செந்தில்குமார் கலியபெருமாள்
மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்பு, தொழில்நுட்பக் குழுக்களின் துணைத்தலைவர், நம் நெடுங்கால நண்பர்.
கருப்பெட்டிச் சோதனை என்பது சோதனையின் ஒரு வகையாகும். இதில், ஒரு சோதனையாளர், சோதிக்கப்படும் பொருள், அதன் உள்ளீடு, குறியீடுகள், விவரங்கள் பற்றி எந்தவொரு தகவலும் அறிந்திரா நிலையில், முன்நிலைப்பாடற்றுச் சோதனைகளைச் செய்வார். இந்தச் சோதனையில், பொருளானது ஒரு 'கருப்பெட்டி' போலக் கருதப்படுகிறது. அதாவது, அதன் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. கருவில் இருக்கும் உயிரின் அடையாளத்தன்மைகள், பண்புநலன்கள் எதுவும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது போல, இன்னபொருள், இன்ன கருவி முதலானவற்றின் உள்ளீடுகள், தனிநபர்கள், இடம் முதலானவற்றின் எதன் பின்னணியும் அறிந்திராமல், அது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதனை சோதித்துப் பார்க்கும் முறை. தகவல் தொடர்புக்குழுவுக்குக் கிடைத்த அப்படியான ஒருவர்தாம் ‘அண்ணாச்சி’ என அன்போடு அழைக்கப்படுகின்ற திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.
சச்சரவு, விமர்சனம், கொந்தளிப்பு போன்ற நுண்ணுணர்வு கூடிய தகவலை வெளிப்படுத்துகின்ற போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது தனிப்பட்ட நபரின்பால் வெளியிடப்படும் தகவல் அன்று. மாறாக, ஆகக்குறைந்தது 20 ஆயிரம் பேருக்கு, அமைப்பின்பால் தெரிவிக்கப்படுகின்ற தகவல். 5% நுகர்வோர் மனம் புண்பட்டுவிடுகின்றதென வைத்துக் கொள்வோம். எஞ்சியிருக்கின்ற 95% பேரை நல்லவிதமாக அணுகியிருக்கின்றோம்தானே எனக் கொண்டுவிடலாகாது. ஏனென்றால், இதுவே வாடிக்கையாகி, பத்துமுறை நிகழ்கின்றதென வைத்துக் கொண்டால், 50% நுகர்வோரின் ஒவ்வாமைக்கு அது வித்திட்டுவிடும். நல்லதொரு தகவல்தொடர்புக்கு அடையாளம், நூற்றுக்கு நூறு வெற்றி கொள்வதாக இருந்திடல் வேண்டும். அப்படியான, நுண்ணுணர்வு கூடிய தகவல், செய்தியறிக்கை முதலானவற்றைச் சோதிக்க, திரு. செந்தில் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார். வெகுளித்தனமாக ஒவ்வொன்றையும் வினவும் போது, சரிசெய்து கொள்ளும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
அண்ணாச்சி அவர்கள் கலையுணர்வு மிக்கவர், பாடகர், தமிழுணர்வாளர் என்ற முறையில், காலவுணர்வினை வலியுறுத்தக் கூடியவர். “கோடைவிடுமுறைக் காலத்தை நம் பிள்ளைகள் குதூகலமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செலவிட்டுக் கொண்டிருப்பரென நம்புகின்றேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”, தலைவர் மடல் முதலான பலவற்றிலும், இது போன்ற வாழ்வியலுக்கு நெருக்கமான வரிகள் இடம் பெறுவதற்கு, அளவளாவலின் போது இவர்கள் தருகின்ற கண்ணோட்டங்களே காரணமாக இருந்தன.
விழா துவங்கி விட்டது. நேரலை உலகுக்கே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ‘மங்கல இசை’, ‘மங்கள இசை’, அக்கப்போர். இஃகிஃகி. இவருக்குப் பதற்றம். ஏனென்றால், விழாவின் அரங்குகளுக்கான ஒவ்வொரு பின்னணிப் படத்தையும் வடிவமைத்துச் செயற்படுத்தியவர் இவரே. “அண்ணாச்சி, உங்ககிட்ட சரி பார்த்திட்டுதானே செய்தன்?”, அலறுகின்றார். ‘மங்கல இசை சரிதானுங்க. என்ன பிரச்சினை இப்ப?’. ‘இல்ல அண்ணாச்சி, இன்னாரே சொல்றாங்க, அது பிழையின்னு’. மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, நன்று போன்ற இடங்களில் கையாளப்படுவது. மங்களம் என்பது, நற்காரியத்தின் முடிவினைக் குறிப்பது’ என்றெல்லாம் சொல்லி வகுப்பெடுத்த பின்னர்தாம் அடங்கினார். அந்த அளவுக்கு நுண்ணுணர்வும் கடமையுணர்வும் மிக்கவர். தகவல்தொடர்பு என்பது மட்டுமேயன்று, பல குழுக்களின் வாயிலாகவும் பங்களித்தவர் திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.
𝐁𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐜𝐚𝐫𝐢𝐧𝐠 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐛𝐭𝐥𝐞 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐥𝐢𝐟𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥.
-பழமைபேசி.
#PROTeam #FeTNA2025

No comments:
Post a Comment