11/15/2012

கைம்பெண் தாய்

என்னதான் அமிஞ்சிக்கரையிலும் ஆண்டிபட்டியிலும் இணைய வசதிகள், அலைபேசித் தொழில்நுட்பம், வெளிநாட்டு நாகரிகம் என்பவை இறக்குமதி ஆக்கப்பட்டு இருந்தாலும் கூட, கயமைவாதம் என்பது ஒழிக்கப்படவுமில்லை; குறைக்கப்படவுமில்லை; மாறாக முழு வீச்சில் இறக்கை கட்டிப் பறக்கவே செய்கின்றன என்பதற்கு அண்மையில் நான் அறியப்பெற்ற கீழ்க்கண்ட நிகழ்வுகளே சான்றாகும்.

1. ஊரிலிருந்து வந்திருக்கும் ஓர் விதவைத்தாய் ஒருவர், அமெரிக்காவில் பிணைக்கைதியாய் இருக்கிறார். 24 X 7, கைக்குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டு வேலை செய்ய வேண்டும். மற்றவரோடு பேச அனுமதிக்கப் படுவதில்லை. மகன் எனப்படுபவர், திங்-வியாழன் வெளியூர் வேலை. மருமகளுக்கும் வேலை. மருமகள் என்பவர் 5 மணிக்கு அலுவல் முடிந்து விட்டாலும் வீட்டிற்குத் தாமதமாகவே வருகிறார். வந்தபின்னரும் மூத்த தாயைக் கையாளும் விதம் சரியில்லை.

2. மகன் இங்கே. வயோதிக விதவைத் தாய் ஊரில். தாயின் தங்கைகளே, “முண்டச்சி  முண்டச்சி” என விளித்தும் இழித்தும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். தாயுக்கு உதவ வரும் ஆடவர்களோடு இணைத்துப் பேசும் கொடுமை. அங்கே தாய் அழ, இங்கே மகன்  விம்முகிறார். 

3. விதவைத் தாயைக் கவனிக்காத ஊரிலிருக்கும் மகன்கள்/மருமகள்கள். அம்மாவை நினைத்து அழும் அமெரிக்க மகள்.

4. ஊரிலிருக்கும் விதவைத் தாயின் சொத்தினைப் பறிக்கும் நோக்கில், தாயை  வேசியென்றும் திருடியென்றும் வசை பாடும் உறவினர்கள். அமெரிக்காவில்  கையறு நிலையிலிருக்கும் மகனும் மகளும். 

5. விதவையான மாமியாரை இழித்தும் பழித்தும் பேசித் துன்புறுவதைக் கண்டு  வெகுண்டெழும் அமெரிக்க மருமகன். 

ஆணாதிக்கச் சமூகம்தான் இவற்றுக் காரணம் என்று பொதுமைப்படுத்தி விடவும் முடியாது. ஏனென்றால், தன்னை அண்டி இருக்கும் பெண்களால்தான் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகிறாள் விதவைத்தாய் என்பவள்.

அமெரிக்காவைப் பொறுத்த மட்டிலும், தானொரு விதவை என்று சொல்லும் வரையிலும் அவரைப்பற்றிய தகவல் மற்றவருக்குத் தெரிவதில்லை. ஆனால், தாயகத்தில்? விதவை என்பதைத் தெரிந்த கொண்ட பின்னரே அவருக்கான பெயர் தெரிய வருகிறது.

அண்டியிருக்கும் பலநூறு கைகளும் அவளை நோக்கியே நீளும். தனக்கான பணியைச் செய்வதற்கும், பாலியல் இச்சைகளை நிறைவேற்றுவதற்கும், குழந்தை வளர்ப்புக்கும், வீட்டுப் பராமரிப்புக்கும் என எதற்கும் அவள் வேண்டும் இவர்களுக்கு. கைம்பெண்ணின் உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவருக்குமே அவள் ஒரு கீழானவள் அல்லது எளிதில் இலக்காக்கப்படக் கூடியவள். சமூகத்தில் வேரூன்றியிருக்கும் மாபாதகம் இது.

அதிலும் தன்னந்தனியாக அல்லது பெற்ற பிள்ளைகளிடமிருந்து மனத்தாலும், இடத்தாலும் எட்ட இருப்பவர்களின் நிலை மிகவும் வருத்தப்படக் கூடிய ஒன்றாகும். அப்படியானவள், எப்படியும் அன்றாட வாழ்க்கைக்கான தேவைகள், மின்கட்டணம் கட்டுவது, தொலைபேசி இணைப்புப் பெறுவது, அலைபேசி பழுதுபார்ப்பது என்றான சிறுசிறு வேலைகளைச் செய்து தர யாதோ ஒருவரை அண்டி அவர்தம் உதவியோடுதான் வாழ்ந்தாக வேண்டும். உடனே கிளம்பி விடுவார்கள் மேட்டிமை பொருந்திய ஆதிக்க மனம் கொண்டோர். எப்படி?

“இந்த முண்டச்சிக்கும் இன்னாருக்கும் கள்ள உறவு!”. கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் மிக எளிமையாகச் சொல்லிக் கடப்பதை நாம் எங்கும் காணலாம். அத்தாயின், பெண்மணியின் வயது ஐம்பத்தி ஐந்தாக இருந்தாலும் சரி, எண்பதாக இருந்தாலும் சரி, இத்தகைய ஒரு வன்கொடுமையிலிருந்து தப்பிக்கவே முடிவதில்லை. மேலும், இப்படிச் சொல்லிச் செல்பவர்களில் பெண்களே மிகுதி என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தகைய பெண்களுக்கு அத்தகைய ஒரு நிலை அடுத்த கணமே நிகழாது என்பதற்கு என்ன நிச்சயம்?

”முண்டை” எனும் சொல்லை உருவாக்கியவன் ஒரு காட்டு மிராண்டி. அதைப் பாவிப்பவன் ஒரு பிணந்தின்னி. இச்சொல்லை அகராதியில் இருந்தே அகற்றப்பட வேண்டும். இனவெறிச் சொற்களுக்கான பட்டியலிலும் இது சேர்க்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் கடுமையான போக்கைக் கடைபிடித்தாலொழிய இது அழியப் போவதில்லை.

ஆனாலும் அதைக் களைவதற்கும், அத்தகைய வன்கொடுமையைக் கண்டித்துக் களைவதற்கும் உகந்த சட்டங்கள் ஊரிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இருக்கத்தான் செய்கின்றன. மக்கள், குறிப்பாகப் பெண்கள் வெகுவாக வெளிக்கிளர்ந்து வர வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க மனோபாவத்திற்கும், ஆதிக்க மனோபாவமுள்ள பெண்களுக்கும் தக்க பாடம் கற்பிக்க முடியும். ஆனால், தனக்கு எத்தனை இழிவுகள் நேர்ந்தாலும், அவள் காட்டும் தாய்மைப் போக்கே இத்தகைய வன்கொடுமைக்கான காரணமாகவும் இருந்து விடுகிறது.

ஒரு விதவைத்தாய் அச்சுறுத்தப்படுகிறாள். இழிவுபடுத்தப்படுகிறாள். அவதூறுக்கு ஆளாகி சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகிறாள். இத்தகைய கொடிய செயலுக்குக் காரணமானவர்களின் பேச்சு, செயல்கள் முதலானவற்றிற்கும் அழிக்கப்பட முடியாத ஆதாரங்கள் பல கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அந்த விதவைத்தாய் சட்டம் – ஒழுங்கு அதிகாரிகளை நாட மறுக்கிறாள். அவள் சொல்லும் காரணம்தான் என்ன?

“பாவம். போலீசு கீலீசுன்னு போனா இளையவளுக்கும் சிக்கலு. மூத்தவளுக்கும் சிக்கலு. அவங்க வீட்டுல இன்னும் கண்ணாலங்காச்சி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு!”. இங்குதான் கயவர்களின் ஏகபோக மனப்பான்மை ஊக்குவிக்கப்படுகிறது. தயவு தாட்சண்யமின்றிப் பெண்கள் வெளியே வர வேண்டும். இது நீங்கள் மட்டுமே அனுபவிக்கும் கொடுமை அல்ல. நாளை இது உங்கள் மகளுக்கும் நேரக் கூடும். உங்கள் பெயர்த்திகளுக்கும் நேரக்கூடும்.

மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் வெகுவாக உருப்பெற வேண்டும். நீங்களும் நானும் செய்யத் துணியாவிட்டால், நம் அம்மாவுக்கும் அத்தைக்கும் மனைவிக்கும் அக்காவுக்கும் தங்கைக்கும் மகளுக்கும் செய்ய வேறு யார் வருவார்?

வன்கொடுமைச் சட்டம் என்பது அடித்துத் துன்புறுத்துவதற்கு மட்டுமே ஆனது அல்ல. சொல்லாலும் வேறு பல செயலாலும் மனத்தைத் துன்புறுத்துவதற்கும் பொருந்தும். அதிலும், விதவைத்தாயிக்கு நேர்ந்த இன்னல்களுக்கான தண்டனை கடுமையானதாகக் கூட இருக்கும். 

Verbal harassment These involve the use of abusive or derogatory comments or remarks (epithets), usage of comments or words based on race. Four types of cruelty are dealt with by the law 498-A:
  • conduct that is likely to drive a woman to suicide; தற்கொலைக்குத் தூண்டக்கூடிய செயல்கள்
  • conduct which is likely to cause grave injury to the life, limb or health of the woman,
  • harassment with the purpose of forcing the woman or her relatives to give some property, அவதூறு பரப்பி அச்சுறுத்துதல்
  • Harassment because the woman or her relatives is unable to yield to demands for more money or does not give some property. பணப்பறிப்பு, நிலப்பறிப்பு முதலானவற்றை மனத்துள் வைத்துச் செய்தல்

ஆக, சட்டங்கள் இருக்கின்றன. மக்கள்தான் அதைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றுவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள், மனித உரிமைப் பேராளர்கள் எனப் பலரும் முன் வர வேண்டும். நிறைய வழக்குகள் பதியப்பட வேண்டும். ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் அவ்வப்போது இடம் பெற வேண்டும். கொடுமை செய்பவர்கள் உற்றார், உறவினர் என்கிற தயவுதாட்சண்யமின்றி விதவைப் பெண்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும். வன்கொடுமை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவில், இத்தகைய வழக்குகளுக்கான கட்டணத்தை பாதிக்கப்பட்ட பெண்களிடம் பெறுவதில்லை. மாறாக, வழக்கு வென்ற பின் தண்டிப்பட்டவர் கொடுக்கும் இழப்பீட்டில் இவ்வளவு என ஒப்பந்தம் போடப்படுகிறது. இது வழக்குகள் பதிவதை வெகுவாக ஊக்குவிக்க உதவுகிறது. இதே போன்ற பழக்கத்தைத் தாயகத்திலும் கொண்டு வருதல் வேண்டும். இந்திய, தமிழ்நாட்டு அரசுகள், உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நாமும் செயல்பட வேண்டும். தாய்மையைப் போற்றுவோம்! கயமையை வேரறுப்போம்!!

7 comments:

Unknown said...

KaNNeeraik kattup paduththa mudiyavillai......

dondu(#11168674346665545885) said...

கூர்ந்து கவனித்தால் முக்கால்வாசி தருணங்களில் ஏச்சுக்கு ஆளானவரே அதை அனுமதிபதால்தான் அவர்களுக்கு துன்பங்கள் நேருகின்றன.

உங்களது இபதிவிலேயே அதுவும் சுட்டபடுகிறது.

இதை நான் அசட்டுத் தியாகம் என வர்ணிப்பேன். அது பற்றி நான் இட்ட பதிவு: http://dondu.blogspot.com/2010/04/versus.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழமைபேசி said...

//கூர்ந்து கவனித்தால் முக்கால்வாசி தருணங்களில் ஏச்சுக்கு ஆளானவரே அதை அனுமதிபதால்தான் அவர்களுக்கு துன்பங்கள் நேருகின்றன.//

அன்பு அய்யா, வணக்கம். ஆம், உண்மை.

வேறு சில காரணங்களும் அடக்கம். விழிப்புணர்வின்மை, இயலாமை, அச்சம் முதலானவையும் சில நேரங்களில்.

அப்பாதுரை said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.. இடைவெளிக்கு மன்னிக்க.

பதிவு உருக்குகிறது - இது சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கவேண்டும் என்ற சிறு எண்ணம் உள்ளுக்குள் துடிக்கிறது.

அமெரிக்காவில் இது நடந்தால் citizen alert தரலாமே?

திண்டுக்கல் தனபாலன் said...

இவையெல்லாம் மாற வேண்டும்...

/// சட்டங்கள் இருக்கின்றன. மக்கள்தான் அதைக் கையிலெடுத்துக் கொண்டு செயலாற்றுவதில்லை. ///

அப்பட்டமான உண்மை....

நல்லதொரு கட்டுரைக்கு நன்றி...

குறும்பன் said...

இது போன்ற கொடுமையை நான் இதுவரை பார்த்தது இல்லை. முண்டச்சி என்று எப்படி இழித்து கேலி பேச முடியும் அதுவும் அவரின் தங்கைகளால்? ஆண்டவா அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு. மாமயார் மருமக சண்டை பார்த்திருக்கேன். இவரால் அவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சம் அதையாவது நினைத்து பார்த்திருக்கலாமே? குழந்தைகள் காப்பகத்தில் பணத்தை கொடுக்கும் போது அது தெரியும்.

பழமைபேசி said...

@@குறும்பன்

என்ன நம்பூர்க்காரரான உங்களுக்கே இந்தக் கேள்வி? கூகுளில், “முண்டை” என அடித்துத் தேடிப் பாருங்கள்.

கூடவே இந்த சுட்டியையும் படித்து விடுங்கள்.

http://www.nisaptham.com/2012/08/blog-post_2.html