11/07/2008

அம்மா!

அன்பர்களே வணக்கம்! வேடிக்கையா எழுத ஆரம்பிச்சோம். அப்புறம் பாருங்க, 1880ல எள்ளுத் தாத்தா எழுதி வைத்த வைத்தியம்னு ஒரு தொடர் ஆரம்பிச்சோம். அப்புறம் கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற தொடரை ஆரம்பிச்சு, சித்திரகவிப் பாடல்கள (மிறைப்பா) பாத்துட்டு வர்றோம். அண்ணன் மகேசு எடுத்துக் குடுத்த தலைப்பு, கனவில் கவி காளமேகம்ங்றதுல ஒரு தொடர். இது பத்தாதுன்னு, சக பதிவர்களோட தொடர்பதிவுக் கொக்கிகள். அதுல ஒன்னு ரெண்டுக்கு இனியும் ஒலை வெக்கல, அது வேற விசயம். இந்த லடசணத்துல‌, கெடக்கறது எல்லாம் கெடக்கட்டும், கெழவியத் தூக்கி மனையில வ‌ய்யிங்ற கதையா, சமீபத்துல தொடங்கின ஒரு தொடர், நம்ம பக்கத்தோட வாசகர்களுக்கான வாசகர் விருப்பம். இதுலயும் நம்ப மருத்துவர் சாரதி அவிங்களோட விருப்பமும், அண்ணன் குடுகுடுப்பை அவிங்களோட விருப்பமும் பூர்த்தி செய்யப்படலை இன்னும்.

ஆமாங்க, இன்னைக்கு நாம பாக்கப் போறது அமிர்தவர்ஷினி அம்மா அவிங்களுக்கான வாசகர் விருப்பம். இவங்களுக்கு கிராமியம், பழைய விசயங்கள்னா நொம்பப் புடிக்கும் போல இருக்கு. அதான், நாம சின்ன வயசுல பாடின பாட்டு. யாரு எழுதினதுன்னு எல்லாம் கேக்கப் படாது. அது யாருக்குத் தெரியும்?!



காடு காடு!

என்ன காடு?
ஆற்காடு!

என்ன ஆறு?
பாலாறு!

என்ன பால்?
கள்ளிப் பால்!

என்ன கள்ளி?
இலைக் கள்ளி!

என்ன இலை?
வாழை இலை!

என்ன வாழை?
கற்பூர வாழை!

என்ன கற்பூரம்?
இரசக் கற்பூரம்!

என்ன இரசம்?
மொளகு இரசம்!

என்ன மொளகு?
வால் மொளகு!

என்ன வால்?
நாய் வால்!

என்ன நாய்?
மர நாய்!

என்ன மரம்?
மா மரம்!

என்ன மா?
அம்மா!


அப்பன் இல்லன்னா தொழில் மந்தம்!
அம்மா இல்லன்னா வாழ்க்கையே மந்தம்!!
_____________________________________________________

இந்த பதிவைப் பாத்த, எங்க‌ நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவைச் சேந்த செந்தாமரை அவிங்க அனுப்பின மின்னஞ்சல்:

நாங்க சின்ன வயசில வேற மாறி இந்த பாட்டு பாடுவோம். ரெண்டு ரெண்டு பேரா கை தட்டி இந்த பாட்டு பாடுவோம்(கேள்வி கேட்போம்).

நீ எங்கே போனாய்?
ஊருக்கு போனேன்.

எந்த வூர்?
மயிலாப்பூர்.

எந்த மயில்?
காட்டு மயில்.

என்ன காடு?
ஆற் காடு.

என்ன ஆறு?
பால் ஆறு.

என்ன பால்?
கள்ளிப் பால்.

என்ன கள்ளி?
இலைக் கள்ளி.

என்ன இலை?
வாழை இலை.

என்ன வாழை?
கற்பூர வாழை.

என்ன கற்பூரம்?
ரசக கற்பூரம்.

என்ன ரசம்?
மிளகு ரசம்.

என்ன மிளகு?
வால் மிளகு.

என்ன வால்?
நாய் வால்.

என்ன நாய்?
மர நாய்.

என்ன மரம்?
பலா மரம்.

என்ன பலா?
வேர்ப் பலா.

என்ன வேர்?
வெட்டி வேர்.

என்ன வெட்டி?
பனை வெட்டி.

என்ன பனை?
தாளிப் பனை.

என்ன தாளி?
விருந்தாளி.

என்ன விருந்து?
நிலா விருந்து.

என்ன நிலா?
பிறை நிலா.

என்ன பிறை?
நெற்றிப் பிறை.

என்ன நெற்றி?
பெண் நெற்றி.

என்ன பெண்?
மணப் பெண்.

என்ன மனம்?
பூ மனம்.

என்ன பூ?
மாம்பூ.

என்ன மா?
அம்மா!


இன்னும் இருக்கு இதன் தொடர்ச்சி. எனக்கு ஞாபகம் இருக்குற வரைக்கும் எழுதறேன்.

என்ன அம்மா?
டீச்சர் அம்மா.

என்ன டீச்சர்?
கணக்கு டீச்சர்.

என்ன கணக்கு?
வீட்டு கணக்கு.

என்ன வீடு?
மாடி வீடு.

என்ன மாடி?
மொட்டை மாடி.

என்ன மொட்டை?
திருப்பதி மொட்டை.

அப்பாடி, இவ்வளவுதான் ஞாபகம் வருது. அதுக்கு அப்பறம் மறந்துபோச்சு.

12 comments:

நசரேயன் said...

எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு.
நான் ஊருக்கு போனும்..
நான் ஊருக்கு போனும்..

பழமைபேசி said...

//நசரேயன் said...
எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு.
நான் ஊருக்கு போனும்..
நான் ஊருக்கு போனும்..
//

நல்ல பையனா, அம்மா அவிங்கள இங்க வரவச்சி, நல்லாக் கவனிச்சி, வெச்சுருந்து ஊருக்கு அனுப்புற வேலையப் பாருங்க..... ச்சும்மா... யார்கிட்ட?

நசரேயன் said...

/*
நல்ல பையனா, அம்மா அவிங்கள இங்க வரவச்சி, நல்லாக் கவனிச்சி, வெச்சுருந்து ஊருக்கு அனுப்புற வேலையப் பாருங்க..... ச்சும்மா... யார்கிட்ட?

*/
அவிங்களுக்கு இந்த ஊரு புடிக்கலையாம் :)

பழமைபேசி said...

//நசரேயன் said...
அவிங்களுக்கு இந்த ஊரு புடிக்கலையாம் :)
//

அடடா...

Natty said...

எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு.
நான் ஊருக்கு போனும்..
நான் ஊருக்கு போனும்.

:( feelings repeatai :(

பழமைபேசி said...

//Natty said... //

வாங்க Natty ! ...ச்சும்மா ஆசுவாசப் படுத்திகுங்க‌, சரி ஆயிடும்!

Anonymous said...

//என்ன மொட்டை?
திருப்பதி மொட்டை.//

இது பழையது.

என்ன மொட்டை?
அரசியல் மொட்டை.

இப்படியும் சொல்லலாமே!

பழமைபேசி said...

//அ. நம்பி said...

என்ன மொட்டை?
அரசியல் மொட்டை.

இப்படியும் சொல்லலாமே!
//

பின் நவீனத்துவ முறைப்படி அது மிகவும் சரி!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஐயா!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா அசத்திப்புட்டீங்க அண்ணே.

நான் ஒரு நிமிசம் இங்கயே இல்ல. அப்படியே அந்தப் பாட்டு பாடுன காலத்துக்குப் போயிட்டேன்.

நெசமா இந்தப் பாட்டெல்லாம் எழுதி வெச்சு நான் என் பொண்ணுக்கு கத்துத் தரப் போறேன். நன்றி.

அந்த ரைமிங்கில் இதோ ஒரு பாடல்

பூ பூ புளியாம்பூ
பொட்டில வெச்சா தாழம்பூ
தாழம்பூவ ரெண்டாக்கி
தங்கச்சி கையில மூணாக்கி
சித்தாத்தா அடுப்புல
கத்தரிக்கா வேகல.

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஆஹா அசத்திப்புட்டீங்க அண்ணே.
//

வாங்க, நன்றி!

Anonymous said...

உங்கள் பதிவில் உள்ளது போல மற்றுமொரு பாடல்...


டிக் டிக்
யாரது?
திருடன்...

என்ன வேண்டும்?
நகை வேண்டும்...

என்ன நகை?
கலர் நகை

என்ன கலர்?
பச்சை கலர்

என்ன பச்சை?
கிளி பச்சை

என்ன கிளி?
பசுங்கிளி

என்ன பசு?
மாடு பசு

என்ன மாடு?
எருமை மாடு

என்ன எருமை?
காட்டெருமை

என்ன காடு?
பூங் காடு

என்ன பூ?
மல்லி பூ

என்ன மல்லி?
குண்டு மல்லி

என்ன குண்டு?
கோலி குண்டு

என்ன கோழி?
ஆண் கோழி

என்ன ஆன்?
ஸ்விச் ஆன்

என்ன ஸ்விச்?
பேன் ஸ்விச்

என்ன பேன்?
உஷா பேன்

என்ன உஷா?
பீ.டி உஷா

என்ன பீ.டி?
ரண்னிங் பீ.டி

என்ன ரண்னிங்?
ஃபாஸ்ட் ரண்னிங்

என்ன ஃபாஸ்ட்?
ப்ரேக் ஃபாஸ்ட்

என்ன ப்ரேக்?
லந்ச் ப்ரேக்

இப்படி போகும் இந்த பாடல்...
இதற்கு மேல் எனக்கு ஞாபகம் இல்லை...

பழமைபேசி said...

@@Sriram said...

வாங்க ஸ்ரீராம்!வருகைக்கும் உங்க பாடலுக்கும் மிக்க நன்றிங்க‌!!