10/28/2009

கனவில் கவி காளமேகம் - 17

அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. என்ன நினைச்சாரோ நேற்றைக்கு வந்தாருங்க, வந்து என்னதான் அலப்பறை செய்தாருன்னு மேல படீங்க!

”டே பேராண்டி, அவஞ் சொல்றானா? சரி, சும்மா சொல்றான்னு பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? குறிப்பிட்டுச் சொன்னாத்தான ஆகும்? அதெப்படி, நறுக்குத் தெறிச்சா மாதிரி அவன் என்ன சொன்னான்னு எப்படிச் சொல்றது?”

“அப்பிச்சி, வாங்க! அவஞ்சொல்றானா? எவன் அவன்?? நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே? சுத்தி வளைச்சு நீங்க எங்க வர்றீங்கன்னு புரியுது. எனக்கு இப்ப அதை எல்லாம் யோசிக்க நேரம் இல்லை. நித்திரையில ஆழ்ந்து போயி இருக்கேன். சொல்ல வந்ததைச் சொல்லிட்டுக் கிளம்புறீங்களா சித்த?”

“சொல்லுறதுல பலவகை இருக்குடா. அதைக் கணக்காப் பாவிச்சாத்தான சொல்ல வந்ததை சரியாச் சொல்ல முடியும். சரி, அதென்னன்னு சொல்லுறேங் கேட்டுக்க!

விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது

விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது

விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது

விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது

வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது

மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?

மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது

பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.

பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது

புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது

புகலுதல்: விருப்பத்தோட சொல்றது

புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது

பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது

பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது

பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது

நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது

நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது

நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது

செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது

சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது

கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...

குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது

குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது

கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது

கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது

கத்துதல்: உரத்துச் சொல்லுதல்

ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது

என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது

உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது

உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது

இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது

இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது

அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது

கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது

அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது

ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது

ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது

கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது

கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது

சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது

சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது

சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது

நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது

நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது

நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது

மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது

நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது

இதெல்லாம் ஒருத்தர், இன்னொருத்தர்கிட்ட சொல்ற விதம். இதுவே, ஒன்னுக்கு மேற்பட்டவங்க மாறி மாறிச் சொல்லிகிட்டா, அது பேசுறதுன்னு ஆயிடும். அதுல நிறைய விதம் இருக்கு. சொல்லுட்டுமாடா பேராண்டி?”

“அய்யோ அப்பிச்சி, சித்த நீங்க கிளம்புங்க. நீங்க சொல்றதைப்பத்தி சொன்னது போதும். ஆளைவிடுங்க இப்ப!”

"சரிடா பேராண்டி! இன்னைக்கு இது போதும் அப்ப. நீ தூங்கு, நான் வாறேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை வரும் போது இனி என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

15 comments:

தமிழ் நாடன் said...

அப்பச்சியை அடிக்கடி வரச்சொல்லுங்க ஐயா! நாங்களும் ரெண்டு விடயம் புதுசா தெரிஞ்சுப்போம் இல்ல?

சொல்றதுல்ல இத்தனை வகையா???

அது கடுகடுத்தலா? கடுகுடுத்தலா?

அருமையான இடுகை!

ஈரோடு கதிர் said...

ஏனுங்க மாப்பு....

அப்பிச்சி
விளம்புனாரா? விளத்துனாரா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணே, நீங்க பாசக்கார பேரனா இருப்பீங்க போல.. அப்புச்சி நிறைய சொல்றாரு உங்களுக்கு. எப்படியோ எல்லா பேராண்டிகளுக்கும் நல்லது தானே!

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

நல்லதொரு இடுகை. பல சொற்கள் சொல்லுதல் என்பதற்கு. பல வித பொருளுடன். ஆனால் எங்காவது இவைகளில் ஒன்றாவது தற்போது பயன்படுத்தப்படுகிறதா ? இருப்பினும் சுவையாக இருக்கின்றன. நன்று நன்று நல்வாழ்த்துகள்

vasu balaji said...

அப்பிச்சி விளத்துனத ஊன்றச் சொன்னதற்கு நன்றி பழமை. (சரியா:-s)

ராஜ நடராஜன் said...

//அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. என்ன நினைச்சாரோ நேற்றைக்கு வந்தாருங்க//


தாத்தா வந்துட்டாரா?

ராஜ நடராஜன் said...

நப்பிளித்தல் நல்லாயிருக்கே:)

க.பாலாசி said...

சொல்றதுல இத்தனை வகைகளா?....ஆத்தாடி....

அப்பிச்சிக்கு நன்றிங்ணா....

தாராபுரத்தான் said...

சுத்தி வளைச்சு நீங்க எங்க வர்றீங்கன்னு புரியுது.

குறும்பன் said...

\\நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது\\ அதாவது வயசுப்பசங்க வயசுப்பிள்ளைங்ககிட்ட பேசறதுக்கு பேரு நப்பிளித்தல் அப்படிங்கிறிங்க :-).

சொல்வதிலேயே இவ்வளவு வகை பிரிவு இருக்கா?

நாம் என்ன சொல்ல வர்ரோம் அப்படின்னு எதிரில் கேட்பவருக்கு புரியாமல் பேசுவதுக்கு என்னங்க பேர்?? இதை உளறுதல்ன்னு சொல்லலாமா?
எடக்கு மடக்கா பேசறத என்னன்னு சொல்லறது?

பழமைபேசி said...

@@தமிழ் நாடன்

கடுமையைக் குடுத்தல் - கடுகுடுத்தல்

@@கதிர் - ஈரோடு

விளம்பி விளத்துனாருங்க மாப்பு!

@@ச.செந்தில்வேலன்(09021262991581433028)

அதானே!

@@cheena (சீனா)

நன்றிங்க ஐயா!

@@வானம்பாடிகள்

சரிதானுங்க பாலாண்ணே!

@@ராஜ நடராஜன்

நப்பிளிக்கிறது மாதிரி இருக்கே? இஃகி!

@@க.பாலாசி

உங்களுக்குமு!

@@ அப்பன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்.........

@@குறும்பன்

பேசுறதுல பல இரகம் இருக்கு... நீங்க சொல்றது உளறல்!

பழமைபேசி said...

//@@குறும்பன்

பேசுறதுல பல இரகம் இருக்கு... நீங்க சொல்றது உளறல்!//

கோவிச்சுக்காதீங்க... நீங்க கேட்டது உளறல்! இஃகி!! அய்யோ... இதுவும் இடிக்குதே?! அவ்வ்வ்வ்வ்....

இதுக்கு நான் எப்படி பதில் சொல்வேன்... ஆஆ, யோசனை வந்திருச்சு...

அடுத்தவனுக்கு புரியாதபடி சொல்றது டோக்கடித்தல்!பொடிவைத்தல்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்காருல்ல...,

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல அழகான அறிமுக சொற்கள்

Prince said...

அற்புதம்! :)