7/04/2009

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்...பிற்பகல் நான்கு மணி

உணவு இடை வேளைக்குப் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடைபெற்றது. அதில் எதிர்பார்த்தது போலவே வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்தவரின் நடிப்பு வெகு பிரமாதமாக இருந்தது.

அடுத்தபடியாக வீணைக் கச்சேரி நடைபெற்றது. சிறப்பாக இருந்தது. அதை இரசிக்கக்கூடிய ஞானம் அடியேனுக்கு போதிய அளவு இல்லாததால், சீரான இசையை மட்டும் கேட்டுக் கொண்டே இடுகை இட்டுக் கொண்டு இருந்தேன்.
அடுத்த நிகழ்ச்சியான நீயா? நானா?? என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு மேடையின் பின்புறம் சென்றேன். செல்கிற வழ்யில் கோபிநாத் அவர்களைக் கண்டு சிறிது நேரம் அளவளாவிக் கொண்டு இருந்தேன். பதிவர் செல்வேந்திரன் பற்றி நினைவு கூர்ந்தார். அவர் மேல் வெகு மதிப்புக் கொண்டு இருப்பதாகவும் கூறினார். கூடவே எனது பெயரான பழமைபேசியின் பின்னணியையும் கேட்டு மகிழ்ந்தார்.

நிகழ்ச்சி துவங்கியது. வெகு லாவகமாகக் கையாளும் போக்கு கண்டு வியந்தேன். அவர் எதையும் சுவாரசியமாக மாற்றும் வல்லமை படைத்தவர். அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்ததில் முன்னேற்றம் கண்டவர்கள் ஆண்களா? பெண்களா?? இதுதான் தலைப்பு. இந்தத் தலைப்பில் இரு அணியினரும் வெகுவாகச் சிலாகித்து பேசினர்.

என் முறையும் வந்தது. எருமைக்காகப் புல் புடுங்குவதை விட்டு விட்டு, பெருமைக்காகப் புல் புடுங்கும் மனப்பான்மை கொண்ட ஆண்கள், இங்கே வந்து எருமைக்காகப் புல் புடுங்க ஆரம்பித்திருக்கிறோம். ஆம், கண்டுபாவனைகளை ஒழித்தெறிந்து பிரசவத்தில் பங்கு கொள்ளும் உளவியல் ரீதியான மனமாற்றம் கொண்டோம், காரணம் சூழல் அதை எங்களுக்குப் போதித்தது. எனவே ஆண், ஆணாக மாறியது புலம் பெயர்ந்த மண்ணிலே என்று வாதிட்டேன். அனைவரும் வெகுவாக இரசித்தனர். கோபியும் அதை ஆமோதித்துப் பாராட்டினார்.

இறுதியில் இரு குட்டிக் கதைகளைச் சொல்லி, நான் வாதிட்டது உள்ளிட்ட சில கருத்துகளை ஒட்டிச் சொல்லி, முன்னேற்றம் கொள்வது ஆண்களே எனத் தீர்ப்பும் கூறினார்.

அடுத்ததாக திரைப்படப் பாடலுக்கான நடன நிகழ்ச்சியை இளைஞர்கள் நடத்தினார்கள். தொடர்ந்து அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் முனைவர். கோ.விசுவநாதன் உரையாற்றி சற்று முன்னர் முடித்திருக்கிறார்.

அடுத்து பசு[பதியின் கூத்துப் பட்டறை நடைபெற உள்ளது.... காத்திருக்கிறோம்... இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அடுத்த இடுகையில் சந்திப்போம்....


No comments: