பிழைத்திருக்கும் பொழுதில் குழந்தை குடும்பமென வாழத்தலைப்பட்டான். அப்படியான வாழ்வின் ஒரு கணத்தில் குழந்தைகளுக்கும் குடும்பத்து ஆட்களுக்கும் இயற்கை உபாதைகள் ஏற்படுவதைக் கண்டான். ஒவ்வொரு கோளாறுக்கும் ஒரு மாற்றுவழி, நிவாரணமும் பிடிபட்டது. அப்படித்தான் மலச்சிக்கல் ஏற்படுவதையும் கண்டான். நிவாரணமாக, சூடான தண்ணீர் குடித்த மாத்திரத்தில் இளக்கம் கண்டதையும் உணர்ந்தான். ஆக, சூடான தண்ணீர் மலமிளக்கி என இனம் கண்டுகொண்டான். இதைப் போலத்தான், உழைப்பின் அயர்ச்சி, எதிர்பாராத இழைப்புகள், சோர்வு முதலானவற்றின் நிமித்தம் மனம் சோர்வு கண்டு, சோகை கொண்டு சிக்கலுக்குள் ஆழ்ந்து போவதை உணர்ந்தான். மலமிளக்கியைப் போல, மனமிளக்கியையும் கண்டு கொண்டான்.
மேற்கத்திய நாகரிகத்தில் சோசியல் டிரிங்க்கிங் என்றார்கள். கீழைநாடுகளில் உண்டாட்டு, கூத்து, கும்மாளக்கூடல் எனச் சொல்லிக் கொண்டார்கள். இதன் அடிப்படை யாதெனில், மனமிளக்கம் கண்டு ஒருவருக்கொருவர் மனத்தால் அன்பு பூண்டு இறுக்கம் களைந்து வருத்தம் ஒழிப்பது மட்டும்தான். ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் காடு கழனி வேட்டை எனத் தத்தம் பாடுகளுக்குச் செல்ல முற்பட்டனர். ஒருபோதும் சோம்பிக்கிடக்க நினைப்பதில்லை அவர்கள்.
வீட்டுப் பிறவடையில் கழிநீர் ஈரத்துக்கு வாழைமரங்களை நட்டு வைத்தான். கன்று வளர்ந்து ஈன்று ஒரு தூர் பலதூர்களாக ஆகின. ஒவ்வொரு மரமும் குலை தள்ளின. குலைகளைப் பார்த்து மகிழ்ந்தான். இத்தனையைம் நமக்கே நமக்கா யோசித்தான். கூட்டம் கூட்டமாக வாழப்பிறந்தவன் மாந்தன். கூட்டம் கூட்டமாய் ஊர்ந்து ஊர்ந்து சென்று, நீராதாரம் இருக்கின்ற இடங்களிலெல்லாம் தாவளங்களைப் போட்டான். ஊர்ந்து சென்றடைந்த அந்த இடங்களெல்லாம் ஊர்களாயின. ஊர்களுக்குள்ளே வாழைகள் குலைகள் தள்ளின. குலைகளின் காய்கள் முதிர்ந்த நாளொன்றில் ஊரையே அழைத்தான். கூப்பிட்ட குரலுக்கு ஊர்மக்கள், சின்னஞ்சிறுசுகள், பொட்டுபொடுசுகள் எல்லாரும் வந்தார்கள். ஆளும் ஆளும் சேர்ந்தால் பாட்டும் இசையும் ஆட்டமும்தானே? ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
இதற்கனவே நீட்டு தாளியொன்றும் இருந்தது. குலை வெட்டப்பட்டது. தோல்நீக்கிய காய்களையெல்லாம் தாளியில் இட்டனர் மக்கள். கொஞ்சமாய் நீர் ஊற்றினர். அதற்குள்ளாக இருவர் சென்று, காடுகரையில் இருந்து, பன்றிப்புல் ஒரு கற்றை பிடுங்கிக் கழுவி வந்தனர். அந்தக் கத்தையில் இருந்து சிலபிடி பன்றிப்புல்களை எடுத்து வாழைக்காய்களின் மீதிட்டுக் கைகளால் பிசைந்து மசித்தனர். சிலபல குலைக்காய்களாக இருந்தால் மிதித்து மிதித்து மசித்தனர். பாடல்களும் இசையும் ஊக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
மூங்கிற்படல், நாணற்படல் கொண்டு மசித்த குழம்பை வடிகட்டிச் சுரை புருடைகளில் ஊற்றிக் கொண்டனர். ஊற்றிக் கொண்டிருக்கும் போதே மூதாட்டி ஒருவர், இராய்க்கல்லில் அரைத்த சோளமாவு ஒரு கைப்பிடி கொண்டு வந்து கொடுத்தார். அந்த சோளமாவினைச் சுரைபுருடைக்குள் இட்டு வைத்தனர். சோளமாவுக்குள் இருந்து ஈசங்கள் பிறந்து வாழைப்பழக் குழம்பினை உண்டு செரித்தது. ஆனந்தம் ஒவ்வொரு மனத்தையும் உடைத்துக் கொண்டு கொப்புளித்தது. சுரைபுருடையில் இருந்த கள்ளினை மொந்தையில் ஊற்றி மாந்தி மகிழ்ந்தனர் மக்கள். காங்கோ, ருவாண்டா முதலான நாட்டு மக்கள் அதற்கு உர்வாக்வா எனப் பெயரும் இட்டுக் கொண்டனர். மது என்பது மனமிளக்கி, முறைகேடாய்ப் பாவிப்பதற்கன்று. உர்வாக்வா!!