”போகிற போக்கில் எதையாவது எழுதிவிட்டுப் போகிறாய். நீயும் ஒரு கவிஞன்தான்!” என்று கூட்டத்திலிருந்த ஒருவன் சொல்லியதிலிருந்து நகரத் துவங்கியது இந்த வெட்டிப் பேச்சு.
“நான் எழுதுவது கவிதை என நான் நினைக்கவில்லை. ஆனாலும் கவிதை எனச் சொல்லிக் கொள்கிறேன் என்பதே உண்மை. வேண்டுமானால் துளியெழுத்து என வைத்துக் கொள்ளலாம்!” என்றேன் மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு.
கவிஞன் எனக்கூறி, போட்டு வாங்கும் வேலையாகக் கூட அது இருக்கலாம் அல்லவா? வாளாது இருந்து விட்டால், இதுவெல்லாம் கவிதையா எனக் கேட்டு முகத்தில் உமிழக் கூடும். ஆப்பசைத்த குரங்குக் கதை ஆகிவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கைதான் நமக்கு! இந்த குரங்குக் கதையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு எங்களுக்குள் நடந்த வெட்டிப்பேச்சினைத் தொடருமய்யா நீர்!
”ஓ, அப்படியா? அதென்ன துளியெழுத்து?”
”அளவில் சிறியதாய், தொடர்ந்து எதையாவது சொல்லிக் கொண்டிருப்பதுதான்!”, எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது இவர்களை.
“அப்படிச் சொல்வதற்கும் ஏதோவொரு நுட்பம் தேவைப்படுகிறது. அதெப்படி?”
ஒருசிறு மணித்துளி பேச்சில் இடைவெளி விட்டேன். எல்லாம் ஒரு காரண காரியமாய்த்தான். நினைத்தபடியே நடந்தது அதுவும். கூட்டத்தில் இருந்த மற்றொருவனும் வெட்டிப் பேச்சின் வடத்தைப் பிடித்து இழுக்கலானான்.
“ஆமாம். அதற்கெல்லாம் ஒரு நுண்மெல்லுணர்வு இருந்தாக வேண்டும். அல்லாவிடில் கைகூடி வராது!”, வாகாய்த்தான் இழுக்கத் தலைப்பட்டான் இவனும்.
“அதென்ன நுண்மெல்லுணர்வு?”, பதிலுக்குக் கேள்வி கேட்டே தேரை ஊர்கோலம் போக விடுகிறான் இவன்.
“கண்ட காட்சியை, உணர்ந்த உணர்வை, நினைத்த நினைப்பை, செவியில் மடுத்ததை என எதையும் நுண்ணியமாகவும் மென்மையாகவும் உள்வாங்கிக் கொண்டு செம்மையாக வெளிப்படுத்த வேண்டும். அப்படியான ஒன்றுதான் வாசிப்பின் போது இன்பத்தை உண்டாக்க வல்லது!”, என்னமாய் வடம் பிடிக்கிறான் இவன். மெய்சிலிர்த்தது நமக்கு.
“எடுத்துக்காட்டாய் ஒன்று சொல்லுங்களேன் பார்ப்போம்!”, கூட்டத்தில் இருந்த மற்றொருவனும் வடத்தைப் பட்டும்படாமலும் பிடிக்கத் துவங்கியிருந்தான்.
“இந்த சாளரத்தின் வழியாய்ப் பார்த்துச் சொல்லுங்கள். என்ன காண்கிறீர்கள்?”, வெட்டிப்பேச்சுத் தேர் அதற்கே உரிய குலுங்கலுடன் முன்னேறுகிறது.
“அப்படி ஒன்னும் வித்தியாசமாக ஒன்றுமே தெரியவில்லையே?”, என அவன் சொல்ல தேர் ஓரிடத்திலேயே சற்று நிலை கொண்டது.
“எங்கே நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள்?”, தேர்க்காலுக்கு அடியில் பலகையொன்று இடப்பட்டு வடம் இழுக்கப்படுகிறது.
“ம்ம்… ஒரு மேப்பிள் மரம் தெரிகிறது!”, பள்ளத்தில் சிக்குண்ட தேர் அதிலிருந்து மீளத்துவங்கியது.
“எங்கே நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள்?”, வடம் பிடிக்க மற்றொருவனும் இழுத்து வரப்பட்டான்.
“ம்.. காற்று வலுவாய் வீசுவது தெரிகிறது!”, தேரின் நகர்வில் வேகம் சற்றுக் கூடியது என்றே சொல்லலாம்.
“நீங்களும் வாருங்கள். பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!”, ஊர் கூடி இழுத்தால்தான் அது தேர், எஞ்சியவனுக்கும் பிறந்தது ஆணை.
“காற்றுப் பாணன்
இசை வீச
கிளை விரித்து
இலை சிலிர்த்து
நர்த்தனம்
ஆடுகிறான்
மேப்பிள் மரக்கூத்தன்!” என்று இவன் மறுமொழிய, தேரோடும் வீதியின் பரிவேடத்தில் முக்கிய இடத்தினைக் கடந்தது வெட்டிப் பேச்சு அட்டகாசமாய்.
“ஆகா. இதுதான் நான் குறிப்பிட்ட அந்த நுட்பம். வீசும் காற்றின் வலிமை, ஆடும் மரத்தின் தோற்றம் முதலானவற்றை நுண் புலத்தோடு சொன்னார் பார்த்தீர்களா?”, என்றான் தேரின் வழிகோலன்.
தேர் போய் நிலை கொண்டதோ இல்லையோ தெரியாது. தேரின் முன் யாரோ உடைத்த தேங்காயின் ஒரு சில்லைத் தானுண்ட உணர்வு மேலிட்டது கவிஞன் எனக் குறிப்பிட்டவனுக்கு.
அது பொறுக்காத ஒருவன் நேரம் பார்த்துக் கேட்டான், “ஆமாம். அதென்ன ஆப்பசைத்த குரங்கின் கதை. இப்போது சொல்லுங்கள்!”, எஞ்சிய தொலைவையும் உருண்டு கடக்கிறது தேர்.
“கோவில் முன்பு சில தச்சர்கள் கோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்களாம். மதிய உணவுக்கான நேரம் வந்து விடவே அவர்கள் உணவு உண்டு வர ஊருக்குள் சென்று விட்டார்கள். அந்நேரம் பார்த்து அருகிலிருக்கும் மரத்திலிருந்த குரங்கொன்று போய், அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மரவேலைப்பாட்டிற்கிடையே இருந்த ஆப்பு ஒன்றை உருவிக் கையிலெடுக்கத் தலைப்பட்டதாம். அப்போது வேலைப்பாட்டின் இடையே இருந்த இடைவெளியில் தன் வால் இருப்பதை உணராத குரங்கு ஆப்பினை அசைத்துக் கையிலெடுக்க, வால் சிக்குண்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டதாம் அந்தக் குரங்கு. இதுதான் கதை!”.
இனிமேலும் கேள்வி கேட்டு நீங்கள் ஆப்பசைத்த குரங்கு ஆகப் போகிறீர்களா என்ன? எனக்கு அந்த யோசனை இல்லை. இப்படியாகத் தன் நிலைக்கு வந்து சேர்ந்தது வெட்டிப் பேச்சு.
3 comments:
வெட்டி பேச்சு... நல்ல பதிவு....
//
“காற்றுப் பாணன்
இசை தவழ
கிளை விரித்து
இலை சிலிர்த்து
நர்த்தனம்
ஆடுகிறான்
மேப்பிள் மரக்கூத்தன்!”
//
ரொம்ப நல்லாயிருக்கு ஆசானே... ஆனாலும் தன்னடக்கம் அதிகம் தான்! :)
உள்குத்தோ ... !
எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டிக் கொடுத்துவிட்டதோ ... !
மழைக் கடவுள் தான் இங்கு பொழிந்துவிட்டதோ ..
மந்திரச் சொற்கள் எல்லாம் கலைந்துவிட்டதோ ...
:)
Post a Comment