10/20/2017

உச்சா




கூடு திரும்பலென்பது எப்போதுமே இன்பமும் குதூகலமும் வாய்க்கப் பெற்றவொன்றாகும். வேலையிலிருந்து திரும்புவது, வெளியூரிலிருந்து திரும்புவது, விடுதியிலிருந்து திரும்புவது, வனாந்திரம் தேசாந்திரம் போய்த் திரும்புவது என எல்லாமுமே உளப்பொங்கலுடைத்தவை; இணையரின் காராட்டுக் காலம் தவிர. அதென்ன இணையரின் காராட்டு காலமென்பது? அதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரமிதுவல்ல. தேவையென்றால், வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

நான் இருக்கும் ஊர், ஒரு பெரிய வானூர்தி நிறுவனத்தின் நடுவவானூர்தி முனைய(hub) நகராகும்.. எல்லா ஊர்களுக்கும் செல்லும் வானூர்திகள் இங்கு வந்து போகும். அதாவது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் பயணிகளை ஒரு வானூர்தியிலிருந்து இன்னோர் வானூர்திக்கு மடைமாற்றக்கூடிய ஊர். ஆதலால், நாம் எங்கு சென்றாலும் நேரடி வானூர்தியில் இரண்டு மணி நேரத்தில் செல்லக் கூடிய பயணமாகத்தான் இருக்கும். வியாழக்கிழமை பிற்பகல் ஒருமணிக்கெல்லாம் ஒரு பொட்டியை மூடி இன்னொரு பொட்டியை கட்டிக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து விடுவோம். வந்தபின், சோதனைச்சடங்குகளை முடித்துக் கொண்டு நேராக இசுடார்பக்சு கடைக்குச் சென்று பெருங்கோப்பை மிகைச்சூட்டு வெண்மோக்கா (extra hot grandee white mocha) வாங்கி விடுவோம். வானூர்தி உட்புகலுக்குச் சற்றுமுன்னர் தேங்குபை சுருங்குபை ஆகுமளவுக்கு அடித்துச் சுகிப்போம். ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாதெனச் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றனர் பெரியோர்.

அன்றைய பொழுது நமக்கான பொழுதாக இருந்து, எவ்வித அக்கப்போர்களும் இழவுகூட்டலுமின்றியிருப்பின், சரியான நேரத்துக்குப் புறப்பட்டுச் சரியான நேரத்துக்கு வானூர்தி வந்து சேரும். பெரும்பாலும் வீடு திரும்பும் போதுதான் மிகச்சரியாக இழவைக் கூட்டுவார்கள். எது, எப்படியிருப்பினும் வானூர்தி வந்து சேர்ந்ததும் பொட்டியை இழுத்துக் கொண்டு செல்லுமிடம் மூத்திரச்சந்தாகத்தான் இருக்கும். சில நேரங்களில், வானூர்திக்குள்ளாகவே பையிலிருந்து நீரிறக்கம் செய்ய வேண்டியிருக்கும். எல்லாம், உள்ளே தள்ளிய தீர்த்தவாரியைப் பொறுத்து என்பதறிக.

கண்ணிமைக்கும் நேரத்தில் கொசுவர்த்தி சுழல்கிறது. உங்களை அப்படியே குண்டுக்கட்டாக கோயமுத்தூர் அவிநாசி சாலையிலிருக்கும் கொள்ளுப்பாளையத்துக்கும் கணியூருக்கும் இடைப்பட்ட பாம்புகள் பல்லிகள் ஓணான்கள் குடிகொண்டு வாழும் பாழும் காட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறேன்.

பகல்வாரம் முடிந்து கொள்ளிரவுவாரக் கிரமத்துக்கு மாறும் சனிக்கிழமைதோறும் வீடு திரும்புவது வழமையாகும். அதாவது, பகல்வாரமெனில் காலை எட்டுமணி முதல் மாலை நான்கரைமணி வரை வேலைநேரம். கொள்ளிரவு வாரமெனில் இரவு ஒரு மணியிலிருந்து காலை எட்டுமணி வரை வேலை நேரம். ஆகவே, சனிமாலை நான்கரையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒருமணிவரையிலுமாக நெடுநேரம் நமக்கு விடுப்பாக இருக்கும். எனவேதான் இந்தகாலகட்டத்தில் ஊர் திரும்புவதென்பது உகந்ததாகக் கருதப்படுகிறது. அதைவிடுங்கள், இப்போது சனிக்கிழமை மாலை நான்கு மணி.

நெஞ்சமல்லாம் கிறுகிறுக்கும். மனசெல்லாம் இறக்கைகட்டி அலேக்காகப் பறக்கும். ங்கொய்யால எப்படா இந்த மணியடிச்சுத் தொலையுமென கிடந்துதவிக்கும் உள்ளம். கழிப்பறைக்குச் சென்று முகம் கழுவி ஒப்பனை செய்து சட்டைக்காலரைத் தூக்கிவிட்டு, வேலைநிமித்தம் அடுத்த வேளைக்கானவனிடம் பணிகளை மாற்றிக் கொடுத்தானபின், எந்த மணித்துளியிலும் மணியடிக்கு்மென எண்ணி ஓட்டமெடுக்கப் பரபரத்துக் கொண்டிருக்கும் கால்கள். அந்தா… அடிக்கிறது மணி, கிர்ர்ர்ர்ர்…

நேரச்சீட்டில் வெளியேறுபதிவிட, outpunch, கூட்டம் நெருக்கி முண்டியடிக்கிறது. டபக். என்னுடைய அட்டையில் விழுந்துவிட்டது முத்திரை. நிறுவனச்சாலைக்குள் ஓடக் கூடாது. கால்கள் வேகவேகமாக எட்டி நடையைப் போடுகின்றன. ஆனால் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து மணிக்குள்ளாக, டவுன் ஆல் சோமனூர் வண்டியொன்று, காந்திபுரத்துக்கு நாற்பத்தொன்று ஏ, அவிநாசியிலிருந்து பூண்டி செல்லும் நேர்வழிப் பேருந்து, இம்மூன்றையும் தவறவிட்டு விட்டால் இழவுதான். அடுத்த வண்டி, ஆறுமணிக்குப் பிறகுதான். அப்படியே வந்தாலும் இந்தப் பாங்காட்டில் நிற்பானா என்பது தெரியாது. வேகுவேகென்று, மேலாகச் சங்கூதிபாளையம் பிரிவுக்கு நடந்து போகவேண்டும். அப்படி நேர்ந்துவிட்டால், யாரைப்பார்த்தாலும் கொன்று தின்ன வேண்டும் போல இருக்கும். இன்றைய நாள் நல்ல நாள், காந்திபுரம் பேருந்தில் இடம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

உலுக்கி உலுக்கி எப்படியோ பீளமேடு வந்து சேர்ந்தாயிற்று. பாதிபேர் இறங்கிவிட்டனர். ஒரு இருக்கையில் இடம் பிடித்துக் கொண்டோம். பெருவேகமெடுக்கிறது வண்டி. இந்நேரமும் உலுக்கிக் கொண்டிருந்த உலுக்குநர்ப் பேர்வழி, இப்போது உலுக்குநர் சட்டையைக் கழற்றியெறிந்து விட்டு புரட்டுநர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டாரென வைத்துக் கொள்ளுங்கள். புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டே போய்ச் சேர்ந்து விடுகிறது வண்டி. அந்த லட்சுமிமில் வளைவில் நெளிந்தபோது கூட அவ்வளவாகத் தெரியவில்லை. போலீசு குவார்ட்டர்சில் ’சர்ரக்’கெனச் சாகசமாய் வளைந்து திரும்பியதில்தான் கம்பியில் விலாவெலும்புபட்டு நோகிறது. ”அதனாலென்ன, ரொம்ப நல்ல டிரைவர். அஞ்சரைக்கெல்லாம் கொண்டாந்து உட்டானப்பா”, தொண்டாமுத்தூரிலிருந்து வரும் நாதாரியொன்று மெய்சிலிர்க்கிறது.

காந்திபுரம் பேருந்து நிலையமல்ல அது. பெருமைதானம். இந்தக் கோட்டுக்கும் அந்தக்கோட்டுக்குமாக பரந்து விரிந்திருக்கும். சிறைச்சாலை மண்சுவரும் பொருட்காட்சி மைதானப்படலும் ஒன்றுக்கொன்று சந்திக்கிற இடம் வந்தான காட்சியைக் கண்டதும் ஒரே தாவு. உடனிருந்த தொண்டாமுத்தூர்க்காரனாவது சோதிபுரத்துக்காரனாவது, போங்கடாத் தெல்லவாரிகளா, ஒழிங்கடா சனியனுகளா… ஊர்டா, அந்தியூர்டா… வண்டி நிலையடைந்து நின்றதா இல்லையா என்பதையெல்லாம் யார் கண்டார்? ஒரே குதி! எதிரில் குறுக்காக வருபவனுக்கெல்லாம் மனதார நாமாவளிதான். அந்தநாய், இந்தநாய். இதற்கு மேல் நீங்களே உங்கள் விருப்பத்துக்கொப்ப இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

”அண்ணா, இந்த வண்டி பொள்ளாச்சிக்கு நேர்வண்டியா? இல்ல, நின்னு நின்னு போயி எழவெடுப்பீங்ளா??”

“நேர்வண்டிதான் தம்பி, கரெக்டா அஞ்சு அம்பது சில்லறை வெச்சிக்கணும்”

“இருக்கு இருக்கு”

வண்டி நேருவிளையாட்டரங்க வளைவிலிருக்கிற அந்த திடீர்குபீர் மேட்டில்,, அந்த எழவு அன்றைக்கும் இருந்தது என்பதுதான் பேரெரிச்சல். ஏறியிறங்கியதுதும் கனவுலகவாசம் வண்ணவண்ணமயமாக உருவெடுக்கும். கோவைத்தம்பியின் படப்பாடல்கள் வாயிலாக இளையராசா நம்மை உலாவில் ஆழ்த்துவார். அந்தந்த காலகட்டத்துக்கொப்ப, கனவுலக வாழ்வு அமையும். உதயகீதம், இதயகோயில் வரிகளெல்லாம் கைபற்றி அழைத்துப் போகும். புளியமரங்களெல்லாம் வேகவேகமாய் எதிரே ஏன் இந்த வேகத்தில் ஓடுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை. பாழாய்ப்போன குறிச்சி ரெயில்வே கேட்டில் மாட்டாமல் இலாகவாம என்னமாய் ஓட்டுறார் இந்த டிரைவர்? அருமைடா பரஞ்சோதி. யார் அந்த பரஞ்சோதி. யாரோ ஒருத்தன்.

வண்டி மகாலிங்கபுரம் பக்கமாவே வந்து விட்டது. அய்யோ, ஸ்ரீதேவி இருப்பாளா? ஸ்ரீதேவி இருப்பாளா? மனம் ஏங்கும். ஏனென்றால், அவள் மட்டுமே நம்மையும் மதித்துத் தாங்குபவள். இருப்பாளா? இருப்பாளா??

”அய்யோ, புறப்பட்டுப் போறாளே? மணி என்ன? அய்யோ, அஞ்சு மணித்துளி காலத்தாழ்ச்சிதான்! கொள்ளையில போனவன், குறிஞ்சிப்பாடி கேட்லயும் புரவிபாளையம் பிரிவுலயும் நிக்கும் போதே நினைச்சேன். திருட்டுத் தாயோளி, நேர் வண்டின்னு சொல்லிப் போட்டு கழுத்தறுத்துட்டான்”, இறங்கி ஓட்டமோ ஓட்டம்.

கம்பியைப் பிடித்து ஒரு காலை வைத்தாயிற்று. வலக்கையின் கட்டைவிரல், ஒரே ஒருவிரல்தான் ஒட்டுமொத்த உடலையும் அந்தக் கம்பியோடு பிணைத்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், பாடையில்தான் விழ வேண்டும்.

“படியில தொங்கறவங்கல்லாம் மரப்பேட்டையில இறங்கிக்க. இல்லன்னா, உள்ள வா”

அப்பாட, கொஞ்சமாக இடம் கிடைக்கவே, இருகால்களாலும் நிற்க வாய்க்கிறது. ஸ்ரீதேவியா, கொக்கா?! இவள் அல்லாவிடில், நொம்பலம்தான். அந்தியூரில் நிறுத்தமாட்டான்கள். ”கோமங்கலத்துல இறங்கிடு, இல்லன்னா நேரா முக்கோணந்தான்”, மிரட்டுவான்கள். அருமை ஸ்ரீதேவி அன்பானவள். எங்கும் நிற்பாள்.

நரகவாழ்க்கைத் தடங்களிலிருந்து விடுபட்டு, இந்தா வருதுடா ஊர்வாசம். ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி கடந்து வந்துவிட்டதடா கெடிமேடு. கெடி என்றால், படை பரிவாரம் கொத்தளம் நிலைள்ளும் தாவளம். திப்புசுல்தான் படைகளை எதிர்க்க, நாயக்க மன்னரின் கெடிகள் இந்த மேட்டில் நிலைகொண்டதால், இது கெடிமேடு. கெடிமேடு தாண்டி, கோமங்கலம்பூதூர் வந்தாயிற்று. ஆகா, ஆகா. கொத்துமல்லி மணம் கமகமவென மூக்கு நாசிகளில் புகுந்து குருதியில் கலக்கிறது. மின்வெளிச்சத்திலும் கரிசல்மண் கண்களைக் கொள்ளை கொள்கிறது.

“அந்தியூர்ல வண்டி நிக்காது. வல(ளை)வுல வண்டி திரும்பும்போதே எறங்கிக்கணும்”

”ங்கோத்தா, நீ மூடு… இப்ப என்ன நடக்குதுன்னு மட்டும் நீ பாரு”, மனம் பேசுகிறது

அந்நேரமும் சாலையோரத்தில் காத்துக்கிடந்த தண்ணீர் பீப்பா (பீப்பாய்) வண்டி, ”லக், லக், ப்போ…”, ஒரே சுண்டு சுண்டிவிட்டாற் போதும், அந்த ஒற்றைமாட்டு வண்டி நடுரோட்டில் வந்து நிற்கும். பங்காளிகள் பலரும் வந்து நிற்பர். ”ங்கொய்யா ஊருக்கே தெரியும்டா, வலவாம், திரும்புமாம், எறங்கிக்கிடணுமாம்”.

அந்தியூர்… தாய்மண்ணே வணக்கம்!! 

இரவு மணி, எட்டு நாற்பது. நாகராசண்ணன் கடையில் சில நேரம். சத்திரத்தடியில் சில நேரம். வீடு செல்ல மணி ஒன்பது. ஆக மொத்தம் நான்கரை மணி நேரம்.

கட். அந்தியூரிலிருந்து, தற்போது நாமிருக்கும் இடத்துக்கு, தற்போதைய நேரத்துக்குத் திரும்புகிறோம்.

நான்குமணிக்கு மூத்திரச் சந்துக்குப் போனோம். ஒன்பது மணிக்கு வீடு திரும்பியும் மூத்திரசாலம் செய்ய வேண்டுமென்கிற நினைப்பிருந்திருக்கவில்லை. அமெரிக்காவில் புறப்படுமுன் ஒரு பாட்டம் பெய்தல். வந்து சேர்ந்தபின் ஒரு பாட்டம் பெய்தல். ஏனிந்த வேறுபாடு? சிந்திக்கிறோம். அங்கு தட்பவெப்பம் வேறு. வியர்வைச் சுரப்பிகள் அயராது பணியில். இங்கு அதற்கு இடமில்லை. அது மட்டும்தானா காரணம்?

“போடாப் பன்னாட, ஒழுக்கமா அப்பப்ப நீராகாரம், தண்ணி குடிக்கணும்டா. அல்லாங்காட்டி மூட்டு வலி, தலைவலி வரும். ஆயுளுங் குறையும்டாத் தறுதல”, நான் சொல்லவில்லை. அந்த உள்மனக்குரங்கு கொக்கரிக்கிறது.



No comments: