சரி, அப்படியானால் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலமே இருந்திருக்கவில்லையா? அக்காலத்தை என்னவென்று சொல்வது? உதாரணத்திற்குக் குறிப்பிட வேண்டுமேயாயின், 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் எப்படி இருந்திருக்கும்? அக்காலத்தை என்னவென்று குறிப்பிடுவது??
இன்றைய நாளது வரையிலும், ஆராய்ச்சியாளர்களால் அக்காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. ஆனால், தோராயமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அக்காலத்தில் வாழ்ந்த குடிகள் பாவித்த பொருட்களைக் கொண்டு பெயரிடத் துவங்கினார்கள்.
உதாரணமாக, கூரான கற்கள், கற்கலாலான பாண்டங்கள் முதலானவற்றைப் பாவித்த காலம் சிலாகாலம் அல்லது கற்காலம் எனப்படுகிறது. அச்சிலா காலத்தைக் கூட, ஆதி சிலாகாலம், முந்தைய சிலா காலம், பிந்தைய சிலா காலம் எனப் பிரித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கற்காலத்து மனிதர்கள் தற்குறிகள், அறிவற்றவர்கள், மூடர்கள் என இழித்தும் பழித்தும் பேசப்படுவது இன்று வரையிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், அவையெல்லாம் ஒரு அனுமானத்தில், யூகத்தின் அடிப்படையில் கூறப்படுவனவேயன்றி ஆதாரப்பூர்வமானவை அன்று. உளவியல் ரீதியாகப் பார்க்கும் பொருட்டு, அவர்கள் நேர்மையானவர்கள். வெள்ளந்திகள்.
கற்காலத்திற்கு அடுத்து வருவது, வெங்கலத்தாலான பொருட்களைப் பாவித்த வெங்கலக்காலம் என்பதாகும். இக்கால கட்டத்திலேதான் சூதும், சூழ்ச்சியும் சிறிது சிறிதாகத் தலையெடுக்கத் துவங்கியது. இதற்கு அடுத்து இடம் பெறுவது, இரும்புக் காலம். இரும்பாலான பொருட்களை ஆக்கிப் பாவித்த காலமாகும்.
இரும்புக் காலத்திற்குப் பிற்பட்ட சரித்திர காலத்திலேதான் திருட்டு என்பது இடம் பெற்றது என வாதிடுவோரும் உண்டு. இரும்புக் காலம் வரையிலும், வரலாற்றுச் சின்னங்கள் அப்படியப்படியே கிடந்தன. அதற்குப் பிந்தைய காலத்திலேதான், அவற்றைச் சூறையாடி, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளை கொண்டார்கள் என்பதை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்.
சரித்திர காலத்தைப் பற்றி நாம் அலசத் தேவையில்லை. அவை பற்றிய தகவல்கள் எங்கும் இரைந்து கிடக்கின்றன. போர்களும், படையெடுப்புகளும், ஆக்கிரமிப்புகளும், அடாவடிகளும், பறிப்புகளும் அடங்கியதுதான் சரித்திர காலம்.
இனி, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யூகத்தின் அடிப்படையிலும், நடப்புச் சூழலில் இருக்கும் தகவின் தரவு(data)களைக் கருத்தில் கொண்டு மட்டுமே அணுக முடியும். உலகின் பல பாகங்களுக்குச் சென்று வந்திருந்தாலும் கூட, நான் பிறந்த மண்ணைக் கருத்தில் கொண்டு மட்டுமே என்னுள்ளான சிந்தனைகள் உருவெடுக்கும். இது வரையிலும், என் வாழ்க்கை என்பது அப்படித்தான் இருந்திருக்கிறது.
அதனடிப்படையில், நான் நோக்குவது இதுதான்!!
- இடையூறுகள், துயர்கள் எனப் பலதும் கலந்து, அதன் நீட்சியாக மேன்மை உயிர்ப்பிக்கும் என்பதே!!