2/02/2011

உடுமலை மகானுக்கு அஞ்சலி!

உடுமலை :உடுமலை நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முக்கிய காரணமாக இருந்த தொழிலதிபர் வித்யாசாகர்(87) காலமானார்.

உடுமலையில் 1924ம் ஆண்டு பிறந்த வித்யாசாகர், கல்லூரி படிப்பை முடித்தும், 1949ல் நூற்பாலை துவங்கினார். தென்னிந்திய நூற்பாலைகள் மற்றும் பருத்தி ஆராய்ச்சி கழகத்தில் தலைவராகவும், துணை தலைவராகவும்பதவி வகித்தார். நாட்டில் முதல்முறையாக 100கவுண்ட் நூல் உற்பத்தி செய்யதேவையான "சுவின்' என்ற பருத்திரகத்தை தனியார் பண்ணை நிலங்களில் உருவாக்கியவர்.

1955ம் ஆண்டு உடுமலை நகராட்சி தலைவராக பொறுப்பேற்றார். அப்போதைய முதல்வர் காமராஜரிடம் உடுமலைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தினர். திட்டத்திற்கு அரசு குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கிய நிலையில், தனதுசொந்த பணத்தைசெலவிட்டார். மின்சாரம் மற்றும் எவ்வித மோட்டார்களும் இல்லாமல் புவி ஈர்ப்பு விசையில் திருமூர்த்திமலையிலிருந்து 22 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்ட முதல் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதிப்பு இல்லாமல் செயல்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கடலில்சென்று வீணாக கலக்கும் ஆறுகளை அணை கட்டிபாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பி.ஏ.பி., திட்டத்தை செயல்படுத்த அரசை வலியுறுத்தினார். 1976ம் ஆண்டு 2.40 லட்சம் ஏக்கர் பரப்பை 3.55 லட்சம் ஏக்கராக உயர்த்த அப்போதைய அரசு தடை போட திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் வித்யாசாகர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நடத்த 20 லட்சம் ரூபாய் வரை தனது சொந்த பணத்தை செலவிட்டு பாசன விவசாயிகள் பாதிக்காமல் தடுத்தார்.

இவரது மறைவயைடுத்து, உடுமலையில் நேற்றுமாலை வர்த்த நிறுவனங்கள், கடைகள் அடைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சமநிலப்பரப்பில் கடல் மட்டத்தினின்றும் மிகவும் மேடான பகுதியில் இருக்கும் ஊர்களில் எங்கள் கிராமமும்(உடுமலை, அந்தியூர்) ஒன்றாகும். குடிதண்ணீருக்காக சொல்லவொண்ணாத் துயரத்தை அனுபவித்தவர்கள் நாங்கள். அப்படியான நிலையில், முன்னாள் அமைச்சர் ப.குழந்தைவேலு அவர்கள்தான் விசையுந்துகள் மூலம் எங்கள் ஊருக்குத் திருமூர்த்தி மலைக் குடிநீரானது நேரடியாக வீட்டுக்கே வரும் வண்ணம் பேருதவி புரிந்தார். அவரது திட்டத்திற்கு, மேதகு வித்தியாசாகர் அவர்களுடைய திட்டமே அடிப்படையாகும். எங்கள் ஊரின் சார்பாக, அன்னாரது மறைவுக்கு நன்றிப் பெருக்கோடு அஞ்சலியை உரித்தாக்க்குகிறேன்.

10 comments:

Chitra said...

அஞ்சலியும் வணக்கங்களும்!

தாராபுரத்தான் said...

அஞ்சலி...

நசரேயன் said...

அஞ்சலி..

Rathnavel Natarajan said...

Our Heartiest Condolences.

அன்புடன் நான் said...

இது போன்ற நல்ல மனிதருக்கு அஞ்சலி செய்வதில் பெருமைபடுகிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தொலைநோக்குப் பார்வை என்றால் என்ன என்று எங்கள் ஊர் (உடுமலை) பகுதிகளில் செயல்படுத்தப்பட்ட பரம்பிக்குளம் ஆழியார் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அன்னாரிற்கு அஞ்சலிகளும் வணக்கங்களும்.

Unknown said...

அஞ்சலி.

Mahesh said...

அன்னாருக்கு அஞ்சலிகளும் வணக்கங்களும்.....

செந்திலான் said...

அஞ்சலி..!

ஆனா ஒரு விஷயம்

//1976ம் ஆண்டு 2.40 லட்சம் ஏக்கர் பரப்பை 3.55 லட்சம் ஏக்கராக உயர்த்த அப்போதைய அரசு தடை போட திட்டமிட்டது //
இப்படி விரிவாக்கம் செய்ததால பல மோசமான விளைவுகள் ஏற்பட்டது. ஆனா இத நல்லது மாதிரி எழுதி இருக்கீங்க.எப்படினா கொள்ளளவை உயர்த்தாம,பாசனப் பரப்பை மட்டும் அதிகப்படுத்துனுதால முதல் ஆயக்கட்டுதாரர்கள் கடுமையா பாதிக்கப்பட்டாங்க (எங்களதும்தான்) ஒன்றரை வருசத்துக்கு ஒரு முறை வந்த பாசன நீர் இரண்டரை, மூன்று வருசத்துக்கு ஒரு முறைன்னு ஆச்சு. அதுவும் பற்றாக்குறை தண்ணீர் தான் வந்துச்சு எதையும் முழுசா செய்ய முடியாத நிலை உருவாச்சு.
தேவை இல்லாத இடங்களுக்கு தண்ணீர் அனுப்பி வீணடிச்ச வேலையும் நடந்தது (வெள்ளகோயில்)
இதுல எம் ஜி ஆர் கையும் இருக்குது இன்னமும் ஆனைமலையாறு நல்லாறு திட்டங்களை நிறைவேத்துனா ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்னு சொல்றாங்க ஆனா என்ன பண்றது இந்த ஆள்வோர் எப்பவும் சென்னையை சுத்தியே திட்டங்களை போட்டு சென்னை மய்யவாதத்துலேயே இருக்காங்க.

பழமைபேசி said...

@@செந்திலான்

தம்பி, மறுவிரிவாக்கம் அதுக்குப் பின்னாடி பல முறை நடந்துச்சு... அதுலதான் அரசியலோ அரசியல்!!!