8/31/2010

அமெரிக்கத் தலைநகரில் இருந்து அரசி நகருக்கு...

உள்ளூர்ப் பயணிகள் அனைவரும் அடித்துப் பிடித்து, பரிசோதனைகளை எல்லாம் செய்துவிட்டு, நுழைவுப் பரிகாரங்கள் அனைத்தையும் முடித்து ஆயாசமாய் அமர்ந்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த அயலகப் பயணிகளோ, வந்த களைப்பினூடாக, இந்த விமானத்தை கிளப்பித் தொலைத்தாலென்ன எனும் பாங்கில் நித்திரையின் பிடியில் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.


முதிர்கன்னியவள் முறையான அறிவிப்பை வெளியிடுகிறாள், “Flight US789 is ready to board; we ask those who need extra time and travelling with small children are to board at this time”.

அடுத்ததாக, முதல்வகுப்புப் பயணிகளும் அதிசாரிப் பயணிகளும்(frequent travelers) அழைக்கப்பட, ஒவ்வொருவராக உள்ளே சென்று அமர்கிறார்கள். இப்படியான பயணிகளை இறுதியில் அல்லவா அழைக்கப்பட வேண்டும்? சிறப்புச் சலுகை அளிக்கிறேன் பேர்வழி என்று, முன்னதாகவே அழைத்து அந்த குறுகிய இட்த்தில் போட்டு அடைப்பது என்பது சிறப்புச் சலுகையாகுமா?? அய்யகோ!!

மீதம் இருந்த பயணிகள் எல்லாம் எப்படி ஏறினார்கள், எவ்வளவு விரைவாக ஏறினார்கள் என்றெல்லாம் அவதானித்து இருக்கவில்லை நாம். விமானத்தின் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டன. விமான பணிப் பெண்களாக இருந்த அந்த இரு மூதாட்டிகளும் தத்தம் கடமைகளில் கருத்தாய் இருந்து, இங்குமங்குமாய் ஓடித் திரிந்தனர். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகள் எல்லாம், தத்தம் நிறுவனங்களுக்கு குறுந்தகவல்களை தடதடவென அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மூதாட்டிகளில் ஒருத்தி, விமான ஓட்டிகளின் கருவறையின் கதவை இழுத்திச் சாத்திவிட்டுத் தீர்மானமாய்ச் சொன்னாள், “விமானத்தின் எடையானது சமச்சீராக இல்லை. முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் யாராவது ஒருவர், விமானத்தின் கடைசி இருக்கையில் சென்று அமர்ந்தாலொழிய விமானம் புறப்பட வாய்ப்பில்லை; தன்னார்வலர் யாரேனும் உதவலாமே?” என்றாள்.

முதல்வகுப்புச் சீமான்களும் சீமாட்டிகளும் தத்தம் வேலைகளில் மூழ்கி இருப்பதைப் போல பாசாங்கு செய்தார்கள். யாருக்கும் அறிவிப்பானது காதில் விழுந்தது போலத் தெரியவில்லை. சிறிது ஏமாற்றத்துடன், குரலைச் சற்று உயர்த்தியபடி மீண்டும் அலறலானாள் விமான வரவேற்பு மூதாட்டி.

அரைகுறை நித்திரையில் தலையை ஊசலாட விட்டுக்கொண்டிருந்த அவன், திடீரென வெகுண்டவனாய், “என்ன? என்ன??” என வினவினான். மூதாட்டி விபரத்தைச் சொல்லவும், சற்றும் தாமதியாது விமானத்தின் கடைசி இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். மீதமுள்ள முதல்வகுப்புப் பயணிகளோ, “கேனப்பய... கேனப்பய... முதல்வகுப்பு விருந்தோம்பலை வுட்டுட்டு கடைசி இருக்கைக்குப் போறாம் பாரு கேனயன்” என நினைத்து எக்காளமாய் உள்ளூரச் சிரித்தார்கள்.

விமான ஓட்டியின் சமிக்கைக்குப் பிறகு, மூதாட்டியானவள் ஆயத்த அறிவிப்புகளைச் செயல்முறையோடு ஒப்புவித்தாள். எப்படி இருக்கைப் பட்டையை அணிய வேண்டும், தற்காப்புச் செயல்கள் எப்படியாக அமைய வேண்டும் என்றெல்லாம் செய்து காண்பித்தாள். நூற்றில் ஒருவராவது இதைக் கவனமாக்க் கேட்கிறார்களா என்பது வினவுதலுக்கு உரியதே.

விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பி, வழமைக்கு மாறாகச் சற்று முன்கூட்டியே சென்று சேர வேண்டிய இடமான, அரசி நகரமாம் ஃசார்லட் நகரின் விமான நிலைய ஓடுபாதையில் இறங்கிச் சீறி, தவழ்ந்து, பின் நிலைக்கு வந்து சேர்ந்து நின்றது. நின்றதுதான் தாமதம், அனைவரும் ஒருங்கே எழுந்து நின்று, தடதடவென பெட்டிகள் இருக்கும் ஒருங்கின் கதவுகளைத் திறக்கலானார்கள். கடைசி இருக்கையில் இருக்கும் அந்த கேனயன் மட்டும் இன்னும் நித்திரையில்.

முதல்வகுப்புப் பயணிகள் த்த்தம் மேலங்கியை விமானப் பணிப் பெண்ணிடம் கேட்டு வாங்கினார்கள். மற்றவர்கள், த்த்தம் அலைபேசிகளில் வினையாற்றத் துவங்கினார்கள். முதல்வகுப்பில் இருக்கும் பயணிகளோ, அனைவருக்கும் முன்பாக வெளியே சென்றுவிடலாம் எனும்பெருமித்ம்.

முன்கதவின் பார்வையாடியின் வழியாக, மின்பாலத்தை விமானத்தை ஒட்டி நிறுத்த வழிவகை செய்து கொண்டிருந்தாள் விமானப் பணிப் பெண். சரியாக்க் கொண்டு நிறுத்திய பின், முதல்வகுப்புப் பயணிகளை ஏளனமாய்ப் பார்த்தாள் அவள். பார்த்துவிட்டு அறிவிப்புச் செய்யலானாள்,

“I kindly request everyone to be seated in their seat… we got to let go the Gentleman first who helped us to get here… I request the Gentleman to come forward!!”, முதல்வகுப்பில் இருள் சூழ்ந்து தலைகள் கவிழ்ந்தன.

கடைசி இருக்கையில் இருந்தவனுக்கோ, ஒருவிதமான கூச்சமும் தயக்கமும். இருந்தாலும் எழுந்து, மெதுவாக முன்னேறத் துவங்கினான். அவன் முன்னேறி வருவதைக் கண்ட அந்த மூதாட்டி அவனைப் பார்த்து நன்றியுணர்வோடு முகைத்தாள். பதிலுக்கு அவனும் நன்றி சொல்லிவிட்டு நகர முற்பட்டான். அவளோ, அவனை அன்பாக ஆரத் (hug) தழுவினாள்.

வீட்டாரைத் தாயகத்தில் விட்டுப் பிரிந்து வந்தவனுக்கு, அந்தத் தழுவலானது மாமருந்தாக இருந்தது; அதில் உங்களுக்கும் பெருமைதானே? உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப் பதிவன் என்ற வகையில்!

35 comments:

நசரேயன் said...

// பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப்
பதிவன்//

யாரு? யாரு ?

DrPKandaswamyPhD said...

Good

KALYANARAMAN RAGHAVAN said...

அது நீங்கதான்னு எட்டாவது பாராவை படிக்கும்போதே ஊகித்துவிட்டேன்.அருமையான மனதைத் தொட்ட பதிவு.

ரேகா ராகவன்.

எம்.எம்.அப்துல்லா said...

யாரு?? வெள்ளையா ஒசரமா தொப்பி போட்டுருப்பாரே, அந்த அண்ணனா??

மகிழ்ச்சி.மகிழ்ச்சி :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அண்ணனோட வெள்ள மனசு எப்படியெல்லாம் உதவி பண்ணுது...........

Seemachu said...

கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் ந்டைபெற்ற சமயத்தில் எல்லா தேவர்களும் கயிலாயம் வந்து விட்டனராம். பூமியின் பாரமெல்லாம் வடக்குப் பகுதிக்கு வந்து விட்டதால் தெற்கே பாரமில்லையாம். அதனால் பூமாதேவி நிலை தடுமாறிவிட்டாராம். அவர் சிவபெருமானை வேண்டினாராம். வந்திருக்கும் விருந்தினர்களை எப்படி வரவேண்டாம் எனச் சொல்வது? அதனால் அவர் குறுமுனி அகத்தியரை அழைத்து நீங்கள் மட்டும் தெற்கே செல்லுங்கள். உங்களால் தான் உலகம் சமநிலை பெறவேண்டும். என் திருமணக் கோலத்துடன் நான் உங்களுக்குத் தனியாக தரிசனம் தருகிறேன். தயவு செய்து நீங்கள் தெற்கே செல்லுங்கள் எனப் பணிந்தாராம்.

அகத்திய மகாமுனியும், “உலகம் சமநிலை பெறவேண்டும்” என்று பாடிக்கொண்டே விந்திய/பொதிகை மலைக்கு வரும் போது உலகம் சமநிலை அடைந்ததாம். இந்த்க் காட்சியை நீங்கள் “அகத்தியர்” என்ற முழுநீளத் திரைப்படத்தில் காணலாம்.

அன்றைக்கு உலகத்தைச் சமநிலைப் படுத்தியவனும் ஒரு தமிழன் தான். இன்றைக்கு அமெரிக்காவின் வானூர்தியைச் சமநிலையில் செலுத்த உதவியவனும் ஒரு தமிழன் தான்.. என்பதை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் மனம் விம்முகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா?

தமிழனின் பெருமையை நிலை நாட்டிய கொங்கு தமிழ் மகனுக்கு அனைத்து இணைய உ்லகத் தமிழர் சார்பிலே வாழ்த்துக்களைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்..


சீமாச்சு...
தலைவர்,
அனைத்துலக மயிலாடுதுறை மாந்தர் சங்கம்.

பழமைபேசி said...

@@Seemachu

அண்ணா, நீங்க எங்கயோ போய்ட்டீங்க.... கதை அருமையோ அருமை!!!

vanjimagal said...

வாழ்க நற்றமிழர் மணிவாசகம்!!!!

முகிலன் said...

அண்ணே இப்பிடி இளிச்சவாயா இருக்கியேண்ணே..

தமிளன் எங்க போனாலும் இளிச்சவாயந்தான்னு ப்ரூவ் பண்ணிட்டீங்களேண்ணே...

:))))

அரசூரான் said...

பழமையாரே முதல் வகுப்பில் எல்லோரும் அவர் அவர் அலுவலங்களுக்கு மின்மடல் அனுப்ப (அந்த) பதிவர் மட்டும் இந்த பதிவ எழுதினாரோ?

இனி நான் என்ன சொல்ல, பிரம்ம ரிஷி (சீமாச்சு) வாயினால் அகத்தியர் எனும் பெரும் பேரு பெற்றாயிற்று... நீவீர் பழம் பெருமைக்குரியவர் ஆயிற்றே!

இன்னும் அந்த ஓட்ட யு.எஸ் பஸ்லதான் பயணமா? அதெல்லாம் நெம்ப பழசுங்கோ, மைல்ஸ் போனாலும் பராவாயில்லை, பஸ்ஸ மாத்துங்கப்பு.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஹா.. கலக்கல் தான் போங்க..

என்ன ஒன்றரை மணி நேரப் பயணத்தில் பெரிதாக ஒன்றும் இழக்கப்போவதில்லை..

உங்கள் செய்கையில் பெருமை தான்.

naanjil said...

Thampi Mani
Welcome back. Good job. I was in transit at Charleston airport on Aug 28 morning.
naanjil Peter

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சூப்பர்.. இது நிச்சயம் மரியாதைதான்..! ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று..!

வானம்பாடிகள் said...

//எம்.எம்.அப்துல்லா said...

யாரு?? வெள்ளையா ஒசரமா தொப்பி போட்டுருப்பாரே, அந்த அண்ணனா??

மகிழ்ச்சி.மகிழ்ச்சி :)//

அந்த அண்ணன் வெயிட் பார்ட்டிதான் போல:))

ரவிச்சந்திரன் said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்!

Anonymous said...

கழுத்துப் பட்டையின் இரு முனைகளையும் கிளப்பி விட்டுக் கொண்டேன் :)

Mahi_Granny said...

மணியான தகவலுக்கு பெருமையுடன் வாழ்த்துக்கள்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

உங்கள் மனிதாபிமானத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் அழகு தமிழ் நடைக்கு வந்தனம்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மூதாட்டிகளில் ஒருத்தி//

ஏனுங் ஏர் இண்டியாவா? :))

உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; //

ரைட்டு! :))

வடுவூர் குமார் said...

yes,I too proud of him.

vasan said...

நீண்ட‌ ப‌ய‌ண‌த்தில், முத‌ல் வ‌குப்பு சுக‌த்தை துற‌ந்து, க‌டைசியில் அம‌ர்வ‌து ஒரு தியாக‌ம் தான்.
விமானத்தின் எடை ச‌ம‌ச்சீருக்கு (PAYLOAD RESTRICTION) முத‌ல் வ‌குப்பு ப‌ய‌ணியை (PAID PASSENGER ) கடைசி இருக்கைக்கு அனுப்புவ‌து, இதுவ‌ரை கேள்விப்ப‌டாது தான். எடை 80 கிலோ இருப்பீர்க‌ளா?

Joe said...

அருமை நண்பா!

அகல்விளக்கு said...

பெருமை கொள்ளச் செய்யும் செய்கை.... :-)

மகிழ்ச்சி அண்ணா...

சுல்தான் said...

அருமை பழமைபேசி. நம் எண்ணங்கள் மட்டுமின்றி செயல்களும் நல்லதாய் அமைய வேண்டும் என இதன் மூலம் உணர்த்தியுள்ளீர்கள். நல்லவர்களுக்கு நன்மையே கிட்டும். மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்

பழமைபேசி said...

//vasan said...
நீண்ட‌ ப‌ய‌ண‌த்தில், முத‌ல் வ‌குப்பு சுக‌த்தை துற‌ந்து, க‌டைசியில் அம‌ர்வ‌து ஒரு தியாக‌ம் தான்.
விமானத்தின் எடை ச‌ம‌ச்சீருக்கு (PAYLOAD RESTRICTION) முத‌ல் வ‌குப்பு ப‌ய‌ணியை (PAID PASSENGER ) கடைசி இருக்கைக்கு அனுப்புவ‌து, இதுவ‌ரை கேள்விப்ப‌டாது தான். எடை 80 கிலோ இருப்பீர்க‌ளா?
//

72Kgsங்க...

எம்.எம்.அப்துல்லா said...

// விமானத்தின் எடை ச‌ம‌ச்சீருக்கு (PAYLOAD RESTRICTION) முத‌ல் வ‌குப்பு ப‌ய‌ணியை (PAID PASSENGER ) கடைசி இருக்கைக்கு அனுப்புவ‌து, இதுவ‌ரை கேள்விப்ப‌டாது

//

வெகு அரிதாக நடக்கும் விஷயம் இது. பெரும்பாலும் பயணிகள் அனைவரும் அமர்ந்த பின்னர் சரக்குகளின் நிறையை வைத்து PAYLOAD RESTRICTION சரி செய்யபடும்.அதிலும் பிரச்சனை வந்தால் பயணிகள் இட மாற்றம் நடக்கும்.ஆனால் 99.9999% சரக்குகள் வைப்பதிலேயே சரி செய்யப்பட்டுவிடும்.

ஈரோடு கதிர் said...

பெருமையாக இருக்கிறது

ஆனா, அந்த ஆள கேனயன்னு நீங்களும் (!!) சொல்றது நல்லாயில்லீங்க

அறிவிலி said...

:-))

தமிழ் பதிவன்னு அவங்ககிட்ட சொன்னீங்களா இல்லியா?

வடிவான ஏர்ஹோஸ்டஸ் வரும்போதெல்லாம் இந்த வாய்ப்பு கெடைக்க மாட்டேங்குது பாருங்க.

காசி - Kasi Arumugam said...

Great pazamai!

நிகழ்காலத்தில்... said...

//அரைகுறை நித்திரையில் தலையை ஊசலாட விட்டுக்கொண்டிருந்த அவன்//

//கடைசி இருக்கையில் இருக்கும் அந்த கேனயன் மட்டும் இன்னும் நித்திரையில்.//

ஆமா என்ன பங்காளி உங்கள இந்த தூக்கு தூக்கறாங்க..அப்படி என்ன பண்ணிப்புட்டீங்க

முதல்வகுப்பில உட்காரந்தா என்ன, கடைசியில உட்காந்தா என்ன நாம செய்யறவேல தூக்கத்தான்..

எனக்கே ரொம்ம்ப கூச்சமா இருக்கு..போங்க பங்காளி:)

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Whoever has prepared the "Trim Sheet" to balance the payload should be fired immediately. Cargo should be offloaded first.

Of course, payload depends on several factors including the weather. But all factors are considered when trimming the payload and to provide the stability of the aircraft. எல்லா cargoவும் essential cargo அல்ல. Aircraft Fuel தான் most essential cargo.

உங்களுக்கு ஒரு complimentary ticket கொடுத்தார்களா? அல்லது அந்த பயணக் கட்டணத்தில் உள்ள வித்யாசத்தை திருப்பி கொடுத்தார்களா?

கேளுங்கள் கட்டாயம் கொடுப்பார்கள்.

சில சமயம் அவசர பயணிகள் (example: connecting flight passengers) இருந்தால் complimentary டிக்கெட் கொடுப்பார்கள், if a passenger voluntarily decides to take the next flight.

shanuk2305 said...

05

shanuk2305 said...

ஒஹொ ஒஹோ ஆனால் மூதாட்டி அப்படின்னு சொல்லி அடக்கி வாசிச்சீங்களே. அங்க தான் எனக்கு டௌட்

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் சட்டையின் கழுத்துப் பட்டைகளையும் கிளப்பிவிட்டுக் கொள்ளுங்கள்; பெருமை அடைந்தவன் ஒரு தமிழ்ப் பதிவன் என்ற வகையில்!/
வாழ்த்துக்கள்.