10/18/2017

அப்பாடா... தீவாளிடா!!

அப்பாடா... தீவாளிடா!!

இலட்சுமிநாய்க்கன் பாளையம் விடுதியில் தங்கியிருந்து படிக்கிறேன். தீபாவளிக்கு முந்தினநாளே விடுதி மூடப்படுகிறது. பக்கத்து கிராமத்து நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு அழைக்கிறார்கள். நானும் போய்த் தங்கிவிட்டு, கடைசியாக வேலப்பநாய்க்கன் பாளையம் உறவினர் இரங்கநாதன் அவர்களது தோட்டத்துக்குப் போய்ச் சேருகிறேன். மழை பெய்யத் துவங்குகிறது. மழைக்கு இதமாக இராகிவடை, ஆமைவடை, மெதுவடை என மூன்றுவிதமான வடைகளும் சூடாக சுட்டுக் கொடுக்கப்படுகின்றன. குதூகலமாகத் தின்று கொண்டே மாலை முழுதும் கரைந்து போகிறது. எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம். எவ்விதமான போன் வசதியுமிராத காலகட்டமது. அழவில்லை. அவ்வளவுதான். மனம்முழுமைக்கும் அழுகை அணைகட்டி நிற்கிறது. இராத்திரி எட்டுமணி சியாம் வண்டிக்குப் போயிர்லாம்டா என்கின்றனர் அண்ணன் இரங்கநாதனும் புருசோத்தமனும். அதேபோல மழையோடு மழையாகக் கொங்காடிகள் போட்டுக் கொண்டு அக்கநாய்க்கன் பாளையம் பிரிவில் இரவு எட்டுமணிக்கு நிற்கிறோம். நிற்கிறோம். கோயமுத்தூரிலிருந்து கிராமத்து சாலைகளில் தவழ்ந்து வருகிறது சியாம். மழையோடு மழையாகக் கரைந்து போகிறது நான் அழுத கண்ணீரெல்லாம்.

வண்டிக்குள் ஏறி, நான் போட்டிருந்த உடுப்புகளை எல்லாம் அவிழ்த்து பெட்டியிலிருந்த அழுக்கு உடைகளுக்குள் புகுந்து கொள்கிறேன். இருந்தும் குளிர் கொல்கிறது. வண்டி ஓட்டுநர் செய்யக்கூடாத சாகசமெல்லாம் செய்து ஒருவழியாக திருப்பூர் - பொள்ளாச்சி சாலையை வந்தடைகிறது வண்டி. ஓரமாக நிறுத்திவிட்டு பீடி ஒன்றைப் புகைக்க விடுகிறார். மழையும் ஓரளவுக்கு நின்று விட்டிருந்தது. 

“அண்ணா, மணி என்னாசுங்ணா?” 

“ஒம்பதே முக்கால் தம்பி”. 

மீண்டும் அழத் துவங்குகிறேன். வண்டிக்குள் எண்ணி ஏழு அல்லது எட்டுப் பயணிகள்தாம். அதில் ஒருவர் வருகிறார். “கண்ணு, நீங்க எந்த ஊருக்குப் போகோணும்?”, 

“சலவநாய்க்கன் பட்டிப் புதூருங்க”. 

“வெசனப்படாதீங்க. மழ நின்றுச்சு பாருங். போய்ச் சேந்துரும் வண்டி”. 

நிமிர்ந்து உட்காருகிறேன். வண்டி செஞ்சேரிமலைச் சாலையில் வேகமெடுக்கிறது. மகிழ்ச்சி கரை புரள்கிறது. சற்றே உறக்கமும் கண்களை அணைக்கிறது.

“நிறுத்துங், நிறுத்துங்... வண்டி தெக்கமின்னாப் போகாது. பச்சாக்கவுண்டம் பாளையத்து தரைப்பாலம் முறிஞ்சி போச்சி”

நான் செத்தே போனேன். என்னையும் கடந்து அழுகை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நாங்க நடந்தே போய்க்கிறமுங்க. எல்லாரும் இறங்கிப் போய்விட்டார்கள். எஞ்சியிருப்பது, ஓட்டுநர், நடத்துநர், நான்.

“செரிங்ணே, நாம நெகமம் போயி, வீதம்பட்டி வழியாப் போயி, பிரசிடெண்ட் நாய்க்கர் தோட்டத்துல வண்டியப் போட்டுர்லா. ஆனா, இந்தப் பையனை என்ன பண்றதுன்னுதா தெரீல”, நடத்துநர் ஓட்டுநரிடம் சொல்கிறார். 

விடிந்தால் தீபாவளி. ஒரு சீட்டில் குறுகிப்படுத்துக் கொண்டேன். அழுகையில் என்னையுமறியாது நான் உறங்கிப் போனேன்.எதொவொரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது செரியான குலுக்கல். குலுக்கலில் நோக்காட்டில் எழுந்து உட்காருகிறேன். 

“வண்டிய நிப்பாட்டுங்க. ஆரோ, கைய கைய ஆட்டுறாங்க”

“எங்க தம்பு இந்த வண்டியில ஏறுச்சுங்ளா தம்பீ?”

வேலூர், வீதம்பட்டி, வாகைத்தொழுவு, சலவநாய்க்கன்பட்டி எல்லாமும் அதிர்ந்தெழுகிறது. பொட்டியாவது கிட்டியாவது. ஒரே பாய்ச்சலில் பாய்கிறேன். நாடி நரம்புகள் எல்லாமும் ஒருசேரப் புடைத்தெழுந்து பேரோசை ஆர்ப்பரிக்கிறது.  ”அப்பா!”

மகனைத் தேடி நள்ளிரவில் சைக்கிள் எடுத்துக் கொண்டு மழையோடு மழையாக வந்திருக்கிறார். 

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், போட்டாரே பார்க்கலாம் வெடிகளை. ‘பட பட படார்”.

அப்பாடா... தீவாளிடா!!

No comments: