2/25/2025

சொல்வளமே எழுத்துடைத்து

 

[மின்காந்தள் இதழுக்காக எழுதப்பட்டு வெளியாகிய கட்டுரை]

சொல்வளமே எழுத்துடைத்து

பழமைபேசி 

’வேழமுடைத்து மலைநாடு, மேதக்கசோழவளநாடு சோறுடைத்து, பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து’ என சங்ககாலப் புலவர் ஒளவையாரால் தொண்டைமண்டல சதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. யானைகளைக் கொண்டது மலைநாடாகிய சேரநாடு, சோழநாடு சோறு படைக்கக் கூடிய நெல்வயல்கள் கொண்டது, முத்து எடுக்கக்கூடிய கடல்வளம் கூடியது தென்னாடு. அதைப்போலத்தான், எண்ணங்களை, செய்திகளையெல்லாம், எவ்விதமான சிதைவு, பொருள்மயக்கம் இல்லாமல் அந்தந்த உணர்வுகளை அப்படியப்படியே கொண்டு செல்லக் கூடிய எழுத்தென்பது, உகந்த சொல்வளத்தைக் கொண்டதாகவே இருக்கும்.

’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கின்றார் அய்யன் திருவள்ளுவர். எண்ணமும், எண்ணத்தை வெளிப்படுத்தவல்ல எழுத்துமே நம் இரு கண்களைப் போன்றவை. எண்ணங்கள் நல்ல எழுத்தாக இருந்திட வேண்டுமானால், சொல்வளம் உடைத்தாக வேண்டும்.

சொல்வளம் என்றவுடனே, நிறையச் சொற்களை நாம் அறிந்து வைத்திருப்பதும், எண்ணிக்கையில் மிகுதியாகப் பயன்படுத்துவதுமென்றெல்லாம் நினைத்து விடலாகாது. பொருளுக்கும் நோக்கத்திற்கும் நடைப்பாங்கிற்கும் விழுமியத்தைக் கூட்டுவதான சொற்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதுதான் சொல்வளம்!

அறிவியல், சட்டம், அறிவிக்கை முதலானவற்றில், நேரிடையான பொருளைச் சட்டென விளங்கும்படியாக (denotative / referential), எளிமையான சொற்களைக் கொண்டு, எவ்வித உணர்வுகளுக்கும் இடங்கொடாமல், ஐயம் திரிபறச் சொல்வது நல்ல எழுத்தின் ஒரு அடையாளமாகும். உணர்வூட்டும்படியாக அழகூட்டியும், கற்பனைவளத்தை விவரிக்கும்படியாகவும், வாழ்வியலின் பல்வேறு கணங்களைப் புரியவைக்கும்படிச் சொல்லும் இலக்கியநடை (Emotive) என்பது நல்ல எழுத்தின் மற்றுமொரு தன்மையாகும். இவ்விரு பண்புகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது சொல்வளம்.

மேற்கூறப்பட்ட இருதன்மைகளுக்குமான இலக்குகள் வேறுவேறாக இருக்கலாம்; அறிவுபுலப்படுதல் (sense), உணர்வுபுலப்படல் (feeling), தொனியின் வாயிலாகக் குறிப்பறிவித்தல் (tone), விருப்பம் அல்லது நோக்கத்தை (intention) நிறைவேற்றுகை என்பனவாக. இலக்கு எதுவாக இருப்பினும், சொற்களையும் அவற்றைக் கையாளும் பாங்குகளையும்(style) சரியாகக் கையாளும் திறனே நல்ல எழுத்து என்றாகின்றது. இதனைத்தான் சொல்வளம், ’சொல்வளமே (நல்ல) எழுத்துடைத்து’ என்கின்றோம்.

சொல்லறிதல் மேம்பட வேண்டுமென்றால் அகராதிகளைப் புரட்டலாம். அகராதிகளைப் புரட்டி அவற்றை நினைவிலேற்றியதும் நல்ல எழுத்தென்பது கைகூடிவிடுமாயென்றால் அதுவும் இல்லை. கையாளும் திறனைக் கற்றாக வேண்டும், மேம்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் நாம் நம் மொழிக்குச் சிறப்புச் சேர்க்க முடியும். எழுத்துத்திறனை வலுப்படுத்திக் கொள்ள முடியும். என்ன செய்யலாம்? நூல்களை வாசித்தாக வேண்டும். அது ஒன்று மட்டுமே எழுத்தை உயிரோடு வைத்திருக்கும். அதிலும், நம் தாய்மொழியாம் தமிழுக்கு சிறப்புத் தனித்தன்மை ஒன்று உண்டு. தமிழின் ஆயுள் அதன் வேர்ச்சொற்களைக் கையாளும் முறை. அஃதாவது, ஒரு வேர்ச்சொல்லைக் கொண்டு ஓராயிரம் சொற்களைக் கூட ஒருவரால் தேவைக்கேற்றபடி வளர்த்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, நீர், நீர்மம், நீருண்டி, நீராரும், நீராவி என்றெல்லாம், நீர் எனும் சொல் தேவைக்கொப்ப நீண்டுகொண்டே போகும்.

திருக்குறள் என்பது குறைவான சொற்களைக் கொண்டு, ஈரடியில், அகண்டு விரிந்ததொரு பொருளை வெளிப்படுத்துமுகமாக, அற்புதமான கலையுணர்வைக் கொண்டு அமைக்கப்பட்ட, தமிழின் தனிப்பெரும் சொத்தென்பது நாமனைவரும் அறிந்தவொன்று. அப்படியாகப்பட்ட திருக்குறளில், பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் வெவ்வேறு தறுவாயில்(context) கையாளப்பட்டுள்ளன. திருவள்ளுவத்தை ஊன்றிப் படித்தோமேயானால் சொல்வளமும் கைகூடிவருமென்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஏனென்றால், அறிவுபுலப்படுதல் (sense), உணர்வுபுலப்படல் (feeling), தொனியின் வாயிலாகக் குறிப்பறிவித்தல் (tone), விருப்பம் அல்லது நோக்கத்தை (intention) நிறைவேற்றுகை என்பன யாவும் கைக்கொள்ளப்பட்டுத்தான் அமைந்திருக்கின்றது, ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரிக்கப்பட்டிருக்கின்ற திருக்குறள்.

செய்யுளினின்று வெளிவந்து உரைநடையில் கவனம் செலுத்த முற்படுவோமேயானால், எத்தனை எத்தனையோ நாவல்களும், சிறுகதைகளும், புதுக்கவிதைகளுமென நவீன இலக்கியப் படைப்புகள் நமக்கு வாய்த்திருக்கின்றன. ஒவ்வொருவரது அனுபவமும் ஆளுக்காள் மாறுபடும். நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்கெல்லாம் எங்கள் காலத்தில் அமைந்தது மேலாண்மைப் பொன்னுசாமி, கி. ராஜ்நாராயணன், கு. அழகிரிசாமி, நாஞ்சில் நாடன் போன்ற சமகாலத்து இலக்கிய ஆளுமைகள்தாம். அவர்களது படைப்புகளை, துவக்கநிலை வாசகர்களாக வாசிக்கத் துவங்கிய அதே காலத்தில் பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கத் தலைப்பட்ட போது தெரிய வந்தவர்கள், நாகம்மாள் எழுதிய ஆர். சண்முகசுந்தரம், செல்லம்மாள் எழுதிய புதுமைப்பித்தன் போன்ற முந்தைய தலைமுறை எழுத்தாளர்களும், அப்போதுதான் தோன்றிய இந்தியா டுடே தமிழ் பதிப்பின் வாயிலாக அறிய நேரிட்ட க.சீ. சிவகுமார் உள்ளிட்ட புது எழுத்தாளர்களும்.

வாசித்தலென்பது நாடலுக்கும் தேடலுக்கும் வித்திட வேண்டும். விளம்பரங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுவனவற்றை வாங்கிப் படிக்கும் பழக்கமெல்லாம் அண்மைக்காலத்திய போக்கென்றே கருத வேண்டும். இலக்கிய வாசிப்பென்பதே விமர்சனக்கூட்டங்கள் வாயிலாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. சில தட்டெச்சுப் பிழைகளுகளுக்காக ஒட்டுமொத்த நூல்களையே கொளுத்திப் போட்டுவிட்டு, மறுபதிப்புக் கண்டு, பொருளியலில் தோற்றோர் பலவுண்டு.  அச்சுப்பிழைகளைப் பார்த்துச் சரிசெய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்த ஒருவர்தாம், நாட்டின் உயரிய விருதுக்குச் சொந்தக்காரராக ஆன வரலாறு நம் வரலாறு. ஆமாம், ஜெயகாந்தன் அவர்கள் ‘ப்ரூஃப்ரீடர்’, உதவி ஆசியர் என இருந்து எழுத்தைத் தனதாக்கிக் கொண்டவர். அப்படியெல்லாம் தேடலும் நாடலும் வேட்கையும் இருக்கின்ற நிலையில், எவருக்கும் எழுத்தென்பது வாய்த்தே தீரும். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடைய சிறுகதை, ‘பிழை திருத்துபவரின் மனைவி” என்ற கதை, வாசிக்க வாசிக்க நம் எண்ணங்களை விரித்துக் கொண்டே போகும். அந்த அளவுக்கு, சொற்களின் மீது கடமையுடையவர்களாகவும் நெறிகொண்டவர்களாகவும் இருந்த மரபு நம் தமிழ் மரபு.

எண்ணிப்பாருங்கள். சங்ககாலத்துப் படைப்புகள் நமக்கு உள்ளன. எப்படி நாம் வாய்க்கப் பெற்றோம்? நம் முன்னோர், ஓலைகளிலே, கடும் துன்பங்களுக்கிடையே எழுதி வைக்க, அவற்றைத் தலைமுறை தலைமுறையாகப் பிழையற்றுப் படி எடுத்து வைக்க, அல்லாவிடில் ஓலைகள் நைந்து போய்விடுமல்லவா, அப்படியெல்லாம் எழுதி எழுதித்தான் அவையெல்லாம் நமக்கு வாய்த்திருக்கின்றது. ஆக, வாசித்தலும் எழுதப்பயில்தலுமே கட்டமைக்கும், “சொல்வளமே எழுத்துடைத்து”.

 

2/24/2025

நின்று வென்ற தமிழ்

 

[வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், உலக தாய்மொழி நாள் கூட்டத்தில் ஆற்றிய உரை]

நின்று வென்ற தமிழ்

அழகிய அன்னைத்தமிழுக்கு முதல் வணக்கம். அவையோருக்கு சிறப்பு வணக்கம். இப்பூமியில், இவ்வையகத்தில், இப்பிரபஞ்சத்தில் எத்தனை மொழிகள் இருந்தன? மாந்தனின் அறிவெல்லைக்கு எட்டியவரையில், , மனித வரலாற்றில், ஏறத்தாழ முப்பத்தி ஓராயிரம் மொழிகள் இருந்ததாக நம்பப்படுகின்றது.  அவற்றுள், இன்று இருப்பது எத்தனை? ஏழாயிரத்திச் சொச்சம் மொழிகள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஏன், மற்றவையெல்லாம், என்ன ஆயிற்று? அழிந்து போயின, வழக்கொழிந்து போயின.  அழிந்து போனது அந்த மொழிகள் மட்டும்தானா? இல்லை, அந்த மொழிகளுக்குப் பின்னாலான வரலாறுகள் அழிந்து போயின. அந்தந்த மொழிகளில் பதியப்பட்டிருந்த, பல்வேறு பற்றியங்கள் அழிந்து போயின. அந்தந்த இனங்கள் காணாமற்போயிற்று. அவற்றைச் சார்ந்தவர்களின் மரபுத்தொடர் அறுந்து போயிற்று என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியது.

இருக்கின்ற இந்த ஏழாயிரத்தி சொச்ச மொழிகளில், தோராயமாக, 90 விழுக்காட்டு மொழிகள், வெறும் ஒரு இலட்சம் பேர் மட்டுமே பேசும் மொழிகளாகத் தற்போது இருக்கின்றன. பதினைந்து நாளுக்கு ஒரு மொழி என, இந்த மொழிகளும் படிப்படியாக அழிந்து வருகின்றன.  இமயமலை அடிவாரங்களில் எத்தனையோ பழங்குடியினங்களும் மொழிகளும் இருந்தன. அவையெல்லாம் காணாமல் போய்விட்டன.  மலேசியாவில் இருக்கின்ற மொத்தம் 136 மொழிகளுள் 81% மொழிகள், இந்தோனேசியாவில் இருக்கின்ற 707 மொழிகளுள் 50% மொழிகள், வர இருக்கின்ற ஒரு சில ஆண்டுகளில் அழிந்துவிடப் போகின்றன. என்ன காரணம்? நகரமயமாக்கலும் உலகமயமாக்கலும் காரணம்.

இருக்கின்ற இந்த ஏழாயிரத்தி சொச்ச மொழிகளில், எத்தனை மொழிகளுக்கு, தனக்கான, தனித்துவமான எழுத்துகள் இருக்கின்றன? 160இக்கும் குறைவான மொழிகளே தனக்கான தனி எழுத்துருக்களைக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக,  உலகமொழி எனச் சொல்லப்படுகின்ற ஆங்கிலத்தின் எழுத்து, பண்டைய இலத்தீன் அல்லது உரோமானிய எழுத்துரு. ஆனால் நம் தமிழுக்கு? தனி எழுத்து. “ழ்சொல்லும் போது, நெஞ்சமெல்லாம் நிறைந்து பொங்குகின்றதா இல்லையா? தமிழ்!

அவனியில், தனக்கான இலக்கியம், இலக்கணம், நெடிய வரலாற்றுத்தொன்மை கொண்ட மொழிகள் எத்தனை? ஆறுமொழிகள். கிரேக்கம், இலத்தீனம், இப்ரூ, சமசுகிருதம், சீனம், அடுத்தது? தமிழ். நம் தமிழ். இவற்றுள், காலப்போக்கில், கிரேக்கம், இலத்தீனம், இப்ரூ, சமசுகிருதம் ஆகியவை வழக்கொழிந்து போயின. உயிர்ப்போடு இருப்பது சீனமும் தமிழும் என்று சொல்கின்றார்கள். ஆனால்? ஆனால் அதுவும் உண்மையில்லை. பண்டைய சீனமும் சிதைந்து போனது. சிதைவுகளின் எச்சங்கள்தாம் மாண்டரினும் காண்ட்டனீசும். இன்று சீனத்தின் பெருமொழியாக இருப்பது மேண்டரின். அதன் வயது 800 ஆண்டுகள்தாம். எனவேதான் சொல்லிக் கொள்கின்றோம், நமது  தமிழ், நின்று வென்ற தமிழ்!

அன்பு மக்களே, இதனை எப்படி ஈட்டிக்கொள்ள முடிந்தது? செந்தமிழ்ச் செம்மொழி, எப்படி நிலைபெற்றது? மரபு அறுபடாமல், வழிவழியாய்க் காத்து நின்ற அடலேறுகள் யார்? காத்துச் சிவந்த செம்மல்கள் யார்? அப்படி என்னவெல்லாம் செய்தார்கள்?

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகையை ,எப்படி நமக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்?  திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், பத்துப்பாட்டு நூல்கள், நமக்குக் கிடைத்தது எப்படி? பொய்யாமொழி, உலகப்பொதுமறை, தமிழனின் அடையாளம் எனப்படுகின்ற திருக்குறள் நமக்குச் சொத்தாய் இருப்பது எப்படி?

எண்ணிப்பாருங்கள் தோழர்களே. ஆயிரமாயிரம் ஆண்டுகள். எத்தனை எத்தனை இயற்கைப் பேரிடர்கள் வந்திருக்கக் கூடும்? எத்தனை எத்தனை அந்நியப் படையெடுப்புகள் ஆட்கொண்டிருந்திருக்க வேண்டும்? எத்தனை எத்தனை பஞ்சங்கள் வந்து போயிருக்கும்? எத்தனை எத்தனை தமிழ்மக்கள் மாண்டு போயிருப்பர்? அத்தனைக்கும் இடையில் தப்பி, தென்னாட்டு மொழியாய் நிலைபெற்று, இன்று உலகமெலாம் வளைய வந்து கொண்டிருக்கின்றது  தமிழ். எப்படி, நின்று வென்றது?

மொழிக்கென இலக்கணம் படைத்தான். மொழிக்கென அறிநெறி கொண்டான். அத்தனைக்கும் மேற்பட்டு, உழைப்பைக் கொடுத்தான். தன்னுடைய இன்னுயிரைக் கொடுத்தான். படிப்பறியாப் பாமரன்கூட, இப்படித்தான் பேசவேண்டுமெனக் கருதினான். அது அவன் கொண்ட இலக்கணம். தமிழுக்கு இப்படியெல்லாம் செய்யவேண்டுமெனக் கருதினான்.  அது அவனது அறநெறி. கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், வாய்மொழிப் பதிவுகள் என அறநெறியினூடாக மொழியைக் கடத்தினான் தமிழன். அடுத்ததாக, உழைப்பைக் கொடுத்தான். எடுத்துக்காட்டாக, ஆங்காங்கே நடத்தப்பட்ட படிவிழாக்களைச் சொல்லலாம்.

ஆமாம் நண்பர்களே. ஓலைச்சுவடிகள் எழுதுவதில் உள்ள சிக்கல்களை எண்ணிப்பாருங்கள். தரம்மிக்க ஓலைகளாக இருக்க வேண்டும். அவற்றில் எழுத்தாணி கொண்டு, எழுதும் முறையைக் கற்றுப் பயின்று இருந்திருக்க வேண்டும். இத்தனைக்கும் மேற்பட்டு, நாட்படும் போது, அவையெல்லாம் நைந்து போகும்தானே? மறுபதிப்புச் செய்வதற்கான உழைப்பினை ஈந்து இருக்க வேண்டும். அப்படியாக, ஒரு ஓலையிலிருந்து மறுபதிப்பாக, படி எடுப்பதுதான் படிவிழா.

தமிழ்ப்பெருநிலத்தில் பல்வேறு குறுநாடுகள், சிறுநாடுகள். இவன் நாடு நாடாகச் சென்று, ஊர்களிலே தங்கி இருந்து, ஆங்காங்கே இருக்கின்ற தமிழ்மாடங்களில் இருக்கின்ற ஓலைகளுக்கெல்லாம் படி எடுத்துப் படி எடுத்துத்தான் நமக்குக் கொடுத்துப் போயிருக்கின்றான் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் எல்லாமும். அதுதான் உழைப்பு. காலங்காலமாக கொடுத்துச் செல்லப்பட்ட அந்த உழைப்பினை நாம் நினைவுகூர வேண்டாமா?

அந்நியப் படையெடுப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, எத்தனை எத்தனை பேர் மாண்டனரோ? உயிரைக் கொடுத்து மண்ணைக் காத்திருப்பான். மண் இருக்கும் போது  மண்ணுக்கான மனிதனும் இருக்கின்றான். அந்த மனிதன் இருக்கும் போது, அந்த மனிதனின் மொழியும் நிலைபெறுகின்றது. அந்த மாமனிதர்களை நாம் நினைவுகூர வேண்டாமா? எண்ணிப்பாருங்கள் தோழர்களே.

நான் சொல்லப் போவதை அரசியல் நெடியோடு யாரும் பார்க்க வேண்டாம். ஒரு அனுபவப் பகிர்வாக மட்டுமே பார்க்குமாறு, அன்போடு வேண்டுகின்றேன். இளம்பருவம். கிராமத்து ஊர்வழிகளில், இட்டேரிகளில், பிறவடைகளில் விளையாடிக் கொண்டிருப்போம்.  ஏதோவொரு திசையிலிருந்து ஒலிபெருக்கி ஓசை. ஓடோடிப் போவோம். அரசியல் மேடை.  ஏதோவொரு நிகழ்ச்சி.

எங்கள் ஊரைச் சார்ந்த செந்தோட்டம் எஸ்.கே.இராஜூ, அவர் தலைமைக்கழகப் பேச்சாளரும் கூட, பெதப்பம்பட்டியைச் சார்ந்த தளவாய் நாகராஜன் ஒன்றியச் செயலாளர், திருப்பூர் மணிமாறன் மாவட்டச் செயலாளர், சிறப்புப் பேச்சாளராக நகைமுகன் என்பதாகக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும். எதிர்க்கட்சித் தலைவரைச் சாடுவார்கள்.  அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஆத்திர கோத்தர மசால் ஏத்திர வயித்துக் கஞ்சிக்கு நீ ஓட விட்றஎன்றெல்லாம் அடுக்கு மொழியில் நெக்குருகப் பேசுவார்கள். நமக்கும் அது போலவே, விலாபுடைக்கப் பேச வேண்டும் போல இருக்கும்.

அடுத்தவாரமே அதே இடத்தில் போட்டிக் கூட்டம் நடக்கும். அதே ஊரைச் சார்ந்த அரங்கநாதன், பெதப்பம்பட்டி தூயமணி என்போரெல்லாம் ஊருக்குள்ளே வந்து ஊர்வலம் போவார்கள். ”தந்தை பெரியார் ஈவெராவும், பேரறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞர் மு..வும், பேராசிரியர் பெருந்தகையும், ஊட்டி வளர்த்த தமிழுணர்வு, தீயாய் எரியுது கொண்டுணருஎன முழக்கமிடுவார்கள். எஞ்சோட்டுப் பையன்களுக்கெல்லாம் உடல் தகதகவெனக் கொழுந்துவிட்டு எரியும். இப்படித்தான் எங்கள் ஊரில் தமிழ் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

கூட்டங்களிலே அடிக்கடி சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசுவார்கள். வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம், குரவையாடல் என அடுக்கடுக்காய் வர்ணிப்பார்கள். வந்திருப்போரைக் குதூகலப்படுத்தும் பொருட்டு, மங்கையர் அழகை இலக்கியச் சுவையோடு விவரணை செய்வார்கள்.  மயிரழகை, முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்றெல்லாம் சொல்லிப் பேசும் போது, தீந்தமிழ்ச்சொற்கள் தென்றலாய் வளைய வந்தன. நமக்கும் ஆவல் பிறக்கும்.

வாகைத்தொழுவு வேலூர்த் தலைவாசலில் அரசமரம் வேம்புமரம் பிணைந்த மேடை ஒன்று உண்டு. அதுதான் எங்களுக்கான பேச்சுமேடை. பேச்சு வராத நேரத்தில் ஒருவன் வந்து கழுத்துநரம்பு புடைக்க, “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்றவரைக் கூத்தாட்டு, வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனேஎன்று சொல்வான். அவனுக்குப் போட்டியாக, நாம், “உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே”. இதைப் பார்த்த இன்னொருத்தன் அந்த மேடையேறி, அவன் பங்குக்கு, “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”, இப்படி நாளொரு விளையாட்டும் பொழுதொரு பாட்டும் பேச்சுமாய்க் கழியும்.

எதற்காக நாம் இதையெல்லாம் பேச வேண்டி இருக்கின்றது? இப்படியெல்லாம்தான் தமிழ்மொழியானது, தம் பயணத்தில் திளைத்துத் திளைத்து நம்மிடையே குடி கொண்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. இது மட்டும்தானா என்றால் இல்லை. எங்கள் ஊர்ப்புறத்தில், நிறைய முருகன் கோவில்களும் சிவன் கோவில்களும் உண்டு. செஞ்சேரிமலை முருகன், பூரண்டாம்பாளையம் சிவன் கோவில் எனப் பலப்பல. அங்கெல்லாம் தமிழ் தாண்டவம் ஆடும்.  நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்கயென காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

இந்த இடத்தில், அண்ணன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் பேச்சினை இரவல் வாங்கிக் கொள்கின்றேன். “தமிழை, எவனாலும் அழிக்க முடியாது. ஆமாம், எவனாலும் தமிழை அழிக்க முடியாது!”. தமிழரைத் தவிர. ஆம், நாம் எப்போது தமிழைப் பயன்படுத்தத் தவறுகின்றோமோ, எப்போது சிதைக்கத் தலைப்படுகின்றோமோ, எப்போது அதன் மீதான அக்கறையைத் தொலைக்கிறோமோ, அப்போதுதான், அப்போதுமட்டும்தான் தமிழுக்கான பின்னடைவு துவங்குகின்றது என்பது அவரது பேச்சின் அடிப்படை.

ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து, அச்சுக்கோர்ப்பவராக, பிழைதிருத்துபவராக, கறாரான பிழைதிருத்துபவராக இருந்து, மாபெரும் இலக்கியவாதியாக, எழுத்தாளராக உருவெடுத்தவர் ஜெயகாந்தன் அவர்கள். நான் அடிக்கடி சொல்வது உண்டு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒரு சிறுகதை உண்டு.  பிழை திருத்துபவரின் மனைவி”. நெஞ்சை உலுக்கின்ற கதை. தமிழ்மொழி சிதைந்து விடக் கூடாதென உழைத்தவர்களின் கதை அது. அந்தக் கதை இணையத்தில், அவரது வலைப்பதிவிலேயே இருக்கின்றது. அனைவரும் வாசிக்க வேண்டும். இப்படித்தான் தமிழ் நின்று வென்று கொண்டிருக்கின்றது.

கடைசியாக ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். மினசோட்டா தமிழ்ச்சங்கத்தினர் என்னிடம் இருபது படைப்புகளைக் கொடுத்து, நடுவராக இருந்து, போட்டிக்கான தெரிவுகளைக் கொடுக்கச் சொன்னார்கள். மிகவும் கடினமான வேலை அது. அந்த அளவுக்கு, படைப்புகளின் தரமும் நயமும் மேலோங்கி இருந்தன. கடைசியில், கருத்தாழம், எழுத்துநடை, தலைப்பு எல்லை என அவர்கள் கொடுத்த அளவுகோல்களுக்கும் மேற்பட்டு, கையால் எழுதிக் கொடுத்தவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கலானேன். ஏன்?

ஐந்து, அல்லது ஆறு பக்கக் கட்டுரையை, எந்தவொரு அடித்தல் திருத்தலுமின்றி எழுதிக் கொடுக்க, நம்மில் எத்தனை பேரால் முடியும்? உள்ளபடியே, ஊன் உயிரெல்லாம் தமிழ் குடிகொண்டிருந்தால்தான் முடியும். அதுதான் உழைப்புக்கும் உணர்வுக்கும் அடையாளம். இப்படியானவர்கள் இருக்கும்வரையிலும், இப்படியாகத் தமிழை ஆராதிக்கின்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் தமிழ்ச்சங்கங்களும் இருக்கும் வரையிலும், தமிழ் நின்று வெல்லும். வென்றாக வேண்டும் தமிழ்.

சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே, தமிழ் வாழ்க!  நன்றி!