பண்புத்தமிழ்
பண்புத் தமிழ் என்பது தமிழர்களின் அறநெறி, கலாச்சாரம், ஒழுக்கம், நாகரிகத்தின் வெளிப்பாடாக அமையும் தமிழ் மொழியின் ஒரு சிறப்புக்கூறு ஆகும். 'பண்பு' என்ற சொல்லுக்குச் சீர்மை, நற்பண்பு, தகுதி என்று பல பொருள்கள் உண்டு.
1. சொற்களில் கண்ணியம்
தமிழ் மொழியில் ஒருவரை அழைப்பதிலும், உரையாடுவதிலும் மிகுந்த மரியாதை கையாளப்படுகிறது. நீ என்பதற்குப் பதில் நீங்கள் என்று மரியாதையுடன் அழைப்பது. வா, போ என்பதற்குப் பதில் வாருங்கள், செல்லுங்கள் என விகுதி சேர்த்துப் பேசுவது. பண்பு மரபு எனக் கொள்ளலாம். அறிஞர்களையும் பெரியோர்களையும் 'ஐயா', 'அம்மா' என்று விளிப்பது.
2. இலக்கியங்களில் பண்பாடு
சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை, 'பண்பு' என்பது ஒரு மனிதனின் இலக்கணமாகவே போற்றப்படுகிறது. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" (கலித்தொகை) - அதாவது, உலக நடைமுறையை அறிந்து அதற்கேற்ப நடப்பதே பண்பு. "பண்புடையார் பட்டுண்டு உலகம்" - பண்பு உடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
3. விருந்தோம்பல்
தமிழ்ப் பண்பாட்டின் சிகரம் விருந்தோம்பல். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பது தமிழர்களின் பண்புத் தமிழ் மரபு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகள் உலக மக்கள் அனைவரையும் உறவினர்களாகக் கருதும் உயரிய பண்பைப் பறைசாற்றுகின்றன.
4. பணிவும் அன்பும்
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற" - பணிவாக நடப்பதும், இனிய சொற்களைப் பேசுவதுமே ஒருவருக்குச் சிறந்த அணிகலன் என்பது தமிழரின் வாழ்வியல் நெறி.
1970ஆம் ஆண்டு வாக்கில், மேற்கத்திய இலக்கியவாதிகள் சொற்களில் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னெப்போதும் இல்லாதபடிக்கு இயக்கமாகக் கட்டமைத்தனர்.
நம் ஊரில் கால்நடை வணிகம் செய்யும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். துண்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு விரல்களைப் பிடித்தபடி பேரம் பேசிக் கொள்வர். அதாவது, குறிப்பிட்ட விலை என்பது பொது விலை. அந்தப் பொதுவிலைக்கும் மேலாக இவ்வளவு தருகிறேன், குறைவாக இவ்வளவு தருகிறேனெனத் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது. இதனால் பொதுவெளியில் இருப்பவர்களுக்கு அந்தப் பேரத்தின் தன்மை தெரிய வாய்ப்பில்லை. அது போலத்தான் இந்த மேற்கத்தியப் பழக்கமும்.
hand in cap, கையில் தொப்பி இருக்கும். பண்டமாற்று முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுத் தொகை, வித்தியாசத்துக்கான தொகையை முடிவு செய்யும் பொருட்டுத் தொப்பிக்குள் கைகளை விட்டு ஒருவர் பணத்தைப் போட ஏற்பிருப்பின் மற்றவர் எடுத்துக் கொள்ள, அத்தருவாயில் வணிகம் முற்றுப்பெறும். குறைவுக்கான தொகை handicapped ஆனது. அதுவே, குறைபாடு உடையவர் handicapped என்றானது. தொப்பியை நீட்டி இரவுபணம் வாங்குதலால் பிச்சைக்காரர் எனும் பொருள்படியும் ஆகிற்று.
மாந்தநேயம் வளர வளர, உளவியல்ரீதியாகப் பிற்போக்கானதாக இத்தகைய சொற்கள் உணரப்பட்டன. அதன்நிமித்தம் மேம்பட்டதான, கண்ணியமிகு சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அதுதான் மனிதத்தின் மேம்பாடு.
’வறியோர்க்கு உணவு’ எனும் தலைப்பில் மேம்பட்டதான ஒரு செயலைச் செய்வது நன்றன்று. நாம் ஏற்கனவே சுட்டியும் இருந்தோம். ’பசித்தோர்க்கு உணவு’ என்பது போன்ற சொற்களைப் பாவிக்கலாம். எண்ணிப்பாருங்கள். ஒருவர் அந்த நிகழ்ச்சிக்கு வந்து உணவு உண்ணுகின்றார். அந்த நிகழ்வில் உண்டமாத்திரத்திலேயே அவருக்கு “வறியவர்” எனும் முத்திரை விழும். பிறகு அம்முத்திரையின் அடிப்படையில், பகுப்புகள் தோன்றும். தேவைதானா?!
சொற்களில் அரசியல் உள்ளது. சொற்களில் பண்பாடு உள்ளது. சொற்களில் எல்லாமும் உள்ளது. முறையான சொற்களைப் பாவிப்பதே ஆன்றோர்க்கழகாகும்.
சைவம், அசைவம் எனும்போது, மரக்கறி உண்ணுபவரே முதன்மையென்றாகின்றது. மாறாக, கறியர்-அகறியர், புலாலி - அபுலாலி எனச் சொல்லுங்கால் முறை மாறிவிடும். எல்லாம் கட்டமைத்தலே. இஃகிஃகி.
𝐖𝐨𝐫𝐝𝐬 𝐢𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞 𝐦𝐢𝐧𝐝𝐬 𝐛𝐞𝐟𝐨𝐫𝐞 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐟𝐨𝐥𝐥𝐨𝐰.
-பழமைபேசி.

No comments:
Post a Comment