8/11/2010

பிறந்தகம் கண்டு வந்த இந்நாள்!

”இன்னிக்கு எங்க போறமுங்க?”

“அண்ணா, இன்னிக்கி தெக்க போலாமுன்னு ஒரு யோசனைங்க.... கொழந்தைகெல்லாம் தூங்குனவுட்டு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துறலாமுங்க!”


“செரி கண்ணு அப்ப, இந்தா நான் வண்டியக் கழுவி நிறுத்தீர்றேன்”

“செரீங்ணா, போயிட்டு மொகுட்டைப் பாக்குறதுக்கு முன்னாடி வந்துறலாம்”

இடை மறித்த மனையாள், “அதென்ன மொகுட்டைப் பாக்குறதுக்கு முன்னாடி?”

”அப்படின்னா, வெரசலான்னு அர்த்தம்?”

நகரத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்து, அமெரிக்காவில் வாழ்ந்து பழகிய நகரத்தாள் தன் வேலையைக் காண்பிக்கத் துவங்கினாள், “வெரசல்னா?”

“விரைவா அப்படிங்றதைத்தான் நாங்க கிராமத்துல வெரசலான்னு சொல்லிச் சொல்வம்”

“ஓகோ... செரி மொகுட்டுக்கு வாங்க”

“க்கும்... இப்ப எங்க மொகுட்டு ஊடு இருக்குது? மொகுட்டுக்கு வாறதுக்கு?”

“ஏன் காலையில என் உயிரை வாங்குறீங்க? மொகுட்டைப் பாக்குறதுக்கு முன்னாடின்னு எதோ உளறினீங்களே?”, வழமையான அயர்ச்சியுடன் முகைந்தாள்.

“அட ஆமாம்... விரைவா வந்துடலாம்னு சொன்னேன்... அதுக்கு அப்புடி ஒரு அர்த்தம் எப்படி வ்ந்துச்சுன்னா...”

சொல்லித் தொலை என்பது போல, இளக்கமான கண்களால் எம் கண்களை வெட்டிப் பார்த்தாள் மனையாள்.

“நல்லா ஊம் போட்டுக் கேக்கோணும்...”

“ம்ம்... சொல்லுங்க சீக்கிரம், எனக்கு நெறைய வேலை இருக்கு....”

”அந்தக் காலத்துல எல்லாம், மாமனார் வீட்டு விருந்துக்கோ... ஒறம்பரைச் சோத்துக்கோ போனா, தலைவாழை இலையில அர்த்தமாச் சோறு போட்டு பல விதமான காய் கறிகள், இறைச்சிக் கறிகள்னு போட்டு அசத்துவாங்க...

அதே, போன கிடையில சேந்தாப்ல ரெண்டு நாள் இருந்தாக்க, மறுநாள் முந்துன நாள் விருந்தோட மிச்சம் மீதி வட்டல்ல போட்டுத் தருவாங்க... இன்னும் ஒரு நாள் சேர்ந்து இருக்குற மூனா நேத்து, வழமையாக் குடிக்கிற பழைய சோறு, புளிதண்ணி, கம்பங்கூழுன்னு எதோ ஒன்னை கலயத்துல ஊத்திக் குடுப்பாங்க”

“அதுக்கென்ன இப்ப?”

“அப்படிக் கலயத்துல வாறதை, மேல இருக்குற வீட்டு முகடைப் பார்த்து குடிக்க வேண்டியதா இருக்கும். அது வரைக்கும் இருந்திடாம, சராங்கமா வந்துறோணும்ன்னு சொல்லிச் சொல்ற சொல்லாடல்தான் இந்த மொகுட்டைப் பாக்குறதுக்குள்ள வாறதுங்றது!”

“அடக் கடவுளே.... செரி, செரி.... சீக்கிரம் போயிட்டு, சாயந்தரத்துக்குள்ள வந்து சேருங்க!”, விடை கொடுத்தாள் இல்லாள். என்னே கொடுமை? தான் பிறந்த இல்லம் காணக்கூட தயவு பெற வேண்டி இருக்கிறது?!

வாகனமானது, கணபதி, காந்திபுரம், மேம்பாலம், உக்கடம் வழியாக பொள்ளாச்சி சாலையில் கரப்பான் பூச்சியாய்s செல்வதும் நிற்பதுவுமாய் கிணத்துக்கடவு வரையிலும். முன்பெல்லாம், வாலாங்குளக் க்ரை கண்டு விட்டதும் எடுக்கும் பெருவேகம். இப்போது, கிணத்துக்கடவு முட்டு மட்டும் போராடித்தான் செல்ல முடிகிறது.

முள்ளிப்பாடி இரயில்க் கதவு வந்ததும் அதே தொய்வு.... ஆனால், இரயில்ப் பாதைதான் காணோம். அகன்ற பாதையிடும் பணிகள் நடைபெறுகின்றனவாம். வண்டியை நிறுத்தி, இளநீர் பருகச் சென்றோம். வியப்பு மேலிடுகிறது. இளநீர்க் கடை வாகன் ஓட்டியின் நண்பருடையது. அன்பொழுக இளநீர் ஒரு பைசாச் செலவு இன்றி!

ஆச்சிபட்டி கடந்து, மகாலிங்கபுரம் வளைவுக்குள் புகுந்து, பல்லடம் சாலை தொட்டு, உடுமலை சாலையை அடைகிறது நம் வாகனம். மரக்கடை மாயமாய்க் கிடக்கிறது. மாறாக, கம்பிகளில் இராஜா கோவை இராஜா என்கிறது விளம்பரம்.

மாக்கினாம் பட்டி! ஏ அப்பா, உருத்தெரியாமல் எப்படித்தான் மாறிப்போய் விட்டிருக்கிறது அந்த ஆலமரத்தடியும் நாச்சிமுத்து பாலிடெக்னிக்கும்?! வாகனக் கடை... பளிங்குகள் பளிச்... பளிச்... கடந்து செல்கிறது வாகனம்.

ஆகா.... உருமாறாமல் ஊஞ்சவேலாம்பட்டி.... நிறைய சாலையோர பச்சைப்பசேல் மரங்கள் அடர்த்தியாய்... தென்னை... தென்னை.... எங்கும் தென்னை மரங்கள்... மண்சாலைகள் என்பதே இல்லை நாட்டில்.

திப்பம்பட்டிக் கரடில் வழுக்காம்பாறை மட்டும் வெளுத்த வண்ணத்தில் தெரியும். இப்போதோ, கரடு தெரியாதபடிக்கு தென்னை மரங்கள் ஓங்கி நெடு நெடுவென வளர்ந்திருந்தன. ப.குழந்தைவேலு அவர்கள் பெயரில் அவரது ஊரில் ஒரு கல்லூரி. எங்கள் ஊருக்குத் திருமூர்த்தி மலைக் குடிதண்ணீரைக் கொணர்ந்த மகான். அவரோடு நாம் இருந்த நினைவுகள் நிழலாட, அவரது ஆன்மா சாந்தி கொண்டிருக்கும் எனும் நம்பிக்கையோடு கடக்கிறோம்.

கோலார்பட்டி பழமை மாறாமல். தேவநல்லூருக்கு கைகாட்டி ஒன்று வைத்திருக்கிறார்கள். கல்லீவலசுக்கு வைக்கக் காணோம். ஆனாலும், கல்லீவலசு அமரர் இராமர் கோவில் பட்டீகவுண்டர் நினைப்பு நம்முள்.

மேடு ஏறி இறங்கியதும், பரம்பிக் குளம் ஆழியாறு கால்வாய் வறண்டு காட்சியளித்தது. எப்படி எல்லாம் நீச்சல் அடித்து, ஓடியாடி விளையாடி இருப்போம் இந்தக் கால்வாயில்? சதா சர்வ காலமும் கரைபுரண்டு ஓடும் கால்வாய் இது. கர்மவீரர் காமராசர் கொங்கு நாட்டுக்கு அர்ப்பணித்த கால்வாய் இது. இப்போது பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. ஏமாற்றத்தில் நாம்!

இருமருங்கிலும் இருந்த மரங்களைக் கண்டு களித்துக் கடந்து வந்தால் பெருத்த வியப்பு! கெடிமேடு!! ஒரே ஒரு மட்டைச் சாளையுடன் இருந்த இடமிது. இன்று, ஊரே ஆகிவிட்டிருந்தது இவ்விடம். எண்ணற்ற கட்டிடங்கள்.கெடிமேடு என்றால், மக்கள் அச்சமுறுவர் ஒரு காலத்தில். தெற்கே, இலட்சுமாபுரம் குண்டலப்பட்டி செல்வோர் எல்லாம் கெடிமேட்டில் இறங்காமல், கோமங்கலத்தில் இறங்கி பேருந்து மாறிச் செல்வர். இன்றோ, நிலைமை தலைகீழ்!!

அழகு தமிழில், கெடி என்றால் ஆளுமையான இடம் என்று பொருள். மேட்டுப்பகுதில் இருப்பதால், அவ்விடம் கெடிமேடு. ஆங்கிலேயன், Gedimedu என வரிவடிவப்படுத்த, நம்மவர்கள் அப்படியே உச்சரிக்கப் பழகிக் கொண்டதும் வரலாற்றுப் பிழை!!

மேடு என்றதுமே நம்மாட்கள் படையெடுத்து வந்து நிறுவிவிட்டார் காற்றாலைகளை; எங்கும் காற்றாலைகள்மயம்!! ஆடிக் காற்றில் சுழன்று சுழன்று மின்சக்தியை வாரி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், மின்வாரியத்தின் இரண்டு மணி நேர விடுப்புக்கு விடுப்பு இல்லை போலும்?!

கோமங்கலம் புதூர் பெரிதாக மாறிவிடவில்லை.... ஆனால் என்னவொரு அநியாயம்? கோமங்கலம் புதூர் பேருந்து நிற்குமிடத்தைக் கடந்ததுமே, சாலையில் ஆங்காங்கே வட்டங்கள். விபத்து நடந்து, உயிர்ப்பலி ஆன இடங்களாம் அவை. டேய், டேய்... ஏண்டா எங்க ஊர்ல வந்து சாவுறீங்க??

நம்முள் மகிழ்ச்சிப் பரவசம் மெதுவாகத் தலையெடுக்கிறது. புனர்ஜென்மம்... எம்மூருக்குப் பெருமை சேர்க்கக் கூடிய அமைப்பு அது. மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகம் போன்ற இடமது. கடந்து செல்கையில், பளிச்சென பச்சை நிறத்தில் வரவேற்கிறது, “அந்தியூர்”.

இடதுபுறமாய்த் திரும்பி, ஊருக்குள் சென்றதுமே உற்றார், உறவினர்கள் ஆங்காங்கே. நம்ம மெளனு வீட்டு மணியான் போறான்... மணியாந்தான் அது. வெள்ளை வெளேர்னு இருக்கானே? உதடுகள் அசைவதை வாசிக்கிறோம் நாம்.

ஓடோடி வருகிறார் தந்தையாண்டவர். நாம் இறங்கவும், அத்தையின் கணவர் பல்லெல்லாம் வாயாக! அதே ஓட்டு வீடு... வீட்டின் முன், கோதுமையை நேம்பிப் பதம்பிரிப்பு வேலைகள்... வழமையான சம்பிரதாயங்களுக்குப் பின், உள்ளே சென்று நமக்கான அந்த மரப் பெட்டியைத் திறக்கிறோம்...


என்றோ மடித்து வைத்துவிட்டுச் சென்றிருந்த லுங்கி, அப்படியே கசங்காமல் கனிவாய்க் காத்திருந்து, கண் சிமிட்டியது இந்த மண்ணின் மைந்தனுக்காய்! அஃறிணைகள் எல்லாம் மனிதம் பெற்று உயிர்த்தெழ, உயர்திணைகள் எல்லாம் மனிதமிழந்து அஃறிணைகளாய்!!

குறிச்சியில் பீகார் வாலிபர்களால் இரண்டு வயதுக் குழந்தை பலாத்காரம்; அரசு அலுவலகத்தை அப்பகுதிப் பெண்கள் முற்றுகை!! அடுத்த வீட்டு இலவச வண்ணத் தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்தது!!!

14 comments:

தாராபுரத்தான் said...

சொல்லாமலே வந்திட்டு போயிட்டீங்களே...ஆமா..டவுன் பக்கம் வந்தீகளா? முன்ன மாதிரிக்கு இல்லைங்கோ..போக்குவரத்து பெருகிபோச்சு..சூதானமா போகவேணும்ங்கோ..

a said...

//
அஃறிணைகள் எல்லாம் மனிதம் பெற்று உயிர்த்தெழ, உயர்திணைகள் எல்லாம் மனிதமிழந்து அஃறிணைகளாய்!!
//
Kallal Varigal...

cheena (சீனா) said...

அன்பின் ப்ழமை பேசி

நகரத்தில் பிறந்து நகரத்தில் வளர்ந்து அமெரிக்காவில் வாழும் ..... நல்ல சொற்றொடர்.

மொகட்டப் பாக்குறது - புரிகிறது.

அமெரிக்காவில் வாழ்ந்தாலும் - சொந்த ஊர் வளர்ந்த ஊர் - நல்லாவே சுத்திப்பாத்து எழுதறீங்க - நன்று நன்று

நல்வாழ்த்துகள் மணி
நட்புடன் சீனா

அப்பாவி முரு said...

”மோகட்டை”

அதையே சோத்துல மூஞ்சி (பழசு அ நீராகாரம்) தெரியுறதுக்கு முன் வா-ன்னும் சொல்லுவாங்க!!!

:)))

Mahi_Granny said...

சுற்றிலும் கடலும் கடல் சார்ந்த தொழிலும் உள்ள எங்க ஊருக்கெல்லாம் போவேனா அப்படி போனாலும் இது போல் எழுத வருமா என்று மனதில் எழுதிப் பார்க்கிறேன்.நிறைய வார்த்தை புதிதாக இருக்கிறது. எனக்கு மட்டும் தான் புரியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .அப்படியில்லை என்று தெரிந்ததில் மகிழ்ச்சி (just for fun).

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணா, உங்க பதிவைப் படிக்கும் போது நீங்க ஊரப் பாத்தே ரொம்ப நாளாகுதுன்னு தெரியுது.

ம்ம்.. எனக்கு இப்பவே ஊருக்குப் போகனும் போல இருக்கு

vasu balaji said...

/இந்த மொகுட்டைப் பாக்குறதுக்குள்ள வாறதுங்றது!”

“அடக் கடவுளே.... செரி, செரி.... சீக்கிரம் போயிட்டு, சாயந்தரத்துக்குள்ள வந்து சேருங்க!”, விடை கொடுத்தாள் இல்லாள்./

இந்த ரெண்டு பந்திக்கும் நடுவில ஒரு பின்னணி இசை ‘ணங்’குன்னோ ‘நச்’சுன்னோ இருக்கணுமே.

ஈரோடு கதிர் said...

அந்த பாட்டி என்னமோ பொடைக்குதுங்களே.. அதென்ன கல்லக்காயா?

naanjil said...

*அஃறிணைகள் எல்லாம் மனிதம் பெற்று உயிர்த்தெழ, உயர்திணைகள் எல்லாம் மனிதமிழந்து அஃறிணைகளாய்!! *

எந்த‌ நிக‌ழ்வுக‌ளைக் குறிப்பிடுகிறீர்க‌ள். விள‌க்க‌ங்க‌ள் கொடுத்தால் ம‌கிழ்ச்சி.

அண்ண‌ன்
நாஞ்சில் பீற்ற‌ர்

பவள சங்கரி said...

ஆகா அடுத்த புத்தகத்துக்கு ஐயா தயார் ஆகிட்டார் போல இருக்குதே!!!!

sultangulam@blogspot.com said...

அருமை பழமைபேசி. இங்கள் இடுகையில் கிராமங்கள் நகராகி கண் முன்னே தோன்றுகிறது.

பழமைபேசி said...

@@naanjil

அண்ணா, வணக்கம்; நிறைய...

அச்சொற்றொடருக்கு கீழே உள்ளதை வாசிக்கவும்!!

Anonymous said...

படத்தையெல்லாம் பாத்ததும் ஊருக்கு போயிட்டு வந்த மாதிரியே இருக்கு

vanjimagal said...

ஆமா நகரத்து பெரிய அம்மணி,சின்ன அம்மணி எல்லோரையும் உங்க பிறந்தகத்தை காட்டுவது எப்போது?