7/09/2009

Fetna .. தமிழ்த் திருவிழா....நாஞ்சில் பீற்றர் ஐயாவின் புதுமை!

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்ச ளழகும் அழகல்ல - நெஞ்சகத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு!

அறிவுடையோன் வழி அரசு செல்லும்! இது பெரியவர்கள் சொன்ன மொழி. அறிவைப் பெறுவதற்கான வழிகள் இரண்டு. ஒன்று அனுபவத்தின் வாயிலாகப் பெறும் அறிவு. மற்றொன்று அறிவுள்ள சான்றோர்கள் எழுதி வைத்துள்ள நூல்களைக் கற்றுப் பெறும் அறிவு.

அனுபவ அறிவு என்பது நடப்புக்கால பற்றியங்களையும், திறத்தையும் அடைவதில் முதன்மையாக இருக்கும். ஆனால், மூலம், ஆதி என்பனவற்றைக் கற்றுக் கொள்ள நூல்கள் இன்றியமையாதது. இன்றைக்கு நம்முள் எத்தனை பேர் நூல்களை வாசிக்கிறோம்? அப்படியே வாசித்தாலும், இலக்கிய நூல்களையும் அறிவு சார்ந்த நூல்களையும் தவிர இன்னபிற நூல்களையே வாசிக்க நேரிடுகிறது.

’உன் நண்பன் யார் என்று சொல்! நீ யார் என்று சொல்கிறேன்!!’ என்பது பழமொழி! இன்றைக்கு உன் நண்பன் என்ன நிகழ்ச்சி நடத்துகிறான் என்று சொல்! நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்கிறார்கள் படைப்பாளிகள். ’வணிக ரீதியாக வெற்றி பெறுவதாகவும், பிரபலம் அடையக் கூடியதாகவும் படைப்புகள் படைப்பவனின் நண்பன் நீ என்றால், நீயும் பிரபலமானவனே!!’ என்கிற மனோபாவம் சமூகத்தில் மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம்.

இந்தச் சூழலில்தான் அன்பு ஐயா நாஞ்சில் பீற்றர் அவர்கள், தமிழனைத் தட்டி எழுப்புகிற வகையிலே, இலக்கிய ஞானம் பெறுகிற வகையிலே, பண்பாடு கற்றுத் தேறுவதை ஊக்குவிக்கும் வகையிலே, புதுமையாக, பல்லூடக விநாடி வினா நிகழ்ச்சியை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

பின்னணியில் தமிழிசை தவழ்ந்து வர, திரையில் பலதரப்பட்ட சுவாரசியமிக்க வினாக்கள் பளிச்சிட நோக்கர்களைக் கவரும் வகையில் பல்லூடக(multi-media) நிகழ்ச்சியாக இதை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டிலே அவர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது. இலக்கிய வரலாறு நூலை வாசித்து பல பற்றியங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அமரர் முனைவர் ஐயா திருமுருகன் அவர்கள் படைப்பில் உருவான குறுவட்டுகள் மூன்றை இன்னமும் கூட கேட்டு முத்தமிழையும் கற்கும் பேறு பெற்றவனானேன்.

தலைவர் மட்டுமே அணிக்கு தலைமை தாங்குவது என்றில்லாமல், அணியில் இருந்த 12 பேரையும் பல தரப்பட்ட நூல்களை வாசிக்கச் செய்து, உற்சாகமூட்டினார் எங்கள் தலைவர் குழந்தைவேல் இராமசாமி அவர்கள். அவருடன் இணைந்து செயலாற்றியது ஒரு சுவையான அனுபவம். ஆங்கிலத்தில் win - win situtation என்பார்களே அதைப் போல, அணியினரின் வாசிப்புத் திறனை முடுக்கிவிட்டதில் அவருக்கும் வெற்றி! வாசித்த எங்களுக்கும் வெற்றி!! நிகழ்ச்சியைக் கண்டு களித்த நோக்கர்களுக்கும் வெற்றி!!!

அரங்கில் அமர்ந்திருந்த அத்துனை பேரும் ஒவ்வொரு வினாவின் போதும், ஆவலுடன் தன்னையும் அதில் ஆழ்த்திப் பரவசமடைந்ததைக் காண முடிந்தது. பழையதைக் கழித்து விட்டு, மாறுபட்டதை அறிமுகப்படுத்திப் புதுமை என்று சொல்லி வணிகம் வெற்றி பெறுகிற இக்கால கட்டத்தில், முன்னோர் விட்டுச் சென்றதை உள்ளதை உள்ளபடியே மேம்பட்ட பாங்கில் காண்பிக்கிற யுக்தியில் நாஞ்சில் பீற்றர் ஐயா ஒளிர்கிறார் என்றுச் சொன்னால் அது மிகையாகாது.

பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்கள் வந்து குவிந்துள்ள போதிலும், கலை, பண்பாடு காக்கும் தகுதியுள்ளவை நிலைத்து நிற்கக் கூடியவையே. அழிந்து போனது போலக் காணப்பட்டாலும், அவை மீண்டும் வேறொரு ரூபத்தில் புதுயுகம் எடுக்கத்தான் செய்யும்.

தனிமனிதப் போக்கைக் கட்டுடைக்கவும், பொதுப்பண்பு காத்திடவும், முற்போக்கு சிந்தனைகள் பெருகிப் பேரின்பம் பொங்கிட நாஞ்சில் பீற்றர் ஐயாவின் நிகழ்ச்சிகள் போன்று நிறைய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சீரிய கடமை! பேரவை அக்கடமையைச் செய்யுமா? செய்ய வேண்டுமாயின், பேரவைக்கு வலு சேர்க்க வேண்டிய கட்டாயம் ந்ம் அனைவருக்கும் உண்டு அன்றோ?!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

5 comments:

ஜோ/Joe said...

இந்த நிகழ்வைப் பற்றிய உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

செய்திகளை தொகுத்து தர நீங்கள் மேற்கொண்ட உழைப்பும் ,வேகமும் பிரமிக்க வைக்கிறது.

பாராட்ட வார்த்தையில்லை .

பழமைபேசி said...

//ஜோ/Joe said...
இந்த நிகழ்வைப் பற்றிய உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

செய்திகளை தொகுத்து தர நீங்கள் மேற்கொண்ட உழைப்பும் ,வேகமும் பிரமிக்க வைக்கிறது.

பாராட்ட வார்த்தையில்லை .
//

யான் பெற்ற இன்பம் வையகமும் பெறத்தானுங்க.... நன்றி!

சுந்தர் said...

//குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்ச ளழகும் அழகல்ல - நெஞ்சகத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு!//
அருமையான பாடல், இது எங்கே உள்ளது. ?

பழமைபேசி said...

//சுந்தர் said... //

நாலடியார்ப் பாடல்ங்க சுந்தர்!

Kolandavel said...

Excellent! Manivasagam.... The whole World is enjoying your writings and the Thamiz vizhaa Bloggs.

vaLarattum ungal paNi!

Kolandavel Ramasamy
Washington DC