6/29/2011

மக்கா... எல்லாரும் வந்திடுங்க!!

இன்னைக்குக் காலையில இருந்தே... ஒரு மார்க்கமாவே இருக்கு.... பசிக்குது... ஆனா, சரியாச் சாப்பிட முடியலை.... வேலையிடத்துல, என்ன பேசிக்கிறாங்கன்னு ஒன்னுமே பிரியலை...

என்னதான் காரணமின்னு ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பார்த்தேன்... இஃகிஃகி... ஒரே குதூகலம், மனசுல ஒரே குதூகலம்... இன்னைக்கு இரவைக்கு நித்திரை கொள்ளமுடியுமா தெரியலை. எனக்கு சின்ன வயசுல பள்ளிக்கூடம் தொறக்குற நாள்தான் ஞாவகத்துக்கு வருது.

ஆண்டு ஒன்னுக்கு, மூனு வெள்ளைச் சட்டை, ரெண்டு காக்கிச் சல்லடம் வாங்கிக் குடுப்பாங்க ஊட்ல. அதுவும் துணி எடுத்து, உடுமலைப் பேட்டை தையக்காரர் P.V.சண்முகம்கிட்டத் தைக்கக் குடுப்பாங்க. வளர்ற பையன், இருக்குற துணி பூராத்துக்கும் தெச்சிப் போடுன்னு வேற சொல்லிக் குடுப்பாங்க.

அதை அப்படியே வாங்கிட்டு வந்து மடிப்புக் கலையாம, ஊட்டுல ஒரே பொட்டி, அந்த பொட்டியில வெச்சிடுவாங்க ஊட்ல. ஒரு மணி நேரத்துக்கு ஒருவாட்டி, ஊட்டுக்கு ஓடி வந்து பொட்டியத் தெறந்து பாக்குறதும், பள்ளிக்கூடம் தெறந்து முதல்நாள் அதைப் போட்டுட்டுப் போற காட்சிய நெனைச்சிப் பாக்குறதும்... ஒரே குதூகலமா இருக்கும். இராத்திரியில திடீல்னு முழிப்பு வரும். தூங்குறவிக எங்க பார்த்திடுவாங்களோன்னு, மெதுவா எழுந்து போயிப் பொட்டியத் தெறந்து பாக்குறதும் உண்டு.

அந்த நினைவுகள்தாங்க வருது. எப்படா வெள்ளிக் கிழமை வரும்? சார்ல்சுடன் போறது எப்பன்னு இருக்கு?? எங்க ஆசான் கொழந்தைவேல் இராமசாமி அய்யா வேற, இலக்கிய விநாடி வினாவுக்குப் படிக்கச் சொல்றாரு. இந்த மனநிலையில எப்படிப் படிக்க முடியும்? அவர் வாயை அடைக்கிறது எப்படின்னு யோசிச்சப்பதான் ஒரு யோசனை வந்துச்சு.

விடுவமா நாங்க? ஒரே போடு! ஆள் அப்படியே அமைதி ஆயிட்டாரு. இஃகி இஃகி. அப்படி என்ன நடந்துச்சுன்னுதான கேட்குறீங்க??

“அய்யா, தொலைக்காட்சின்னு எதோ சொன்னீங்களே? அதைத் தமிழ்ல வேற என்ன சொல்வீங்க??”

“சின்னத்திரை சொல்வம்!”

“தமிழ்ல எப்படி எழுதுவீங்க? சொல்லிக் காண்பியுங்க!!”

“சி..ன்..ன...த்..தி..ரை”

“இக்கும்... இதுகூடத் தெரியலை ஆசானுக்கு. சின்னத்திரைன்னு சொல்றீங்களே, அது என்ன உதயசூரியன், இரட்டை இலைன்னு சின்னங்கள் போட்டிருக்கிற சின்னத்திரையா என்ன? அது அளவுல சிறுசா இருக்குற சின்ன திரை. பெரிய திரைன்னு சொல்லும் போது நடுவுல ’த்’தன்னா போடுறீங்களா? அப்புறம் ஏன் சின்ன திரைக்கு மட்டும் ‘த்’தன்னா போடுறீங்க??”

நாம யாரு? கழகங்கள்கிட்ட பாடம் படிச்ச ஆள் அல்லவா?? இந்த களேபரத்துல நீ என்ன பாடம் படிச்சன்னு ஒரு சொல் கூடக் கேட்கலையே அவரு??

இப்படிப் போய்ட்டு இருக்கு நம்ம பொழுது. மக்களே, வெள்ளிக்கிழமை இரவே, தென்கரோலைனா மாகாணம், சார்ல்சுடன் நகருக்கு வந்து சேர்ந்திடுங்க. நம் உறவுகள் அனைவரையும் சந்திக்கலாம். நட்பு பாராட்டலாம்.

எட்ட இருக்குறவங்களுக்கு ஒரு செய்தி. வலைப்பக்கத்துல நான் எழுதுறது எப்பவும் போல எழுதுவேன். கூடவே, இணைய ஒளிபரப்பும் இடம் பெறும். கண்டு களியுங்க. நாம இந்த ஆண்டு, எட்ட அமர்ந்து வேடிக்கை பார்க்கலாமுன்னுதான் இருந்தோம். கூட, மனைவி மக்கள் எல்லாம் வரப் போறாங்க. ஆனாலும், ஏத்தி வுட்டுட்டாய்ங்க.

ஆமாங்க, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் எனும் தலைப்புல இடம் பெறப் போற கவியரங்கத்துல கவிதை வாசிக்கப் போறேன். அப்புறம், இலக்கிய விநாடி வினாவுல வழமை போல இடம் பெறுவேன்.

இந்த ஆண்டு முக்கியமா குறிப்பிட வேண்டியது, என்னோட மகளைப் பற்றிதாங்க. திருக்குறள் போட்டி, கட்டுரைப் போட்டின்னு ஒரு சிலதுல பங்களிப்புச் செய்ய இருக்கிறா. நெம்ப முக்கியமான ஒன்னு, இந்த வயசுலயே அப்பனுக்கு ஆப்படிக்கணும்னு களமிறங்குறா. நாந்தான், என்னோட அணியிலயே இருடான்னு சொல்லி, இலக்கிய விநாடி வினாவுக்கு என்னோட அணியிலயே இருக்குற மாதிரி வழிவகை செய்திட்டு இருக்கேன். எங்க போய் முடியுதோ, பார்ப்போம்!!

பதிவர் சந்திப்பு நடக்க இருக்கு. மக்களே, விழா அரங்குக்கு வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்க. பனைநிலம் தமிழ்ச்சங்கமானது, தமிழ்ப்பண்பாட்டோட மிகவும் அணுக்கமா இருக்குற ஒரு தமிழ்ச்சங்கம். அவங்க ஊர்த்திருவிழா இது. எப்படி எல்லாம் கலக்கப் போறாங்களோ தெரியலை! அவங்களுக்கு நிகர் அவங்களேதாங்க. எதைச் செய்தாலும், வெகு செம்மையா செய்யக் கூடிய ஆட்கள் அவங்க.

விருந்தினர்கள், அப்துல ஜப்பார் அய்யா அவங்களோட பேசினேன். முனைவர் மு.இளங்கோவன் அவர்களோட பேசினேன். நெருங்கிய நண்பரொருவர் வீட்லதான், தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள் இருக்காங்க. நான் வலையேற்றின அவருடைய பாடல்க் காணொலி கேட்டு வியப்புற்றதாகவும் தெரிய வந்தது. மிக்க மகிழ்ச்சி!

டொராண்டோவில இருந்து, என் வகுப்புத் தோழர்கள் வர இருக்காங்க. அவர்களைச் சந்திப்பதுலயும் வெகு ஆர்வமா இருக்கேன். ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவிலயும் நான் மேடையில சொல்ற வாசகங்கள் இரண்டுங்க.

முதலாவது, ”எப்பேர்ப்பட்ட வனத்துல வந்து மேஞ்சாலும், கடைசியில இனத்தோடதான் வந்தடையணும்!”

இரண்டாவது, “வந்திருக்கும் உறவுகள் இருக்கும் நண்பர்களோடு மட்டுமே அளவளாவிக் கொண்டிராமல், புதியதாக ஒரு பத்துப் பேருடனாவது நட்புக் கொள்ளுங்கள். கட்டமைப்பு வலுக்கும்!!

ஊருக்குச் சொல்லிட்டு, நாம அதைச் செய்யாம இருந்தா சரிவருமா? நானும் புதிய நட்பினரை அடையக் காத்திருக்கிறேன். நீங்களும் வாங்க. பழகுங்க. தமிழ்க்கட்டமைப்பு விரியட்டும்.

விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்க சுட்டுங்க! www.fetna.org

வரும் வெள்ளி முதல் திங்கள் வரை, நான்கு நாட்கள் எழிலார்ந்த கடற்கரையோரம், தமிழ்ப் பேச்சோட இனிமை நுகர்தலை எதிர்நோக்கி இருக்கேன். அதுக்கப்புறம், நியூசெர்சி பயணம் ஒரு வார காலம். சந்திப்போம்!!

தமிழால் இணைவோம்!!

6/25/2011

அதிரும் சார்ல்சுடன்! கோலாகலத் தமிழ்த் திருவிழா!!

ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது? தன் மண்ணையும், மண் சார்ந்த கலை, இலக்கியங்களை நுகர்ந்து போற்றி, பின் அதனைப் பற்றி ஒழுகும் போது முழுமை பெறுகிறது. தமிழ்ச் சமுதாயம், காடு கழனிகளில் உழைத்து அதில் உன்னதத்தைக் காணும் சமுதாயம்.

அப்படியான உழைப்புக்கிடையே, தம்மை மகிழ்வித்துப் பிறரையும் மகிழ்வித்து அதனூடாக வாழ்க்கையை நெறிப்படுத்துமுகமாக எத்துனை எத்துனை கலைகள்?!

சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வேங்கையாட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியான கலைகளை, அயல் மண்ணில் வாழும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துவதில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் பங்கு அளப்பரியது.

2009ம் ஆண்டில், மெய்சிலிர்க்கும் சிலம்பாட்டம்! 2010ம் ஆண்டு, மதுரைவீரன் தெருக்கூத்து. அந்தத் தெருக்கூத்து நடந்த இரண்டரை மணி நேரமும், அரங்கம் அதிர்ந்தது. இதோ, அதன் நீட்சியாக இவ்வாண்டும், திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம்.

ஏதோ ஒரு கலைக்கழுவினர் வந்து நிகழ்ச்சி நடத்தப் போகிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். யார் இவர்கள்? இவர்களது பின்புலம் எனத் தெரிய முற்பட்டேன்.

கலைக்குழுவின் பொறுப்பாளர் சகோதரி சந்திரா அவர்களுக்குப் பின்னாலே ஒரு இலட்சிய வாழ்க்கை அமைந்திருப்பதை அறிந்தேன். பெண் விடுதலை, கலை மீட்டெடுப்பு, வழக்கொழிந்த பாரம்பரியக் கூறுகளை மீட்டெடுத்தல் என மாபெரும் இலட்சியப் போராட்டம் நடத்தி வருகிறார் அவர்.

சகோதரி சந்திரா அவர்களையும், அவர்கள்தம் குழுவினரையும் அழைத்துச் சிறப்பளிப்பதற்காக, பேரவைக்கு தமிழ்ச் சமுதாயம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

எங்கோ இருக்கிற சப்பானியர்களும், சீனர்களும், உருசிய நாட்டினரும், நம் கலைகளை அறிந்து அவர்தம் வாழ்வினைச் செம்மைப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். நிலை அப்படி இருக்கையில், நமது முன்னோர் நமக்களித்துச் சென்ற கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து போற்றுவது நம் கடமையல்லவா??

குழந்தைகளுக்கான விடுப்புக் காலம் இது! சார்ல்சுடன் நகரில் நடக்க இருக்கும், தமிழ் விழாவிற்கு அழைத்து வாருங்கள். நம் மக்கள், நம் மொழி, பண்பாடு, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை அவதானிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது? தன் மண்ணையும், மண் சார்ந்த கலை, இலக்கியங்களை நுகர்ந்து போற்றி, பின் அதனைப் பற்றி ஒழுகும் போது முழுமை பெறுகிறது.

கால அவகாசம் வாய்க்கும் போது, கீழ்க்கண்ட அற்புதமான ஆவணக் காணொலிகளைக் காணுங்கள். நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற கலைகளில் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.

சக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான கலை, இலக்கிய, நிகழ்ச்சிகளைக் கண்டு களித்திட, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!!






தமிழராய்ப் பிறந்தோம்! தமிழால் இணைவோம்!!

6/24/2011

தமிழ்மணத் தேன் பருக வாரீர்! வாரீர்!!

தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி
பாயுதடி...
தாமரை பூத்த
தடாகமடி...

பாமாலையால்
வற்றா
பொய்கையடி...

பாமாலையால்
வற்றா
பொய்கையடி... - தமிழ்ப்
பைங்கிளிகள் சுற்றி
பாடுதடி-செந்
தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி,
பாயுதடி
தாமரை பூத்த
தடாகமடி....

காவியச்சோலை அதன்
கரை அழகே
கவிஞர்கள்
கற்பனைக்கோர்
தனிச்சுவையே...

ஆவிமகிழும்
தமிழ்த்
தென்றலதே இசை
அமுதினை
கொட்டுது பார் அதனருகே - செந்
தாமரை பூத்த
தடாகமடி...
தமிழ்மணத் தேன் பொங்கி,
பாயுதடி...
தாமரை பூத்த
தடாகமடி....

(காணொலியில் இசைத்தவர், தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்)

இசைத்துமகிழ் நல்யாழே
கரும்புதந்த தீஞ்சாறே
கனிதந்த நறுஞ்சுளையே
அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
என மனமுருகி
நெஞ்சு நிறைந்து
எங்கள் வாழ்வும்,
எங்கள் வளமும்,
மங்காத தமிழென்று
சங்கே முழங்கு
என உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறோம்? ஏன்?

சுகமோ
துக்கமோ
நெகிழ்ச்சியோ
புகழ்ச்சியோ
தாழ்ச்சியோ
வீழ்ச்சியோ
உவப்போ
கசப்போ

அவனவன்
அவனவன் தாய்மொழியில்
தன் இனத்தாரோடு
தன் இனம்
தன் மரபு
தன் மக்கள்
தன் பண்பாடு
எனத் தனக்கு வாய்த்தவற்றோடு

ஆறுதலைத் தேடுவதும்
அரவணைத்துக் கொள்வதும்
கூடிக் களிப்பதும்

புலம்பெயர்ந்த மண்ணில்
தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப்
போன்றதொரு உணர்வினைத்
தருவதில்லையா?
தாய்ப் பசுவைக் கண்டதொரு
கன்றைப் போன்றொதொரு
உணர்வினைத் தருவதில்லையா??

அடுத்த வாரம்,
ஜூலை 2,3 ஆம் தேதிகளில்
சனி, ஞாயிறு கிழமைகளில்
தென்கரோலைனா மாகாணம்
சார்ல்சுடன் எழில்மிகு நகரில்
நடக்க இருக்கும்
தமிழ்த் திருவிழாவில்
கலந்து கொள்வோம்!
நட்பு பாராட்டுவோம்!!
வாரீர்! வாரீர்!!

பெருமழைப் புலவர் பொ.வெ.சோமசுந்தரனார்
நூற்றாண்டு விழா

சூலை இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்கள்
சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில்
தென்கரோலைனா மாகாணம்
சார்ல்சுடன் நகரில்
 எழுச்சிமிகு தமிழ்த் திருவிழா

சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்

தமிழிளையோர் வழிகாட்டி இராதிகா சித்சபேசன் அவர்கள்

பன்முகக் கலைஞர் நடிகர் நாசர் அவர்கள்

கோடைமழை வித்யா அவர்களது நாட்டியம்

திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டம்

புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை

நகைச்சுவை நடிகர் சார்லி அவர்கள்

இளந்தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

கவிஞர் நா,முத்துக்குமார் அவர்களது தலைமையில் கவியரங்கம்

அய்யா அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் பட்டிமண்டபம்

நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களது இலக்கிய விநாடி வினா

தமிழேந்தல் பொற்செழியன் அவர்களது தமிழ்த் தேனீ

ஆய்வாளர் முனைவர் S.பழனியப்பன் அவர்கள்

இன்னும் ஏராளமான 
உள்ளூர்த் தமிழர்களின் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள்

கண்கவர் மீனகம் மற்றும் எழில்மிகு கடற்கரைகள்

சார்ல்சுடன் நகரின் செறிவுமிகு வரலாற்றுத் தளங்கள்

கண்டு களிக்க ஏராளம்! ஏராளம்!!

அணி திரள்வோம்! அன்பு பாராட்டுவோம்!! 


குறிப்பு: வழமை போலவே, விழா அரங்கத்தில் இருந்து நிகழ்ச்சிகளை வலையுலகுக்கு உடனடியாகத் தொகுத்து அளிக்க இருப்பவர், பணிவுடன் பழமைபேசி.

6/18/2011

சோமனூர் தங்கராசு

தகிதகிக்கும் வெயில்! சாளரத்தைத் திறந்து வைத்துக் கொண்டபடியே, அருகில் அமைந்திருக்கும் சோலைவன மரங்களை அவதானித்தபடி இருந்தான் மொகானூர் முருகேசன். மேப்பில்வகை மரத்துக் கிளையின் இலைகள் எச்சலனமும் இன்றி இருந்தது. கண் வைத்தது வைத்தபடியே அவதானித்து இருந்தவனின் இதழ்களில் திடீரெனப் புன்னகை சிந்தியது.

அடுக்ககத்தின் இரண்டாவது தளத்தில் இருந்த அவனை, அவனுள் இருக்கும் ஏதோ ஒரு நினைவு அவனைத் தீண்டி இருந்திருக்க வேண்டும். தன் அங்கராக்கை எடுத்துப் போட்டவன் கதவைச் சாத்திவிட்டுக் கீழே இறங்க எத்தனித்தான்.

“இந்த மொட்டை வெயில்ல எங்க போறீங்க மாமா?!” மெல்லிய தாழ்ந்த குரலில் அக்கறைப்பட்டுக் கேட்டாள், மடிக்கணினியின் வில்லைகளில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த விரல்களுக்குச் சொந்தக்காரியும், மொகானூர் முருகேசனுக்கு வாக்கப்பட்டவளுமான செம்பருத்தி.

“மொட்டை வெயிலுக்கு விடிவு பொறக்குதுன்னு நினைக்கிறேன். இதா வந்துடறேன்!” சொல்லிக் கொண்டே கீழிறங்கிப் போனான் மொகானூர் முருகேசன்.

அடுக்ககத்தின் கீழ்தளத்துக்கு வந்தவன் புல்வெளியில் நின்று கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்தான். மனம் குதூகலித்தது. மேற்குதிசை அடிவானத்தில் இருந்து கருநீல வண்ணப் புகை திரண்டு வருவது போன்ற காட்சி. ஆனாலும், இவனிருக்கும் இடத்தில் தகிதகிக்கும் வெயில்.

வேகமாக மீண்டும் தன் அடுக்கக வீட்டிற்குள் நுழைந்தான். “செம்பருத்தி, நாஞ்சொன்னது நடக்கத்தான் போகுது பாரு!”

“நீங்க என்ன சொன்னீங்க? அப்படி இதுவரைக்கும் நீங்க சொன்னதுதான் அப்படி என்ன நடந்திருக்கு வாழ்க்கையில??”, அலுத்துக் கொண்டாள் செம்பருத்தி.

“மொட்டை வெயில் தாழப் போகுதுன்னு சொன்னது சரியாத்தான் ஆகப் போகுது!”

“அதெப்படி அப்படி உறுதியாச் சொல்றீங்க?”

“இங்கன பாரு. காத்தே வீசாத மாதிரி இருக்கு. ஆனாலும் அந்த மரத்து இலைக மட்டும் ஒருவாக்குல பறக்காம, நாலாபக்கமும் மாறி மாறிப் பறக்குது பாரு. மரத்து இலைக அப்படி மாறி மாறிப் பறக்குறப்ப மலை வரும்னு எங்க பக்கத்தூட்டு அமுச்சி சொன்னது ஞாவகத்துக்கு வந்துச்சு. அதான் கீழ போயிப் பார்த்துட்டு வந்தேன். அடிவானங் கறுத்து வந்திட்டு இருக்குது செம்பருத்தி, நீ வேணா ஒரு எட்டு போயிப் பார்த்துட்டு வா போ!!”

மடமடவெனத் தன் செராய்ப்பையில் இருந்த ஐபோனை எடுத்து, அதன் தொடுதிரையில் தன் ஆட்காட்டி விரல்கொண்டு மாறிப் மாறிப் பொட்டு வைத்தான்.

“அகோ... ஆரு தங்கராசுதான?”

“ஆமாங்க, நீங்க?”

“நான் சார்லட்டுல இருந்து மொகானூர் முருகேசன் பேசுறந் தங்கராசூ!”

“அண்ணா, சொல்லுங்க்ண்ணா! செளக்கியந்தானுங்க? ஊர்ல மழைங்களா??””

“இன்னித்தான் பெய்யும் போல இருக்குது. ஒரே உப்புசமும் ஆறாட்டமுமா இருந்துச்சி. திடீல்னு பார்த்தா, மரத்து எலைக ஆலவட்டம் போட ஆரமிச்சு இருக்கு. மரத்து எலைக ஆலவட்டம் போட்டா மழை வரும்னு உங்கமுச்சி சொன்னது ஞாவகத்துக்கு வந்துச்சு. உன்ற ஞாவகமு வந்துச்சு தங்கராசூ!”

சிகாகோ நகரில் இருக்கும், சோமனூர் தங்கராசுவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான் சார்லட் நகரில் இருக்கும் மொகானூர் முருகேசன்.

“தங்கராசூ, வாற விடுப்புக்கு, அதான் சூலை ரெண்டு, மூனு, நாலாந்தேதி விடுப்புக்கு சார்ல்சுடன் வந்துருங்க. பூங்கொடிகிட்ட நாஞ்சொன்னன்னு சொல்லிக் கூட கொழைந்தைகளையும் கூட்டிகிட்டு வந்துருக்க என்ன?”

“செரிங்ணா... அவளும் எங்கனாச்சியுமு கொழந்தைகளைக் கூட்டிட்டுப் போலாம்னு சொல்லிட்டுதான் இருக்காளுங்க. ஆரெல்லாம் வாறங்க? சிறப்பா என்ன நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கப் போகுதுங்கண்ணா??”

"தங்கராசூ... எனக்கு நம்பூர் மாகாளியாத்தா கோயல் நோம்பிக்கு அல்லாரும் ஒன்னு கூடுற ஞாவகந்தான் வருது... அந்தக் கம்பம் சுத்தி ஆடுறதும், வெளக்குமாவு எடுக்குறதும், முளைப்பாரி எடுக்கையில நாம் ஆடி வாறதும்...

அதெல்லாம் ஒரு காலம். அதை ஈடுகட்டுறதுக்கு ஒரு வாய்ப்பா அமைஞசதுதான் இது நமக்கு. போன பெட்னாத் திருவிழாவுல மதுரைவீரன் தெருக்கூத்துல ஆட்டம் போட்டம். இந்தவாட்டி, திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் தப்பாட்டாம் இருக்குதாமில்ல? பாத்திகட்டி ஆடிட வேண்டியதுதான்.. என்ன சொல்ற நீயி?!”

”கண்டிப்பாங்கண்ணா... நம்ம புதுக்கோட்டை அப்துல்லா சொன்ன, புதுகை பூபாளம் நகைச்சுவைக் குழுவினரும் வாறங்கன்னு சொல்லிச் சொன்னாங்க... நெசமாங்க முருகேசண்ணே?!”

”ஆமாமா... அவங்களும் வாறங்க... கூட, கோடைமழை வித்யாவோட நிகழ்ச்சியும் இருக்கு. அப்புறம் வழக்கம்போல, நம்ம பீற்றர் அண்ணனோட இலக்கிய வினாடி வினா, கவிஞர் நா.முத்துக்குமார் தலைமையில கவியரங்கம், ஐயா அப்துல் ஜப்பார் அவிங்க தலைமையில பட்டிமண்டபம்.. அல்லாமும் சிறப்பா அமையப் போகுது!”

“மூணு நாளும் ஒரு கெடையில நம்ம ஊட்டுக் கொழைந்தைக இருக்குமா? நெம்பச் சிரமமுங்க முருகேசண்ணே!”

“அதுக்கென்ன இப்ப? எண்ணிப் பத்து மைல்கூட வராது... கடற்கரை, அழகான சார்ல்சுடன் நகர புரவியோடும் வீதிக்ள்னு சுத்திப் பாக்குறதுக்கு நெம்ப இருக்குதான தங்கராசூ?”

”வேற யாரு நம்மாளுங்க வாறங்க?”

“ஆமா, நீ கேட்டதுந்தான் ஞாவகத்துக்கு வருது. நீ தொடர்புலயே இரு. மறுவழியில நம்ப ஈழத்துப் பங்காளி மோகனுக்கு ஒரு தாக்கல் போடுறேன்!!”

“செரீங்”

“யாரு மோகனா?”

“சொல்லுங் முருகேசன். எல்லாம் நலந்தானே?”

“நாங்க நல்லா இருக்கம். நம்ப தங்கராசும் தொடர்புல இருக்காருங்க”

“தங்கராசூ... என்ன கன நாளாக் கதைக்கவே இல்ல நீங்கள்?”

“ஆமாங்க மோகன். நெம்ப நாளாச்சு!!”

“நீங்கள், சார்ல்சுடன் வாற நீங்கள்தானே? நான் கனடிய முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா, நம்ப சதீசு, பராபரம், மொகேந்திரன் அல்லாரும் வாறமென்ன?”

“அப்ப நானும் வந்திடறனுங்க”

“முருகேசன், தங்கராசும் வாறார். நாம பம்பலா இருந்து கதைக்கலாமென்ன?! உங்கட ஆயத்தம் எல்லாம் வடிவாப் போகுதுதானே?!”

“எல்லாம் போயிட்டுத்தான் இருக்குதுங்க் மோகன்!”

“ஒண்டு கேட்க வேணுமிண்டு இருந்தநான். பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழான்னு போட்டிருக்கு. யார் அவர்?”

“இதென்னங்க மோகன்... எங்க வீட்டு பெரியம்மணி சொல்றாங்க கேளுங்க!”

“முருகேசன், இருந்து ஆறுதலாக் கேட்க வேணும். இப்ப நேரமில்ல. ஆனா, உங்க பெட்டை நல்லா வடிவாத் தமிழ் கதைக்கிறா என்ன?!”

“நாம பேசாம வேற யாரு பேசுவாங்க மோகன்?! ஆனா, எனக்கு இப்ப கொஞ்சம் அலுவல் இருக்கு.

மோகன், தங்கராசூ, நீங்க ரெண்டு பேருமே அங்க இருக்குற எல்லாருக்கும் சொல்லுங்க. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தமிழ் விழாவுக்கு வாங்கன்னு சொல்லுங்க. நான் பேந்து கதைக்குறன். சூலை, 2,3,4 ஆகிய திகதிகள்ல சந்திக்கலாம், தென்கரோலைனா சார்ல்சுடன் நகர்ல... வணக்கம்!!

தமிழராய்ப் பிறந்தோம்! தமிழால் இணைவோம்!!

6/17/2011

தமிழ் ஒலி

6/05/2011

அரசி நகரைவிட்டு மிசிசிபி நதிக்கரையோரமாய்....

பொருளாதார நெருக்கடி நம்மை மட்டுமல்லாது, அமெரிக்க ஆசிய ஐரோப்பிய நாடுகளனைத்தையும் நெருக்கிய காலமது. ஆனாலும், நம்மை வா வாவென அழைத்து, அரவணைத்துக் கொண்டது அரசி மாநகரம். ஆம், கடந்த எட்டு ஆண்டுகால, சார்லட் நகர வாழ்க்கை மேம்பட்ட வாழ்க்கை. மாநகர மக்கள் மிகவும் இனிமையானவர்கள். பண்பாட்டில் நிறைவு கொண்டவர்கள். நகரமோ, மென்மேலும் வளர்ந்து வரும் நகரம்.

அடுத்த ஆண்டு, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமா அவர்கள் சார்ந்த கட்சியின் மாநாடு நடக்கப் போவது இந்நகரில்தான். கோலாகலக் கொண்டாட்டங்களும், உலகின் அரசியலைத் தீர்மானிக்கப் போகிற மாநாடும் நடக்கவிருப்பது இந்நகரில்தான். ஆனால் எமக்கு? மாற்றம் தவிர்க்க இயலாததாகிவிட்டது.

அமெரிக்காவின் நீள்நெடு நதியாம், மிசிசிபி நதிக்கரையோரம் நீயுந்தான் வாழ்ந்து பாரேன் என இயற்கை நம்மைப் பணித்து விட்டது போல உணர்கிறேன்.

ஈரேழு நாட்களாய், மிச்சிபி நதிக்கரையையும் அண்டியுள்ள பகுதிகளையும் இடவலம் வந்து கொண்டு இருக்கிறேன்.

எங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போன்றதொரு தோற்றம். கரைகள் இரண்டின் விளிம்புகளைத் தொட்டபடி, தளும்பித் தாவிப் பாய்ந்து கொண்டிருக்கிறது மிசிசிபி. அக்கரையோரத்தில் வாழும் மனிதர்களின் பூர்விகம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னையதாம். செவ்விந்தியர் தலைவர் சொன்னார். பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பினார். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

தமிழ்ச் சங்கம் இருக்கிறதா என வினவினேன். இங்கே தமிழ் மட்டுமல்ல. உலகின் அத்துனை தேசிய இனங்களும் உண்டு. அவற்றைப் பெரிதும் மதித்துச் செயல்படுகிறோம் எனச் சொல்லி, தமிழ், மலையாளம், தெலுகு, கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான சங்கங்களின் பிரதிநிதிகளையும் எமக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், செல்பி ஒன்றியத்தின் கல்வி இயக்குனர் மெலிசா ஓனிடாசு அவர்கள்.

பண்பாட்டைப் பறைசாற்றுவதில் நம்மவர்கள் அனைவருமே முனைப்பாய் இருக்கிறார்கள். ஆனாலும், இங்கு மலையாளிகளுக்கு நிகர் எவருமிலர். இருப்பவர் குறைவாக இருப்பினும், நிறைவாய் இருப்பதைக் காண முடிகிறது. மெம்ஃபிசு வாழ்க்கையைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. இருப்பினும், இப்போதைக்கு இக்காணொலிகளை உங்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கால அவகாசம் வாய்க்கும் போது, தவறாது கண்டு களியுங்கள்!!
























இறுதியாக, செந்தமிழ் நாடு.... முதல் சில மணித் துளிகள் சிறு சலசலப்பு இருக்கும்... அதையும் கடந்து பாருங்கள்... வெகு அருமை!!


6/03/2011

ஏலாதி

ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு வகை சூர்ணம். இது மெய்யுக்குப் பொலிவையும் வலிமையையும் ஊட்டித் தெம்பையும் தர வல்லது. அது போலவே, மாந்தனது வாழ்வுக்குச் சிறபபைத் தரும்விதமாக ஆறு கூறுகளை உள்ளடக்கி அறத்தை நல்குவது, பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி. கணிமேதாவியார் என்பார் இந்நூலின் ஆசிரியர்.

மும்மருந்துகளின் பெயரால் அமைந்த நூல்கள் யாவை என ஒருவர் நம்மைக் கேட்க, நாமும் அதனை அறியும் பொருட்டு விழைந்தவரானோம். திரிகடுகம், சிறுபஞ்சமூலம் மற்றும் ஏலாதி ஆகிய நூல்களே அவை. இதன் நீட்சியாக ஏலாதியை வாசிக்கத் துவங்கியதில், நம்மனதைக் கொள்ளை கொண்டது கீழ்வரும் செய்யுளானது.

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல - எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.

இடையின் அழகோ, தோளின் அழகோ, ஈடில்லா மற்ற அழகோ, நடை அழகோ, நாணத்தின் கண் வெளிப்படும் அழகோ, கழுத்தின் அழகோ அழகல்ல. எண்ணொடு கூடிய எழுத்தின் அழகே அழகு என்கிறார் கணிமேதாவியார்.

இங்கேதான் நாம் சற்று மாறுபடுகிறோம். ‘எண் எழுத்து இகழேல்’ என்று சொன்னார் ஒளவையார். ’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனக் கொன்றை வேந்தனிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே, அய்யன் திருவள்ளுவர் சொல்கிறார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கிறார்.

இவற்றுக்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் யாது? எண்களும், எழுத்துகளும் உண்டான கல்வியைக் கண்ணாய்ப் பாவித்தல் வேண்டும் என்கிறார்கள். இப்படி நேரிடையாகக் கல்வி எனப் பொருள் கொள்ளலாகாது என்கிறோம் நாம். ”கல்வி எனும் அதிகாரத்துக்கு உடபட்டுத்தானே வருகிறது இக்குறள்? எனவே, எண்ணும் எழுத்தும் எனக் கல்வியைத்தான் குறிப்பிடுகிறார்” என வாதிடூகிறார்கள்.

”எண்ணமும் அதற்கொத்த எழுத்தையும் இகழேல்; எண்ணமும் அதற்கான எழுத்தும் கண்ணெனப் பாவித்தல் வேண்டும்” என்பதன் தொடர்ச்சியாக, எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு எனப் பொருள் கொள்கிறோம்.

மாந்தனின் அகத்தைப் படம் பிடித்துக் காட்டுவது எழுத்து. அதாவது, அத்தருணத்தில், மாந்தனின் எண்ணம் எவ்வாறு இருந்ததென்பதை அவன் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆக, தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்படும் அவன் எண்ணங்களின் எழுத்துகள் அவனைச் செம்மைப்படுத்தும் என்றாகிறது.

இன்றைய நவீன யுகத்தில், எண்ணங்களை ஒலி மற்றும் ஒளியினூடாகப் பதிவு செய்யக்கூடிய ஊடகம் வாய்த்திருக்கிறது. என்றாலும் கூட, எழுத்திற்கு இருக்கும் சிறப்பு வெகுவாகத் தனித்தன்மை கொண்டதாகும். அதுவும், தன் எண்ணங்களைத் தத்தம் தாய் மொழியில் எழுதிப் பின்னோக்கிப் பார்த்தலில் மனம் பேரின்பம் அடைகிறது. வாழ்வு செம்மையாகிறது.

உதாரணத்திற்கு இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர், அட்லாண்டா நகரில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் கலந்து கொண்டேன். அந்த மூன்று நாட்களும், எம் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். அத்தருணத்தில் எம்மனதில் எழுந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை எழுதி வைத்திருக்கிறேன். மனம் சோர்வுறும் தருணத்திலெல்லாம் அவற்றை மீள்வாசகம் செய்கிறேன். புத்துணர்வு பெறுகிறேன்.

வாசிப்பதன் மூலம் புத்துணர்வு கொள்ள முடிகிறது என்றால், அதற்கான அடிப்படை என்ன? தாய் மொழி! தாய் மொழியில் விளைந்த எண்ணம். எண்ணங்களை அப்படியப்படியே தன் தாய்மொழியில் பதியப்பட்ட எழுத்து. இன்றைக்கும், என்றைக்கும் கிடைக்கப் போகிற பேரின்பத்திற்குக் காரணம் அதுதானே?

எனவேதான், கணிமேதாவியாரின் ஏலாதியில் சொல்லப்பட்டு இருக்கிற “எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு’ என்கிற வாசகம் நம்முள் ஈர்ப்பை உயிர்ப்பிக்கிறது. எண்ணங்கள் ஊற்றெடுக்க வைப்பதில், தாய்மொழியின் பங்கு அளப்பரியதும் மகத்தானதுமாகும்.

புலம்பெயர்ந்த மண்ணிலே, தாய்மொழியைச் சீராட்டிப் பாராட்டித் தேன்போல் நுகரும் பாங்கில் நமக்கு வாய்த்ததுதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா! ஆண்டு தோறும் நனிச் சிறப்போடு சிறப்பெய்தி நம்மையும் சிறக்க வைக்கும் விழா!! ஏலாதியைப் போல், கலை, இலக்கியம், பண்பாடு, மரபு போற்றுதல், அறம் பேணல், உரிமை காத்தல் ஆகிய அறுமருந்தும் பெற, நாமனைவரும் ஒன்று கூடுவோம் தமிழர் திருவிழாவில்!!

--பழமைபேசி.