10/25/2014

கதிரேசன் பொண்டாட்டி

கதிரேசன் பொண்டாட்டி

இந்நேரமும் வந்து பேசிக்கொண்டிருந்த
கதிரேசன் பொண்டாட்டி
எடுத்துக் கொண்டு
போய் விட்டாள் மொத்த வீட்டையும்!
விட்டுச் சென்ற இடத்தில் அவ்வளவு அமைதி!!

எழு

எழு
வீதிகளில் நடந்து போ
சுற்றும் முற்றும் பார்
நீ, நீயாக இருப்பாய்!!

சமூகநீதி

மகளுடனான கருத்தாடலில்
தோற்பது ஒரு பிரச்சினையேயல்ல!
அந்நேரத்தில் தகப்பன் அங்கேயிருப்பது
ஆகப்பெரிய குற்றம்!!

’அ’சிங்கம்

எனக்கென்ன?
நான் நல்லா இருக்கேன்
நீ நல்லா இருக்கல்ல??
நானும் நல்லாத்தான் இருக்கேன்!!
உளமாரப் பரிமாறப்படுகின்றன!
அழுதுவிட்டால் அசிங்கம்!!

யோசனை

என்னவோவொன்று
யோசிக்கத் துவங்கினேன்!
ஆமாம்
அதென்னவென்றுதான்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!

மழை

மழை மழை மழை
எழுதித் தள்ளியது போதும்!
தாங்கள் பார்த்த
சாதாக் கப்பல்கள் எத்தனை?
கத்திக் கப்பல்கள் எத்தனை??

சிறு வினா

சிறு வினாதான்!
வாழ்கிறோமா?
பிழைக்கிறோமா??
இருக்கிறோமா??

உதிர்காலம்

ஏம்ப்பா
மரம் மொட்டையாய்ட்டிருக்கு?
ஊரெங்கும் உதிரும் இலைகள்
பிரிவின் வலி மரத்துக்குமட்டல
வினவிய பாப்பா
பாப்பாவை அண்டியிருக்கும் இவன்
இவனிதைப்படிக்கும் நீங்களென
எல்லாருக்கும்தான்!!
ஏம்ப்பா
மரம் மொட்டையாய்ட்டிருக்கு??

பால்யகால வழங்கி

அஞ்சு பைசா
பத்து பைசா
நாலணா
எட்டணா
ஒத்த ரூபா
கொடுவாய் செடி பீடி
எப்போதாவது ஒரு சிகரெட்
மூலையறைச் சுவற்றாணியில்
குறட்டையொலி புசித்துப் பணிபுரியும்
பால்யகால களவுப் பெட்டகம்!
அப்பாவின் சட்டைப்பை!!

உப்பல்

வாயுமண்டலத்திலிருந்து வந்திறங்குகிறது
நீலவண்ணப் பலூன்!
எங்கு நின்று, என்ன சொல்லி அழுகிறதோ
அந்தக் குழந்தை!!

மூப்பு

ஓயாத நினைவலைகள்
தீர்ந்து போன கடலினிலே!!

சாவு நோக்கிய பயணத்தில்..

வட்டத்துக்குள்
இருப்பவன்
குதிக்கிறான்!
வெளியில்
இருப்பவன்
சிரிக்கிறான்!!

மனிதன்

இயற்கை
தனக்குத்தானே
சொருகிக் கொண்ட ஆப்பு

-அந்தியூரன் பழமைபேசி