நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.
தூரத்தில் நிற்கும் பெரி மரம் ஒன்று முழுக்க முழுக்க கத்தரிப்பூ வண்ணத்திலான பூக்களால் தன்னைத் தன் நிர்வாணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு நின்றிருந்தது. ஓடிப் போய் அந்த ஆடையின் ஒரு கங்கினைப் பிடித்து இழுத்தாலென்ன என்கிற குறும்பு நினைப்பில் நானிருக்க, அதனுள்ளிருந்து பொத்துக் கொண்டு வெளியேறியது எதையோ ஒன்றை இழுத்துப் பிடிப்பதற்கான வெறிபிடித்த அமெரிக்கன் டிப்பர் குருவியொன்று. ஆடை கிழிபட்டதில் சிறிதுக்கும் பெரிதுக்குமான இடைப்பட்ட நடுக்கத்தோடு நடுங்கி நின்றது பெரி மரம்.
இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் மனசாட்சி நம்மை, ”நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? செத்துத் தொலையேண்டா!!” என நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்கு கேட்டுத் தொலைக்கும் அபாயம் இருக்கிறபடியால், துரிதகதியில் காலைக்கடன்கள் முடிக்கப்பட்டு ஓடுகளப் பாதைக்கு ஏதுவான உடுப்புகளில் உடம்பைப் புகுத்திக் கொண்டேன். உறக்கத்தில் இருக்கும் மனிதங்கள் நான்கும் உறக்கத்திலேயே இருக்கட்டுமென விழைந்து அரவமேதும் இல்லாதிருக்கும்படியாகக் கதவைச் சாத்தி வெளியே வந்தாயிற்று.
இளங்காலை வெயில் நம்மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலாடையையும் ஊடுருவி உள்ளே வந்து தசைநார்களை குதூகலத்தால் தோய்த்தது. ஊடுருவப்பட்ட தோலாடையை மேவிவிட்டது மிசிசிப்பி ஆற்றைத் தழுவி வந்த சாரக்காற்று. செவிப்புலத்தில் இசைஞானியின் இசையில் ஜானகியின் மெல்லிசை மதுரம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. மனம் சொக்கி போதையில் ஆர்ப்பரித்துக் கொண்டே உடலுக்குள் இருந்து வெளிக்கிளம்பி குளத்திலிருக்கும் நீர்ப்பரப்புக்கும் மேலாக இறக்கை கட்டிப் பறக்கின்றன. சுகித்துக் கொண்டன ஏனைய மெய்ப்புலங்கள் யாவும்.
இன்னபிற புலங்கள் யாவும் தன்னிலை மறந்து உவப்புக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கால்கள் இரண்டும் ஓட்டம் பிடித்தன குளத்தின் மருங்கிலிருந்த ஓட்டப்பாதையினூடக! ஐந்தரை மைல் தொலைவு ஓடியதை விழிகளிரண்டு தவிர மற்ற புலங்கள் எதுவும் கவனித்திருக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் குளக்கரையில் ஓடுவதென்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.
காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம். இதைச் சொன்ன மாத்திரத்தில் சண்டைக்கு வருபவர்கள் உண்டு. யார் வருகிறார்களோ இல்லையோ, தாய் நாட்டு மக்கள் மீது பாசம் கொண்டவளும் பெண்ணிய மனப்பான்மை கொண்டவளுமான மச்சினிச்சி ஒப்புக்கொள்ள மாட்டாள். எனவே மிகுந்த கவனத்தோடு அமெரிக்காவில் என்பதை இடைச்செருகலாகப் பாவித்து திருத்திச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கின்றன.
ஒருவர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதெல்லாம் கூட மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது உலகின் ஏனைய பகுதிகளில். அத்தகைய தீர்மானங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. தனி மனிதர்களால் தன் அகத்தின் விருப்புக்கொப்ப வாழ இயலவில்லை. இதன் காரணமாய் எனக்கும் என் மச்சினிக்குமிடையே முரண்பாடு எழுகிறது. எனவே ஏற்கனவே சொன்னது சற்று மாற்றிச் சொல்லப்படுகிறது.
காலவெள்ளத்தில் அகப்பட்ட அமெரிக்காவாழ் மக்கள் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறார்கள். தகுந்த காரணங்கள் இருப்பின், காலத்தின் போக்கையும் தேவைக்கொப்ப மாற்றிக் கொள்கிறார்கள்
வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் குளக்கரையில் ஓட வேண்டும். இது எமக்குக் கிடைத்த மிதவுகோல். இதைப் பற்றி மிதந்து பயணிக்கிறேன் காலவெள்ளத்தினூடாக. என்னுடைய அலுவலக நண்பன் மனோஜ் வதேரா என்பவனுக்குக் கிடைத்திருப்பது மற்றொன்று. கால அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுகைக்குச் சென்று விடுகிறான்.
மெம்ஃபிசு நகரத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட குழுமம். குழும உறுப்பினர்கள் யாவரும் தன்னார்வலர்கள். யாருடைய அறிவுறுத்தலுக்கோ நிபந்தனைக்கோ ஆட்படாதவர்கள் இவர்கள். எனக்கும் கூட ஆசையுண்டு. இருக்கிற ஆசையெல்லாம் நிறைவேறிவிட்டால் வேறென்ன இருக்கும்? இக்குழுமத்தில் இருப்பவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாட்டச்சுவை எதில் கிடைக்கிறது? கைப்படகுகளில் ஏறி ஆற்றுக்குள் பயணித்துத் தூய்மைப்படுத்துவதில் கிடைக்கிறது மனத்துக்கு இனிமையூட்டும் காயகல்பம்.
வார ஈற்று நாட்களில் வீட்டில் இருக்க மாட்டான் மனோஜ். கைப்படகும் நீர்நிலைத் தூய்மையாளர்களுமென எங்காவது துடுப்படித்துக் கொண்டிருப்பான். அவனோடு அவனது குழுமத்தைச் சார்ந்த மற்றவர்களும் அவரவர் கைப்படகுகளோடு ஆற்றங்கரைக்கு வந்து விடுகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நாட்டு நடப்பு, உலக நடப்பு, ஊர்க்கதை, வீட்டுக்கதை, பகடி, எள்ளல், கேலி, சிரிப்பு எனப் பலதையும் மென்று தின்று கொண்டே ஆற்றுக்குள் படகைச் செலுத்துகிறார்கள். உடலுக்கு நல்ல பயிற்சி. மனத்துக்கு நல்ல களிப்பு. ஆற்றின் அழகுக்கும் செயலுக்கும் ஊறு விளைவிக்கிற எதைக் கண்டாலும் களைந்து அப்புறப்படுத்தி மகிழ்கிறார்கள். ஆற்றின் கரைகளைத் தன்னுடல் போலக் காதலித்து அவற்றோடு வாழ்வுப் புணர்ச்சி கொள்கிறார்கள்.
மனோஜ் வதேராவின் மனைவி பாருல் வதேரா. பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். மருத்துவராக வேலை பார்க்கிறாள். தான் பார்க்கும் மருத்துவர் வேலையைக் காட்டிலும் அவளுக்குப் பிடித்தது குப்பை பொறுக்குவது. பொறுக்கி என்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளுக்குக் கிடைத்த கொழுகொம்பு அது. பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கணக்கர்கள் எனப் பலதுறைகளைச் சார்ந்த தன் நண்பர்களோடு குப்பை பொறுக்குவதில் புணர்ச்சியுச்சம் கொள்வது அவளது வாடிக்கை. விடுப்பு நாட்கள், மாலை நேரங்கள் என்கிற போதெல்லாம் பூங்காங்கள், பெருந்தெருக்கள் முதலான இடங்களுக்குச் சென்று குப்பை பொறுக்கிப் போடுகிறாள். இதற்கென ட்ரேஷ் பிக்கப் கிளப்புகள் இருக்கின்றன. இவற்றின் வாயிலாக நிறையத் தொடர்புகள் கிட்டுகிறது, கும்பலாய்ச் சென்று வெளியில் திரிந்து வருவதில் சுவாரசியம் என்கிறாள் பாருல்.
தெருவின் கடைக்கோடி வீட்டிலிருக்கும் ஸ்டெஃபனி தனித்து வாழும் தாய். ஒரே மகன் ஜேசன். அவளுக்கு காப்பீட்டு நிறுவனமொன்றில் நுகர்வோர் தொடர்பாளர் வேலை. வீட்டைச் சுற்றிலும் சர்க்கரைப்பாகுத் தூக்கிகளை அங்கங்கே வைத்திருக்கிறாள். ஓசனிச் சிட்டுகளுக்கு ஊணூட்டி உயிரூட்டுவது அவளுக்கான பற்றுதல். மரங்களை வளர்த்து, செடிகளுக்கு மராமத்துச் செய்து சூழல்பாதுகாப்புக்கு நல்கும் உழைப்பே அவளுக்கான துணை.
இடைக்கிடையே ‘ஹம்மிங்பேர்டு’ பட்டறைகளை நடத்தி விழிப்புணர்வு வேலைகளைச் செய்கிறாள். காடுகளுக்குப் போகிறாள். இவளுக்கு தனிப்பட்ட உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஹம்மிங்பேர்டு குமுகத்தினர் வந்து உதவுகிறார்கள். இப்படியானவை மனிதனுக்கும் மனிதனுக்குமான பிணைப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. உயிர்த்தோம்;இருந்தோம்;மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை ஊட்டி விடுகின்றன.
மென்மையாகப் பேசுவாள் ஸ்டெஃபனி. ஓசனிச்சிட்டுவைப் போலவே இருப்பாள் அவளும். அவள் வீட்டைக் கடந்து வரும் போதெல்லாம் நின்று பார்த்து வருவது தவிர்க்க இயலாதது. நான் எதுவும் செய்வதில்லை. ஓசனியோடு ஓசனியாய் அவளும் இருந்திட மாட்டாளா எனக் கண்கள் தேடுகின்றன. ஓசனியின் சிறகடிப்பு, சிலுசிலுப்பு ஒலிகள், இணுக்குகள் ஒடிந்து விடாதபடிக்கு உட்கார்ந்து தாவிச்செல்லும் பாங்கு முதலானவற்றைத்தான் நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்!
குளக்கரைக்கு வரும் போது கூட அவளைப் பார்த்தேன். மண் அள்ளிப் போட்டுச் செடிகளை நட்டுக் கொண்டிருக்கிறாள். பெட்டூனியா பூச்செடிகளிருக்கும் பூந்தொட்டியிலிருந்து தவழ்ந்து வரும் ஓசனியின் இளமஞ்சள் இறகொன்று, குனிந்திருக்கும் அவளது பின்னங்கழுத்தினை வருடிக் கொஞ்சியது. தலை நிமிர்ந்து பார்க்கையில் அவள் கண்ணெல்லையில் நான் நிற்கிறேன். ஓசனிச் சிறகடிப்பின் அதிர்வை ஒத்திருந்த அவளது கண்ணிமைகளின் அதிர்வில் அவளையண்டி இருந்த மொனார்டா மலர்கள் நாண, மலரின் கருநீல வண்ணம் வெண்மையேகி நீலமாய் ஒளிர்ந்தது. “ஹாய் மணி” சொன்னவளின் வெண்மணிப் பற்களில் நீலம் பட்டுத் தெறிப்பதைக் கண்டு இளமுறுவல் பூக்கிறேன் நான். இனிமேலும் நான் இங்கு நின்றால் ஓசனிகள் படையெடுத்து வந்து என்னை விரட்டக் கூடும். என் வேலையை நான் பார்க்க வேண்டுமென்கிறபாட்டில் இங்கு வந்து விட்டேன் நான்.
காலியர்வில் நகராட்சியின் நூலகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ’ஹால்’ பூங்காவிலிருக்கும் குளக்கரையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நாளொரு முறையாவது வந்து குளத்தடியில் ஓட வேண்டும். அப்படிச் செய்யும் போது எனக்கான அந்த நாள் சிறப்புக் கொள்கிறது. மொத்தத்தில் மனமும் வளம் பெறுகிறது. யார் யாருக்கோ என்னவெல்லாமோ இருக்கையில், குளக்கரையே எனக்கான தொடுப்பு.
அதோ குளத்தின் அந்த மூலையிலிருக்கும் வங்குக்கு நேர் மேலே குத்திட்டிருக்கும் பெரியவருக்கு மீன்பிடிப்பது குதூகலம். சனி, ஞாயிறுகளில் தன் பேரனையும் கூடக் கூட்டி வந்து இன்னோர் இடத்தில் உட்கார வைத்து விடுகிறார். மீனுக்காக மீன் பிடிப்பதில்லை இங்கு யாரும். தூண்டிலில் அகப்பட்ட மீனைக்கூட மீண்டும் குளத்திலேயே விட்டு விடுகிறார்கள்.
குளக்கரையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். பொறுமையாக உட்கார்ந்திருக்கிறார்கள். மெளனத்தைச் சுவாசித்து சிலையாய் வீற்றிருந்து காலத்தைப் புசிக்கிறார்கள். ’தூண்டிலாளர்கள்’ என்ற பெயரில் நீர்நிலையெங்கும் உலாப் போகிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடிக்க தனி உரிமங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அலுவலகத்தில் இருக்கும் ’கிடாயன்’ ரோபர்ட் ஜான்சன் ஒரு தூண்டிலான். எப்போது பார்த்தாலும் ஃபிஷ்ஷிங் பற்றியே பினாத்திக் கொண்டிருப்பான். அதற்கென்ற வார, மாத இதழ்களோடு மீன்பிடிப் பெட்டியையும் வெத்தலை பாக்குப் பெட்டி போல கொண்டு திரிவான். அலுவலக அரட்டைகளின் போது, தூண்டிலாளர் குமுகாய அனுபவங்களைத் தின்று ஏப்பம் விடுவான். இரத்த அழுத்தம், மனநோய் போன்றவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு நிவாரணம் என்கிறான். தன்னம்பிக்கையை வளர்த்து இணக்கத்தைப் பெருக்கும் என்கிறான். இந்தக் குளத்திலும் எப்போதும் யாராவது மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மன அமைதியும், வெளியின் இலக்கணமற்ற இசையும், நீர்நிலையின் மணமும் முகில்களின் காற்றுக்கொத்த ஓடுபராக்கும் விலையில்லாப் பண்டமாய்க் கிடைக்கின்றன. அனுபவிப்பவன் பேறு கொண்டவனாகிறான்.
குளத்தையொட்டி இருக்கும் மரங்களுக்கும் எனக்குமிடையில் நேசம் உண்டு. சென்ற கோடையில் இட்டுச் சென்ற கனடியக் கீசுகளின் முட்டைகள் எல்லாமும் வசந்தகாலக் குஞ்சுகளாய் பூத்திருக்கிறது குளத்தின் கீழ்க்கரையில். வசந்தகால இலை துளிர்ப்புக்கான காத்திருத்தலுடன் குச்சி மரங்களாய் இருக்கும் செரி மரங்களின் நுனிக் கிளைகளில் அமர்ந்து உச்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றன கருந்தாரிச் சிட்டுகள்.
அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுடையதன் பெயர் சோமா. அவள் அவனை அப்படித்தான் விளித்து அழைக்கிறாள். வாட்டசாட்டமாய் இருக்கிறான் சோமா. கருமைநிற வெல்வெட்டுத் துணியைப் போர்த்தினாற்போல அவனது மயிர்க்கற்றைகள். அருகிலிருக்கும் வளவு ஒன்றில்தான் வசிக்கிறாள். அவ்வப்போது சோமாவை அழைத்துக் கொண்டு அவளும் வந்து விடுகிறாள் குளக்கரைக்கு.
ஐந்தாவது மைல் ஓட்டத்தின் துவக்கத்தில்தான் காட்சியொன்று அங்கே ஈடேறியது. குளத்தின் மடுவிறக்கத்திலிருந்த அந்தப் பெண் மஞ்சள் வண்ணப் பந்தொன்றை ககனமார்க்கத்தினூடாக குளத்துக்குள் விட்டெறிந்தாள். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நாயொன்று தரைமார்க்கத்தினூடாக பந்தின் வேகத்துக்கொப்ப இணையாக ஓடி, ஓடி, குளத்தின் நீருக்குள் பாய்ந்து, வேகத்துக்கிணையாகவே நீச்சலடித்து வீரியமிழந்து வீழ்ந்த பந்தினை லபக்கென்று தன் வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்தது. மீண்டும் பந்தை வீசாமல் கையை மட்டும் தம் திறம் கொண்ட மட்டும் பின்னால் இழுத்து வேகமாய் வீசினாள். பந்து அவளது கையிலேயே இருப்பதைக் கூர்ந்த நாய் ஒரு இம்மி கூட நகரவில்லை. வாலை ஆட்டிக் குழைந்தது.
பந்தினை வேகமற்ற வேகத்தோடு செங்குத்தாய் வீசி இலாகவாமாய்ப் பிடித்துக் கொண்ட பின்னர், மீண்டும் திறம் கொண்ட மட்டும் கையை வீசி எறிந்தாள். நாய் வாளாமல் அதே இடத்தில் நின்று கொண்டே வாஞ்சையாய் அவளைப் பார்த்தது. பந்தினை இரு உள்ளங்கைகளுக்குள் பிடித்தபடி அதை உருட்டிப் படுத்தினாள் அவள். இவளுக்கென்ன விசர் பிடித்திருக்கிறதா எனும் பாங்கில் அவளை வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றது அந்த நாய்.
பிணையல் முடிந்ததும் இடத்தை விட்டு விறுக்கென்று ஓடி மறையும் பாம்பினது வேகத்தில், பந்தினை விட்டு வீசுவதைப் போலத் தன் வலக்கையை குளத்தை நோக்கி வீசினாள் அவள். நாயும் வானைப் பார்த்துக் கொண்டே குளத்தை நோக்கி ஓடி ‘தபோர்’ என குளத்து நீருக்குள் பாய்ந்து வீழ்ந்தது. பந்து மட்டும் இன்னமும் அவள் கைகளிலேயே இருந்தது. வெற்றிப் பெருமிதத்தில் திளைப்பும் செருக்கும் அவளுக்கு.
கடைசி வட்ட ஓட்டத்தினை ஓடி நிறைக்கும் நோக்கில் நம் கால்கள் வேகமெடுத்தன. அலைகளின் ஒத்திசைவுக்கொப்ப மதகில் நீர் துள்ளிக் குதித்து கடை போனதைக் கவனித்த விழிகள் வியப்பில் நகைத்துக் கொண்டன. நம்மைப் பார்த்த டென்னசி நீல பூபிப் பறவைகள் விருட்டென மேலெழும்பிப் பறந்து போயின. இனி வீடு நோக்க வேண்டும். அல்லாவிடில் மனைவியென்னும் அதிரூபத்துக்கு முன்னால் வீழ வேண்டி இருக்குமெனக் கருதி கால்கள் ஓட்டத்தினின்று தாழ்ந்தன. மெய்ப்புலங்கள் யாவும் சொக்கு நிலையிலிருந்து திரும்பிக் கொண்டன. அப்போதுதான் கவனித்தேன். இன்னமும் அந்த நாய் குளத்துக்குள்ளேயேதான் இருக்கிறது. பல நேரங்களில் நாய்களும் பாடங்கள் பல கற்பிக்கும்.
“சோமா, ஐ அம் சாரி. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி திஸ் டைம். ஐ வில் நெவர் டு திஸ் டு யூ. இனிமேல் இப்படி செய்யவே மாட்டேன் சோமா. மன்னிச்சிடு. குளத்துக்குள்ள பந்து வீசுற மாதிரி நடிச்சி உன்னை ஏமாத்த மாட்டேன். வெளியில வா. ப்ளீஸ் சோமா!!”, இனி அது எப்போது மனம் இளகி மன்னிப்பு வழங்குமோ தெரியாது. கீரியைக் கீறுவானேன்? பிராண்டலுக்கு பச்சிலை தேடுவானேன்??
எதையோ கண்டு கொண்ட பாவனையில் தாவித் தாவி தப்படி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது, ப்ளாக்பெரிச் செடிகள் மண்டிப் பூங்காவின் ஓரத்திலிருக்கும் புதரிலிருந்து ‘விருட்’டென வெளிக்கிட்ட பெருமுயலொன்று!!