2/20/2011

கரும்படிமம்

”என்றா பழனிச்சாமி, ராவோட ராவா ஊரை உட்டே ஓடிப் போன மாடசாமிய நெனச்சு வெசனமாக்கூ?”

“வீணா என்னைச் சீண்டிப் பதம் பாக்காத! போட்டுத் தள்ளிட்டு அந்த வறண்டு கெடக்குற ஊர்க்கிணத்துல வுழுந்து சாகவும் தயங்க மாட்டேன்; சொல்லிப்புட்டேன்!”

ஊர்க்குளத்தின் ஓரத்தில் தனிமையாய் அமர்ந்திருக்கும் பழனிச்சாமி, பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கும் முந்தைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கலானான்.

ஆ.நாகூர்ப் பள்ளியில் பழனிச்சாமியும் மாடசாமியும் வகுப்புத் தோழர்கள் என்பது மட்டுமல்லாமல், ஒரே ஊர்க்காரர்களும் கூட. இவ்விருவரும், வெவ்வேறு சாதிக்காரகள் என்பதையுங் கடந்து நட்பு பாராட்டி வந்தார்கள். வாலிபத்தை அடைந்ததும், பழனிச்சாமி நூற்றாலையில் மேற்பார்வையாளனாக வேலைக்குச் சேர்ந்தான். மாடசாமி, குடும்பத்தாரின் வேளாண்மையில் இணைந்து கொண்டான்.

சாரை சாரையாய் காடு கழனிகளுக்குச் சென்று கொண்டிருந்த ஊர் மக்களின் பற்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான் மாடசாமி.

“ஊருக்கெல்லாம் வெளுத்துப் போடுற குருவனுக்கு, ஊர்க்கெணத்துக்கெட்ட இருக்குற அந்த பொறம்போக்கு நிலத்தைப் பட்டாப் போட்டுக் குடுக்குறதுல இந்தக் கட்டித்தின்னிக்கு என்ன நோகுதாமா?”

”அருக்காணி யாரைச் சொல்ற நீயி?”

“அந்த மயிலாத்தா பையன் மாடசாமியத்தான்!”

“ஆமா கழுதை... அவனுக்கு ஊட்டுச் சோத்தைத் தின்னுபோட்டு ஊர் சோலி பாக்குறதேதான் வேலை. எப்பப் பார்த்தாலும் ஒரே பண்ணாட்டு அவனுக்கு!”

“அதான்... இராயர் தோட்டத்து ஆளுகளுக்கும் அவனுக்குமு நேத்து ஒரே அடிதடியாமாக்கா...”

“அப்பிடியா? அப்புறம் என்னாச்சு சின்னக்கண்ணு?”

“மாடசாமியப் போலிசுல புடிச்சுட்டுப் போய்ட்டாங்களாம்!”

அதே நேரத்தில், ஆறரை மணிச் சங்கு ஊதும் முன்பாக நூற்றாலைக்குள் சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிதிவண்டியை வேகமாய் மிதித்துக் கொண்டிருந்தான் பழனிச்சாமி. பின்னிருக்கையில், அதே ஆலையில் வேலைபார்க்கும் ஐ.என்.டி.யு.சி சின்னசாமி.

“ஏண்டா பழனி, எதுக்குடா மாடசாமிக்கு இந்த வேண்டாத வேலை? இப்ப எதுக்கு அவன் இராயர் தோட்டத்துக்காரவங்களோட கட்டுல வுழுறான் அவன்?”

”ஊர்க்காரங்க திட்டுற மாதரயே நீயும் அவனைத் தப்பாவே நெனைக்கிற பாத்தியா?”

“பின்ன, அவஞ்செய்யுறது செரியாடா? என்றா ஒழுக்க நாயம் பேசற??”

“அவன் என்னத்தச் சொல்லிட்டான்? ஊர்க்கிணத்தடியில இருக்குற நிலத்துக்குப் பதுலா, புள்ளார் கோயலுக்குப் பின்னாடி இருக்குற நெலத்தைச் சின்னானுக்குப் பட்டா போட்டுக் குடுத்துறலாம்ங்றான். அதுல என்ன தப்பு? ஊர்க்கிணத்துக்கும் இராயர் தோட்டத்துக்கும் எதோ தொடுப்பு இருக்குன்னு யோசிக்கிறான் அவன். நம்மூர்ல இருக்குற படிச்சவங்கள்ல அவனும் ஒருத்தன். அதை நாம யோசிக்க வேண்டாமா?”

”போடா... கோயிலுக்குப் பின்னாடி துணி வெளுக்குறவனுக்கு குடிசை போடச் சொல்லி யாராவது நெலத்தைக் குடுப்பாங்களாடா?”

“குடுத்தாத்தான் என்னங்றேன்?”

“இராயர்தோட்டத்து மணியன் சொல்றது தப்பா அப்ப? அதைவுடு... இவன் எதுக்கு அவங்க ஆளுகளை கைநீட்டி அடிச்சான்?”

“ஏண்டா, ஊர்க்காரங்களை ஒன்னு சேத்திட்டு வந்து அவனைக் கண்டபடி ஏசுவீங்க? திட்டுவீங்க?? அவங்கையுங்காலும் பூப்பறிச்சுட்டு இருக்குமாக்கூ?”

ஊர் முழுமைக்கும் ஒன்று சேர்ந்து கொண்டு, மாடசாமியையும் அவனது குடும்பத்தையும் தள்ளி வைக்கிறது. இராயர் தோட்டத்து மணியனுக்கு ஆளுங்கட்சியில் செல்வாக்கு. மாடசாமிக்கு உள்ளூர் இளைஞர்கள் ஒருசிலரின் ஆதரவு.

மறுநாள் காலையில், உள்ளூரில் இருக்கும் மற்றொரு விவசாயி ஒருவரின் வீட்டில் திருமணம். ஊர்க்காரர்கள் மட்டுமல்லாது, பக்கத்துக் கிராமத்தினரும் திருமணத்திற்கு வருவார்கள். வருவோர் அனைவரும், மாடசாமி எங்கே எனக் கேட்பார்களே? என்ன சொல்வது. மாடசாமியின் தந்தையாருக்கு மிகுந்த கவலை மற்றும் துயரம். மானப்பிரச்சினையாகப் பார்க்கிறார் மாடசாமியின் தகப்பனார்.

நல்லாம்பள்ளிச் ஜமீனிடம் ஓடுகிறார். கதறுகிறார். இவரிடம் இருக்கும் நிலபுலன்களில் சில கைமாறுகிறது. பிணையில் விடுதலையான் மாடசாமி ஊருக்குள் வர, எதிரணியினர் ஏமாற்றத்தில் சோர்ந்து போகிறார்கள்.

திருமண வீட்டில் வைத்து இணக்கம் பேசுகிறார் நல்லாம்பள்ளிச் ஜமீன் அவர்கள். மாடசாமி சொல்கிறார்,

“இத பாருங் மாமா. அவிங்க திட்டமென்னன்னு எனக்கு நெம்ப நல்லாத் தெரியும். சின்னானுக்கு அந்த நெலத்தைப் பட்டாப் போடணும். கொஞ்ச நாளைக்கு அப்புறம், அவங்கிட்ட இருந்து நெலத்தை வாங்கி கெணறு வெட்டித் தண்ணிய இராயர் தோட்டத்துக்கு கொண்டு போகோணும். ஊர்ச் சனங்களுக்குத் தண்ணி இல்லாமப் போகோணும்; அது மட்டும் இந்த மாடசாமி உசுரோட இருக்குற வரைக்கும் நடக்கவே நடக்காது!”

இணக்கப் பேச்சுகள் முறிகிறது; கூடவே கைகலப்பும் அக்கப்போர்களும் மூளுகிறது. மாடசாமியின் பிணையும் ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு வர, மாடசாமியின் குடும்பத்தார் நிலைகுலைந்து போனார்கள். ஊராரின் ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் அஞ்சி, ஊருக்குள் வருவதையே தவிர்த்து, காடுகழனிகளில் தஞ்சம் புகுந்தார்கள் மாடசாமி குடும்பத்தார்.

நாட்கள் செல்லச் செல்ல, மாடசாமியின் குடும்பத்தில் பூசல்கள் அதிகரித்து, சகோதரர்கள் அனைவரும் மாடசாமியை விட்டுப் பிரிந்தார்கள். என்றாலும், மாடசாமியின் தகப்பனார் தொடர்ந்து வழக்கை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார். தன்மகன் குற்றமற்றவன் என்பதைக் கடுமையாக நம்பினார் அவர்.

இடைப்பட்ட காலத்தில், சின்னானுக்கு ஊரடி நிலம் பட்டாப் போட்டுக் கொடுக்கப்பட்டது. பழனிச்சாமி மட்டும், தன் நண்பன் மாடசாமியை இன்னும் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தான். அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை.

மாடசாமி சொல்லியதைப் போலவே, ஊர்க்கிணற்றை ஒட்டியே ம்ற்றொரு கிணறும் வெட்டப்பட்டது. ஊர்க் கிணற்றைவிடவும் முப்பது அடிகள் அதிகமாகவே தோண்டப்பட்டது. ஊர்க்காரர்கள், குறிப்பாக, ஏழை எளிய மக்கள் குடிதண்ணீர் இன்றி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் வழக்கு பல நீதிமன்றங்களைக் கண்டது. மோகன் குமாரமங்கலம், வானமாமலை எனப் பெரிய அளவிலான வழக்கறிஞர்கள் எதிரெதிர் அணியில் வாதிட்டார்கள். குடி மூழ்கிய தருவாயில், மாடசாமிக்கு விடுதலை கிடைக்கிறது.

ஊர்க்குளத்தில் அமர்ந்திருந்த பழனிச்சாமி, இருபது ஆண்டுகால நினைவுளில் இருந்து விடுபட்டு நடப்புக்குத் திரும்பலானான். ”எப்பேர்ப்பட்ட மனுசன் அவன்? அவஞ்சொல்ப் பேச்சைக் கேட்டிருந்தா, இன்னைக்கு இவ்வளவு தண்ணிப் பஞ்சம் வந்துருக்குமாடா??”

“ஆமாடா... ஆமா, மாடசாமி இப்ப எங்க குடியிருக்கான்?”

“எங்கியோ, வடக்க போயி யாவாரம் செஞ்சி பொழச்சிட்டு இருக்கான். பதினாறு வள்ளந் தோட்டங்காட்டை எல்லாம் கேசு நடத்துறதுலயே தொலைச்சிப் போட்டு, இன்னிக்குப் பஞ்சம் பொழைக்கிறதுக்காக எங்கியோ போய் இருக்குறான். ஆனாலும், போன எடத்துல நெம்ப கவுரதையா இருக்கான்...”, பெருமூச்சு விட்டுக் கொண்டான் பழனிச்சாமி.

காலதேவனின் சுழற்சியில், மாமாங்கம் மூன்று கழிந்து விட்டிருந்தது. மாடசாமிக்கு மூன்று மகன்கள். அவரவர், அவரவர் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். மூவரில், இருவர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். மூத்தவன் மட்டும் பெற்றோரைக் கவனித்துக் கொண்டு கோயம்பத்தூரில் வாழ்கிறான்.

தன் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு, பெற்ற மகன்களின் உதவியினால் தம்மூதாதையர் வாழ்ந்த வீடு மற்றும் ஒரு சில நிலபுலன்களை மீட்ட மகிழ்ச்சியில், தன் இறுதிக் காலத்தை மனநிறைவோடு கழித்துக் கொண்டிருக்கிறார் மாடசாமி.

பெற்ற மக்களில், அந்த இளையவனுக்கு மட்டும் மாடசாமியின் தாக்கம் சிறிது உண்டு. தமிழ், தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் அவ்வப்போது அவன் அலைபாய்வதும் உண்டு. அன்றும் அப்படித்தான், அவன் தன் நண்பர்களோடு அளவளாவிக்கொண்டு இருந்தான்.

“ஏண்டா, நீயெல்லாம் படிச்சவனா? நாட்டுல எவ்வளவு அக்குரமம் நடக்குது? அதையெல்லாம் கண்டுக்க மாட்டியா??இப்படி அச்சுறுத்தலுக்கு அஞ்சி அஞ்சிப் பொழைக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா??”, இவனை இவனது நண்பன் வினவினான்.

“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

19 comments:

Anonymous said...

//கட்டித்தின்னி// என்ங்ண்ணா மீனீங்கு?

vasu balaji said...

//“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”//

அதான:(

ஓலை said...

புனைவுன்னு நம்ப முடியல. பெரிய தலைவர்கள் பெயர் காட்டிக் கொடுத்திருச்சு.

அருமையான கதை. இந்த மாதிரி கிராமத் தொடர்போடு வாழணும்னு இருக்கு. நல்ல மனசோடு ஒட்டியிருக்கிற கதையா அமைந்திருக்கு. நல்லா இருக்கு பழமை.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு/கதை/நிகழ்வு.
படித்தவுடன் மனசு நெகிழ்கிறது.
வாழ்த்துக்கள்.

குறும்பன் said...

////கட்டித்தின்னி// என்ங்ண்ணா மீனீங்கு?// பெண்கள் பேசும் வசவுச்சொல் ஆனா பொருள் மறந்துவிட்டது. பழமையார் மனசு வைக்கனும்.

புனைவு மாதிரியே இல்லை. உண்மை கதை போல் உள்ளது. வாழ்த்துகள்.

Mahi_Granny said...

நிச்சயமா இது புனைவு இல்லை .

பழமைபேசி said...

//குறும்பன் said...
////கட்டித்தின்னி// என்ங்ண்ணா மீனீங்கு?// பெண்கள் பேசும் வசவுச்சொல் ஆனா பொருள் மறந்துவிட்டது. பழமையார் மனசு வைக்கனும்.
//

ஆமாங்க.... காடு, வழிகள்ல போகும் போது, வரும் போது பெண்கள் பாவிக்கும் சொல்தான் இது...

வேண்டாததைக் கட்டியாகத் தின்னுபவன்ங்ற மாதிரி.... ஒரு சிலதை எல்லாம் லேசுபாசா விட்றனும்... அதுக்கெல்லாம் மனசு வையுங்கன்னா, இப்படித்தான் ஆகும்... இஃகிஃகி!!

ஈரோடு கதிர் said...

//ஆ.நாகூர்\\
குடிமங்களம் - பொள்ளாச்சி ரோட்ல இருக்கிற A.நாகூரா?

பழமைபேசி said...

@@ஈரோடு கதிர்

ஆமாங்க மாப்பு... கிருஷ்ணசாமிக் கவுண்டர்கிட்ட பிரம்படி வாங்கினது ஞாவகத்துக்கு வருதுங்ளாக்கூ??

சீமாச்சு.. said...

“ஏண்டா, நீயெல்லாம் படிச்சவனா? நாட்டுல எவ்வளவு அக்குரமம் நடக்குது? அதையெல்லாம் கண்டுக்க மாட்டியா??இப்படி அச்சுறுத்தலுக்கு அஞ்சி அஞ்சிப் பொழைக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா??”

== ஐயா கேட்டது நான் தானுங்கோ.. வூட்டுக்குப் போயி..விரிவா பதில் எழுதி இப்படி முடிச்சதுக்கு நன்னிங்கோ !!

“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”

பழமைபேசி said...

@@Seemachu

அய்யோ, அண்ணே... அது ஒரு புனைவுங்க... அதை அப்படியே பொருள் கொள்ளக் கூடாது நீங்க!!

வருண் said...

***“போடாங்... எங்கப்பன் மாதர, நான் என்ன ஒரு இளிச்சவாயனா??”

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!***

மணியண்ணா!

இது கண்ணுக்குட்டிதானே? இன்னும் சூடு வாங்கலையே! :)

Naanjil Peter said...

"கரும்படிமம்" என்றால் பொருள் என்ன?
அருமையான புனைவு. ஊர்களில் நடப்பதுபோலவே உள்ளது.
அன்புடன் அண்ணன்
நாஞ்சில் இ. பீற்றர்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. புரியுது..

பழமைபேசி said...

@@naanjil said...
"கரும்படிமம்" என்றால் பொருள் என்ன?

அண்ணா, கருமை நிறத்தினாலான சாயல்.... ஏதோவொன்றின் பின்னணியானது, சோகம் அல்லது விரும்பத்தகாதது எனும் பாங்கில் இட்ட தலைப்பு!!

செந்திலான் said...

அதாவது என்ன சொல்றீங்க்னா ஊருக்கு பாடுபடறவன் இளிச்சவாயன் நெம்ப சரி. மக்களுக்குப் பாடுபடறவன் மண்டை பிளந்து சாவதும் "தம்" மக்களுக்கு பாடுபடுபவன் தலைவனாக இருக்கும் சமூகத்தில் இந்த மாதிரி தான் இருக்கும் என்ன நாஞ் சொல்றது.

அப்பாதுரை said...

'பஞ்சம் பொழைக்கிறதுக்காக எங்கியோ போய்'.. சுருக்குனு தைக்குதுங்கோ.

உள்ளூர் வழக்கை மறக்காமல் நினைவு வைச்சு எழுதுறீங்களே? வியப்பா இருக்கு. ரசித்துப் படித்தேன்.

LinuxAddict said...

"ஒரு சிலதை எல்லாம் லேசுபாசா விட்றனும்.."

Appidi ellam uda mudiyadhu kannu..

Katti Thinni = Kattunavala(Wife) Thinnavane

பழமைபேசி said...

@@LinuxAddict

அருமைங்கோ!!நன்றிங்கோ!!