நண்பர் சிலநாட்களாகத் தொடர்பில் வரவில்லை. ஏனென வினவியதற்கு அவர் சொன்னது, “அண்ணா, துயர சம்பவம். அக்கா, தம்பி, ரெண்டு பேரும் இங்க பக்கத்துலதா இருக்காங்க. அவங்க அம்மா ஒருவேளை மருந்து எடுக்கத் தவறவிட்டுப் போயி, நினைவிழந்துட்டாங்க. அவரால இப்ப ஊருக்குப் போக முடியாது. அக்கா கிரீன்கார்டு, அவங்களை இப்பதா ஃபிளைட் ஏத்திவுட்டுட்டு வந்தன்”.
தமிழ்நாட்டின் இன்றைய சூழலில், பல குடும்பங்களில் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், இதற்கான மருந்துகளை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. பல பெற்றோர்கள் "உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது" அல்லது "இன்று தலைவலி இல்லையே" என்று நினைத்து, தாங்களாகவே ஒரு நாள் அல்லது சில நாட்கள் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுகின்றனர். இந்தச் சிறு கவனக்குறைவு, உடலில் இரத்த அழுத்தத்தின் அளவைச் சீரற்றதாக்கி, எதிர்பாராத நெருக்கடிகளை உருவாக்குகிறது.
மறதிக்கான காரணங்களும் குடும்பச் சூழலும்
வயதான காலத்தில் ஏற்படும் நினைவாற்றல் குறைபாடு ஒருபுறமிருக்க, பல நேரங்களில் மாத்திரைகளைச் சரியாக அடுக்கிக் கொடுக்க ஆளில்லாத சூழலும் ஒரு முக்கியக் காரணமாகிறது. கூட்டுக்குடும்பச் சிதைவு , பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சூழலில், பெற்றோர்கள் தங்களின் மருந்து அட்டவணையைத் தாங்களே நிர்வகிப்பதில் சிரமம் கொள்கின்றனர். "மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா?" என்ற சந்தேகம் வரும்போது, தெரியாமல் இரண்டாவது முறை உட்கொள்வது அல்லது பயத்தில் தவிர்ப்பது என இரண்டுமே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மருந்து விடுபடுவதால் ஏற்படும் மறைமுக ஆபத்துகள்
இரத்த அழுத்த மருந்து என்பது இரத்தக் குழாய்களின் விரிவு , சுருக்கத்தைச் சீராக வைக்கும் ஒரு கவசம் போன்றது. ஒருநாள் மருந்து விடுபடும்போது, இரத்த அழுத்தம் திடீரென உயர்ந்து, அது மூளைக்குச் செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களைப் பாதிக்கலாம். இதுவே பக்கவாதம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணியாக அமைகிறது. மேலும், அவ்வப்போது மருந்தைத் தவிர்ப்பது இதயத் தசைகளின் அழுத்தத்தை அதிகரித்து, பிற்காலத்தில் இதயச் செயலிழப்பு அல்லது சிறுநீரகப் பாதிப்புகளுக்கு விதையிடுகிறது.
தீர்வுகளும் விழிப்புணர்வும்
இந்த சிக்கலைத் தவிர்க்க எளிய தொழில்நுட்ப , மேலாண்மை முறைகளைக் கையாளலாம். வாராந்திர மாத்திரை பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அந்தந்த நாளுக்கான மாத்திரை உட்கொள்ளப்பட்டதா என்பதை எளிதாகக் கண்டறியலாம். பிள்ளைகள் அருகில் இல்லாத பட்சத்தில், கைபேசி அலாரங்கள் அல்லது மருந்துகளை நினைவூட்டும் செயலிகள் பெரியவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இரத்த அழுத்தம் என்பது அறிகுறி தெரிந்தபின் குணப்படுத்தும் ஒன்றல்ல, மாறாக அறிகுறிகள் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதைப் பெற்றோர்களுக்குப் புரிய வைப்பது கட்டாயம்.
கடந்தவாரம்
நண்பர் சிலநாட்களாகத் தொடர்பில் வரவில்லை. ஏனென வினவியதற்கு அவர் சொன்னது, “அண்ணா, துயர சம்பவம். அக்கா, தம்பி, ரெண்டு பேரும் இங்க பக்கத்துலதா இருக்காங்க. அவங்க அம்மா ஒருவேளை மருந்து எடுக்கத் தவறவிட்டுப் போயி, நினைவிழந்துட்டாங்க. அவரால இப்ப ஊருக்குப் போக முடியாது. அக்கா கிரீன்கார்டு, அவங்களை இப்பதா ஃபிளைட் ஏத்திவுட்டுட்டு வந்தன்”.
அன்றாடம் நாம் அம்மாவை அழைத்துச் சிறுப்பிள்ளை போல ஒவ்வொன்றையும் கேட்டறிந்து கொள்வது உண்டு. போனவாரம்தான் கேட்டேன், “மருந்தெல்லா இருக்கா தீர்ந்து போயிருச்சா?”, “எல்லாம் இருக்கு”. இந்த சம்பவத்தை முன்னிட்டு மீண்டும் கேட்கலானேன், “அண்ணிய ஃபோன் செய்யச் சொல்லி இருக்கன். இன்னிக்கிதா வாங்கணும், தீர்ந்து போச்சி”. ”அம்மா, போன வாரம்தான கேட்டன், எல்லா இருக்குனு சொன்னியே?”. “ஆமா, அப்ப இருந்துச்சி. இப்ப இல்லை”. நாம் என்ன பேசமுடியும்? மனைவியாரிடம் இது குறித்துச் சொன்னேன். “ஆமா, எங்க அம்மாவும், மருந்து வாங்கி, எங்க வெச்சோம்னே தெரியாம... தலைவலி வந்திருச்சாம். பிற்பாடு புதுசா வாங்கித் தின்னாங்ளாம். வாங்கின மருந்து, மதில்சுவர்மேலயே மறந்து வெச்சிருக்க, இன்னிக்கிக் கிடைச்சுதாம். இவங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் தவறுகள் நடந்துட்டேதா இருக்கூ”.
திடீரென முழிப்புத் தட்டிவிட்டது. காலை 3 மணி. உறக்கமே வரவில்லை. ஆழ்மனத்தில் அம்மா மருந்து வாங்கினார்களா இல்லையாயெனும் அழுத்தம். அழைத்தேன், “அம்மா எங்க இருக்க?”. “நான் கலா கூட தாயம் விளையாடிட்டு இருக்கன்”. “அந்த மருந்து?”. “வாங்கியாச்சு வாங்கியாச்சு”. “எப்ப?” “காலையில பத்துமணிக்கே”. நிம்மதியாகப் படுத்தேன். சற்று நேரத்துக்கும் முன், காலை 8 மணிக்குத்தான் எழுந்தேன்.
மாமானார் அவர்கள், ஏதோ யோகா செய்திருக்கின்றார். மூளைச்சலவையில் ஆட்கொள்ளப்பட்டிருந்திருக்க வேண்டும். யோகா செய்வதால எல்லாம் நல்லா இருக்கு. காலையில இப்பெல்லாம் தவறாம வாங்கிங் போகின்றேன். விளைவு, மருந்து உட்கொள்வதை இவராக நிறுத்திக் கொண்டுவிட, அடுத்தடுத்த வாரங்களில் ஒரு நாள், குளியலறையில் கீழே விழுந்து, நினைவு தப்பி, பிரிவுக்கு இட்டுச் சென்றுவிட்டது.
மற்றொரு உறவினர், வேறெதற்கோ மருத்துவரிடம் சென்றிருந்திருக்கின்றார். இவர் தாம் உட்கொள்ளும் மருந்து குறித்துச் சொல்லவில்லை. மருத்துவரும் பரிசோதனைகள் செய்துவிட்டு, உங்களுக்கு இரத்த உயரழுத்தமெல்லாம் இல்லை எனச் சொல்லி இருக்கின்றார். அதையே வாக்காக எடுத்துக் கொண்டு மருந்து உட்கொள்வதை நிறுத்திக் கொண்டுவிட, கட்டிலில் இருந்து எழும் போது கீழே விழுந்து, பரிசோதனை செய்யும் போது, மூளையில் இரத்தக்கசிவு. கை கால் செயலிழப்பு.
புலம்பெயர் மண்ணில் இருந்து கொண்டு, நாம் இக்கதைகளைத் தொடர்ந்து எதிர்கொண்டபடியேதாம் இருக்கின்றோம். பெரியவர்களைக் குழந்தைகளாகப் பாவித்துப் பேணுவது நம் கடமை. 𝐓𝐡𝐞 𝐡𝐚𝐧𝐝𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐧𝐜𝐞 𝐡𝐞𝐥𝐝 𝐮𝐬 𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐭𝐨 𝐛𝐞 𝐡𝐞𝐥𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐚𝐫𝐞.
-பழமைபேசி.