6/23/2019
தண்ணீர்க் காதை
குரும்பபாளையத்தில் ஆழ்துளைக்கிணறு தோண்டி, அதிலிருந்து மின்விசையுந்து கொண்டு நீரிறைத்து 48 வீடுகள் மட்டுமே இருக்கின்ற செங்கோட கவுண்டன் புதூரில் இருக்கும் உயர்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு, அன்றாடம் மாலை ஆறுமணிக்கு ஊருக்குள் ஆங்காங்கே இருக்கின்ற நீர்ப்பிடிப்புக் குழாய்களில் நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. படிப்படியாக நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வர, 300 வீடுகள் இருக்கும் குரும்பபாளையத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மேலோங்கவும், அவர்களுடைய ஊரில் இருக்கின்ற மேற்கூறப்பட்ட ஆழ்துளைக்கிணற்று நீரைப் பங்கு போட்டக் கொள்ளத் துவங்கினார்கள். எங்களுடைய செங்கோட கவுண்டன் புதூர் அரசூர் ஊராட்சியைச் சார்ந்தது. குரும்பபாளையமோ முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சார்ந்தது. எனவே, தன் ஊராட்சிக்கு முதன்மை எனும் கோட்பாட்டில் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி குரும்பபாளையத்துக்கே ஆதரவு. செ.க.புதூர்வாசிகளான நாங்கள் எல்லாம் மிகுந்த ஒற்றுமையோடு, அடர்த்தியாய்ப் பன்மடங்கு அதிகமாகப் பெய்து கொண்டிருந்த வெயிலிலும் மறியல், ஆழ்துளைக்கிணறு முற்றுகைப் போராட்டமெனப் பலவும் நடத்திப் பார்த்தோம். ஒன்றும் கைகூடவில்லை.
ஒன்றியப் பெருந்தலைவர் செ.ம.வேலுசாமி அவர்களைப் போய்ப் பார்த்தோம். ஒரு ஊராட்சியில் இருப்பதை மற்ற ஊராட்சிக்காரர் உரிமை கொண்டாடுவது அவ்வளவு சரியில்லை. வேண்டுமானால் புது ஆழ்துளைக்கிணறுக்கு வழி செய்யச் சொல்லி அரசூர் ஊராட்சித் தலைவருக்குப் பரிந்துரைக்கிறேனெனச் சொல்லி விட்டார். அன்றைய அரசூர் ஊராட்சித்தலைவருக்கும் செ.க.புதூர் மக்களுக்கும் அவ்வளவு இணக்கப்பாடு இருந்திருக்கவில்லை. ஏனென்றால் செ.க.புதூர் என்பது தனித்துவமான ஓர் ஊர். எப்போதுமே முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். ஆக, ஊராட்சித் தலைவர், ஊராட்சிப் பெருந்தலைவர் என இருவரின் பேரிலான நாடலும் கைகொடுக்காமற் போகவே, தங்கநாயகி அம்மன் கோவில் பூசாரியாக இருந்த சுந்தரான், உள்ளூர் திமுக ஆதரவாளர்கள் வாயிலாக சூலூர் பேரூராட்சிப் பெருந்தலைவர் சூ.சு.பொன்முடி அவர்களைச் சென்று பார்த்தோம். அவர் சூலூர்ப் பேரூராட்சியில் இருந்து கொண்டு தம்மால் எதையும் செய்துவிட முடியாது. வேண்டுமானால் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசுகின்றேன். நீங்கள் எல்லாம் இன்ன நாளில், கோவை விருந்திநர் மாளிகைக்குச் சென்று உள்ளூர் ச.ம.உவும் அமைச்சருமான மு.கண்ணப்பன் அவர்களைச் சென்று பாருங்களெனப் பணித்தார்.
தங்கநாயகி அம்மன் கோவில் பூசாரி தங்கான், செ.க.புதூர் நண்பர்கள் இராசகோபால், கனகராசு, நல்லசிவம் உள்ளிட்டோருடன் நானும் விருந்திநர் மாளிகைக்குச் சென்றிருந்தேன். ச.ம.உ காட்டம்பட்டி கந்தசாமி வரவேற்று என்ன அலுவல் குறித்து வந்திருக்கின்றீர்களென வினவினார். இப்படி இப்படி, குரும்பபாளையத்துக்காரர்கள் செ.க.புதூர் தண்ணீரை மறித்து எடுத்துக் கொண்டனர். நாங்கள் தண்ணீர் இல்லாமல் அல்லலுறுகின்றோமெனச் சொல்லி அழுதோம். அவர் சொன்னார், உங்களுக்குத் தண்ணீர்ப் பிரச்சினையென்று சொல்லுங்கள். அவர்களுடைய ஊர்த் தண்ணியை உங்களுக்கானதென எப்படி உரிமை கோரமுடியும். மேற்கொண்டு அமைச்சர் வந்ததும் பேசலாமெனச் சொல்லி அமைச்சரின் குளுகுளு அறையிலேயே நல்ல போண்டா, வடைகளுடன் டீ கொடுத்து உட்காரச் சொல்லி விட்டார்.
அமைச்சர் வந்ததும் மீண்டும் முதலில் இருந்து எங்கள் வாய்ப்பாட்டை ஒப்பித்து, சூலூர் பொன்முடி சொல்லி வந்தோமென்றோம். முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சித் தலைவர் முத்துசாமி அவர்கள் அமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். அவரும் அங்கேயே அவருடன் இருந்தார். இடைக்காலத் தீர்வாக வாரத்துக்கு ஓரிரு நாட்கள் செ.க.புதூருக்கு விடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஊர்க்காரர்களுடன் பேசிப் பார்க்கின்றேனெனச் சொல்லி நழுவினார் மு.க.புதூர் ஊராட்சித் தலைவர். ‘சரி என்ன செய்யலாம்?’ என்று வினவினார் அமைச்சர்.
குரும்பபாளையத்து எல்லைக்கு வெளியே வேறெங்காவது, இப்போதைய கிணற்றைக் காட்டிலும் ஆழமாக வேறொரு கிணற்றுக்கு ஏற்பாடு செய்வதுதான் வழி என்றார். துரிதகதியில் பணிகள் துவங்கின. மு.க.புதூர் ஊராட்சித் தலைவரே, மு.க.புதூர் - செ.க.புதூர் இட்டேரியில் புது ஆழ்துளைக் கிணறு தோண்டலுக்கான பணியினைத் துவங்கினார். ஒரு மாதத்துக்குள்ளாகவே புதுக்கிணற்றின் நீர் ஊருக்குள் விநியோகிக்கத் துவங்கிய சிலநாட்களிலேயே திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது. அதே பல்லடம் தொகுதியில் மு.கண்ணப்பன் அவர்களே மீண்டும் போட்டியிட்டார். தமிககமெங்கும் திமுக வரலாறு காணாத தோல்வி அடைந்தது. செங்கோட கவுண்டன் புதூர் வாக்குச்சாவடியில் மட்டும் திமுக 80% வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. அதில் என் ஓட்டும் அடக்கம்.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில், பொதுப்பணித்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சொல்வது, அவரது நிலையில் மெத்தச் சரி.
“எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் 2 மட்டுமே, எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால், வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள். -துரைமுருகன்.”
தம் வீடு, தன் வீதி, தன் ஊர், தன் ஊராட்சி, தன் ஒன்றியம், தன் மாவட்டம், தன் மாநிலம், தன் நாடு என்பதுதான் வரிசை.
-அந்தியூரன் பழமைபேசி, 06/23/2019.
6/21/2019
எங்கோ ஒரு பெண்
எங்கோ ஒரு பெண்,
குடத்தை எடுத்து வருகையில்
கால் இடறிக் கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
குழாயடியில் வேசிப்பட்டம் சுமந்தபடி
குடத்தைத் தூக்கித் தலையில்
வைத்துக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
பனிக்குடம் உடைந்து நீரொழுக நீரொழுக
குடம் தண்ணீரைச் சுமந்தபடியே
வந்து கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்
முறைவிட்டுக் கொடுக்காததில்
படுத்தெழுந்ததாய்ப் பட்டங்கள் சூட்டப்பட்டு
மகனின் முகம் பார்க்கவியலாமல்
குமைந்து குறுகிக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
மணிக்கணக்கில் குடம் தூக்கியபடி இருக்க
ஊட்டமின்றிச் சுருண்டு
கீழே விழுந்து கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
மூச்சடக்கி மூச்சடக்கிச் சுமந்ததில்
நெஞ்சுதூர்ந்து செத்துக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
தண்ணீரெனக் கடன் ஒத்திப்போட்டத்தில்
நஞ்சேறிப் பிணியேறிச் செத்துக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
உறக்கமின்றி எழுந்தெழுந்து எதிர்நோக்கி
குழாயும் கண்ணுமாய்ச் செத்துத் செத்து
பிழைத்துக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
சிந்திய நீரில் கால்வழுக்கி
குடத்தோடு விழுந்ததில்
விலா எலும்பை முறித்துக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ப் பணியால்
கல்வி சறுக்கிக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
தண்ணீர்ச் சிந்தையினால்
வேலையிடத்தில் கவனமிழந்து கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
ஊட்டமும் சத்துமின்றி
தண்ணீர் சுமந்து
தண்ணீர் சுமந்து கொண்டிருந்ததில்
பார்வையைத் துறந்து கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
தண்ணீர் வருமெனச் சொல்லி
உறவுக்காரர் கடைசிமுகம்
பார்க்காமற் தவித்துக் கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
ஒரு வண்டித் தண்ணீரைக்காட்டி
அத்துமீறும் ஆடவனிடத்தில்
தன் மகளையே இழந்து கொண்டிருக்கக்கூடும்!
எங்கோ ஒரு பெண்,
ஊர்வம்பு இழுத்துட்டு வராம இருக்கமாட்டியாவென
யாருக்கு வேண்டுமெனச் சுமந்தாளோ அவனிடமே
அறைபட்டு அழுத கொண்டிருக்கக்கூடும்!
அந்தப் பெண்
உன் வீட்டவளாகவும் இருக்கலாம்!!
-பழமைபேசி, 06.19.2019.
[For women, the water crisis is personal. They are responsible for finding a resource their families need to survive - for drinking, cooking, sanitation and hygiene. வீணாக்கப்படுகின்ற ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும், அம்மா, மனைவி, உடன்பிறந்தவள், மகள் என யாரோ ஒரு பெண்ணின் சுகதுக்கங்களின் மீதான கொலைவெறித் தாக்குதல் என்றே கொள்க. நீரைச் சிக்கனமாய்ப் புழங்கு!]
Subscribe to:
Posts (Atom)