1/30/2012

ஆசகாட்டி?!

ஃபுல்வாயல் சேலகட்டி
வவுறுதெரிய ரவுக்கபோட்டு
ஆசகாட்டி மோசஞ்செய்யுற பொம்பள, ஒங்கள
அறிஞ்சிருந்தும் மோசம்போறது நாங்களே!!

***********************************************
பட்டுக்கோட்ட அறந்தாங்கி
பாத சொல்லும் தேவகோட்ட
நெத்திமட்டம் இராமனாடு
ஒன்னெனவு மெரட்டுதடி
ஆத்தப்பாரு ஊத்தப்பாரு
அலங்கானூரு தோப்பப்பாரு
செல்லூரு கரையப்பாரு
செவத்தபுள்ள நடையப்பாரு!!

***********************************************

ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை தத்தளிக்குதாம்
அழகான சாமி வந்து கோலம் போடுதாம்
திண்டுக்கல்லு பூசிவச்சு திண்டாடுதாம்
மாவுக்கல்லு பூசிவச்சி மாவாட்டுதாம்
சின்ன முத்தம்மா, பெரிய முத்தம்மா
கருவாட்டு முள்ளெடுத்து காதுதான் குத்தம்மா!!

மண்ணின் மணம் வீசும் இசைஞானி!!

1/29/2012

பகுப்பு

இவ்வையகத்தில் ஆயிரமாயிரம் பகுப்புகள் உண்டு. அதுகுறித்துத் தொடர்வதற்கு முன் சற்றுத் தமிழையும் பார்த்து விடலாமே? பகுதி எனும் இடத்திலெல்லாம் பிரிவு எனும் சொல்லைப் பாவிப்பது மொழியின் நுண்மையைப் பாழாக்கும் செயலாகும். யாரும் வேண்டுமென்றே செய்வதாக நினைக்கவில்லை. ஆனால், கல்வியாளர்களுக்கும் ஊடகத்தினருக்கும் மொழியைக் கட்டிக் காப்பதில் பெரும் பங்கு உண்டு. வேலியே பயிரை மேயும் செயல் இனியும் எவ்வளவு காலத்திற்குத் தொடருமெனத் தெரியவில்லை.

யாதோவொரு விழுமியத்தின் அடிப்படையில் பகுத்தடைவது பகுதி. ஒன்றிலிருந்து பிரித்தடைவது பிரிவு ஆகும். ஒரு பள்ளியில் இருக்கும் மாணவர்களை நிலை வாரியாக வகுப்பதால் வருவது வகுப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, ஆறாம் வகுப்பு. இருக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களை, எண்ணிக்கை அடிப்படையில் பகுத்து வருவது, ஆறாம் வகுப்பு, பகுதி ‘அ’. பகுதி ‘ஆ’ என்றிருத்தல் வேண்டும்.

தமிழர்களுள் சாதி வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்திருப்பது பிரிவுகள் ஆகும். பிரிந்து இருக்கிறார்கள்; யாரும் அவர்களைப் பகுக்கவில்லை. நாமே நம்மில் இருக்கும் இன்னொருவனிடம் இருந்து பிரிந்து நிற்கிறோம்; ஆகவே அவை பிரிவுகள் ஆகும். பிரிவுகள் கூடினால் தோன்றுவது ஒன்றியம். பகுதிகள் கூடினால் கிடைப்பது பருமை ஆகும். அதை ’பெருமை’ என்றும் விளிக்கலாம்.

மீண்டும் பகுப்புகளுக்கு வருவோம். நம்மில் பல பகுப்புகள் இயற்கையிலேயே உண்டு. ஒரு கூடத்தில் தேநீர் அருந்துபவர்களில், அரைக்கோப்பைக்குக் கீழே தேநீர் கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதியினர். அரைக்கோப்பைக்கு மேலாகத் தேநீர் கொண்டிருப்பவர்கள் அடுத்த பகுப்பினர் ஆவர்.

மீண்டும் அவர்களையே எடுத்துக் கொள்வோம். அரைக் கோப்பை வெற்றாக இருக்கிறது என்பார் ஒரு பகுப்பினர். அரைக்கோப்பை நிறைந்து இருக்கிறது என்பார் அடுத்த பகுப்பினர். இப்படியாக, அவர்களை வைத்து இன்னும் கூடுதலாகப் பகுப்புகளை நாம் பெற்றிட முடியும். ஆக, அவரவர் சிந்தனைக்கொப்ப பகுப்புகள் தோன்றுகிறது. ஒவ்வொருவர் சிந்தனையிலும் யாதோவொரு முறைமை(நியாயம்) இருப்பதையும் நாம் எளிதில் உணரலாம். அதேவேளையில் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருப்பதையும் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்நிலையில், அந்த அறையை வழிநடத்தும் தலைவர் என்பவர் இவற்றையெல்லாம் நன்கு புரிந்தவராக இருத்தல் வேண்டும். மாறாக, அவர்களுக்குள் இருக்கும் முறைமையைத் தட்டிக் கழிப்பதும், கொச்சைப்படுத்துவதும் அறையில் இருக்கும் இணக்கப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும். அல்லது அவர்களுக்குள் இருக்கும் பகுப்பினைப் பிரிவுகளாக்குவதற்கு வழி வகுக்கும். முறைமை இழந்தவனின் செயல் மனித நேயத்திற்கே கூடப் பங்கம் நேரிடச் செய்யும். அவ்வேளையில், பங்கம் விளைவிக்கும் முறைமை இழந்தவனைத் தண்டித்து ஒழிப்பதே நல்லறம் எனப் பறைசாற்றுவது ஒட்டுமொத்த மனிதத்திற்கே கேடு விளைவிக்கும்.

I look to a time when brotherhood needs no publicity; I look to a time when a brotherhood award would be as ridiculous as an award for getting up each morning.~Daniel D. Mich

1/28/2012

எழுமணி

காற்றாகப் பறந்து சென்று கழனிகள் மடை திறந்து
மாற்றினார் வாய்க்கால்! மறித்தார் நன்றே வடிகால்!
தென்னாடு செழிக்கக் கூத்தாடினோம் வைகைவளம் கண்டு!
பிரிட்டிசு கோமானே நீர் கொண்ட செல்வமெலாம்
ஈந்து கட்டினாயே முல்லைப் பெரியாறு!
தமிழரெலாம் தழைத்தோங்க ஆனாய் நீயே வரலாறு!!
image.png 
தென்னகக் குலசாமி பென்னிகுக்
************************************************************

கண்டறிவாய்எழுந்திரு நீஇளந்தமிழாகண்விழிப்பாய்!
அமெரிக்க செல்வச் சிறப்புமிகு வாழ்வுதனை உதறினேனே நானும்
கூடங்குளம் அணு உலை கூற்றம் எம்மண்ணைச் சுற்றி வளைத்திடவே
நானும் பூண்டேன் அறப்போர்தனை!
இதோ அணிவகுத்தார் எம்மக்கள் என்னோடு எனக் களம் புகுந்த
உதயகுமாரா! சோதரா!! நன்றே செய்யும் நீ அயராதே!!!
அகலும் தமிழ்நாட்டின் அல்லெல்லாம்!
 நாம் கொள்வோம் அறம்! அறம்!! அறம்!!!
Kumar
முனைவர் சு.பா.உதயகுமார்
************************************************************

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
எதற்கும் துணிந்தால் எங்கும் தமிழ் ஆளும்
தமிழ் கொண்டோம்! அரசியல் கற்றோம்!!
புகுந்த நாட்டு மக்கள் மனம் புகுந்தோம் நற்செயலாலே!!
அமரவைத்தார் கனடிய நாடாளும் சபைதனிலே!
பகர்ந்திட்டோம் நம்நிலையை செந்தமிழ்ச் சொல்லாலே!
இன்னலது எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்
அறச்செயலது எதற்கும் துணிந்தால் எங்கும் தமிழ் ஆளும்!!
இராதிகா சித்சபை ஈசன்

குறிப்பு: மிசெளரி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்காகப் படைத்தது!

1/02/2012

இயற்கை