10/24/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 10

எமது இளம்பிராயத்தின் போது, சேலம் என்றாலே நினைவுக்கு வருவது இரு பற்றியங்கள். ஒன்று சேலத்து மாம்பழம், அடுத்தது பருப்புச் சந்தை. முதலாவதுக்கான காரணமும் இரண்டாவதுக்கான காரணமும் ஒன்றை ஒன்று ஒட்டியதே!

ஆம், எனது தகப்பனார் ஒரு பெருவணிகர் என்ற வகையிலே, திருப்பூர்ச் சந்தையில் பருத்தி, பொள்ளாச்சி சந்தையில் சோளம் மற்றும் இராகி, திருவண்ணாமலை மற்றும் சென்னையில் பல்லாரி வெங்காயம், சேலத்தில் பயித்தை, துவரை மற்றும் கொள்ளு, உடுமலையில் கொத்துமல்லி மற்றும் கொண்டக்கடலை முதலானவற்றை கொள்முதல் அல்லது விற்பனை செய்வது வழக்கம்.

அப்படியாக சேலத்தை நினைக்கிற போது, வியாபார நிமித்தம் அங்கு செல்கிற போதெல்லாம் பருப்பு வகை தானியங்களோடும், சுவையான மாம்பழக் கூடைகளோடும் தந்தையார் அவர்கள் வீடு திரும்புகிற காட்சிகள்தான் மனதில் எழும். பின்னாளில் அந்தக் காட்சிகளோடு மேலதிகமாக இன்னொரு காட்சியும் இணைந்து கொண்டது காலத்தின் கோலம்.

எமது குடும்ப நண்பரொருவரது அழைப்பின் பேரில், அவருடைய மைத்துனரை சபரிமலைக்கு அனுப்பி வைக்கும் வைபவத்திற்காக சேலம், கோரிமேடு பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்துச் சாளை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். கொண்டலாம்பட்டி வழியாக ஏற்காடு சாலையில் சென்று, கோரிமேடு பேருந்து நிலையத்தில் இறங்கி இடது பக்கமாக ஒரு மண்சாலையின் ஊடாக இரண்டு அல்லது மூன்று கல் தொலைவு நடந்து செல்ல வேண்டும் அவரது தோட்டத்திற்கு.

அந்த சாலையின் இருமருங்கிலும் ஏழைகளின் குடிசைகள் ஆக்கிரமித்து இருக்கும். அந்த குடிசைகளை ஒட்டி, விளைநிலங்கள் பச்சைப் பசேல் எனக் காண்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இருக்கும்; ஆங்காங்கே வரிசை வரிசையாகத் தென்னை மரங்களும்! எனது நண்பரின் தோட்டமானது, மண்சாலையின் இடது புறத்தில் இருந்தது. வெகு அழகான தோட்டமது.

தோட்டத்தில் ஓலைக் கூரையுடன் ஒரு சாளையும், அதற்குப் பக்கவாட்டில் ஓடு வேயப்பட்ட சாளை ஒன்றும் இருந்தது. ஓடு வேயப்பட்ட சாளையில்தான் நான் தங்கி இருந்தேன். அந்தச் சாளையின் ஒருபக்கச் சாளரத்தைத் திறந்து பார்த்தால், சாளையின் பின்புறம் நீர் ததும்பும் அந்த கிணற்றைக் காணலாம். மறுபக்கத்தில் இருக்கும் சாளரத்தைத் திறந்து பார்க்கின், கோரிமேட்டில் இருந்து அந்த வழியாகச் செல்லும் மண்பாதையின் ஓரத்தில் இருக்கும் குடிசைகளில் ஒன்றினைக் காணலாம்.

வாசலுக்கு வந்து மேற்கே நோக்கினால் ஒரு பெரிய கரடும், அதை ஒட்டிய சேர்வராயன் மலைத்தொடரும் கண் கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கும். அந்தக் கரட்டின் மறுபக்கம்தான் தொப்பூர் மேடு எனச் சொல்லக் கேள்விப் பட்டதாக ஒரு நினைவு.

சபரிமலைக்கு வழி அனுப்ப வந்தவன், அவர்களது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, நண்பர் தங்கவேலு மலையில் இருந்து திரும்பும் வரையிலும் தங்கி இருந்துவிட்டுப் போகச் செவிமடுத்து, ஒரு வாரகாலம் அந்தத் தோட்டத்திலேயே நாட்களை இனிமையாகக் கழித்தவன் ஆனேன்.

அந்தக் கரட்டுக்குச் சென்று, அங்கு தினந்தோறும் நடக்கும் சமூக விரோத செயல்களை எல்லாம் கண்டதும், தென்னைமரக் கள்ளை மாந்தி மயங்கிச் சொக்கியதும், கிணற்றில் நீச்சல் அடித்து மகிழ்ந்ததும், விருந்தோம்பலில் திளைத்ததுமாய் நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

அப்படியிருக்க, அந்த ஒரு வாரகாலத்தின் ஒரு நாள், மாலை ஒரு ஆறு மணி இருக்கும், மஞ்சள் வெயிலில் கைரேகை தெரிந்தும் தெரியாத வேளை அது, வலதுபக்க சுவர்ச் சாளரத்தைத் திறக்கிறேன்; அந்த குடிசையைச் சேர்ந்த அந்த ஏழைப் பெண்மணி வாசலில் இருந்த முக்கால்ப்பாகம் தண்ணீர் நிறைந்த ஒரு கொள்கலனை அந்தத் தட்டையான கல் இருக்கும் இடத்திற்கு அருகண்மையில் வைத்து விட்டு, அவசர அவசரமாக குடிசையில் இருந்து வெளியேறிச் செல்கிறார்.

வெளியேறிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன்மகனை, கையைப் பிடித்து வாசலுக்குள் இழுத்து வருகிறார். வந்த வேகத்தில் அவனது துகில் உரியப்பட்டு, பிறந்த மேனியாய் அச்சிறுவனானவன் அந்தக் கல்லின் மீது கோவணம் இல்லாத தண்டாயுதபாணியைப் போல் நிற்கிறான்.

சரியாக ஒரே போசித் தண்ணீர் அவனுடைய முகம் தழுவி, கையிரண்டும் தழுவி, மார்புதழுவி, வயிறு தழுவி, பின் இடுப்பினூடாக கால்களைத் தழுவி, பாதங்கள் நனைந்து வழிகிறது. அப்படியொரு நேர்த்தியாக, அந்த ஒரு போசித் தண்ணீர் கையாளப்பட்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த வினாடியே, பழுப்பு வண்ண 501 சவக்காரத்துண்டு ஒன்று அவனது மேனியைத் தொட்டுத் தொட்டு வழுக்கிச் செல்கிறது. அந்தத் தோய்தலில் அவனது தேகம் கூசி அவனுள் ஒரு சிருங்காரம் மேலிடுகிறது. தாயானவளோ, இங்கனச் சும்மா கெட எனச் சொல்லி சுறுசுறுப்பாய் தன் காரியத்தில் ஆழ்ந்து போகிறாள்.

சவக்காரத் துண்டின் வேலை முடிந்ததும், மேலுமொரு போசித் தண்ணீர் சவக்காரத்தின் தழுவலை பிரித்தெடுத்துச் செல்கிறது. தேகத்தில் சவக்காரம் படிந்ததை, முற்றிலுமாக இல்லை என்று ஆக்கப்பட்டதை உறுதியுடன் தெரிந்தவளாய், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தத் துணியை எடுத்து அவனை அதில் தோய்த்து விடுகிறாள் வேலையின் சிரத்தையின் நடுவேயும் அன்பான அந்தத் தாய்.

பெற்ற மகனை வடிவாய்க் குளிக்க வைத்துக் குடிசையுனுள் அனுப்பித் தானும் தனது முகம், கை கால்களைக் கழுவிய பின் அந்தச் சிறுபாத்திரத்தில் இருந்த எஞ்சிய நீரை, மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி உள்ளே எடுத்துச் சென்ற அத்தருணம், என்னுள் வியப்புமிகு அதிர்வலைகள் எங்கும் படர்ந்தது. அதன் சுவடுகளே இன்று எம்மை இதை எழுதவும் வைக்கிறது.

சிறுபாத்திரத்துள் இருந்த நீரில் மகனைக் குளிக்க வைத்து, தானும் கைகால் முகம் அலம்பி, அதில் மீதமும் வாய்க்கப் பெற்றாளே அவள்? இது எப்படி சாத்தியமாயிற்று?? எனக்கு அன்றும் புரியவில்லை; இன்றும் புரியவில்லை! சிக்கனம், எளிமை என்பதை, முதன்முதலாய்க் கண்டவன் ஆனேன் அத்தருணத்தில். ஏழைகள் என்ற ஒதுக்குதலில், கண்டு கொள்ளப்படாத மகாத்மாக்கள் எத்துனை எத்துனை பேரோ இப்புவியில்?

நண்பர் தங்கவேல் அவர்கள் மலையில் இருந்து திரும்பியதும், ஒரு குண்டாத் தண்ணியில் மகனையும் குளிக்க வெச்சுத் தானும் கைகால் கழுவிகிட்டாளே அந்தப் பொம்பளை?! என்று சிலாகித்துப் பேசியவுடன், அவர் கூறியதைக் கேள்விப்பட்டு எம் நெஞ்சு பதை பதைத்துப் போனது.


ஆம், அவள் பெற்ற பிள்ளையைக் காப்பாற்றுபவளாய், கணவனால் கைவிடப்பட்டவளாய், தன்னை வட்டமிடும் கழுகுகளினின்றும் தற்காத்துக் கொள்பவளாய் அனுதினமும் போராட்டத்துள் வாழ்க்கை நடத்துபவள் என்று அவர் சொன்னதும், அதிர்வின் எல்லைக்கே சென்றது எம்மனம்.

அதன்பின்னர், நான் கோரிமேட்டிலிருந்து திரும்பும் வரையிலும் அந்தச் சாளரத்தை மறந்தும் திறக்கவில்லை. அந்தத் தோட்டத்தில் களிப்பாய் இருந்தவனுக்கு, அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பிள்ளையும் தாயும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சேலம் என்றால் இந்த ஆத்மா அடங்கும் வரையிலும் இனி எமக்கு அவர்கள்தான்!

அந்த நினைவுகளினூடே, கொங்குநாட்டின் உள்ளடக்கமான இராசிபுர நட்டினுடைய உபநாடான சேலம் நாட்டைக் காண்போம் வாருங்கள் மக்களே!



வளமிகுந்திடு சேர ராயன்மலை நின்றுவரு
மணிமுத்து நதிசெழிக்கும்
வண்மைசேர் சேலம்வெண் ணந்தூ ரமாப்பேட்டை
வளர்செவ்வா ய்ப்பேட்டை மல்லூர்
தளமிகுங் குமரநக ரலைவாய் நடுப்பெட்டி செளதாரபுர மினக்கல்
தணிவில்மிசி நாம்பட்டி குமரசா மிப்பட்டி
தாங்குசெம் மாண்டபட்டி
உளமகிழ நிமிரிளம் பள்ளிராக் கிப்பட்டி யொயிலான வீரபாண்டி
ஓதறிஞர் சந்ததம் வந்துதமிழ் பாடிடு முத்தமச் சோழபுரமும்
அளவில்பய நுதவியின் புறுகாரி பட்டியு மாண்மை
வீராணமுடனே
யயோத்தியணி நகரமுஞ் சேரவரு மிருபதூ ரழகான
சேலநாடே!

சேலம், வெண்ணந்தூர், அம்மாப் பேட்டை, செவ்வாய்ப் பேட்டை, மல்லூர், குமாரபாளையம், அலைவாய்ப்பேட்டை, நடுப்பட்டி, செளதாபுரம் ஓலைப்பட்டி, மின்னக்கல், மிசினாம்பட்டி, குமாரசாமிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, இனம்பள்ளி, ராக்கிப்பட்டி, வீரபாண்டி, உத்தமசோழபுரம், காரிப்பட்டி, வீராணம் மற்றும் அயோத்திப்பட்டணம் என இருபது நாடுகள் கொண்டதுதான் அழகான சேலம் நாடு.

இந்த இடுகையானது, சிங்கப்பூர்ப் பதிவர் அனபர் யாசவி அவர்களுக்கான சிறப்பு இடுகை!

22 comments:

vasu balaji said...

/ஏழைகள் என்ற ஒதுக்குதலில், கண்டு கொள்ளப்படாத மகாத்மாக்கள் எத்துனை எத்துனை பேரோ இப்புவியில்?/

சத்தியமான வார்த்தை. அதேனோ ஏழ்மையில் இருக்கும் சிக்கனம் வசதியில் ஒன்று கஞ்சத்தனமாகவோ அல்லது வீண்ஜம்பமாகவோ மாறிவிடுகிறது. சேலம் அறிமுகம் அழகு. நடுச்சாலை மாம்பழ ருசி நினைத்தாலே இனிக்கும்.

பழமைபேசி said...

//வசதியில் ஒன்று கஞ்சத்தனமாகவோ அல்லது வீண்ஜம்பமாகவோ மாறிவிடுகிறது.//

வாங்க பாலாண்ணே, வணக்கம்! ஆகா, அளந்து சரியாச் சொல்லிக் கலக்குறீங்களே?

பிரபாகர் said...

பக்கமா வந்துட்டீங்க... சேலம் நிகழ்வு மனம் கனக்கிறது. அந்த பெண்மணி சமுதாயத்தில் நல்லதோர் இடத்துலும், அந்த வளர்ந்த சிறுவனும்(?) நல்லதொரு வேலையில் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.

பழமைபேசி, உங்களை படிக்கையில் நிறைய தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி...

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லதோர் பகிர்வு

ஈரோடு கதிர் said...

இந்த சிக்கனம்தானே எல்லா கிராமத்து தாயிடமும் இருக்கும் சொத்து


சேலம் கலக்கலான அறிமுகம்

வெண்பூ said...

நல்ல இடுகை பழமைபேசி.. சேலத்தில் பிறந்து இராசிபுரத்தில் வளர்ந்த எனக்கு இந்த இடுகையின் கடைசி பகுதி மிக மகிழ்ச்சி அளித்தது. அந்த பாடல் எப்போது எழுதப்பட்டது. சங்ககாலப் பாடலா? அல்லது தற்காலப்பாடலா? காரணம் இதில் சுட்டப்பட்டுள்ள அனைத்து ஊர்களும் இன்றும் இருக்கின்றன.

velji said...

/ ஏழைகள் என்ற ஒதுக்குதலில், கண்டு கொள்ளப்படாத மகாத்மாக்கள் எத்துனை எத்துனை பேரோ இப்புவியில்?/

ஆம்..சிக்கனம் நாட்டையும் காப்பாற்றும் அல்லவா!

cheena (சீனா) said...

நல்லதொரு இடுகை பழமைபேசி

இன்றும் சிக்கனம் என்பது இயலாதவர்களால் கடைப்பிடிக்கத்தான் செய்கிறது. நீர் அதிகம் இருந்தால் பபிள் பாத் - டப் பாத் - ஷவர் பாத் எல்லாம் எடுக்கலாம். என்ன செய்வது.

தென்னைக் கள் மாந்தி மயங்கிச் சொக்கியது - அடடா அடடா

நல்வாழ்த்துகள் மணி

பழமைபேசி said...

//பிரபாகர் said...
பக்கமா வந்துட்டீங்க... சேலம் நிகழ்வு மனம் கனக்கிறது. அந்த பெண்மணி சமுதாயத்தில் நல்லதோர் இடத்துலும், அந்த வளர்ந்த சிறுவனும்(?) நல்லதொரு வேலையில் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.
//

அதேதானுங்க பிரபாகர்! மிக்க நன்றி!!

பழமைபேசி said...

// ஆ.ஞானசேகரன் said...
நல்லதோர் பகிர்வு
//

நன்றிங்க ஞானியார்!

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...
இந்த சிக்கனம்தானே எல்லா கிராமத்து தாயிடமும் இருக்கும் சொத்து
//

சரியா சொன்னீங்க மாப்பு!

பழமைபேசி said...

//வெண்பூ said...
நல்ல இடுகை பழமைபேசி.. //

வாங்க வெண்பூ, நெடுநாட்களுக்கு அப்புறமா நம்ம திண்ணைக்கு வந்து இருக்கீங்க! நன்றி!!

//சேலத்தில் பிறந்து இராசிபுரத்தில் வளர்ந்த எனக்கு இந்த இடுகையின் கடைசி பகுதி மிக மகிழ்ச்சி அளித்தது.//

நானும் அகமகிழ்கிறேன்!

// அந்த பாடல் எப்போது எழுதப்பட்டது. சங்ககாலப் பாடலா? அல்லது தற்காலப்பாடலா?//

தற்காலப்பாடல் அல்ல; 1800 பிற்பாதியிலும் 1900ங்களிலும் பலரால் எழுதப்பட்டு, பின் ஓரிருவரால் நல்கப்பட்ட கொங்குசதகம் எனும் நூலில் இடம் பெற்றவை. முத்துசாமி ஐயா அவர்கள் இதற்கு உரை எழுதியவர்.

// காரணம் இதில் சுட்டப்பட்டுள்ள அனைத்து ஊர்களும் இன்றும் இருக்கின்றன.
//

சிலவற்றின் பெயர்கள் மாற்றமும் கண்டு உள்ளது.

பழமைபேசி said...

//velji said...
/ ஏழைகள் என்ற ஒதுக்குதலில், கண்டு கொள்ளப்படாத மகாத்மாக்கள் எத்துனை எத்துனை பேரோ இப்புவியில்?/

ஆம்..சிக்கனம் நாட்டையும் காப்பாற்றும் அல்லவா!
//

மிக்க நன்றிங்க புரிதலுக்கு!

பழமைபேசி said...

//cheena (சீனா) said...
நல்லதொரு இடுகை பழமைபேசி
//

வணக்கம் ஐயா! பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!!

கண்ணகி said...

கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழ் ஆனாலும் குளித்துக்குடி என்று அந்தப்பெண் உங்களுக்கு புரிய வைத்ததை உங்கள் பாணியில் எங்களுக்குச்சொல்லிய விதம். ......... வாவ். இதுதான் பழமைபேசிஇன் ஸ்பெஷல் டச்

பழமைபேசி said...

//வாத்துக்கோழி said...
கந்தையானாலும் கசக்கிக்கட்டு, கூழ் ஆனாலும் குளித்துக்குடி என்று அந்தப்பெண் உங்களுக்கு புரிய வைத்ததை உங்கள் பாணியில் எங்களுக்குச்சொல்லிய விதம். ......... வாவ். இதுதான் பழமைபேசிஇன் ஸ்பெஷல் டச்
//

அக்கா, வாங்க, வணக்கம்! நன்றி!!

மணிநரேன் said...

நல்லதொரு இடுகை பழமைபேசி.

RRSLM said...

//கோரிமேடு பேருந்து நிலையத்தில் இறங்கி இடது பக்கமாக ஒரு மண்சாலையின் ஊடாக இரண்டு அல்லது மூன்று கல்//
அட நம்ம செட்டிசாவடி ரோடு.......சேலத்தில பிறந்து, நீங்கள் சொல்லும் அந்த கோரிமேடுக்கு வெகு அருகில் வளர்ந்ததால், பதிவின் ஒவ்வொரு வரியும் கண் முன் காட்சியாக விரிந்தது பழமை....குறிபிட்ட அத்தனை ஊர் பெயர்களும் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது பழமை....

//அந்த குடிசைகளை ஒட்டி, விளைநிலங்கள் பச்சைப் பசேல் எனக் காண்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இருக்கும்;//
அந்த சுத்துவட்டாரத்தில் பாதிக்கு மேல இப்போ பிளாட் போட்டுடாங்க பழமை....appartment எல்லாம் கட்டறாங்க.....கொடுமை

பழமைபேசி said...

//மணிநரேன் said...
நல்லதொரு இடுகை பழமைபேசி.
//

மிக்க நன்றிங்க மணிநரேன்!

//RR said... //

மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றிங்க!!

யாசவி said...

திரு பழமைபேசிக்கு,

தங்களுடைய பதிவை தற்போதுதான் காணக்கிடைத்தது.

மிக்க நன்றி ஒரு பதிவர் சொல்லியதுபோல நீங்கள் குறிப்பிடும் இடம் செட்டிசாவடிக்கு செல்லும் சாலை என்று நினைக்கிறேன். இப்போது அதன் பெரும்பாலான இடங்கள் ப்ளாட் போடப்பட்டு விற்கப்பட்டுவிட்டது. அந்த நில உரிமையாளர்கள் எல்லாம் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள்.

அந்த தாயும் பிள்ளையும் நலமாகவே இருப்பார்கள் என வேண்டுவோம்.

உங்களுடைய உள்ளூர் பயணம் மற்றும் விவரணைகள் என்னுடைய நினைவலைகளை எழுப்பிவிட்டன.

சேலம் என்பது ராசிபுரத்தின் துணை நாடு என்பது எனக்கு மட்டுமல்ல சேலத்தில் உள்ள எல்லோர்க்கும் ஒரு புதிய அதிர்ச்சி கலந்த செய்தியாக இருக்கும்.

தொடரட்டும் உங்களின் பணி.

:))

யாசவி said...

அன்புள்ள பழமைபேசிக்கு,

என்னுடைய வேண்டுகோளை ஏற்று சேலத்தை பற்றி விளக்கத்திற்கு தன்யனாகிறேன்.

:)

பழமைபேசி said...

//யாசவி said...
அன்புள்ள பழமைபேசிக்கு,

என்னுடைய வேண்டுகோளை ஏற்று சேலத்தை பற்றி விளக்கத்திற்கு தன்யனாகிறேன்.
//

தங்களை அறிந்து கொண்டதில் அகமகிழ்பவன் நானே! நன்றி!!