5/27/2009

இனவெறியர்களுக்கு அமெரிக்காவின் மேலுமொரு பரிசில்!

ஏகாதிபத்தியம் என்றோம். முதலாளித்துவ ஏதேச்சதிகாரம் என்றோம். பெரியண்ணனாய் பிரம்பு எடுத்து சட்டாம்பிள்ளை வேலை பாக்கும் பெரியதனம் என்றோம். ஆனால் இன்று தலைகுனிந்து, வாய் பொத்தி நிற்கிறோம். தமிழன் கேள்வி கேட்பாரற்று கொல்லப்பட்டும், அல்லல்பட்டுக் கொண்டும் இருக்கிறான். நாம் ஏசிய அவனுக்குத்தானே, மனம் இளகியது?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், அலபாமாக் கொடுமைகள் நடந்த மண்ணில், மகோன்னதம் நிகழ்கிறது. அலபாமாக் கொடுமைகளில் சிக்கிச் சீரழிந்தவன் பிள்ளை, தேசத்துக்கே அதிபர் ஆகிறான் அந்த மண்ணில் இன்று!


அடுத்த சிறுபான்மை இனத்துள் பூத்த இசுபானியப் பூவை, தேசத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஆக்கப்பட்டு அழகு பார்க்கும் தேசம்!! அடுத்த அதிபருக்கான போட்டியில், பிழைக்க வந்த இந்தியப் பிள்ளையை நிறுத்தத் தயாராகிறது இந்த அழகான அமெரிக்க தேசம். உலகெங்கும் இருக்கிற மகிந்த போன்ற இனவெறியர்களுக்கு இதமான இன்னொரு பரிசல் இது!




பொதுவுடமை என்றோம். ஏழைப் பங்காளன் என்றோம். தமிழனுக்கு உற்ற நண்பன் என்றோம். ஐயகோ! மனிதர்களை துவம்சம் செய்த இலங்கை அரசு, இல்லை, இல்லை, இனவெறி பிடித்த தனிநபர்கள் மகிந்தவுக்கும் அவரது கைத்தடிகளுக்கும் வால் பிடிக்கும் பொதுவுடமைகள், இரசியாவும், சீனாவும், க்யூபாவும்! இவர்களுக்குத் துணையாய் இன்னும் சிலர்.

1995, ஏப்ரல் பத்தொன்பதாம் நாள், ஒக்லகோமாவில் குண்டு வெடிப்பு. அப்பாவி மக்கள் 168 பேர் பலி. மனித அவலம்! உணர்ச்சி வசப்பட்டோம். கடிதம் சமர்ப்பிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஊறு நேர்கையில், இது போன்ற அவலங்கள் ஏற்படுவது இயற்கை என்றது அது. நயவஞ்சக தமிழக ஊடகம், கடிதம் கொடுத்தமையை வீரம் என்று போற்றியது.

வெந்த புண்ணில் வேலன்றோ? நிலைமைகள் எந்த கணமும் மாறிடலாம். உணர்ச்சி வயப்படல் பின்னாளில் நமக்கே வேதனை அளிக்கக்கூடும் என்பதற்குச் சான்றுதானே இது? அதன் விளைவாய் நமக்கு நாமே வேண்டாதன தேடிக் கொண்டோம். இன்று, அவனுக்குத்தானே நீதியின்பால் அக்கறை? இன்றும் அதே ஊடகம் கபட நாடகம் ஆடுகிறது. விளைவுகள்??

அன்று உணர்ச்சி வயப்பட்டோம்; அரக்கி என்றோம்; இராட்சசி என்றோம்; சூர்ப்பனகை என்றோம்! எறும்பு ஊறக் கல்லும் தேயுமன்றோ? இன்றைக்கு ஈழத்தாய் என்கிறோம்.

அன்று தமிழ் இனத் தலைவர் என்றோம்; முத்தமிழ் அறிஞர் என்றோம்; காலத்தின் கோலம்! இன்றும் உணர்ச்சி வயப்படுகிறோம்! கொலைஞர் என்கிறோம்; துரோகி என்கிறோம்; சப்பாணிக் கழுதை என்கிறோம்; தமிழ் ஈனத் தமிழன் என்கிறோம்.

மதுவுக்கு மயங்கும் வண்டாய், இசைக்கு மயங்கும் அசுணமாப் பறவையாய், நெருப்பின் ஒளிக்கு மயங்கும் விட்டில் பூச்சியாய், தூண்டில் புழுவுக்கு மயங்கும் மீனாய், ஊடகத்தின் உசுப்பலுக்கு மயங்கும் தமிழா, அமெரிக்காவைப் பார்! இன்று போர்க் குற்றம் புரிந்த அசுரனுக்கு பாடம் புகட்ட விழையும் அவனைப் பார் தமிழா, நேற்று நாம் இகழ்ந்த அவனைப் பார்!!



30 comments:

ஸ்ரீ said...

ஆப்கானிலிரும் ஈரானிலும் போர் இன்னும் முடியவில்லை... இனவெறி இசுரேலின் தாகம் பாலஸ்தீன மகவின் குருதி குடித்தும் தீரவில்லை... கொடுத்தான் அவன் குரல் மறப்போம் இசுரேலின் கொலைகளை, கேட்டான் அவன் ஒரு கேள்வி, மறப்போம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை.. நடக்கும் அரசியல் நாடகத்தில் செயாவும் ஈழத்தாயாகலாம். தமிழன் பிணத்தை வைத்து உலக அரசியல் பிச்சை எடுக்கிறது. இது எனது பத்து பைசா!

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி தோழரே..

butterfly Surya said...

நூறாவதாக பின் தொடர்கிறேன்.

வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

அமெரிக்கா பற்றிய விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் கொள்கையைப் பாராட்டியே ஆகவேண்டும்.

பழமைபேசி said...

// ஸ்ரீ said... //

அதாஞ் சொல்றது.... இனவாத அரசைத் தவிர, யாரையும் உணர்ச்சி வசப்பட்டு கடுவா முடுவான்னு சொல்ல வேணாம்... யாரு எப்ப உதவிக்கு வருவாங்கன்னு தெரியாது இல்லீங்களா?

ஆனா, உங்க பத்து பைசா நெம்ப கனமாவே இருக்குங்கோய்.... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//வண்ணத்துபூச்சியார் said...
நூறாவதாக பின் தொடர்கிறேன்.

வாழ்த்துகள்.
//

ஆகா, நீங்கதான் 100வது அன்பரா? மிக்க நன்றிங்கோய்....

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
அமெரிக்கா பற்றிய விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ளும் கொள்கையைப் பாராட்டியே ஆகவேண்டும்.
//

அண்ணா, வாங்க! முன்மாதிரியா இருக்க முயற்சி செய்யுறாங்க...நாமளும் பாராட்டுறோம்... கூடவே, நாமளும் யாரையும் வையப்படாது பாருங்க...

நசரேயன் said...

இவங்க பெருந்தன்மை யாருக்கு வரும்

பழமைபேசி said...

//நசரேயன் said...
இவங்க பெருந்தன்மை யாருக்கு வரும்
//

வாங்க தளபதி...

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி பழம...

அமேரிக்காவை போல நாம் சுயப்பரிசோதனை செய்வதில்லை என்பது வேதனையாகின்றது. இனியாவது மீதம் உள்ள தமிழனை காப்பாற்றுவார்களா? என்றால் ஒன்றும் தெரியவில்லை...

Muniappan Pakkangal said...

Asuranukku paadam puhatta vizhaiyum avanai paar,thamizhaa-nijam pazhamaipesi.

Mahesh said...

உணர்ச்சிவயப்படல் அவசியமேயில்லை என்ற கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்... 100%

ஆனால் நம் முத்தமிழ் அறிஞர் அவசியமற்ற சிறு விஷயங்களில் உணர்ச்சி வயப்படுவதும், கோவப்படுவதும், சிறுபிள்ளைபோல் நடந்து கொள்வதும் கண்டிப்பாக ஒரு தலைவனுக்கு அழகல்ல...

vasu balaji said...

/மதுவுக்கு மயங்கும் வண்டாய், இசைக்கு மயங்கும் அசுணமாப் பறவையாய், நெருப்பின் ஒளிக்கு மயங்கும் விட்டில் பூச்சியாய், தூண்டில் புழுவுக்கு மயங்கும் மீனாய், ஊடகத்தின் உசுப்பலுக்கு மயங்கும் தமிழா/

சரிதான். கட்சிப் பாகுபாடின்றி இதை பயன் படுத்துவதன் பலன் தான் அவர்களுக்கே எதிராகிறது என நினைக்கத் தோன்றுகிறது. இவங்களாவது உதவ மாட்டார்களா என்று பார்த்து பார்த்து இப்போது பெரியண்ணனை எதிர் நோக்குகிறோம்.

அவன்யன் said...

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது வெளயுரவு கொள்கை என்பது காலத்திற்கு ஏற்றாற்போல் மாற வேண்டியது தான் அதற்கென்று இப்படியா. இந்தியா அமெரிக்காவிடமும் கை கட்டி நிற்கிறது. சீன,ரஷ்ய அரசுகளிடம் தற்போது ஒட்டி கொண்டுள்ளது இலங்கை விசயத்தில். ரா இந்தியாவின் பிராந்திய நலன்களை பேணவும் அதற்கு அச்சுறுத்தலாக உள்ள பிற நாடுகளின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் ஏற்படுத்த பட்ட அமைப்பு. அனால் அது தன பாதையில் இருந்து விலகி எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவின் பிராந்திய நலனை மேல் காட்டி ஈழ தமிழரின் வாழ்வு பகடைகயாய் ஆக்கப்பட்டு விட்டது.

என்ன தான் நம் உணர்வுகளை ஒடுக்கி கொண்டாலும் சில விடயங்கள் மனதை நெருடி கொண்டு தான் இருக்கின்றன.

1. வியன்னாவில் தேரா சச்சா அமைப்பினரின் குருமார்கள் தீயிட பட்டதற்கு நீதி விசாரணை அமைக்க அரசு முயன்று வருகிறது. ஈழத்தில் எத்தனையோ லச்சம் மக்கள் கொல்லப்பட்டு உள்ள இந்த நிலையில் இந்திய அரசு மௌனம் காப்பது மட்டும் இல்லாமல் இலங்கையை ஆதரித்து வருகிறது. அப்படி என்றால் தமிழர் எல்லாம் இந்திய குடிகள் இல்லையா. அவர்களின் குரலுக்கு ஏன் நம் நடுவண் அரசு குரல் கொடுப்பதில்லை

2. நம் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஏன் ஈழ தமிழரை காக்கும் பொருட்டு நம் பிரதமரை சந்தித்து பேசவில்லை. கடிதம் மூலம் மட்டுமே வற்புறுத்துவது எந்த பலனை அளிக்கும். நேரில் சென்று ஒரு விடயத்தை வலியுறுத்துவதும் கடிதம் மூலமாக வலியுறுத்துவதும் ஒன்றாகுமா.

3. முதல்வரை மட்டுமே குற்றம் சொல்கிறோம் மற்றவர் யாரையும் குற்றம் சொல்வதில்லை என்பது முதவரின் அபிமானிகளின் குற்றசாட்டாக உள்ளது. வைகோ, நெடுமாறன், வீரமணி இன்னும் பலர் ஈழ தமிழர்களை பாதுகாக்க சொல்லி முறையிட்டாலும் அவர்களின் குரலுக்கு வலிவு இல்லை. நம் முதல்வர் பால் மரியாதையை கொண்டுள்ளதாக கூறப்படும் காங்கிரஸ் மேலிடம் நம் முதல்வர் வலியுறுத்தினால் கேட்காதா, அந்த வலிவு முதல்வர் குரலுக்கு உள்ளதென்றே நான் நினைகிறேன்.

4. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் கமிசன் என்ற ஒன்றை அமைத்தது காங்கிரஸ் அரசு தானே. அதன் பரிந்துரைகளை ஏன் காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை. மேதகு கார்த்திகேயன் அவர்கள் முதலில் இருந்தே விடுதலை புலிகள் தான் குற்றவாளிகள் என வழக்கை கொண்டு சென்று ஏன். அவரை அவ்வாறு வழக்கை கொண்டு செல்ல பணித்தது யார். பிரேமதாசா-சந்திராசாமி-மாத்தையா இடையே இருந்த தொடர்பென்ன. ராஜீவ் கொல்லப்பட்ட காலத்தில் புலிகள் இயக்கத்தில் மாத்தையா பிரபாகரனக்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர். அவர் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்க படாதது ஏன். ராஜீவுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது சற்றும் பிரபலமில்லாத நரசிமராவ் எப்படி திடிரென்று பிரதமரானார் அவர் சந்திராசாமிக்கு நெருக்கமானவர் இது நெருடலாக இல்லையா. கேள்விகள் பல விடைகள் கிடைக்கவில்லை என்பதை விட தேடப்பட இல்லை என்பதே உண்மை.

உணர்வுகளால் நாம் தவறான முடிவுகள் எடுக்கிறோம் என்பது உண்மை தான், அனால் சில விடயங்கள் வெளிப்படையாய் தெரியும் போது ஒரு மனிதன் உணர்ச்சிவச படுவது இயல்பான ஒன்று தானே.

மேலுள்ள என் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள் என் நண்பர்களே.

சுந்தர் said...

சதமடித்தற்கு முதலில் வாழ்த்துக்கள். அசுணமாப் பறவை எங்க இருக்கு, நான் கேள்விப் பட்டதே இல்லையே.

தீப்பெட்டி said...

நீங்கள் சொல்லுவதை வழிமொழிகிறேன்

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்
@@Muniappan Pakkangal

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

பழமைபேசி said...

//Mahesh said... //

அண்ணே, வாங்க வணக்கம்!!


//ஆனால் நம் முத்தமிழ் அறிஞர் அவசியமற்ற சிறு விஷயங்களில் உணர்ச்சி வயப்படுவதும், கோவப்படுவதும், சிறுபிள்ளைபோல் நடந்து கொள்வதும் கண்டிப்பாக ஒரு தலைவனுக்கு அழகல்ல...
//

அந்த மாதிரியான சூழலில், கண்டிப்போடும்(strict) தீவிரமாகவும்(aggressive) எதிர்க்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் காழ்ப்போடுwith vulgarity) அல்ல!!

அதுவும் அச்சில் ஏறுகிற எதிலும்... இடுகையில் குறிப்பிட்ட வார்த்தைகள் எதோ ஒரு சூழலிம் பிரயோகித்தவரைக்கும், அவர் சார்ந்த அமைப்புக்கும் நலப் பயக்காது, அது வீரமும் ஆகாது. முத்தமிழ் அறிஞருக்கு எதிராக என்பது அல்ல, எவருக்கெதிராகவும்....

பழமைபேசி said...

@@பாலா...

பாலாண்ணே, வாங்க! பாரா மடந்தையே ஆனாலும், பார்க்க வைப்பதில்தான் வெற்றி இருக்கிறது. பாரா மடந்தையை ஏசி, எதிர்த்து, இருக்கும் இடைவெளியை உறுதிப்படுத்திக் கொள்வது வெற்றியளிக்காது!!!

பழமைபேசி said...

//உணர்வுகளால் நாம் தவறான முடிவுகள் எடுக்கிறோம் என்பது உண்மை தான், அனால் சில விடயங்கள் வெளிப்படையாய் தெரியும் போது ஒரு மனிதன் உணர்ச்சிவச படுவது இயல்பான ஒன்று தானே. //

வாங்க அவன்யன்! உணர்ச்சி வயப்படுதல் மனிதனின் கூறு! அதை அனைவரும் தவிர்க்கும் பட்சத்தில் உலகில் அனைவரும் மகான்களே! அப்படியிருக்க வாய்ப்பில்லை....

ஆனால், இடைத்தரகர்களின் உசுப்பலுக்கு இரையாகி தடித்த சொற்களால், முன்னாள், இந்நாள், ஏன் நாளைக்கு வரும் தலைவர்களையே கூட அமங்கலப் படுத்தும் போக்கில்தானே தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் இருக்கிறோம்... அத்தகைய செயல்களால் நமக்கு நாமே வருவித்துக் கொள்கிறோமா இல்லையா??

பழமைபேசி said...

//தேனீ - சுந்தர் said...
சதமடித்தற்கு முதலில் வாழ்த்துக்கள். அசுணமாப் பறவை எங்க இருக்கு, நான் கேள்விப் பட்டதே இல்லையே.
//

அது இசைக்கு மயங்குற பறவைங்க நண்பா! இசை கேட்டால் ஓடி வரும். அப்படியிருக்க வேடவர்கள், நெருப்பின் மீது பறைகளை ஒலிக்க, அது வந்தவுடன் பறையை விலக்கியவுடன், கீழிருக்கும் நெருப்பில் விழுந்து வேடனுக்கு இரையாகும். நாமும் இப்படித்தான் இரையாகிப் போகிறோமோ என்கிற ஆதங்கம் எமக்கு?!

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...
நீங்கள் சொல்லுவதை வழிமொழிகிறேன்
//

நன்றிங்க நண்பா!

அவன்யன் said...

"" வாங்க அவன்யன்! உணர்ச்சி வயப்படுதல் மனிதனின் கூறு! அதை அனைவரும் தவிர்க்கும் பட்சத்தில் உலகில் அனைவரும் மகான்களே! அப்படியிருக்க வாய்ப்பில்லை....

ஆனால், இடைத்தரகர்களின் உசுப்பலுக்கு இரையாகி தடித்த சொற்களால், முன்னாள், இந்நாள், ஏன் நாளைக்கு வரும் தலைவர்களையே கூட அமங்கலப் படுத்தும் போக்கில்தானே தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு பகுதியினர் இருக்கிறோம்... அத்தகைய செயல்களால் நமக்கு நாமே வருவித்துக் கொள்கிறோமா இல்லையா??""


இல்லை நண்பேனே நான் சொல்ல வந்தது உன்னால் தவறாக புரிய பட்டு விட்டது. நாம் என்ன தான் மரியாதையோடு சொன்னாலும் எல்லாம் வல்ல அந்த இறைவன் படைத்த சில உயிர்கள் திருந்த போவது இல்லை. எனக்கு எந்த தமிழ் அரசியற் தலைவர் மீதும் பிடிப்பு இல்லை. அனால் நமது முதல்வர் செய்தது இமாலய தவறு. இப்போது கூட பாருங்கள் அவர் தம் குடும்ப உயிர்களுக்காக தான் டெல்லி சென்று இருக்கிறே ஒழிய எம் மக்களை பற்றி பேசுவதற்கு அல்ல. நீங்களே சொல்லுங்கள் பதவிக்காக பேரம் பேச டெல்லிக்கு போகும் இவர் மீதமுள்ள நம் உறவுகளுக்காக ஏன் நேரில் சென்று பேசுவதில்லை கடிதம் எழுதுகிறார். ஏன் நாளை யாரவது கேட்டால் இதோ நானும் தான் கடிதம் எழுதி இருக்கிறேன் என காட்டவா. உண்மையை சொல்லுகிறேன் பல தவறுகள் அவர் செய்து இருந்தாலும் அவரின் தமிழ் உணர்வு என்னை சிலிர்க்க வைத்து இருக்கிறது. தமிழுக்கு போராட ஒரு தலைவன் உண்டு என பல முறை நினைத்து இருக்கிறேன் ஆனால் இப்போது. நண்பா வெளிபடையாக தெரியும் ஒரு விடயம் மறுக்காதீர். என்னால் என்ன சமாதானம் நீர் சொன்னாலும் ஏற்று கொள்ள இயலாது. இனி இவர் எது செய்து மீதமுள்ள தமிழரை காப்பாற்றினாலும் நான் அந்த செயலுக்காக இவரை பாராட்டுவேன் ஆனால் தயவு செய்து இவரை தமிழின தலைவர் என சொல்லாதீர்.
உணர்வுகள் ஒரு மனிதனின் உயிர் ஆதாரங்கள். கோபபடுவதும் உணர்ச்சிவச படுதலும் மனிதனின் இயல்பு இவை இல்லை என்றால் நாம் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. நண்பனே ஒருவரை சாடுவதில் வார்த்தைகள் நாகரீகமாய் பயன் படுத்த படல் வேண்டும் உண்மை ஆனால் இங்கே பதிவு எழுதும் அனைவரும் எழுத்து நாகரீகம் கற்றவர் அல்லவே. எனவே நாம் அதை எதிர்பார்த்தல் தவறு. அவரவர் எண்ணங்களை கொட்டி தீர்க்கிறார்கள் அவ்வளவே. என்னதான் நாம் உணர்ச்சி வய பட்டாலும் இறைவன் ஒருவர் உள்ளார். குற்றம் இழைக்கும் ஒருவரும் அவரிடம் இருந்து தப்ப இயலாது.
சரி ராஜபக்சேவை நம்மால் என்ன செய்ய இயலும் நீ சொல். இதோ இன்று ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக சில நாடுகள் கொண்டு வந்த போர்க்குற்ற தீர்மானம் 26-12 என்ற எண்ணிகையில் தோற்கடிக்க பட்டு விட்டது. என்னை மாதிரி ஒரு பிறவி பயன் பெற்ற இந்திய தமிழன் என்ன செய்ய இயலும். உணர்ச்சிவய பட்டு இப்படி நற்சொற்களால் இந்திய அரசை சாட தான் இயலும். தன நாட்டில் வாழும் ஒரு இனம் வேறொரு நாட்டில் அதன் பூர்வீக குடிகளாய் இருந்தும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அறிந்தும் அம்மக்களின் உணர்வுகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் அவர்களை இன்னும் நசுக்கு என அங்கீகாரம் கொடுத்தார் போல் இல்லையா.இது தன இந்தியாவின் இறையான்மையா .சொல்லுங்கள் நண்பரே. ஐ,நா செயலர் பான்-கி-மூன் இலங்கை அரசை பாரடி இருக்கிறார் தெரியுமா அதை கேட்டு எப்படி கோபபடாமல் இருக்க முடியும். முன்பெல்லாம் இந்தியன் என சொல்லும் போது எனக்குள் ஒரு மின்சாரம் பிறந்து ஓடும். இப்போது சாக்கடையில் நெளியும் புழு போல உணர்கிறேன். குற்ற உணர்ச்சி தினமும் என்னை கொல்கிறது நண்பா.(மன்னித்து கொள்ளுங்கள் நாகரீகம் மீறி விட்டேன்).
நம்மால் என்ன செய்ய முடியும் இந்திய அரசே நீ செய்தது தவறு என கடிதம் போட முடியுமா. அதோடு முடியும் என் கதை. இது தானே இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் நிலையும். இன்னும் சிறிது காலத்தில் என்னை போன்றவர் பைத்தியம் பிடித்து அலைய வேண்டியது தான். இது தான் ஒரு உண்மையான தமிழனின் நிலைமை.
உணர்சிவயல் பட வேண்டும் நண்பா. ஆனால் சிந்தித்து உணர்ச்சி வய பட வேண்டும் அந்த நாள் இந்த உலகம் தமிழனுக்கு பதில் சொல்ல நேரிடும்.

குடந்தை அன்புமணி said...

ஆடதடா ஆடதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா... பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. (எல்லாரும் ரொம்ப ஹாட்டா பின்னூட்டம் போடுறாங்கப்பா)

பழமைபேசி said...

//அவன்யன் said... //

அகோ அவன்யன்! புரியுது, எதிர்பார்க்கிறோம்...நடக்கலை... அடுத்த வழி என்னவோ அதைப் பார்க்க வேண்டியதுதான்... தயவு செஞ்சி மனசைத் தேத்திகுங்க....

என்ன மாதிரியான சாமன்ய, லெளகீக வாழ்க்கை வாழ்றவன் சமாதானமும், ஆறுதலும் மட்டுமே சொல்ல முடியும். ஏன்னா, அதுக்கு மேல எனக்கு வக்கில்லை.

//ஆனால் தயவு செய்து இவரை தமிழின தலைவர் என சொல்லாதீர். //

அஃகஃகா.. நான் எதோ அவரை அப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்னு நீங்களே கற்பனை செய்துகிட்டீங்க போல! நான் சொல்ல வந்தது என்னன்னா, யாரையும் கொச்சைப்படுத்தக் கூடாதுன்னுதான்...

தமிழ்நாட்டுல எதிர்ப்பு அரசியலுக்கு மக்கள் மத்தியில அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது!

பழமைபேசி said...

//குடந்தை அன்புமணி said...
ஆடதடா ஆடதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா... பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. (எல்லாரும் ரொம்ப ஹாட்டா பின்னூட்டம் போடுறாங்கப்பா)
//

குடந்தையார்... சகோதர பாசத்தோட அமைதிய நாடுவோம் நாம!

சிக்கிமுக்கி said...

"பரிசல்" அன்று.
"பரிசில்" என்பதே சரியான வடிவம்.

பழமைபேசி said...

//சிக்கிமுக்கி said...
"பரிசல்" அன்று.
"பரிசில்" என்பதே சரியான வடிவம்.
//

வாங்க சிக்கிமுக்கி, பரிசில், பரிசல் இரண்டும் இடமாறு சொற்களே! வருகைக்கு நன்றி!


பரிசல் parical : (page 2511)

, 11 v. intr. < id. To become acquainted,

பரிசல் parical
, n. பரிசு, 5. Loc.

குறும்பன் said...

சின்னண்ணனும் இங்க பெரியண்ணன் வேசம் போடுறார். அந்த வேசத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி... இது தான் சட்டுன்னு நினைவுக்கு வருது.

பொதுவுடமையாவது முதலாளித்துவமாவது எல்லாம் தன் சொந்த இலாப கணக்கைவைத்தே முடிவுசெய்யப்படுகிறது.

தமிழா..உணர்ச்சி வசப்படு இல்லையென்றால் உன்னை மதிக்கமாட்டார்கள். ஆனால் உன் உணர்ச்சியை பின் சரியான வழியில் செலுத்திடு. இதில் தவறும் போது நீ வீழ்த்தப்படுகிறாய். (எப்போதும் நடப்பது இதுவே)

பழமைபேசி said...

//குறும்பன் said...

பின் சரியான வழியில் செலுத்திடு. இதில் தவறும் போது நீ வீழ்த்தப்படுகிறாய். (எப்போதும் நடப்பது இதுவே)//

அப்பாட! இப்பத்தான் என்னோட இடுகைக்கு சாபவிமோசனம் கிடைச்சா மாதிரி இருக்கு!! நன்றிங்க!!!

இன உணர்வு கொள்ளணும், ஆனா அதை தவறான பாதையில வெளிப்படுத்தக் கூடாது!! நன்றிங்க!!!