதுவதனன் மௌ.

பழமைபேசி said...

// மதுவதனன் மௌ. said...
மிக மிக அருமை. மிக இலாவகமாக தமிழைக் கையாண்டிருக்கிறீர்கள்.

மணி, நேரம் கிடைக்கும் வேளைகளில் இவ்வாறான் கவிதைகள் எழுதி சேர்த்துவைத்துக்கொண்டால் புத்தகமாக வெளியிடலாம் அல்லவா..

இவ்வாறான் கவிதைகள் தமிழில் அருகித்தான் போய்விட்டது.

மீண்டும் ஒரு முறை வியப்புடன் கூடிய அளவுகடந்த பாராட்டுக்கள்.

மதுவதனன் மௌ.
//


வணக்கம்! நன்றாக எடுத்துரைத்தீர்கள்!! மரபுத்தமிழ் அருகிப் போவதில் எனக்கும் கொஞ்சம் வருத்தமே.... மற்றபடி உங்களது பாராட்டுக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி!!!

Mahesh said...

ஏஞ்சாமி.... இம்புட்டு அழகா மரபுக் கவிதையெல்லாம் எழுதிப்புட்டு, அதே கையால என்னோட பதிவையும் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே... பெரிய மனசு உங்களுக்கு...

பழமைபேசி said...

//Mahesh said...
ஏஞ்சாமி.... இம்புட்டு அழகா மரபுக் கவிதையெல்லாம் எழுதிப்புட்டு, அதே கையால என்னோட பதிவையும் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே... பெரிய மனசு உங்களுக்கு...
//
ம்கேசு, உங்க எழுத்தில என்ன இருந்தாலும் நம்மூர் தன்னடக்கம் இருக்குது பாத்தீங்களா?
நீங்க நல்லா இருக்கணும்.... திருமூர்த்தி மலைத் தண்ணி குடிச்சு வளர்ந்த உசிரு இல்லயா?

rajkumar said...

nalla thamizh vaazhga