7/11/2010

அமெரிக்கத் தலைநகரில் கோலாகல முத்தமிழ் விழா - கண்ணோட்டம்!

இன்பந்தருந் தமிழில் அன்பு பிறப்பது உண்டு; தெள்ளு தமிழில் இசைத் தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் நாமே, நாமேயெனப் படையெடுத்தனர் தமிழர் கூட்டம். முத்தமிழ் விழாக் கண்ட அமெரிக்கத் தலைநகரில், இன்று மகிழ்ச்சித் தேவதை கோலோச்சிய கோலாகலம்.

மாலை நேரத்தில், மரங்கள் கூடிய சோலைவனம் போன்றதொரு இடத்தில், செர்மன் டவுன் ந்கர உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், கூடியது செந்தமிழர் கூட்டம். நான்கு மணிக்கு, ஆசான் கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் தமிழ் வாழ்த்துப்பா பாட, விழா இனிதே துவங்கியது.

முதல் நிகழ்ச்சியாக, மழலையர் பங்கேற்ற நடனப் போட்டி இடம் பெற்றது. எட்டுக் குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறினர். இப்போதெல்லாம் குழந்தைகள் சரிவர ஆடாவிட்டால், அதுதான் செய்தி. அந்த வகையிலே, அவர்கள் அனைவருமே வெகு சிறப்பாக ஆடினர்.

கல்பனா மெய்யப்பன் அவர்கள் ஒருங்கிணைப்பில், மேரிலாந்து மாணவர்கள் படைத்த நகைச்சுவை நாடகம் அவர்கள்தம் முயற்சியின் முதல்படி. இனிவரும் காலங்களில், இனியும் சிறப்பெய்தும் என்பதில் ஐயமேதும் இல்லை.

அடுத்து, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலகன் ஆறுமுகசாமி தலைமையுரை ஆற்றிப் பேசினார். அவருடைய பண்பட்ட பேச்சுக்கும், பணிவுக்கும் தமிழ்ச் சங்கம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க முடிந்தது.

செய்லாளர் உரையாக கல்பனா மெய்யப்பன் அவர்களும் முதன்மை விருந்தினர் என்ற முறையில் திரு.இராஜ் பாபு இ.ஆ.ப அவர்களும் பேசி முடித்ததை அடுத்து, சீரிய நோக்கமொன்றைக் கையிலேந்தியபடி அரிமாவாய்த் தோன்றினார் முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள். அமெரிக்கத் தலைநகரில் தமிழ் மையம் நிறுவ இருப்பதை, பலத்த கரவொலிக்கு இடையில் அறிவித்துப் புன்னகை பூத்தார்.

புன்னகை இதழ்கள் விரிந்து, வெண்முத்துப் பற்கள் ஒளிர்வதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆம் அடுத்தடுத்து வந்த அறிவிப்புகள், அமெரிக்காவில் தமிழ் கோலோச்சுவதைப் பறை சாற்றும் விதமாகவே அமைந்தன. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர்கள், தன் சொந்தப் பணமாக பத்தாயிரம் வெள்ளிகளையும் வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக முதல் தவணையாக பத்தாயிரம் வெள்ளிகளையும் அறிவித்தார். அடுத்து வந்த அறிவிப்போ, இதையும் விஞ்சி வானுயர இருந்தது. ஆம், திரு. ராஜ்பாபு இ.ஆ.ப அவர்கள் கட்டிட நிதிக்காக ஐம்பதினாயிரம் வெள்ளிகள் கொடையாக அளிப்பதை அறிவிக்கவும் அரங்கமே அதிர்ந்தது.

அடுத்தபடியாக, கெளரி சிதம்பரம் பயிற்சியில், இளமை இதோ இதோ எனும் பாடலுக்கான நடனம் சிறப்பாக நடந்தேறியது. கயாம்பு கண்ணன் அவர்கள் அழைப்பு விடுக்க, தமிழ்ர் பண்பாடு குறித்துப் பேச கம்பீரமுடன் மேடையேறினார் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள். தெளிவான, நிதானமான, ஆளுமையான பேச்சு இவருடையது. அடுத்தவரை தாழ்த்திப் பெறுவது சாதனையா? உழைப்பில் தோய்த்து வடிப்பதே வெற்றிச் சாதனை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தென்றல் முல்லை இதழ், அவ்விதழின் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களது முன்னிலையில் வெளியிடப்பட்டது. பிரதியை பெற்றுக் கொண்டவர்களுள், திரு மார்ட்டின் அவர்களும் ஒருவர். திரு. எழிலரசன் என்கிற இராசாமணி அவர்கள், தமிழ் ஒலிப்பின் ழகர விழிப்புணர்ச்சியைப் பற்றிப் பாடல்களுடன் அழகுற விளக்கினார். இவரை அடுத்து, சொர்ணம் சங்கர் அவர்கள் தோழர் தியாகு அவர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

தோழர் தியாகு அவர்கள், தன் கணீர்க் குரலில் தமிழின் செழுமை, வளமை, தமிழர் பண்பாடு குறித்து பல இலக்கிய மேற்கோள்களுடன் பேசி, அரங்கத்தினரைத் தன் பேச்சின் நயத்தால் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையாகாது; மடை திறந்த வெள்ளம் போல, தமிழாறு பாய்ந்தது அவரது பேச்சில்.

அடுத்து இடம் பெற்றதுதான், வாசிங்டன் தமிழ்ச் சங்க 2010ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவின் உச்சகட்ட நிகழ்ச்சி என்று சொல்வேன். மாபெரும் கிராமிய நடன நிகழ்ச்சி அது. கிராமியம் சார்ந்த கலைகளும், வாழ்வும், இலக்கியமும் என்றென்றும் பசுமையானவை; இயற்கையை ஒட்டியவை; சுருங்கக் கூறின் மனிதனின் வாழ்வை அப்பட்டமாய்க் காண்பிப்பவை. அதிலே எந்தவொரு சோடிப்புகளும் இல.

தெருக்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் முதலான இருபத்தியொரு வகையான நாட்டுப்புறக் கலைகள் இடம் பெற்றன. அமெரிக்காவில் இருக்கிற தமிழ்ச் சங்கங்கள் எல்லாம், கலைராணி நாட்டிய சாலையின் இந்த நாட்டுப்புறக் கலையை கண்டு களித்து, பண்பாட்டை முன்னெடுத்தச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யாவிடில், அது தமிழர்க்கே ஒரு இழப்பு என்பது எம் தாழ்மையான எண்ணம். சமீபத்தில் நிகழ்ந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் திருவிழாவில், இவர்களது பங்களிப்பு இடம் பெறாதது ஏனோ தெரியவில்லை. அமையப் பெற்றிருந்தால், விழாவுக்கு மேலும் சிறப்பைக் கூட்டி இருக்கும்.

நாட்டுப்புறக் கலையைக் கண்டு களித்த அதே வேகத்தில், மாலை உணவும் நல்லவிதமாகப் பரிமாறப்பட்டது. அதில், குறிப்பாக வடை மிகவும் சுவையாக இருந்தது. உணவு இடைவேளைக்குப் பின்னர், அனுகோபால் மற்றும் ஜான்சன் ஆகியோரது பயிற்சியில் உருவான நடனங்கள் இடம் பெற்றது.

லதா கண்ணன், கீர்த்தி, சகானா அவர்கள் அளித்த இசைச் சங்கமத்திற்குப் பின்னர், ஐந்தாவது தூண் அமைப்பின் சமூக விழிப்புணர்வு நாடகமாக, சுந்தந்திர அடிமைகள் எனும் நாடகம் இடம் பெற்றது. நண்பர் விஜய் ஆனந்த் அவர்கள் நெறியாள்கையில் அற்புதமாக அரங்கேறியது நாடகம். இலஞ்ச ஊழல் குறித்த விழிப்புணர்வை அப்பட்டமாக விளக்கியது. ஜெயலலிதா அவர்களைப் போன்றதொரு கதாபாத்திரத்தில், அனாயசமாகக் கலக்கினார் லதா கண்ணன் அவர்கள்.

மொழியும் இனமும் என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயராமன் பாண்டியன் மொழி மற்றும் இன எழுச்சியின் அவசியத்தை உணர்த்திப் பேசினார். இதற்கு முன்னதாக, முனைவர் பாலாஜி அவர்கள் நடிகை ப்ரியாமணியுடன் கேள்வி பதில் நேரத்தை சுவாரசியமாக நடத்தி முடித்திருந்தார்.

பதிவர் பழமைபேசி, கவிஞர் தாமரையுடன் ஒரு கலந்துரையாடலை தொகுத்தளித்தார். அப்போது வினவிய வினாக்களுக்கு, கவிஞர் தாமரை அவர்கள் எளிமையாகவும், சிந்தனையைக் கிளறும் வண்ணமாகவும் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்.

இறுதியாக, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் தலைமையில், அமெரிக்க மண்ணில் தமிழ்க் கல்வி மற்றும் பண்பாடு வளர்ப்பது ஆண்களா? பெண்களா?? எனும் தலைப்பிலான பட்டிமன்றம் நடைபெற்றது. சுருக்கமாகவும், சுவையாகவும் நடத்தி முடித்தார். இறுதியில், வண்டியின் இரு சக்கரங்கள் குட்டையாகவும் நெட்டையாகவும் இருப்பதில்லை. அது போலவே, ஆண்களும் பெண்களும் வகிக்க வேண்டிய பங்கும் ஒரு போலவே அமைகிறது எனத் தீர்ப்பளித்தார். இறுதியில், நிறைவை எட்டியது முத்தமிழ் விழா; விழா மட்டுமல்ல, நம் மனதும்தான்!!


தமிழால் இணைந்தோம்!

வாசிங்டன் பகுதியிலிருந்து, பழமைபேசி!

5 comments:

a said...

விழாவை நேரில் பார்த்த மாதிரியான ஒரு உணர்வு.... விரிவான இடுகைக்கு நன்றி...

சின்னப் பையன் said...

கலக்குங்க.. வாழ்த்துகள்..

ஜோதிஜி said...

சிறப்பு.

பழமைபேசி said...

நன்றி மக்களே!!!

naanjil said...

தம்பி மணி
நன்றிகள் பல. குறைகளைச் சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள்.
குளிர்சாதன குறைப்பாட்டை எங்கு போய் கூறுவது?