எழுத்தாளர் பிரபஞ்சன்
தமிழிலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பிரபஞ்சன் (1945–Dec 21, 2018), புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர் ஆவார். இவருடைய இயற்பெயர் எஸ். வைத்தியலிங்கம். மனித உறவுகளின் சிக்கல்கள், வரலாற்றுப் பின்னணிகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக இருந்துள்ளார்.
இவரது படைப்புகளில் மிக முக்கியமானது 'வானம் வசப்படும்' எனும் வரலாற்று நாவல். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலுக்காக, 1995-ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை (1709–1761) என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் பதிவாளர்.. இவர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநர் டூப்ளெக்ஸின் மிக நெருங்கிய உதவியாளராகவும் பணியாற்றினார்.
பெண்களின் உணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகுந்த புரிதலுடனும் மரியாதையுடனும் தனது கதைகளில் கையாண்டவர் பிரபஞ்சன். மிகக் கடினமான தத்துவங்களைக் கூட பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய அழகான தமிழ் நடையில் எழுதுவது இவரது தனிச்சிறப்பு. 'மானுடம் வெல்லும்', 'மகாநதி', 'பெண்' உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2004ஆம் ஆண்டுத் தமிழ்விழாவுக்காக அமெரிக்கா வருகை புரிந்துள்ளார். பேரவை மாநாட்டில், மாந்தநேயமும் நுண்ணுணர்வும் நகையுணர்வும் கூடிய கதைகளைச் சொல்லி சிறப்பானதோர் உரையை வழங்கியதன் வாயிலாக, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றார்.
எழுத்தாளர் பயிற்சிப்பட்டறை, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25ஆவது ஆண்டு விழாக்கூட்டமெனப் பல நிகழ்வுகளில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார். https://shorturl.at/3xdl2 ஊருக்குச் சென்றான பின், அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்துப் பேசியிருக்கின்றார்.
”நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது. நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்”. 21 ஆண்டுகளுக்கும் முன்னர்.
இந்தப் பின்னணியில், இன்று இடம் பெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கிய அமர்வு, https://shorturl.at/4719d நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாந்தநேய, வாழ்வியல்க்கதைகள், மானுடவியல் நுண்ணுணர்வுகள் ஏன் நமக்கு முக்கியமென்பதை பிரபஞ்சன் நமக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றார்.
அண்மையில் நாம் நேரடியாகப் பெற்ற அனுபவம். Holistic review in MD admissions is a mission-aligned selection process that evaluates applicants based on a balanced combination of Experiences, Attributes, and Academic Metrics (E-A-M). Rather than relying solely on test scores and GPAs, admissions committees assess how an individual’s unique journey and qualities will contribute to the medical school’s learning environment and the future physician workforce.
நிறைமதிப்பீடுகள். ஆனால் கிடைக்குமா கிடைக்காதாயெனக் காத்துக் கிடக்கின்றனர். காத்துக் கிடப்பதென்பது பெரும் வாதை. அவ்வளவாக மதிப்பீடுகள் இல்லாத நிலையிலும் சிலருக்கு இடங்கள் உறுதி செய்யப்படுகின்றன. என்ன காரணம்? அவர்களின் மாந்தநேய அடிப்படையிலான அணுகுமுறையும் தன்னார்வப்பணிகளும்.
ஒருவருக்கு இத்தகைய மனப்பான்மை மனத்துள் தரிக்கப் பெற்றிருந்தால் சிறப்பு. சரி, ஒருவருக்கு அது எப்படி வாய்க்கப்பெறும்? இளம்வயதிலேயே வாழ்வியல்க் கதைகளைப் பெருமளவில் நுகர்ந்திருந்தால் மனப்பண்பாடு அமையப் பெற்று, சமூகத்துக்கான தொண்டு மனப்பான்மை உருப்பெறும்.
எழுத்தாளுமை பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள், காலமெல்லாம் நின்று வாழும்!
-பழமைபேசி.
No comments:
Post a Comment