10/29/2012

சுட்டு குட்டு

மகள், சில பல தமிழ்ப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாள். பரிசுகளும் பெற்றாள். அவள் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்த தருணத்தில், அய்யா பெரியவர் நல்லகண்ணு அவர்கள் அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இருந்ததைக் கண்ட நான், அவரிடம் வாழ்த்துகளைப் பெற்ற பின்னர் உள்ளே செல்லலாம் என மகளை வற்புறுத்தி இருந்தேன். அவளும் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரது காலில் விழப் போக அவரோ நாணத்துடன் எழுந்து கொண்டார். எண்பத்து எட்டின் கைகள் எட்டின் கைகளைப் பற்றி வாழ்த்திக் குலுக்கியது. அத்தோடு நான் அதை மறந்து விட்டிருந்தேன்.

பிறிதொரு தருணத்தில் மேடையில் அல்லாடிக் கொண்டிருந்த போது தமிழ் நண்பர் ஒருவர் என்னிடம் வந்து, ”உங்கள் விருப்பத்திற்கு குழந்தையைக் கட்டாயப்படுத்தாதீர். அவர் என்ன கடவுளா? அவரும் நம்மைப் போல மனிதர்தானே?” என்றார். அதுவும் பலர் சூழ்ந்திருந்த நேரத்தில்! எனக்கும் குற்ற உணர்வு மேலிட்டது.

சில கணங்கள் கழித்து நான் விழா முன்றலுக்குச் செல்கிறேன், அங்கிருந்த திரைப்படக் கலைஞரைச் சுற்றிலும் மாபெரும் முட்டலும், நெரிசலும். மேற்கூறிய நண்பரும் அக்கூட்டத்தில் நின்று பிறவிப் பயனடையப் பெரிதும் முயன்று கொண்டிருந்தார். அந்த அவர் கூட இணையப் பெருவெளியின் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு, தன் தத்துவ சிந்தாந்தங்களை உதிர்த்துக் கொண்டிருக்க, நம் நண்பரும் அவற்றைப் பின்தொடர்ந்து, உள்வாங்கி, முழுமை அடைந்து கொண்டு இருப்பாராயிருக்கும்!!

5 comments:

குறும்பன் said...

இஃகி இஃகி. திரைப்படக் கலைஞர் கடவுளுக்கு சமம். திரைப்படத்தில் தோன்றியவருக்கே கடவுளுக்கு சமமான இடம் தரும் நாம் பல படங்கள் நடித்திருந்தால் உசு அப்பஅப்பா நினைக்கவே முடியலை.

மாற்றுக்கருத்து:
அவர் விருப்பம் திரைப்படக் கலைஞரை சந்தித்திப்பது. அதை அவர் தன் மனைவி மீதோ மகள்\ன் மீதோ திணிக்கவில்லை.

அவர் திரைப்படக் கலைஞர் அல்லாதவர் மீது கொண்ட மதிப்பு அவர் உங்களிடம் சொல்லிய சொல்லில் தெரிந்துவிட்டது.

பழமைபேசி said...

என் தெளிதலை, நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். அக்கணமே எனக்குக் குற்ற உணர்வு மேலிட்டது.

அதே வேளையில், முண்டியடிப்பது முரணாகப்படுகிறது. நானே கூடப் படம் எடுத்துக் கொண்டிருப்பேன்; இயல்பாகவே வாய்ப்பு அமைந்திருப்பின்!!

dondu(#11168674346665545885) said...

உங்கள் சுட்டிபெண்ணையே கேளுங்கள், அவ்வாறு நீங்கள் அவளை பெரியவரை வணங்கச் சொன்னது குறித்து அவளுக்கு ஏதேனும் வருத்தமா என.

அவ்வாறு இல்லை என்றே அவள் பதிலளிப்பாள், ஏனெனில் நீங்கள் கற்றுத் தந்தது பெரியவர்களுக்கு மரியாதை செய்யவே.

ஆகாவே குற்ற உண்ர்ச்சி எதுவும் தேவையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழமைபேசி said...

@@dondu(#11168674346665545885)

வணக்கம் ஐயா. நலமா? மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

அவரவர் மனதைப் பொறுத்தது...