10/19/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 8

இடவலம் கேட்பது, பூக்கேட்பது, திருநீறு குங்குமம் கேட்பது என்றெல்லாம் கிராமப்புறத்தில் சொல்வார்கள். அதாவது ஒரு முடிவை எடுப்பதில் மனம் சஞ்சலமாக இருக்கிற நேரத்தில், அருகிலுள்ள, அல்லது அவர்களுடைய குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டு, பின் பூசாரியிடம், பூசாரி ஐயா நான் எடவலம் கேக்குலாமின்னு இருக்கேன் என்று சொல்லி இறைவனை இறைஞ்சி பிரார்த்திப்பார்கள்.

பூசாரியும் தெய்வத்திற்கு பூக்கள் சாத்தி பூசையைத் தொடர்ந்து நடத்துவார். அப்போது, இட்ட பூக்களில் எந்தப் பக்கத்து பூ முதலில் துலங்குகிறதோ, அதாவது எந்தப் பக்கத்துப் பூ முதலில் கீழே இடறி விழுகிறதோ அதைச் சொல்வார், ’ம்ம், ஆத்தா நிறைஞ்ச மனசோட வலங்குடுத்து இருக்குறா இன்னைக்கு!’ என்று.

வழிபடுபவரும் அது என்ன முடிவாக இருந்தாலும், அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். இதே போன்றதுதான் பூக்கேட்பதும். வெண்பூ, சிவப்புப்பூ என இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கேட்பது. நான் சிறுவனாக இருக்கும் போது, சுஞ்சுவாடி கிராமம் தேவனல்லூர் புதூரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு எமது பாட்டனாருடன் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற கோவில் அது.

வருடா வருடம் நோன்பு சாட்டி, தீமிதி விழா எல்லாம் நடக்கும். ஆண்கள் குண்டம் இறங்குவார்கள். பெண்கள் பூச்சாற்றுவார்கள், அதாவது குண்டத்துலே இருக்கும் தழல்ப்படிகங்களைக் கையால் எடுத்து அம்மனை நோக்கிச் சாத்துவார்கள். கோவிலில் பயபக்தியோடு அம்மனை வழிபட்டு, பின் ஊர்க்கிணற்றுக்குச் சென்று நீராடிவிட்டு, அம்மன் கோவில் வாசலில் இருக்கும் குண்டத்திற்கு வந்து பூச்சாற்றுவார்கள்.


அம்மா, ஆத்தா என்று, உடுக்கம்பாளையம், லெட்சுமாபுரம், குண்டலப்பட்டி, கூளநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, சிஞ்சுவாடி என சுற்றுபற்றுக் கிராமத்தாரும் இறைஞ்சி வழிபடுவதைப் பார்க்கும் போது மிக மிக உருக்கமாக இருக்கும். நினைவு தெரிந்த பருவத்தில், எனக்கு முதல் மொட்டையும் காதுகுத்து விழாவும் நடந்தது அந்தக் கோவிலில்தான்.

சின்ன சின்னப் பூக்களுடன் இளஞ்சிவப்பு வண்ண சட்டையும், கறுப்பு வண்ண அரைக்கால் சல்லடமும், மொட்டையும், புதிதாய்க் குத்தப்பட்டு கம்மல்கள் அணியப்பட்ட காதுகளுமாய், அந்தக் கோயிலடி வளாகத்தில் கதாநாயகனாக, மகள் வயிற்றுப் பேரனாக அவ்வூரையே வலம் வந்த இனிமைப் பொழுது இன்றும் மனதில் நிழலாடுகிறது. ஆனால், காதில் குத்தப்பட்ட துவாரங்கள் மறைந்து விட்டன; கம்மல்கள் போன இடம் தெரியவில்லை; அப்பிச்சி அமுச்சியும் மரித்து விட்டார்கள். அதைவிடப் பெரிய இழப்பு, எமது பண்ணையத்தில் காலாகாலத்திற்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்த முத்தனும் முத்தியும் மறைந்து விட்டார்கள் என்பதே!

ஆனால், அந்த நினைவுகள் எம்முள் என்றென்றும் வாழும்.அந்த நல்ல பசுமையான நினைவுகளோடு, மேற்சொன்ன ஊர்களைத் தன்னகத்தே கொண்ட கொங்கு நாட்டின் ஒரு வேளரசான, நல்லுருக்கனாடு காண்போம் வாருங்கள் மக்காள்!


சமத்தூர்மா னுப்பட்டி அந்தியூர் புக்குளம்
தளிவாழை வாடிசித்தூர்
தாழ்வில்பூ லாங்கிணறு சுஞ்சிவா டியினோடு
சாற்றுடுக் கம்பாளையம்
நிமித்தமுறும் அங்கலக் குறிச்சி யேர்ப்பட்டியும்
நீள்குறிச் சிக்கோட்டையும்
நேமமுறு முடுமலைப் பேட்டைவே லூர்வளம்
நீள்குறுஞ் சேரியூரும்
அமைந்தகோட் டூர்புதூர் மலையாண்டி பட்டண
மழகிளைய பாளயத்தோ
டமர்சடைய பாளையமு மேலமில வங்கமுல
கரியமிள காதிவிளைவும்
திமிர்த்தன மிலங்குவெண் கோட்டிபமு மோங்கிச்
செழித்துவளர் பூனாச்சியுந்
திகழவல் லார்க் குதவி புரியுநல் லார்க்கணியுரை
செறியுந லுருக்கனாடே!

சமத்தூர், மானுப்பட்டி, அந்தியூர், புக்குளம், தளி, வாழைவாடி, சித்தூர், பூலாங்கிணறு, சுஞ்சுவாடி, உடுக்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, ஏர்ப்பட்டி, குறிச்சிக்கோட்டை, உடுமலைப் பேட்டை, வேலூர், குறுஞ்சேரி, கோட்டூர், புதூர், மலையாண்டி பட்டணம், இளையபாளையம், சடையபாளையம் என, ஆக மொத்தம் 21 ஊர்கள் கொண்டதுதாங்க நல்லுருக்கனாடு.

ஒரு சில ஊர்கள் ஆறை நாட்டுலயும், நல்லுருக்கனாட்டிலும் பொதுவா இருக்கிறதைக் காணலாம். ஆம், இன்றைய ஊர்கள் அந்நாளில் பிரிந்து இரு வேறு நாடுகளின் நிர்வாகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. ஆக மொத்தத்தில், உங்கள் பழமைபேசி ஆறை நாட்டுக்கு மகனாகவும், நல்லுருக்க நாட்டின் மகள் வயிற்றுப் பேரனாகவும் இருப்பதையும் இது காட்டுகிறது! என்னா அலம்பல்டா சாமி இவனுது?! இஃகிஃகி!!

13 comments:

ரவி said...

voted

ப்ரியமுடன் வசந்த் said...

//காதில் குத்தப்பட்ட துவாரங்கள் மறைந்து விட்டன//

ரொம்ப வருத்தப்படாதீங்க ஐயா

அமெரிக்காகாரய்ங்க நல்லவைங்க அதனால இன்னும் குத்துப்படாம இருக்கீங்க....

ஹெ ஹெ ஹேய்...

:))))

ப்ரியமுடன் வசந்த் said...

//என்னா அலம்பல்டா சாமி இவனுது?! இஃகிஃகி!!//

அலம்பலா?

இல்லை

அழம்பலா ?

நேற்றைக்கு என்கிட்ட சொன்னதுக்கு விளக்கம் அப்போ என்ன?

அலும்பு & அழும்பு

அது சரி(18185106603874041862) said...

//
ஆக மொத்தத்தில், உங்கள் பழமைபேசி ஆறை நாட்டுக்கு மகனாகவும், நல்லுருக்க நாட்டின் மகள் வயிற்றுப் பேரனாகவும் இருப்பதையும் இது காட்டுகிறது!
//

ஆஹா...அண்ணன் சந்தடி சாக்குல ரெண்டு நாட்டுக்கும் வாரிசுரிமை கேட்டுட்டாருப்பா....:0)))

ஆ.ஞானசேகரன் said...

நானும் கேள்விப்பட்டுள்ளேன்.... பகிர்வுக்கு நன்றி நண்பா

தாராபுரத்தான் said...

தாராபுரம் என்னாச்சு ?

தமிழ் நாடன் said...

இஃகி! இஃகி! இஃகி! காத சொன்னேன்!

ஈரோடு கதிர் said...

மகள் வயிற்றுப் பேரனாக கிராமங்களுக்குப் போகும்போது கிடைக்கும் பாசமும், அன்பும் அனுபவிக்க வேண்டிய ஒன்று

//முத்தனும், முத்தியும்//
இதுபோல் ஒவ்வொரு பண்ணயத்திலும் மறக்கமுடியாத நபர்கள் உண்டு

மாப்பு..... அருமையான இடுகை

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...
/அழம்பலா ?

நேற்றைக்கு என்கிட்ட சொன்னதுக்கு விளக்கம் அப்போ என்ன?

அலும்பு & அழும்பு/
வணக்கம் பழமை.
அதான. நம்ம திண்ணைல கேள்வி கேட்டு போட்டு பரிசுன்னு வேற சொல்லி போட்டு ஒன்னுஞ்சொல்லாம இருந்தா எப்படி? பதிலெல்லாஞ் செரியா தப்பா?

க.பாலாசி said...

இந்த பூக்கேட்பது எங்க ஊர்லயும் இன்றும் இருக்கிறது.

//உங்கள் பழமைபேசி ஆறை நாட்டுக்கு மகனாகவும், நல்லுருக்க நாட்டின் மகள் வயிற்றுப் பேரனாகவும் இருப்பதையும் இது காட்டுகிறது!//

அதனாலதானே ஆறை நாட்டானின் அலம்பல்களை தெரிஞ்சிக்கமுடியுது.

நல்ல இடுகை....

பழமைபேசி said...

@@செந்தழல் ரவி

நன்றிங்க ரவி!

@@பிரியமுடன்...வசந்த்

அலம்பல்னா, அதிகப்படியான செய்கை!
அழிம்பு -- தீஞ்செயல்

@@அது சரி

அது சரி அண்ணனோட பின்னூட்டம்னா சும்மாவா?

@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்

@@அப்பன்

வந்துட்டே இருக்குங்க....

@@ கதிர் - ஈரோடு

மாப்பு, வணக்கம்!

@@வானம்பாடிகள்

பாலாண்ணே, வணக்கம். அலசிடுவோம் இருங்க!

@@க.பாலாசி

நன்றிங்க நண்பா!

குறும்பன் said...

சாதகம் பாக்கறது பெருகிவிட்டாலும் கோயிலில் சைனம்\குறி கேக்கறது இன்னும் போகவில்லை. சோழி (குட்டி சங்கு மாதிரி இருக்குமே) போட்டு பாக்குறதும் உண்டு.

\\ஒரு சில ஊர்கள் ஆறை நாட்டுலயும், நல்லுருக்கனாட்டிலும் பொதுவா இருக்கிறதைக் காணலாம்.\\

நான் அந்த ஊரின் சில தெருக்கள் ஒரு நாட்டினையும் மற்ற தெருக்கள் வேறொரு நாட்டினையும் சார்ந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நீங்க ரெண்டு நாட்டுக்காறனாயும் இருப்பது தப்பில்லை. ஆமா வாரக்க நாடு அப்படின்னு ஒண்ணு இருக்குதே அவங்க கோவிச்சக்கமாட்டாங்க.. இஃகிஃகி

பழமைபேசி said...

//குறும்பன் said...

நீங்க ரெண்டு நாட்டுக்காறனாயும் இருப்பது தப்பில்லை. ஆமா வாரக்க நாடு அப்படின்னு ஒண்ணு இருக்குதே அவங்க கோவிச்சக்கமாட்டாங்க.. இஃகிஃகி

October 20, 2009 11:23 AM//

அய்ய, அவங்கதான வளர்த்து விட்டதே...