7/05/2009

வட அமெரிக்கத் தமிழ் விழா: July 05, 2009 காலை 6 மணி

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்!

தமிழன் என்றாலே கூச்சல், குழப்பம், தூற்றுதல் என பிணக்குகள் கொண்டு திரிந்த மடமைக் காலம் மலை ஏறி விட்டதையா! மலை ஏறி விட்டதையா!! வட அமெரிக்காவிலே, ஜ்யார்ஜியா மாகாணத்திலே, அட்லாண்டாவிலே அது துரத்தி அடிக்கப்பட்டதையா!!!

ஆம் நண்பர்களே! நான் உலகின் பல் வேறு நாடுகளிலே வாழ்ந்திருக்கிறேன். இளம்பிராயம் தொட்டே பல் வேறு குழுக்கள், தமிழ்ச் சங்கங்கள் என்று கண்டிருக்கிறேன். சிங்கப்பூரிலே, மலேசியாவிலே, பாலித் தீவிலே, பின் டொரோண்டோவிலே, மூனிச் நகரிலே, ராலேவிலே, சார்லட்டிலே என்று பல நாடுகளிலேயும் ஊர்களிலேயும் பல சங்கங்கள், பல விழாக்கள் கண்டவன் என்ற முறையிலே சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கிறேன்.

இரு நாட்கள், தினமும் காலை 8 மணி முதல் நடுநிசி வரையிலும் மணிக்கிரு நிகழ்ச்சிகள், உண்டி சுருங்கும் குறிப்பறிந்து உடனே உணவு, இன்முக வரவேற்பு என்ற விருந்தோம்பலுக்கு மறு பெயர் என்ன என்று கேட்டால், அது அட்லாண்டா தமிழ்ச் சங்கம் என்பேன் நான்!

புலம் பெயர்ந்த இடத்திலே, தமிழன் இங்கே எழுச்சி பெறலாமா? அறிவார்ந்த சிந்தனையை, முன்னோக்கும் பார்வைதனைக் கொள்ளலாமா?? என்றெல்லாம் பதை பதைத்து நிற்கிறது ஒரு கூட்டம். இங்கே சாதி அரசியலுக்கு இடம் இல்லை, பிரித்தாளும் சூழ்ச்சி இல்லை.... ஏன், விருந்தோம்பல் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் நான் கண்ட இரு நாட்கள்! விருந்தோம்பல் என்பதுதானே தமிழன் பண்பாடு? விருந்தினர்க்கு என்று ஒரு நிலை வருமேயாயின், தன் நிலத்திற்கான விதையே ஆயினும் அது கூடப் படைக்கப்படும் என்றுதானே சொல்கிறது முகப்புக் குறள்??

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விருப்பு வெறுப்பற்ற பத்திரிகையாளன் பார்வை கொண்டும், அதற்கு மேலாக சாமானியத் தமிழனாகவும் கண்டவன் என்ற முறையிலே, அட்லாண்டா தமிழ் சங்கத்திற்கும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்திற்கும், நன்றி கூறும் நிலையிலே நான் இருக்கிறேன்.

இப்படி நேர்மறையான கருத்துகளையே சொல்வதனால், எனது தகமை மீது வாசகர்களுக்கு ஐயம் வந்துவிடுமோ, பத்திரிகை தர்மத்திற்கான மாண்பு மாசுபட்டு விடுமோ என்றஞ்சி எதிர்மறையாக ஏதாவது உளதா எனச் ச்ல்லடைப் போட்டுத் தேடுகிறேன். ஒன்றும் அதில் பிடிபடவில்லை என்பதைத் தமிழன்னையின் மேல் ஆணையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அட்லாண்டா தமிழ்ச் சங்கமே, ஓய்வு ஒழிவின்றி கருமமே கண்ணாக மூன்று நாட்களுக்கும் மேலாகத் துஞ்சாமல் பம்பரமாய்ச் சுழன்ற அந்த 80 குடும்பங்களையும் தமிழன்னை வாழ்த்துகிறாள்! வாழ்க, வளர்க!!

மக்களே இன்று மேடை நிகழ்ச்சிகள் என்று எதுவுமில்லை; ஆனால் விடுதியிலே உள்ள கூடலறையில் இலக்கிய வட்ட ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறிவார்ந்த இலக்கியவாதிகள் பலர் வந்திருந்து பல அரிய செய்திகளை, அவர்கள்தம் புலமையை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். தமிழ் கற்போம்! பண்பாடு காப்போம்!! என்ற நல்ல சிந்தனையோடு தமிழ்ச் சான்றோர் ஆன்றோரைக் காணும் ஆவலில்,

பழமைபேசி.

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

9 comments:

தீப்பெட்டி said...

பழமை பேசியாரே..

உங்கள் வடஅமெரிக்கா தமிழ்விழா பதிவுகள் அனைத்தையும் படித்தேன்.. மிக அருமை..
உங்களின் சிறப்பான பங்களிப்பிற்கும், கிடைத்த இடைவேளையில் எமக்களித்த இந்த சிறப்பான பதிவுகளுக்கும் உங்களை பாராட்ட வார்த்தைகள் என்னிடம் இல்லை.. வயதும் அனுபவமும் இல்லை..

இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும், அந்த அற்புதமான அனுவங்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் சிரம் தாழ்ந்த, உளம் நிறைந்த நன்றிகள் பல..

கணினி தேசம் said...

தமிழ் விழா குறித்த அருமையான பதிவுகளுக்கு நன்றிகள்.

Thekkikattan|தெகா said...

பழமை பேசி,

நல்ல தொகுப்பாக வழங்கியுள்ளீர்கள். அனைத்து இடுகைகளையும் இது சார்ந்து வாசித்துவிட்டேன். அப்படியே ஏத்துக்கொள்கிறேன். நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை, ஏற்படும் சூப்பர்ப்! அனைவருக்கும் வாழ்த்துக்களும்,எனது பாராட்டுக்களும்.

என்னிடம் உள்ள புகைப்படங்களை விரைவில் மின்னஞ்சல் செய்கிறேன்.

நன்றி!

ஆ.ஞானசேகரன் said...

///ஆம் நண்பர்களே! நான் உலகின் பல் வேறு நாடுகளிலே வாழ்ந்திருக்கிறேன். இளம்பிராயம் தொட்டே பல் வேறு குழுக்கள், தமிழ்ச் சங்கங்கள் என்று கண்டிருக்கிறேன். சிங்கப்பூரிலே, மலேசியாவிலே, பாலித் தீவிலே, பின் டொரோண்டோவிலே, மூனிச் நகரிலே, ராலேவிலே, சார்லட்டிலே என்று பல நாடுகளிலேயும் ஊர்களிலேயும் பல சங்கங்கள், பல விழாக்கள் கண்டவன் என்ற முறையிலே சில கருத்துகளை உங்கள் முன்னால் வைக்கிறேன். ///

வாருங்கள் உலகம் சுற்றும் வாலிபரே

ஆ.ஞானசேகரன் said...

//இங்கே சாதி அரசியலுக்கு இடம் இல்லை, பிரித்தாளும் சூழ்ச்சி இல்லை.... ஏன், விருந்தோம்பல் ஒன்றைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் நான் கண்ட இரு நாட்கள்!//

மகிழ்ச்சி... மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

ஆ.ஞானசேகரன் said...

//அட்லாண்டா தமிழ்ச் சங்கமே, ஓய்வு ஒழிவின்றி கருமமே கண்ணாக மூன்று நாட்களுக்கும் மேலாகத் துஞ்சாமல் பம்பரமாய்ச் சுழன்ற அந்த 80 குடும்பங்களையும் தமிழன்னை வாழ்த்துகிறாள்! வாழ்க, வளர்க!! //

இனிய வாழ்த்துகள் அனைவருக்கும்

ஆ.ஞானசேகரன் said...

விழா முழுவதையும் பகிர்ந்தழித்த பழமைக்கும் நன்றி நன்றி ... பாராட்டுகள்

பழமைபேசி said...

@@தீப்பெட்டி
@@கணினி தேசம்
@@Thekkikattan|தெகா
@@ஆ.ஞானசேகரன்

நன்றி மக்களே!

RRSLM said...

நன்றி பழமை, பதிவு அனைத்தையும் படித்தேன், கிடைக்கும் சொற்ப நேரத்தை பயன்படுத்தி மிகவும் அருமையாக எழுதி இருந்தீர்கள். நேரில் கண்ட உணர்வு. நன்றி! நன்றி!! நன்றி!!!