7/25/2009

FeTNA: தமிழ்த் திருவிழா, கிராமத்து நையாண்டி

வணக்கம் தமிழ் மக்காள்! இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூன்றாக வகுத்து தம் வாழ்வில் நலம் பல கண்டனர் தமிழர். இயற்றமிழ் மெத்தப் படித்த அறிஞரிடையே வலம் வந்தது. நாடகமும் இசையும் படித்தவரிடையே பாமரரிடையேயும் உலா வந்தன. இசையால் மயங்காதவர் எவருமிலர்.

அதிலும் நாட்டுப்புற இசை என்றால் சொல்லவா வேண்டும்? அதனுடன் நகைச்சுவையும் நையாண்டியும் க்லந்துவிட்டால், சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பெய்தது போலல்லவா இனிக்கும்?

பழம்பெரும்புலவர் தொல்காப்பியர் சுவைகளில் நகைச் சுவைக்கே முதலிடம் கொடுக்கின்றார். கிண்டலும் கேலியும் இசையும் கலந்த கலவையே நாட்டுப்புறப் பாடல்களில் ஓர் அங்கமாகிய நையாண்டிப் பாடல். இத்தகைய பாடல்கள் கிராமங்களின் சொத்து. பயிரிட்டுக் களைத்த பாமரர் சுவைக்கும் பல்சுவை விருந்து.

கற்பனை, காதிற்கினிய சந்தம், கண்ணுக்கினிய ஆடல் அடங்கிய ஒரு கலை விருந்தைத்தான் வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவில் படைத்தார் திருமதி. உமா முரளிதர் அவர்கள். பார்த்தவர்கள் மகிழவும், பார்க்காதவர் ‘அய்யோ! நல்லதொரு நிகழ்ச்சியைத் தவற விட்டோமே?’ என அங்கலாய்க்கும் படியானதாக இருந்தது இந்நிகழ்ச்சி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் தோய்ந்து கிடக்கிறார்களே எனும் தனது ஆதங்கத்தின் பிரதிபலிப்பே இந்த நையாண்டி நிகழ்ச்சி. நலிந்துவரும் நல்லதோர் கலையை அமெரிக்கத் தமிழருக்கு அளித்த பெருமை திருமதி. உமா முரளிதரையே சாரும்.

ஒரு கிராமத்துச் சூழலை விழாவில் கலந்து கொண்டவர் கண் முன் நிறுத்திய பெருமைக்கு அவரும், பாராட்டுதலுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவரும் உரியவர் ஆவர்.

நன்றி: முனைவர். K. கோவிந்தசாமி, புவனா சுகுமார் அவர்கள்

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

5 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

///தொலக்காட்சி //
????

பழமைபேசி said...

// ஸ்ரீதர் said...
///தொலக்காட்சி //
????
//

பிழை சுட்டியதற்கு நன்றிங்க நண்பா!

Joe said...

அருமையா எழுதிருக்கீங்க!
அமெரிக்கா போனாலும் நமது கிராமிய நடன நாடகத்தை அரங்கேற்றியிருக்காங்களே, உண்மையிலேயே பாராட்டனும், திருமதி. உமா அவர்களை.

ஒரு சந்தேகம், நீங்க மென்பொருள் வல்லுனரா, இல்லை தமிழ் பேராசிரியரா?

பழமைபேசி said...

//Joe said...

ஒரு சந்தேகம், நீங்க மென்பொருள் வல்லுனரா, இல்லை தமிழ் பேராசிரியரா?
//

தலை...அது நான் எழுதினது அல்ல... முனைவர் கோவிந்தசுவாமி ஐயா எழுதினதுதான்...

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு வாழ்த்துகளும் நன்றியும்..