11/27/2012

சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்

கார்த்திகை சோதித் திருநாள் வாழ்த்துகள்!

வீடுகளின் மதில்சுவர்கள் மற்றும் திண்ணை,  காடு கழனிகளின் பொழிக்கல், கிணற்றடியில் இருக்கும் எக்கியறை(motor room), தோட்டத்துச் சாளையில் இருக்கும் திண்ணை மற்றும் விளக்கிடுக்கு என் எங்கும் சிறு அகல் விளக்குகள்(கார்த்திகை விளக்கு) ஏற்றப்படும். பிறகு சற்றொப்ப பின்னேரம் 8 மணிக்கு ஊர்த்தலைவாசலில் இருக்கும் விநாயகர் கோவிலில் இருக்கும் விளக்குத்தூணில் தற்காலிகமாய் அமைக்கப்பட்டிருக்கும் பரண் மீது ஏறி நின்று ஊர்த்தலைவர்/பெரியவர்கள் புடைசூழ அணையாச் சுடர் ஏற்றப்படும். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு  பழக்கலவை முழுக்கு, பால்முழுக்கு உள்ளிட்டவற்றின் போது பாவிக்கப்பட்டு இறைவனுக்குப் படைக்கப்பட்ட திருவமுதின் எஞ்சியவற்றை அனைவருக்கும் அளிப்பார்கள்.

பூசனைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டும் தருணத்தில் ஊர் விடலைகள் “சூந்து” விளையாடுவார்கள். சோளத்தட்டு, கம்பந்தட்டு, வைக்கோல்கற்றை முதலானவற்றின் ஒரு முனையில் தீயிட்டு அவற்றைக் கையில் வைத்தபடியே பாடல் பாடிக் கொண்டு இலாகவமாய் ஆட்டிக் கொண்டு வலம் வரும் ஒரு துள்ளு விளையாட்டு இதுவாகும். எண்ணையில் ஊற வைக்கப்பட்ட துணி வளையத்தை நாய்ச் சங்கிலியின் ஒரு முனையில் கட்டி, அதற்கு எரியூட்டியபின் சுழற்றிச் சுற்றி இலாகவமாய் ஆடி வருவதும் உண்டு. விடலைகளின் தீரமிகு விளையாட்டில் அத்துமீறி சில பல தீ விபத்து நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது உண்டு. இவற்றானவற்றின் போது சில பல கிராமியப் பாடல்கள் பாடப்படுவதும் உண்டு. கொச்சையான பாடல்களும் இதில் அடக்கம்.

தந்தனத்தான் தோப்பிலே
தயிர் விக்கிற பொம்பளே
தயிர் போனா மயிர் போச்சி
இங்க வந்தாத்தான் ஆச்சி
சூந்தாட்ட வெளிச்சத்திலே ஊரு
சேந்தாடுவோம் சதுரு
நான் எடுக்குறேன் ஒன் உசுரு!!

மன்னிக்கவும். எனக்கு நினைவில் இருப்பவற்றை எல்லாம் மின்னேற்ற முடியாதாகையால், எஞ்சிய சில பாடல்களுக்கு பெப்பே!! சூந்துப் பெருநாள் வாழ்த்துகள்!!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரிங்க... நன்றி...

Raja said...

சூந்து விளையடுரதெல்லாம் கிட்டத்தட்ட எங்க வட்டாரத்துல (கரூர் ) அழிந்கே போச்சு. சூந்துங்கர வார்த்தையே பலபேருக்கு இப்போ தெரியருது இல்ல.

குறும்பன் said...

நம்ம பகுதியில் சூந்து நோம்பின்னு சொல்லமாட்டோம் கூம்பு நோம்பின்னு தான் சொல்லுவோம். ஈரோட்டு பக்கம் கூட கூம்புன்னு தான் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.

உங்களுக்கு கூம்பு நோம்பி வாழ்த்துக்கள்.