5/02/2009

விமர்சனம்: நனவுகள்!

"எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமைபேசியின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே!"

வணக்கம் அன்பர்களே! வார இறுதி நாட்கள் இனிமையாக் கழிந்து கொண்டிருக்கையில், அன்பர் ஒருவர், நனவுகள் சிறுகதைப் புத்தகத்தைப் படித்ததின் பயனாய், நம்மோடு அளவளாவும் பொருட்டு அழைத்ததின் பேரில், நேற்றிரவு அலைபேசியில் சிறிது நேரம் விவாதித்துக் கொண்டு இருந்தோம். கதைத் தொகுப்பினைப் படித்தவர் உணர்ச்சி வயப்பட்டவராய் இருந்ததை அறிய முடிந்தது. அவருடைய பாராட்டுதலுக்கு நன்றி உடையேன்.

தானே கதையின் நாயகனாய் உணர்ந்ததாகவும், பழைய நினைவுகளை அப்படியே அள்ளி வந்ததாகவும் கூறிவிட்டு, எப்படி சிறுகதைகளை எழுதுவது என்றும் வினவினார். ”ஐயா, நானே இப்போதுதான் அரிச்சுவடியைப் புரட்டிக் கொண்டு இருக்கிறேன். நிலைமை அப்படி இருக்கையில், நான் உங்களுக்கு எப்படி?” என்று இழுத்து சமாளித்தேன்.

அவரது கேள்வி, என்னை அது பற்றி மிகவும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவே இந்த இடுகை! சுயஆய்வு என்றும் கூட வைத்துக் கொள்ளலாம். ’அளவளாவுதல்’ எனும் பொருளில் புனைபெயராய்ப் பழமைபேசி!. ஆனாலும் கூட, பழமையான பற்றியங்களில் நாட்டம் கொள்வதும் இயல்பாய் என்னுள் ஏற்படுகிற ஒன்றுதான். இலக்கியத்திலும் அவ்வாறே பகுப்புகள் இருப்பதைக் காணலாம். செவ்வியல் (Classicism), புனைவியல் (Romanticism), நடப்பியல் (Realism), மறுமலர்ச்சி (Renaissance) முதலியவற்றை அடிப்படையாகத் தன்னுள் வைத்திருப்பதுதான் படைப்புகள்.

அவரவர் மனநிலைக்கு ஏற்ப இவற்றில் ஏதோ ஒன்றில் அவர்களுக்கே தெரியாமல் ஆட்படுவது உண்டு. இன்றைய காலகட்டத்தில், வெகுசனப் பத்திரிகையில் பெரும்பாலும் வருபவை, தமிங்கிலத்தைக் கொண்ட நடப்பியல் மற்றும் புனைவியல் அடிப்படையிலான படைப்புகளே! கிராம வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட எவரும் நடப்பியல் அடிப்படையில், அதுவும் இந்த உலகமயமாக்கல் யுகத்தில் படைப்பது என்பது சவாலானதே; புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட! கூடவே, இயன்ற வரை தமிழில் எழுத வேண்டும் என்கிற வேட்கையும், பிடிவாதமும் இருப்பவனுக்கு நடப்பியல் கைகூடி வராதுதான்!

ஏன் வராது என்று வினவலாம், வாதிடலாம்; தனித் தமிழிலும் எழுதிப் படைக்கலாம்; ஆனால் படிப்பதற்கு வாசகர்கள் வேண்டுமல்லவா?! இந்தப் பின்னணியிலே, படைப்பாளன் தனக்குப் பிடித்த பற்றியங்களை அவனுக்குப் பிடித்த பாங்கில், ஏற்றிச் சொல்வது அவனுடைய ஏற்றல் கொள்கை (Theory of Reception). அந்த ஏற்றலில், அடிப்படையாக அவனுக்குத் தேவைப்படுவது உருக்காட்சி (Imagination), அதையே கற்பனை வளம் என்றும் சொல்கிறார்கள். கற்பனை வளம் ஒன்று மட்டுமே நல்ல படைப்பைத் தந்து விடாது. கற்பனையில் தோன்றுவதையும், கண்ணால் கண்டதையும் உள்ளத்தில், மனக் கண்களில் உருத்தோற்றத்தை உண்டு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும்.

அந்த உருக்காட்சியை, சொல்லாட்சியால் தொய்வில்லாமல் விவரிக்கலாம். சொல்லாட்சியை, சொல்வளம், தொடர், அடைமொழி, உவமை, உருவகம், சொற்சித்திரம், பழமொழி, சொலவடை, தகவல்த் தொகுப்பு என்று பல அம்சங்கள் கொண்டு செலுத்திடவும் முடியும். ஆனால், உவமையும் உருவகமும் கொண்ட வர்ணனை, வாசகனைப் படைப்பில் ஒன்றிவிடச் செய்வதற்கு மிக முக்கியம். அந்த வர்ணனை, தேவையான அளவு மட்டுமே பாவித்தல் வேண்டும், இல்லாவிடில் வாசகனின் கவனம் சிதறவும் வாய்ப்பு உள்ளது.

வெறுமனே, “மாலை நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்தான்!” என்பதை விட, “கைரேகைகள் தெரிந்தும் தெரியாமலும் மங்கிய மாலைக் கருக்கல், அங்கங்கே ஒளிச்சிதறலை நாடி ஓடும் பூச்சிகள், அந்தத் தருணத்தில் வீதியில் வேகமெடுத்தவனாய்ச் சென்று கொண்டிருந்தான்!” என்று சொல்வது காட்சியில் ஒன்ற வைக்கும் யுக்தி. அது அவனது உருக்காட்சியையும் பிரதிபலிக்கிறது. இந்த யுக்திகளோடு உருக்காட்சியை வடிமமைத்து, வேட்கை, உவகை, பால் உணர்வு, புலன் உணர்வு, அமைதி, கண்ணீர், நெகிழ்ச்சி, துன்பம், இழப்பு, வெற்றி முதலான வாழ்வியல் அங்கங்கள் கொண்டு படைப்பன எதுவும் ஒருவரை ஆட்கொள்ளும் என்றே எண்ணுகிறேன்.

12 comments:

vasu balaji said...

நல்ல வழிகாட்டி பழமை.
/வெறுமனே, “மாலை நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்தான்!” என்பதை விட, “கைரேகைகள் தெரிந்தும் தெரியாமலும் மங்கிய மாலைக் கருக்கல், அங்கங்கே ஒளிச்சிதறலை நாடி ஓடும் பூச்சிகள், அந்தத் தருணத்தில் வீதியில் வேகமெடுத்தவனாய்ச் சென்று கொண்டிருந்தான்!” என்று சொல்வது காட்சியில் ஒன்ற வைக்கும் யுக்தி./

சாண்டில்யன்!

vasu balaji said...

/தானே கதையின் நாயகனாய் உணர்ந்ததாகவும், பழைய நினைவுகளை அப்படியே அள்ளி வந்ததாகவும்/

மனப்பூர்வமாக மிக நல்ல படைப்பு. நான் பின்னூட்டத்தில சொன்ன மாதிரி கூடவே வந்தேன். ஒவ்வொரு நாளும் மனதுக்கிதமாய் உணர்ச்சிகள். தொடரணும் பழமை!

பழமைபேசி said...

//பாலா... said...
/தானே கதையின் நாயகனாய் உணர்ந்ததாகவும், பழைய நினைவுகளை அப்படியே அள்ளி வந்ததாகவும்/

மனப்பூர்வமாக மிக நல்ல படைப்பு. நான் பின்னூட்டத்தில சொன்ன மாதிரி கூடவே வந்தேன். ஒவ்வொரு நாளும் மனதுக்கிதமாய் உணர்ச்சிகள். தொடரணும் பழமை!
//

பாலாண்ணே, வணக்கம்! ரெண்டொரு நாளில் தொடர்வேன்... தங்களது ஆவலுக்கு மிக்க நன்றியண்ணே!!

vasu balaji said...

/ரெண்டொரு நாளில் தொடர்வேன்... /

ஆஃகா. மகிழ்ச்சி.

பழமைபேசி said...

//பாலா... said...
/ரெண்டொரு நாளில் தொடர்வேன்... /

ஆஃகா. மகிழ்ச்சி.
//

:-0)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// இவற்றில் ஏதோ ஒன்றில் அவர்களுக்கே தெரியாமல் ஆட்படுவது உண்டு.//

ஆமாம் தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கற்பனையில் தோன்றுவதையும், கண்ணால் கண்டதையும் உள்ளத்தில், மனக் கண்களில் உருத்தோற்றத்தை உண்டு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும்.
//

நன்றி தல.. எங்களைப் போல எழுத்தில் புதியவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டி

குறும்பன் said...

பழமை புத்தகமெல்லாம் போட்டிருக்கீங்களா?

//”ஐயா, நானே இப்போதுதான் அரிச்சுவடியைப் புரட்டிக் கொண்டு இருக்கிறேன். நிலைமை அப்படி இருக்கையில், நான் உங்களுக்கு எப்படி?” என்று இழுத்து சமாளித்தேன்.//

அடக்கம்...


//அந்த வர்ணனை, தேவையான அளவு மட்டுமே பாவித்தல் வேண்டும், இல்லாவிடில் வாசகனின் கவனம் சிதறவும் வாய்ப்பு உள்ளது.//

சரியா சொன்னீங்க. சில சமயம் வர்ணனை வரும் பத்திகளை ( கிட்டத்தட்ட ஒரு பக்கமே வரும்) தாண்டி போவது உண்டு.

பழமைபேசி said...

//SUREஷ் said...
//கற்பனையில் தோன்றுவதையும், கண்ணால் கண்டதையும் உள்ளத்தில், மனக் கண்களில் உருத்தோற்றத்தை உண்டு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும்.
//

நன்றி தல.. எங்களைப் போல எழுத்தில் புதியவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டி
//

ஆகா... இது எனக்கு நானே சொல்லிகிட்டது... அதை உங்களோட பகிர்ந்துகிட்டேன்...அவ்வளவே!

Mahesh said...

அருமைங்க !!! புத்தகமெல்லாம் போட்டாச்சு ... அடுத்தது என்ன ஒரு படம் எடுத்துட வேண்டியதுதானே??

பழமைபேசி said...

//Mahesh said...
அருமைங்க !!! புத்தகமெல்லாம் போட்டாச்சு ... அடுத்தது என்ன ஒரு படம் எடுத்துட வேண்டியதுதானே??
//

தயாரிப்பாளர் தயார்! நாயகிய யாராவது அடையாளம் காமிச்சா சரி!! இஃகிஃகி!!!

பழமைபேசி said...

//குறும்பன் said...
பழமை புத்தகமெல்லாம் போட்டிருக்கீங்களா?
//

இஃகிஃகி!! இவனுக்கெல்லாம் ஒரு புத்தகமா?