8/17/2010

காந்தி பூங்கா

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பென்றால், பைக்கட்டுகளுடன் நீலநிறச் சீருடைகளும் காக்கி வெள்ளைச் சீருடைகளும் வீதிகளில் எறும்புகளாய் ஊர்ந்து சென்று மறைந்த நேரம் என எழுதலாம். ஆனால், இதுவோ நவீனயுகம். ஆம், பக்கத்து வீட்டு வாண்டுகள் அடைபட்ட கூண்டுக்குள் இருந்து வெளியேறிப் பாயும் கோழிகள் போல, அச்சிறு வாகனத்துள் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறிக் கொண்டிருந்தன.

மிடுக்காய் சீருந்துக்குள் அமர்ந்து, கால்களை நீட்டிப் பார்த்துக் கொண்டேன். குறிப்பறிந்து நம் வாகன் ஓட்டியண்ணன், “போலாமா கண்ணூ?”

“ம்ம்... போலாங்ணா...”

கோயமுத்தூர், செல்வபுரத்து ஒதுக்குப்புறத்தில் குடி கொண்டிருக்கும் பால்ய நண்பன் வினாயக மூர்த்தியைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கச் செல்கிறேன். திருமணத்திற்குக் கூட நேரில் சென்று அழைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அவனும் எதோ ஒரு சப்பைக்கட்டுக் காரணம் ஒன்றின் முகாந்திரம், என் திருமணத்திற்கு வந்திருக்கவும் இல்லை.

அவனைப் பிடித்து, இவனைப் பிடித்து எவன் ஒருவனையோ அறிந்து கொள்ள முற்பட்டதில் வந்து அகப்பட்டவன் வினாயகமூர்த்தி. உறவைப் புதுப்பித்து, முன்னொரு காலத்திய வைர நிகழ்வுகளைத் தீட்டுவதில் மிளிர்கிறது பேரின்பம்.

தீட்டியதில் விடுபட்டுப் போனவற்றை தோய்த்துப் பளிச்சிடத்தான் இப்பயணம். நடப்பதை எல்லாம் அசை போட்டுக் கண் விழித்ததில், வாகனமானது கண்பதி, நூறடி சாலை, வடகோவை மேம்பாலம் கடந்து, இரத்தின சபாபதி புரம் திவான் பகதூர் சாலையில் இருக்கும் வினாயகர் கோவில் சமீபம் மெதுவாக உருள்வதை அவதானிக்க முடிந்தது.

”மொதல்ல எல்லாம் இங்க வந்தா, எதோ வெளிநாட்டுக்கு வந்த மாதர இருக்கும்?”

“ஆமாங் கண்ணூ, இப்ப எங்கியுமு சனங்க கூட்டந்தேன்!”

“பொட்டி, பொட்டியா... எத்தனை வண்டிக?”

“அட, இந்தப் பொட்டிக தேவுல கண்ணூ... நுழம்புகளாட்ட, இந்த மோட்டார் பைக்குல வாறவிங்க அழும்பு, பெரிய அழும்பு கண்ணூ?”

“அப்படிங்ளா?”

“அதுல போவான்... இதுல போவான்... எத்தனை எடம் இருந்தாலும் நட்ட நடுவுல போவான்... ஊட்ல இருந்து கிளம்புனா, சீச்சீன்னு போயிருது”

வாகனமானது காந்தி பூங்கா திருப்பத்தில் திரும்பவும், அங்கே ஒரு சிறு பெண் குழந்தையானவள் எமது கவனத்தை ஈர்த்தாள்.

“அண்ணா, சித்த நில்லுங்க”

வாகனத்தை விட்டிறங்கி, நாமும் ஒரு ஓரமாய்ப் போய் நின்று கொண்டோம். உருளைக் குச்சியை வைத்து வித்தைகள் பல காண்பித்தாள் அவள். ஒரு சேர பல வினைகளை ஆற்றிக் காண்பித்தாள். உருளைக் குச்சிகள் அந்தரத்தில் சுழல்கிறது. வளையங்கள் உருளைக் குச்சிகளின் நடுவே புகுந்து, புறப்பட்ட இடத்திற்கே வந்து லாவகமாய் இவளின் கைகளில் புகுந்து கொள்கிறது.

சாமன்யனாக வீதியில் இறங்கினால், ஒரு சில ரூபாய்கள் மட்டுமே இடம் பெயர்கிறது. இதுவே கண்கவர் வணிகமயமாதலோடு இவள் இறங்கி இருப்பின், யாருக்கோ, எவருக்கோ இடம் பெயரும் எண்ணிலடங்கா ரூபாய்கள். புன்முறுவலோடு காட்சியைத் தவறவிடாமல் இரசித்துக் கொண்டிருந்தோம்.

“அண்ணா, நீங்களும் வந்துட்டீங்களா? வண்டீ??”

“அந்தப் பக்கமா நிலுத்தி இருக்குறங் கண்ணூ!”

“இன்னுஞ்சித்த இருந்து பாத்துட்டுப் போலாங்ணா!”

கொழுகொழு வாத்து ஒன்று வாலை வாலை, ஆட்டி ஆட்டி, ஒய்யாரமாய் நடந்து வந்து விரிந்திருந்த வண்ண விரிப்பின் மேல் ஏறி நின்றது. வீரவேலன் வருகிறார், வீரவேலன் வருகிறார் எனும் அறிவிப்போடு தோன்றினான் வீரவேலன். அவனது தோற்றம் மிடுக்காய், நிமிர்ந்த நடையோடு வசீகரித்தது நம் மனதை.

வறுமையில் வாடினாலும், தொழிற்சிரத்தையின் கண் முன்னின்று வடிவாய் வந்து நின்றனர் இரு மங்கையர், ஆளுக்கொரு பக்கமாய். தலையில் தொப்பி, நல்லதொரு சொக்காய் என சலங்கைச் சத்தத்தோடு குதித்துக் குதித்து வந்தது கதாநாயக மந்தி.

மங்கைகள், நீண்ட குச்சியை குறுக்காகப் பிடித்துக் கொள்ளவும், நையாண்டி தோன்றினான். தோன்றின வேகத்தில், “குமார் வேலப்பா, உன்னால் இதைத் தாண்ட முடியுமாடா?” என உரக்கக் கத்தினான்.

அனாயசமாய், இருந்த இடத்திலிருந்து உயரப் பறந்து அக்குச்சியினின்றும் மேலாகச் சென்று குதித்தான் மந்தி குமார் வேலப்பன். குதித்து விட்டு, கைகளை ஆட்டி ஆட்டி, நையாண்டி செய்தான் எங்கோ ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த வீரவேலனை நோக்கி.

வீரவேலனுக்கு வந்தது சினம். இரு கைகளால் தன் மார்பை அடித்துக் கொண்டான். அதைப் பார்த்த, குமார் வேலப்பன் மேலும் மேலும் நையாண்டி செய்தான். கூடி இருந்த குழுமத்தினர் ஆரவாரத்தோடு ஆர்ப்பரித்துச் சிரித்த்ணாற். எமக்கோ, உற்சாகம் கரை புரண்டது.

வீரவேலன் ஓடோடி வந்து பல்டி அடித்து, மங்கையர் இருவரும் உயரப் பிடித்திருந்த குச்சியினின்றும் மேலாகப் பாய்ந்து தாவினான். அது கண்ட, குமார் வேலப்பன் கீழும் மேலுமாய்க் குதித்து வீரவேலனைக் கேலி செய்தான்.

அதே நேரத்தில் மங்கயர் இருவரும் பெரிய வளையத்தை ஏற்றிப் பிடித்தனர். வினாடி கூடத் தாமதிக்காது, அதில் லாவகமாய்ப் பாய்ந்து தாவினான் மந்தி குமார் வேலப்பன். கூட்டத்தினர், ஓவென்று ஓலமிட்டனர்.

வீரவேலனோ, பெருத்த அவமானமாய் உணரலானான். உடலை நெட்டி முறித்தான். தலை மூடியைக் கோதி, கொண்டை இட்டுக் கொண்டான். குதித்து, பின் ஓடோடி வந்து வளையத்துள் நீட்டமாய்ப் பாய்ந்து, கைகளால் ஊன்றி பல்டி அடித்து, நிலை கொண்டான். பார்த்த மக்கள், பரவசத்துள் படர்ந்தனர். நாலாபுறமும் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது.

மங்கையர் இருவரும், வளையத்தைச் சுற்றி இருந்த துணியைப் பற்ற வைத்தனர். வளையம் தீப்பத்து போலக் காட்சி அளித்தது. மந்தி குமார் வேலப்பன் மீண்டும் பாய்ந்து தாவினான். அவனைத் தொடர்ந்து வீரவேலனும் பாய்ந்து தாவினான். இப்படியாக, வளையத்தின் அளவுகளைச் சிறிதாக்கிக் கொண்டே வந்தனர் அம்மங்கையர்.

இறுதியாக, சிறு அளவிலான வளையத்தைப் பற்ற வைத்து ஏற்றிப் பிடித்தனர். சிறு, தயக்கத்திற்குப் பின் இருவருமே பாய்ந்து சாகசத்தை வெளிப்படுத்தினர். அதைக் கண்டு ஏமாற்றமுற்ற மங்கையர் இருவரும், மேலும் சிறு குறுகிய வளையத்தைப் பற்ற வைத்து, ஏற்றிப் பிடித்துப் புன்னகைத்தனர்.

ஆர்ப்பரித்த மொத்தக் கூட்டமும், அசையாது அமைதியாய் நின்றது. இச்சிறு வளையத்துள், அதுவும் கனல் கக்குகிற இவ்வளையத்துள் எப்படி, மந்தியும் மனிதனும் புக இயலும்? எல்லோரும் யோசித்தபடி நின்று கொண்டிருந்தனர். சுற்றி இருந்த, மொத்த காந்தி பூங்காவும் இவர்களை நோக்கித்தான்.
Gandhi Park To Gandhi Park எனச் சுற்றி வரும் ஏழாம் இலக்கமிட்ட பேருந்துகள், சுற்றுவதை நிறுத்திவிட்டுக் காத்திருப்பில்.

மந்தி. குமார் வேலப்பன், சுழட்டிச் சுழட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருந்தான். திடீரென, வீர வேலன் முன்னே தோன்றி, இஃகிஃகி எனச் சிரித்துச் சிரித்து எரிச்சல் மூட்டினான். தன் வாலால் கேலி பேசினான். மக்கள், இறுக்கத்தினின்று தளர்ந்து நகைக்க வெளிப்பட்டனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், குத்தீட்டியாய் உடலை நீட்டி, ஊசி போல அச்சிறு வளையத்துள் பாய்ந்து மறுகோடியில் இருக்கும் கூட்டத்தினர் முன் போய் விழுந்தான் மந்தி. குமார் வேலப்பன். தெரு முழுதும், கரவொலியும் கூக்குரலும் ஓவென பேரிறைச்சலை உண்டாக்கியது. பார்த்தோர் அனைவரும், குதூகலத்துள் ஆழ்ந்து போயினர்.

மந்தி. குமார் வேலப்பன் நேராக வீரவேலன் முன்னே வந்து சேட்டைகள் செய்ய ஆரம்பித்தான். கூட்டத்துள் இருந்த விடலைகளும் வாண்டுகளும் உடன் சேர்ந்து எக்காளத்தை வெளிப்படுத்தினர். மற்றவர்களோ, செய்வதறியாது நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

வீரவேலன், தன் மெளனத்தை உடைத்து கூட்டத்தின் மையப் பகுதிக்கு முன்னேறினான். அஃகஃகாவென ஓங்கிச் சிரித்து, தனக்கு விடப்பட்ட சவாலை அலட்சியப்படுத்தும் நோக்கில் இளக்காரமாய்ப் பார்த்தான் அனைவரையும்.

“இந்தக் குரங்குக்கு முன்னால் நான் தோற்பதா? அஃகஃகா... இந்தச் சிறு வளையத்துள்தானே அது உள்ளே புகுந்து தாவிக் கரணம் அடித்தது?? அது என்ன பிரமாதம்??! இதோ, நான் எந்த வளையமும் இல்லாமற் தாண்டுகிறேன்... அஃகஃகா!”, என ஆர்ப்பரிக்கவும், மங்கையர்கள் பிடித்திருந்த சிறு வளையம் கீழே இறங்கியது. வீர வேலன் ஓடோடி வந்து, பாய்ந்து, அனாயசமாய்ப் பல்டி அடித்தான்.

கரவொலி விண்ணை முட்டியது. கூட்டத்தினர், தத்தம் பைகளில் இருந்த காசு பணத்தை வாரி வழங்கினர். நல்லதொரு கலையை இரசித்த நாமும் நம்மால் ஆனதைக் கொடுத்து மகிழ்ந்தோம்!!!

8 comments:

sakthi said...

கோயம்புத்தூர்ல தான் இருக்கேன் ஆனால் ஒரு நாளும் இது போன்ற நிகழ்வுகளை கவனிக்க நேரமில்லாமல் இருக்கிறேன்

வாழ்த்துக்கள் பழமைபேசியாரே!!!!

நசரேயன் said...

ம்ம்ம்

Sabarinathan Arthanari said...

எல்லா ஊர் பதிவுகளும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி

vasu balaji said...

ஆஹா! கண்ணுமுன்ன விரியுது காட்சி. குரங்காருக்கு பேரு வைத்தது அழகு:)

a said...

விடுமுறையை நன்றாக அனுபவித்து மகிழ்கிறீர்கள். கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு...

ஈரோடு கதிர் said...

மாப்பு...

வெகு நயமான விவரிப்பு

ரசித்’தேன்

ஈரோடு கதிர் said...

|| நசரேயன் said...

ம்ம்ம்||

அடிங்... இங்கேயும் அதே முனகலா!!!

Unknown said...

ஊரிலேயே இருக்கின்றவர்களுக்கு இதையெல்லாம் பார்க்க நேரமெங்கே? விடுமுறையில் போன நாம்தான் ..... பழைய நெனப்புத்தான் பேராண்டீ பழைய நென்பபுத்தான்னுட்டு... ரொம்ப சுவாரசியமாக சொல்வதிலிருந்தே உங்கள் மனது குழந்தையாய் குதூகலித்ததை உணர முடிகிறது. உங்களோடு என் மனதும்.