7/05/2009

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): July 05, இலக்கிய வட்ட சொற்பொழிவு நாள்

வணக்கம். அறைக்கு வருவதற்கு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டபடியால், காலை காலதாமதமாகவே துயிலெழ முடிந்தது. பின்னர் இலக்கிய வட்டத்தின் சொற்பொழிவு நடைபெறும் விடுதிக்கு வர காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

நுழையும் போது, தமிழருவி மணி அவர்களின் சொற்பொழிவு நிறைவுக்கு வர, ஐயா சிலம்பொலி அவ்ர்கள் உரையாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. செறிவான, இலக்கியச் சுவை உள்ள பல தகவல்களைச் சொல்லி சுவாரசியம் கூட்டினார். நகைச் சுவையாகவும் இருந்தது. தமிழருவி மணியன் உள்ளிட்ட அனைவரும் ஆற்றிய உரைகளில் இருந்து குறிப்பு எடுத்து வைத்து இருக்கிறேன். வரும் நாட்களில் அவற்றைத் தொகுத்து இடுகிறேன்.

அடுத்ததாக கவிஞர் ஜெய பாசுகரன் அவர்கள், தற்கால இலக்கியம் பற்றிப் பேசினார். யதார்த்தமாக இருந்தது. சில கவிதைகளை வாசித்தார், மனதைத் தொட்டுச் சென்றன அவை. இவற்றின் குறிப்பும் இருக்கிறது, எதிர்வரும் நாட்களில் விரிவாக எழுதவிருக்கிறேன்.

அடுத்தபடியாக அரசு செல்லையா அவர்கள் நன்றி நவில சரியாக நண்பகல் 12 மணிக்கு 2009ம் ஆண்டின் தமிழ்த் திருவிழா நிறைவுக்கு வந்தது. நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

முந்தைய நாளில் நடந்த தமிழிசைக் கருவியான வீணைக் கச்சேரியைப் புரியும் அளவுக்கு எனக்கு ஞானம் வாய்த்திருக்கவில்லை என்று குறிப்பிட்டதின் காரணமாக, வீணை வாசித்த சிறுமியின் தகப்பனார், நண்பர் என் அருகே வந்து வாசிக்கப்பட்ட பாடலைப் பற்றி விளக்கினார். அவருக்கு நன்றி கூறிக் கொண்டேன்!

பின் நண்பர்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டவுடன், உடனிருந்த எம்முடைய சார்லட் எழில் தமிழ் பண்பாட்டுக் குழுவினரோடு, அட்லாண்டா சரவணபவன் நோக்கி விரைந்தோம். அருமையான மதிய உணவு! அங்கேதான் எனக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

எந்தவிதமான அலட்டல் இன்றி, எளிமையாகக் காணப்பட்ட, புதிய பார்வை ஆசிரியர் ஐயா M. நடராஜன் (சசிகலா அவர்கள் கணவர்) அவர்கள் எம்மைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அவராகவே முன்வந்து பேச ஆரம்பித்தார். நான் வாசித்த கவிதை மற்றும் நீயா நானா நிகழ்ச்சியில் மொழிந்த வாதத்தை வெகுவாகப் பாராட்டினார். எனக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது. எனது விபர அட்டையப் பெற்றுக் கொண்டு, பின் அவருடன் இருந்த அனைவருக்கும் என்னைப் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார். நான் நன்றி கூடச் சொல்ல முடியாத அளவுக்கு உவகையில் சிக்குண்டு போனேன். அவரது யதார்த்தம், பாராட்டும் தன்மை உலகுக்குத் தெரிந்தாக வேண்டும்.

பின்னர் அட்லாண்டாவில் இருந்து புறப்பட்டு, ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்திற்குள்ளாக சார்லட் வந்தடைந்தேன். என்னே அருமையான அந்த மூன்று நாட்கள்! தமிழே நீ எனக்குத் தமிழ(இனிமை)ன்றோ?!

தமிழ்த் திருவிழா நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வளாகத்தில் இருந்து பரபரப்பான, சாடும் பற்றியம் எழுத விரும்பவில்லை. தற்போது விழா நிறைவு பெற்றுவிட்டதாகையால், அடுத்த இடுகையில் அதை உலகுக்கு வெளியிட்டாக வேண்டும், அதுவே இதழியல் அறமாக இருக்கும். இல்லாவிடில், விபரத்தை மறைத்த பாவியாவேன்!

(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

Fetna....தமிழ்த் திருவிழா...சில புகைப்படங்கள்!

11 comments:

அப்பாவி முரு said...

//எந்தவிதமான அலட்டல் இன்றி, எளிமையாகக் காணப்பட்ட ஐயா M. நடராஜன் (சசிகலா அவர்கள் கணவர்) அவர்கள் எம்மைப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அவராகவே முன்வந்து பேச ஆரம்பித்தார்//

வாழ்த்துகள்...

தமிழக, இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றப் போகிறீர்களோ???

பழமைபேசி said...

அவ்வ்வ்வ்............

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள் பழமை.நாளை இரவு தொலை பேசுகிறேன்.

ஒரு காசு said...

தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா.

குடந்தை அன்புமணி said...

தொகுப்பு நன்றாக இருந்தது. குறிப்பு எடுத்ததையும் அள்ளி விடுங்க. காத்திருக்கிறோம்.நடராஜன் அரசியலில் எப்படியோ... ஆனால் பழகுவதற்கு நல்ல மனிதர் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன்.

பனிமலர் said...

பழமைபேசி அருமையாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். விழாவை பற்றி எந்த பதிவுகளும் இல்லையே என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது தான் தெரிந்தது நீங்கள் தான் பெட்னாவின் சார்பில் அவர்களது நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர் என்று. உங்களின் சேவைக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

பனிமலர்.

செந்திலான் said...

தொகுப்புக்கு மிக்க நன்றி.இதில் ஈழத் தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவல். இல்லை வழக்கம் போல் இதிலும் ?
நடராஜன் அய்யா அவர்களுக்கு சசிகலா கணவர் என்ற அறிமுகம் தேவையா ? அவர் அரசியல்வாதி,புதிய பார்வை ஆசிரியர் என்று அறியப் படுவதே சாலச் சிறந்தது என்று கருதுகிறேன்.பத்திரிக்கை தர்மம் வேண்டாம் அன்னைத் தமிழ் "இதழியல் அறம்" போதும்.சரி வர்றேனுங்.....

பழமைபேசி said...

//செந்தில் said...
தொகுப்புக்கு மிக்க நன்றி.இதில் ஈழத் தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவல். இல்லை வழக்கம் போல் இதிலும் ?
நடராஜன் அய்யா அவர்களுக்கு சசிகலா கணவர் என்ற அறிமுகம் தேவையா ? அவர் அரசியல்வாதி,புதிய பார்வை ஆசிரியர் என்று அறியப் படுவதே சாலச் சிறந்தது என்று கருதுகிறேன்.பத்திரிக்கை தர்மம் வேண்டாம் அன்னைத் தமிழ் "இதழியல் அறம்" போதும்.சரி வர்றேனுங்.....
//

வாங்க தம்பீ.... உண்மையிலேயே எனக்கு சசிகலா கணவர்ன்னு எழுதும் போது நெருடலாத்தான் இருந்தது.... மன்னிக்கவும்... இப்ப விபரம் கொடுத்து இருக்கீங்க...நன்றி...

இதழியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வேறுபாடு? இதழிலும் அதே கர்மத்தைத்தான செய்யுறாங்க.... இஃகிஃகி!

பழமைபேசி said...

//தமிழ் மக்களும் கலந்து கொண்டார்களா என்பதை அறிய ஆவல்//

ஆமாம்... ஆனால் மிகச் சொற்பமே!

பழமைபேசி said...

வருகை புரிந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

செந்திலான் said...

அண்ணே

// இதழியலுக்கும் பத்திரிகைக்கும் என்ன வேறுபாடு?//

இதழியல்- தமிழ், பத்திரிகை- வட மொழி சொல்னு சொல்ல வந்தேன் சரி அத விடுங்க. நான் தான் பெங்களூர் ல உங்காத்துட்டு இரவு ரொம்ப நேரம் கழிச்சு தூங்க போறதுனால பின்னூட்டம் அடிக்கறேன்னா நீங்க உடனே பதிலா போட்டு தாக்கறீங்க ம்ம் தொடரட்டும் தொடரட்டும் இந்த நேர வித்தியாசம் நம்மளுக்கு பயன்படுது போங்க ..! பழமை பேசி போன்ற கவிஞர்கள் வரவால் மெல்லத் தமிழ் இனி வாழும்.நன்றிண்ணே