3/22/2009

பதிவுலக வாசகர்களுக்கு சூடான கேள்வி!

விமர்சனங்கள் நல்லதா, கெட்டதா? ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், எதிர்மறைக் கருத்துகள் கொண்டதாக இருப்பினும், நாகரிகமான நடையில், பேச்சில் இருக்கும் பட்சத்தில் அவை நல்லவையே! அதுவே, நாகரிகமற்ற முறையில், அபாண்டங்களோடும், காழ்ப்புணர்ச்சியின் பொருட்டுமாக இருப்பின் அவை கெட்டவை என்பது எம் கருத்து. இம் முறையில், பிறழ்ந்து வரும் மறுமொழிகள் ஏற்கப்படுவதும் சரியானது அல்ல. அவற்றை மட்டுறுத்துவது, வலைப்பூவின் பொறுப்பாளரின் கடமை என்ற எமது பணிவான கருத்தோடு, இவ்விடுகையைத் தொடர்கிறேன் வாசகர்களே!

திரட்டிகளிலே வாசகர் பரிந்துரையை ஏற்கும்படியாக, அதற்கான வசதிகளை அளித்து இருக்கிறார்கள். அது குறித்து சிந்திக்க முற்பட்டதின் விளைவே இவ்விடுகையின் ஆக்கம். சிந்தனையில், எம்முள் தோன்றியவற்றை இனிக் காண்போம், வாருங்கள்!



  • பதிவுக்கு வரும் வாசகர்கள் இடுகையினை வாசித்த பின்னர், யாதொரு வாக்கும் அளிக்காமல் செல்லும் பட்சத்தில், அது குறித்த விமர்சனத்திற்கு இடமெதுவும் இல்லை.

  • வாக்களித்துச் சென்றவர்கள், நன்றிக்கு ஆட்பட்டவர்கள். விமர்சனத்திற்கு இடமில்லை!

  • இடுகையினை இட்ட பதிவருக்கு அபிமானத்தைத் தெரிவிக்கும் பொருட்டும், அளவளாவும் பொருட்டும் பின்னூட்டம் இட்டுவிட்டு, வாக்களிக்காமல் விடுகிற பட்சத்திலும், அதனை விமர்சனம் செய்வதற்கு எதுவுமில்லை.

  • ’சூப்பர், கலக்கல், நச்னு இருக்கு, அருமை, அள்ளுது, பயனுள்ளதா இருக்கு’, இந்த ரீதியில் பின்னூட்டம் இட்டுவிட்டு வாக்களிக்காமல் செல்வோருக்கு இரு வேறு காரணங்கள் இருக்க முடியும் என நினைக்கிறேன். இரண்டுமே விமர்சனத்திற்கு ஆட்பட்டவை என்பது இந்த சாமன்யனின் எண்ணம்.

  1. இடுகையினை உள்ளபடியாகவே இரசித்து, பாராட்டும் விதமாக பின்னூட்டம் இட்டுவிட்டு, வாக்களிக்க வேண்டும் என்கிறதில் சிரத்தை இல்லாமல் போதல். சிரத்தையுடன் நேரம் செலவு செய்து ஊக்குவிக்கும் இந்த வாசகர், மற்ற வாசகர்களுக்கும் இப்பதிவைச் சுட்டிக் காட்டுவதில் ஏனிந்தப் பாராமுகம்? வாக்களியுங்கள் வாசகர்களே!
  2. பதிந்த பதிவரின் அபிமானத்தைப் பெறும் முனைப்பில், இடுகை பாராட்டுக்கு தகுதி இல்லாதிருந்தும் பாராட்டிவிட்டு, தெரிந்தே வாக்களிக்காமல் செல்வது. தகுதியில்லாத இடுகைக்கு பாராட்டுவது தேவையா? அல்லது, வாக்களித்து மேலும் அதிகப்படியான அபிமானத்தைப் பெறுவதில் என்ன சிரமம்?? ஒன்று போலியாகப் பாராட்டுவதைத் தவிர்க்கலாம். அல்லது வாக்களித்து, இட்ட பின்னூட்டத்திற்கு வலுச் சேர்க்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில், இட்ட பின்னூட்டம் போலியானதுதானே?

வாக்களிக்க நினைவூட்டுவதை இகழ்வாகக் கருதி விமர்சனம் செய்ததின் பொருட்டு, அப்படிக் கோருவதை பல பதிவர்கள் அறவே கைவிட்டு விட்டார்கள். அவர்களுள் அடியேனும் ஒருவன். அந்த ஒரு தகுதியின் பொருட்டாகவே, இவ்விடுகையினை இடுகிறேன் வாசகர்களே!

’நீயெல்லாம் பதிவிடவில்லை என்று யார் அழுதார்கள்?’ என்று வினவும் வாசகரா நீங்கள்? இப்பதிவைப் படிக்க வந்த உங்களைப் போன்றோருக்கும், இன்ன பிற வாசகர்களுக்காவும்தான் பதிவிடுகிறோம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் நண்பா!


ஒத்தடம் அரை வைத்தியம்!

42 comments:

அப்பாவி முரு said...

வருகைப் பதிவும்,
தமிழிஸ்ல் வாக்குப்பதிவும்,

செய்வது,

அப்பாவி முரு.

அப்பாவி முரு said...

அண்ணே 300-வது பதிவு தானே இது.

விடாமுயற்ச்சியோடு பதிவு எழுதுவதற்க்கும், தன்னம்பியுடன் பின்னூடங்களுக்கு பதிலளிப்பதற்க்கும், என்னைப் போன்றவர்களுக்கு ஊக்குவிப்பதற்க்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
அண்ணே 300-வது பதிவு தானே இது.

விடாமுயற்ச்சியோடு பதிவு எழுதுவதற்க்கும், தன்னம்பியுடன் பின்னூடங்களுக்கு பதிலளிப்பதற்க்கும், என்னைப் போன்றவர்களுக்கு ஊக்குவிப்பதற்க்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
//

தம்பி, வாங்க! நீங்க சொல்லித்தான் தெரியுது இது 300வதுன்னு!! நன்றிங்க!!

Mahesh said...

அண்ணே... உங்க அலசலும் ஆதங்கமும் நியாயமானதுதான்னாலும் வாக்களிக்க வேண்டிய தளங்களில் பதிவும் கடவுச்சொல்லும் இருக்கணும்கற கட்டாயம் இருப்பதால்தான் பலர் வாக்களிப்பதில்லை. இது நான் பலரிடம் கேட்டு அறிந்த உண்மை.

இன்னோரு காரணம், வாக்களிக்கும் தளங்கள் திரையில் விரிய சில சமயம் நேரம் பிடிக்கிறது. பலரும் தங்களது அலௌவலக நேரத்தில்தான் ஒரிரு நிமிடங்கள் ஒதுக்கி பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதும் மற்றோரு காரணம்.

அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாசகர்களுக்கு வேண்டுமானால் வீட்டில் கணிணி வசதி இருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்திய வாசகர்களுக்கு அவ்வசதி இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

பழமைபேசி said...

//Mahesh said...
அண்ணே... உங்க அலசலும் ஆதங்கமும் நியாயமானதுதான்னாலும் வாக்களிக்க வேண்டிய தளங்களில் பதிவும் கடவுச்சொல்லும் இருக்கணும்கற கட்டாயம் இருப்பதால்தான் பலர் வாக்களிப்பதில்லை. இது நான் பலரிடம் கேட்டு அறிந்த உண்மை.

//

மகேசு அண்ணே வாங்க! நான் இதையும் நினைச்சிப் பார்த்தனே? எல்லாத் திரட்டிக்கும் இது பொருந்தாதுங்க அண்ணே!! இஃகிஃகி!!

நீங்க சொன்ன மத்த ரெண்டு காரணங்களும் சரியே! நான் அவங்களை ஒன்னுமே சொல்லலை!! இஃகிஃகி!! நான் சொன்னது, நேரம் எடுத்து ஆகோ, ஓகோன்னு பத்துப் பின்னூட்டம் கூட மத்த மத்த பதிவுகள்ல போடுறதப் பார்த்து இருக்கேனே?!

அப்பாவி முரு said...

பழமைபேசி said...
நேரம் எடுத்து ஆகோ, ஓகோன்னு பத்துப் பின்னூட்டம் கூட மத்த மத்த பதிவுகள்ல போடுறதப் பார்த்து இருக்கேனே?!//

அண்ணே எனக்கு இந்த பதிவில் உடண்பாடு இல்லாததால் தான் முதலில் வந்தும் கருத்து சொல்லாமல் போய்விட்டேன்.

உங்களோட பதிவுகள் தரம் வாய்ந்தவை. அதை உங்களுக்கு வரும் தொடர் வாசகர்களையும், அவர்கள் இடும் பின்னூட்டங்களிலும் அறியலாம்.

உண்மையான சந்தோசமென்பது, ஒரு தரமான பதிவும் அதில் விவாதிக்கப்படும் பின்னூடங்களிலேயே உள்ளது என நம்புபவன் நான். அது இரண்டுமே உங்களிடம் இருக்கிறது.

இதற்க்கு மேலாக பலர் வாகளித்துத் தான் பிரபலமாக வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதும் எனது கருத்து.

பழமைபேசி said...

//இதற்க்கு மேலாக பலர் வாகளித்துத் தான் பிரபலமாக வேண்டிய நிலையில் நீங்கள் இல்லை என்பதும் எனது கருத்து.//

தம்பி முரு, உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி! இந்த பதிவு, என்னையோ, என் சார்ந்த பதிவையோ அடிப்படையாக வைத்துப் பதிந்தது அல்ல.

நான் வழமையா படிக்கிற பதிவுகளில் நான் பெற்ற அனுபவத்தை வைத்தே இதைப் படைத்தேன்.

அடுத்து, நல்ல படைப்புகளைக் கண்டறியும் பொறுப்பு, படைத்த பதிவரையும் தாண்டிய ஒன்று! அது தரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது வாசகரின் அனுபவத்தில் அடங்கி உள்ளது.

மேலாக, அடுத்தவருக்கு உதவும் பொருட்டு, வாசகர் பரிந்துரை என்பது அவசியமே!!

இது எனது கருத்து மட்டுமே! மக்கள் சக்திக்கு முன், இந்த சாமான்யன் எம்மாத்திரம்? இஃகிஃகி!!

Arasi Raj said...

பழமைபேசி said...
நேரம் எடுத்து ஆகோ, ஓகோன்னு பத்துப் பின்னூட்டம் கூட மத்த மத்த பதிவுகள்ல போடுறதப் பார்த்து இருக்கேனே?!/////
ஆஹா...ஏன்...எதுக்கு...என்ன...?

நான் இது வரைக்கும் யாருக்கும் ஓட்டு போற்றுக்கேனான்னு யோசிச்சுப் பார்த்த ரொம்ப ரொம்ப கம்மின்னு தான் சொல்லணும்....அதுக்கு காரணம்...இந்த ஒட்டு போடுறதோட பயன் எனக்கு தெரியாதுங்குறது மட்டும் தான்......சிலர் பின்னூட்டத்துலேயே ஓட்டு போடுங்கன்னு சொல்லுவாங்க...சரி ஏதோ இருக்கு போல இருக்குன்னு ஓட்டு போடுவேன்....சில நேரம் அது ,மிகச் சிறந்த பதிவ இல்லாட்டியும், நமக்கு ரெண்டே ரெண்டு வாய்ப்புகள் தான் இருக்கும்..ஒன்னு தூக்கி விட, இன்னொன்னு இறக்கி விடல்...எதுக்கு இறக்கி விட்டுக்கிட்டுன்னு தூக்கி விட்டுட்டு போயிடுவேன்...ஏதோ என்னால முடிஞ்சா இரண்டு நயா பைசா

உங்களோட பதிவு எல்லாமே எனக்குப் பிடிக்கும்...இனிமே தவறாம போற்றுவோம்.....

ஒன்னு மட்டும் உண்மை....கும்மியோ கும்மின்னு பின்னூட்டம் போடுறதுனால, சில தரமான பின்னூட்டங்கள் புதைஞ்சு வாசகர் கண்ணுக்கு தெரியாம போகுதுங்குறது எல்லாருக்கும் புரியனும் ..
வரும் வாரம் நல்லபடியா அமைய வாழ்த்துகள் [ திருத்திக்கிட்டேன்..."க்" ]

அப்பாவி முரு said...

//மேலாக, அடுத்தவருக்கு உதவும் பொருட்டு, வாசகர் பரிந்துரை என்பது அவசியமே!!

இது எனது கருத்து மட்டுமே! மக்கள் சக்திக்கு முன், இந்த சாமான்யன் எம்மாத்திரம்? இஃகிஃகி!!//

அண்ணா., நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. உங்களை எனக்கு அடையாளம் காட்டியது தமிழிஸ் தான், ஆனால் தற்பொழுது நான் சந்திக்கும் பதிவர்களிடம் பேசும்போதெல்லாம் ஒருசில பதிவர்களைப் பற்றி அறிமுகம் செய்து பேசுவோம், அதில் கண்டிப்பாய் உங்களின் பெயர் இருக்கும்.

அதற்க்கும் மேல் ‘பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை’ என்பதும் உண்மைதானே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பலசமயம் பதிவைப்பாராட்ட ரொம்ப ஆர்வமா நேரா பின்னூட்டத்துக்கு போயிடறதால மீண்டும் ஸ்க்ரோல் செய்து மேலே போய் க்ளிக் செய்ய போகறது மறந்து போகுது.. நீங்க சொல்றது நியாயம் தான்.. ஆனா என்னைப்போல சோம்பேறிங்க நிறைய பேரு இருக்காங்கன்னு மட்டும் தெரியுது.. இனி முதல்ல வாக்களிச்சிட்டு அப்பறமாட்டி தான் கமெண்ட் பாக்ஸ் போனும்னு வேணா மனசில் சொல்லிக்கிறேன்..

கணினி தேசம் said...

அஹா...நண்பா, நமக்கும் "ஓட்டு" க்கும் கொஞ்சம் ஆவாது. அதான் சிரத்தை காட்டுவதில்லை.

ஏன்னா, ஊர்ல இதுவரைக்கும் தேர்தல்ல ஓட்டு போட்டதேயில்லை (யாரு அடிக்க வர்றது?). ஒவ்வொருமுறையும் பெயர் விடுபட்டிருக்கும் அல்லது நான் வெளியூரில்/வெளிநாட்டில் இருப்பேன்.

//இட்ட பின்னூட்டத்திற்கு வலுச் சேர்க்கலாம். //

சரி..சரி. இனிமே கண்டிப்பா பின்னூட்டம் போடுரேனோ இல்லையா.. ஓட்டு போட்டுடறேன். சரியா?

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said... //

வாங்க வாங்க! புரிதலுக்கு மிக்க நன்றிங்க!! இது எனக்காகவோ, அல்லது என்சார்ந்த பதிவுக்கான விவாதம் இல்லைங்க, ஒட்டு மொத்த பதிவுலகம் பற்றிய ஒன்று!!!!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
அதற்க்கும் மேல் ‘பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை’ என்பதும் உண்மைதானே.
//

ஆமாங்க, ஆமாங்க... உங்க அன்புக்கு முன்னாடி நான் என்னத்தப் பேச?! அன்பே சிவம்!!!

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
பலசமயம் பதிவைப்பாராட்ட ரொம்ப ஆர்வமா நேரா பின்னூட்டத்துக்கு போயிடறதால மீண்டும் ஸ்க்ரோல் செய்து மேலே போய் க்ளிக் செய்ய போகறது மறந்து போகுது.. நீங்க சொல்றது நியாயம் தான்.. //

வாங்க சகோதரி, வணக்கம்! நீங்க முதல் வகை போல இருக்கு?!இஃகிஃகி!

புரிதலுக்கு மிக்க நன்றிங்க!!

இந்தமாதிரி ஆகறவங்களுக்கு நினைவூட்டுற விதமா, சக பதிவர் ஒருத்தர், ‘பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க!’ன்னு பதாகை வெச்சி இருந்தாரு. அதை நாலு பெரியவங்க அந்தலை சந்தலையாக் கிழிச்சி தொங்க விடவே, நான் தலைகுப்புற ஓடி வந்து, என்னோட பதிவுல அதே மாதிரி இருந்த வாசகங்களை எல்லாம் நீக்கிட்டேன். இஃகிஃகி!!

பழமைபேசி said...

//கணினி தேசம் said...
//இட்ட பின்னூட்டத்திற்கு வலுச் சேர்க்கலாம். //

சரி..சரி. இனிமே கண்டிப்பா பின்னூட்டம் போடுரேனோ இல்லையா.. ஓட்டு போட்டுடறேன். சரியா?
//

நண்பா, இது எனக்கு போட்ட பதிவு அல்ல. ஒரு பொதுவான பதிவு!!

மத்தபடி புரிதலுக்கு நன்றிங்க!

தென்னவன். said...

வாசிப்பு பழக்கம் முற்றிலுமாய் இழந்திருந்த எனக்கு பதிவுகளை படிப்பதன் மூலம் அது திரும்ப கிடைத்திருக்கிறது. நிறைய பதிவுகளின் பின்னூட்டம் என்னை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் போல பின்னூட்ட விவாதங்கள், பாராட்டுக்கள் எல்லாம் இருக்கின்ற பதிவுகளில் பின்னூட்டமிட கூச்சப்பட்டு தவிர்த்து விடுவதுண்டு. வக்களிப்பதல் என்ன நன்மை என்பது எனக்கு முழுமையாய் தெரியாது. அனால், எனக்கு பிடித்த பதிவுகளுக்கு நான் வாக்களிக்காமல் விட்டது இல்லை.

நானும் ஒரு சில வரிகளை (கவிதைனு சொல்ல தைரியம் இல்லை :) ) பதிவிலேற்றி வேடிக்கை பார்த்ததுண்டு. யாரும் அதை படிப்பார்கள் என்றோ, மற்றவர்கள் படிக்கும் தரத்தில் அது இருக்கும் என்றோ நன் நினைத்தது இல்லை, அந்த அளவுக்கு கூட மீண்டும் என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை. நீங்கள் எனக்கு எழுதிய முதல் பின்னூட்டம் என்னக்கு மிகுந்த மகிழ்வை தந்தது.

நன்றி
தென்னவன் ராமலிங்கம்

மோனி said...

___//’நீயெல்லாம் பதிவிடவில்லை என்று யார் அழுதார்கள்?’ என்று வினவும் வாசகரா நீங்கள்? இப்பதிவைப் படிக்க வந்த உங்களைப் போன்றோருக்கும், இன்ன பிற வாசகர்களுக்காவும்தான் பதிவிடுகிறோம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் நண்பா!
//___

உங்க பதிவை படிச்சிட்டு இப்படி ஒரு கேள்வி கேக்க முடியுமா பிரதர் ?
நெஜமாலுமே நான் படிக்கிற டீசன்டான பதிவுகள்ல உங்களுதும் ஒன்னு.
முடிஞ்சளவுக்கு இனிமே ஓட்டும் போடுறேன் . பின்னூட்டமும் போடுறேன் .

Poornima Saravana kumar said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
பலசமயம் பதிவைப்பாராட்ட ரொம்ப ஆர்வமா நேரா பின்னூட்டத்துக்கு போயிடறதால மீண்டும் ஸ்க்ரோல் செய்து மேலே போய் க்ளிக் செய்ய போகறது மறந்து போகுது.. நீங்க சொல்றது நியாயம் தான்.. ஆனா என்னைப்போல சோம்பேறிங்க நிறைய பேரு இருக்காங்கன்னு மட்டும் தெரியுது.. இனி முதல்ல வாக்களிச்சிட்டு அப்பறமாட்டி தான் கமெண்ட் பாக்ஸ் போனும்னு வேணா மனசில் சொல்லிக்கிறேன்..

//

என்னைப் போல தான் பலரும் இருக்காங்கலா??????

Unknown said...

ஆஹா, சூப்பர், இதுபோல பதிவு நானும் எழுதியிருக்கிறேன், சூடாக இல்லை, நகைச்சுவையாக (என்று நினைத்துக்கொண்டு); தமிழில் இல்லை, ஆங்கிலத்தில் (என்று நினைத்துக்கொண்டு).

உண்மையில் பின்னூட்டம் என்பது தெரிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் செய்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து. மடல் குழுக்களிலும் கூட, 1000 உறுப்பினர்கள் இருந்தாலும் எழுதுபவர்கள் மிகச்சிலரே; மற்றவர் பார்வையிடுபவர்கள் அல்லது ஃபார்வர்டிடுபவர்கள் :)

Poornima Saravana kumar said...

அண்ணா நான் ஓட்டு போடுட்டேன்:))))

Anonymous said...

ஆகா... அண்ணே... பிரமாதம்,சூப்பர், கலக்கல், நச்னு இருக்கு, அருமை, அள்ளுது, பயனுள்ளதா இருக்கு....

நான் இன்னும் வோட்டு போடலீங்க அண்ணே...
:-)

Unknown said...

இதுவரை நான் பல ப்ளாக்குகளை வாசித்து இருக்கிறேன்.
ஆனால் யாருக்கும் பின்னுட்டம் இட்டதில்லை. யாருக்கும் வாகளித்ததில்லை.
அது எதற்காக என்றும் தெரியாது. உங்களுடைய பதிவை படித்த பின்தான் புரிந்தது.
இன்று புதிய கணக்கு தமிழிஷில் தொடங்கி விட்டேன்.
இனி முடிந்த்த அளவு பிடித்த படைப்புகள் அனைத்திற்கும் வாக்களிப்பேன்.
உங்களுடைய அறிவுறைக்கு நன்றி.

பழமைபேசி said...

கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி!

தென்னவன் நீங்க தொடர்ந்து எழுதுங்க!

//Sam said... //

வணக்கம் நண்பா! நீங்க சொல்லுறது யதார்த்தம்! நான் அவங்களை ஒன்னும் குறை சொல்லலை!! பாராட்டும் அன்பர்களுக்கு அன்பா ஒரு குட்டு. ச்சும்மா ‘லுலாயிக்கு’ ஆகோ, ஓகோ சொல்லுற நண்பர்களுக்கு, அன்பாவும் கொஞ்சம் வலுவாவும் ஒரு குட்டு! அவ்வளவுதான்... இஃகிஃகி!!!

//ramesh said... //

இரமேசு, அறிவுரை எல்லாம் இல்லீங்க. ஒரு சிந்தனை, விமர்சனம், வேண்டுகோள் அவ்வளவுதான்!!!

எம்.எம்.அப்துல்லா said...

பதிவு போட மணியாருக்கு எப்பிடியெல்லாம் மேட்டர் கிடைக்குதுபா !!!

:))

ஓட்டும் போட்டேன்ண்ணே :)

கலகலப்ரியா said...

ஆஹா.. அங்க "vote" அப்டின்னு ஒரு சங்கதி இருக்கத்தான் செய்தது.. கண் பார்த்ததோட சரி.. அது என்னனு பார்க்கணும்னு மூளையோ, மனசோ சொல்லல..இப்போதான் இது என்னங்கடா புதுசா பூதம் கிளம்புதுன்னு அந்த ஓட்டுல தொட்டுப் பார்த்தேன்.. ஹும்.. என்னங்க பண்றது.. vote அப்டின்னாலே கெட்ட வார்த்தைனு என் மனசில ஆழமா பதிஞ்சிடுத்து போல..

திடீர்னு.. எல்லாரையும் குற்றவாளிக் கூண்டில ஏத்திட்டாங்கையா.. அலுவலகத்தில இருக்கிற அலுவல்களுக்கு மத்தியில் கொஞ்சம் எட்டி பார்க்கலாம்னு வந்தா ஒரு வேலைய கொடுத்துட்டாங்க.. ப்பேன்னு உக்காந்து பின்னூட்டம் போட்டுண்டிருக்கேன்.. என்ன வேலை இது..? அப்புறம் மகேஷ் சொன்னது போல.. ஓட்டு போட போனா பதிய சொல்றாங்க.. :(.. நீங்க பொதுவாத்தான் சொல்றீங்க பழசு.. ஆனா நானும் ரொம்ப சமான்யை.. ரொம்ப சோம்பேறி.. (நீங்க பின்னூட்டம் போடாம அப்புறம் பார்த்துக்கலாம்னு போற மாதிரின்னு வச்சுக்கோங்க..).. அப்புறம் வந்து எப்டி ஓட்டு போடறதுன்னு யோசிக்கறேன்.. யப்பே.. வுடு ஜூட்..

நசரேயன் said...

அண்ணே.. நீங்க என்னைய திட்டலையே!!!!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
பதிவு போட மணியாருக்கு எப்பிடியெல்லாம் மேட்டர் கிடைக்குதுபா !!!

:))

ஓட்டும் போட்டேன்ண்ணே :)

//

:-0))

அது சரி(18185106603874041862) said...

அண்ணே,
நல்லா செக் பண்ணிக்குங்க...பின்னாடி வையப்படாது...நான் பின்னூட்டம் போட்டுட்டேன்...தம்ஸ் அப் குடுத்துட்டேன்....தமிழிஷிலும் வோட்டு போட்டுட்டேன்..

அது சரி(18185106603874041862) said...

//
வாக்களிக்க நினைவூட்டுவதை இகழ்வாகக் கருதி விமர்சனம் செய்ததின் பொருட்டு, அப்படிக் கோருவதை பல பதிவர்கள் அறவே கைவிட்டு விட்டார்கள். அவர்களுள் அடியேனும் ஒருவன். அந்த ஒரு தகுதியின் பொருட்டாகவே, இப்பதிவை இடுகிறேன் வாசகர்களே!
//

ஆமாங்க, ஓட்டு போடுங்கம்மா, ஓட்டு போடுங்கய்யான்னு எம்புட்டு தடவை கேக்குறது?? தொண்டை வறண்டு போச்சி...இங்க ஓட்டுக் கேட்குறதுக்கு பேசாம தமிழ்நாட்டுல எலக்சனுல நின்னுருந்தா குறைந்த பட்சம் ஒரு கவுன்சிலர் ஆயிருக்கலாம் :0))

அது சரி(18185106603874041862) said...

//
’நீயெல்லாம் பதிவிடவில்லை என்று யார் அழுதார்கள்?’ என்று வினவும் வாசகரா நீங்கள்? இப்பதிவைப் படிக்க வந்த உங்களைப் போன்றோருக்கும், இன்ன பிற வாசகர்களுக்காவும்தான் பதிவிடுகிறோம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் நண்பா!
//

அது!

வோட்டு போட்றாங்க போடலை அவங்க இஷ்டம்...விட்ரலாம்...எதிர்கருத்து சொல்பவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்...

ஆனா, நீயெல்லாம் பதிவு போடலைன்னு யாரு அழுதான்னு சில பேரு பின்னூட்டம் போடுவாங்க...எனக்கு நிறைய பின்னூட்டம் அப்படி தான் வருது.. இவங்கல்லாம் படிக்கலைன்னு என்னமோ நான் அழுவுற மாதிரி...

இராகவன் நைஜிரியா said...

இங்கு எனக்கு ஒரு சந்தேகம்.

வாக்களிப்பதில் தமிழிஷில், முன்னணியில் பலமாதங்கள் நான் இருந்தவன் என்பது உங்களுக்குத் தெரியும். பல சமயங்களில் என்னுடைய வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப் படுவதில்லை என பல பதிவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளாத வாக்கை அளிப்பதில் பயன் எதுவும் இருப்பதில்லை என்பதால், கூடியவரை தமிழிஷில் வாக்களிப்பதை தவிர்த்துவிடுகின்றேன்.

அதே சமயத்தில், தமிழ் மணம் பட்டை இணைக்கப் பட்டு இருந்தால், வாக்களிக்காமல் போவதும் கிடையாது.

தமிழிஷில் இப்போது கூட, அவ்வப்போது பல நண்பர்களின் பதிவுகளுக்கு வாக்களிக்கும் வழக்கத்தை கொண்டு இருக்கின்றேன். அதற்கான காரணம், வலைப்பூவை அதிகபட்சமாக எனக்கு அறிமுகப் படுத்தியது தமிழிஷ் என்பதால்தான்.

இப்போது சில பதிவுகளில் கும்மி அடிப்பது வழக்கம் உண்டு. அது மனதுக்கு கொஞ்சம் ரிலாக்சேஷன் கொடுப்பதால் அவ்வாறு செய்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

300 வது பதிவா..

வாழ்த்துக்கள் மணி.

ஒரு பதிவு எழுதவே இங்கு எனக்கு நாக்கு தள்ளுது..

பழமைபேசி said...

இராகவன் ஐயா, மிக்க நன்றிங்க!

நான் யாரையும் வாக்களியுங்கள்ன்னு வற்புறுத்தவில்லை. பதிவை மனமுவந்து பாராட்டும் பட்சத்தில் வாக்களிக்கலாமேன்னுதான் சொல்லுறேன்.

அதே நேரத்துல அளவளாவுதலையும் நான் எதுவும் சொல்லலை. காரணம், அது அவரவர் விருப்பு வெறுப்பு. நானேகூட உங்களுக்கு ஒரு கை ஒத்தாசை செய்வது வழக்கம்தானே?இஃகிஃகி!!

பழமைபேசி said...

அது சரி அண்ணாச்சி, நிலாவும் அம்மாவும், தளபதி, மோனி, Poornima Saravana kumar, Sriram, ramesh, நன்றிங்க!

கலகலப்ரியா, நீங்க இந்தக் கணக்குல வர மாட்டீங்க! நீங்க ரொம்பப் புதுசு, இஃகிஃகி!!

கலகலப்ரியா said...

ஓஹோ... எல்லாம் நேரம்டா சாமி.. சரி இதுவும் ஒரு விதத்தில வசதிதான்... ஒரு வருஷம் கழிச்சு (அப்பவும் இந்த இடுகை... பின்னூட்டம்னு இருந்தா..) ஓட்டு போடுறேன்.. அப்புறம் எனக்கு ஓட்டு போடுற வயசு வந்துடும்.. =))

ராஜ நடராஜன் said...

பதிவை முன்பு தவற விட்டு விட்டேன் போல.வீட்டுப்பக்கம் வந்தேன்.கண்ணில் பட்டது.நான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மனமுவந்த பின்னூட்டம் மட்டுமே போடுகிறேன்.ஓட்டுப் போடுவதில்லை.காரணம் நான் ஓட்டு குத்தினால் தமிழிஷ் என்னை வேறு எங்கோ இழுத்துச் சென்று விடுகிறது.தமிழிஷ்ல் இணையாத காரணத்தால் என நினைத்து விட்டு விடுகிறேன்.பதிவுக்காக வேண்டி ஒரு முறை மெனக்கெடுகிறேனே என்னதான் செய்கிறதென்று:)

பழூர் கார்த்தி said...

நல்ல கருத்து..

ஆனாலும் என்னால் முழுமையாய் ஒத்துப் போக முடியவில்லை..

வாக்களிப்பது மட்டுமே அங்கீகாரம் ஆகாது.. என்னைப் பொறுத்த வரை பின்னூட்டமே சரியான அங்கீகாரம் (நம் கருத்தையும் கூறலாம், பாரட்டலாம், வினவலாம், திட்டலாம்)..

இப்போதும் தமிழ்மணத்தில் அதிக பின்னூட்டங்கள் இருப்பதை தேடித்தான் படிக்கிறேன்.. வாக்கை மட்டும் வைத்து அல்ல..

பழமைபேசி said...

//பழூர் கார்த்தி said...
நல்ல கருத்து..

ஆனாலும் என்னால் முழுமையாய் ஒத்துப் போக முடியவில்லை..

வாக்களிப்பது மட்டுமே அங்கீகாரம் ஆகாது.. என்னைப் பொறுத்த வரை பின்னூட்டமே சரியான அங்கீகாரம் (நம் கருத்தையும் கூறலாம், பாரட்டலாம், வினவலாம், திட்டலாம்)..
//

வாங்க கார்த்தி! அங்கீகாரத்துக்காக வாக்கு அல்லங்க கார்த்தி! மற்ற வாசகர்களுக்கு பரிந்துரைக்கலாமேங்றதுதான் கேள்வி!

அதுவும் நீங்க மனமுவந்து பாராட்டுற பட்சத்தில்!

Machi said...

இந்த இடுகைய படிச்சதுல என்ன தெரிஞ்சுதுன்னா எல்லோரும் இடுகைக்கும் பதிவுக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளார்கள்.
பழமைபேசிக்கு(ம்) தெரியலையா?

இடுகை - post
பதிவு - blog

பழமைபேசி said...

//குறும்பன் said...
இந்த இடுகைய படிச்சதுல என்ன தெரிஞ்சுதுன்னா எல்லோரும் இடுகைக்கும் பதிவுக்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளார்கள்.
பழமைபேசிக்கு(ம்) தெரியலையா?

இடுகை - post
பதிவு - blog
//

post - பதிவு, இடுகை
blog - வலைப்பூ

Machi said...

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் உள்ளதல்லவா? முதலில் அதை சூடான பதிவுகள் என குறிப்பிட்டார்கள், பின்னர் பலர் அத்தவறை சுட்டிக்காட்டியவுடன் மாற்றிவிட்டார்கள்.
தமிழ்மணத்தின் முகப்பு menu வில் இடுகைகள், பதிவுகள் என இருக்கும்.

blog - வலைப்பூ, வலைப்பதிவு

மக்கள் postக்கும் blogக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாற கூடாது (பலர் தடுமாறினர்) என்பதால் இப்பெயர் முறையை கொண்டுவந்தனர்.

பழமைபேசி said...

//குறும்பன் said...
தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் உள்ளதல்லவா? முதலில் அதை சூடான பதிவுகள் என குறிப்பிட்டார்கள், பின்னர் பலர் அத்தவறை சுட்டிக்காட்டியவுடன் மாற்றிவிட்டார்கள்.
தமிழ்மணத்தின் முகப்பு menu வில் இடுகைகள், பதிவுகள் என இருக்கும்.

blog - வலைப்பூ, வலைப்பதிவு

மக்கள் postக்கும் blogக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாற கூடாது (பலர் தடுமாறினர்) என்பதால் இப்பெயர் முறையை கொண்டுவந்தனர்.
//

அப்படீங்களா? நானும் இனிமே திருத்திகிடுறேனுங்க... மறுபடியும் வந்து சுட்டிக்காட்டினதுக்கு மிக்க நன்றிங்க!