5/29/2011

இராதிகா சித்சபேசன் பேசுகிறார்!!

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் 

எட்டிக் களை பறிக்கும்
இடமெல்லாம் நிற்கேனோ?
கட்டி மண்ணை நீ உடைக்கக்
கைத் தடியாய் ஆகேனோ?
ஏறுகின்ற வெயில் தணிக்க
இன்னிழலாய்த் தழுவேனோ?
மீறுகின்ற காதலுடன்
நம்மொழி பேச வாராயோ??
--கவிஞர் தூரன்

வட அமெரிக்கத் தமிழரெலாம் கூடி,தம் மொழி பேசிக் களித்து இன்புற்றிருத்தலோடு அவர்தம் கட்டமைப்புக்கும் வலுச் சேர்க்குமுகமாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது ஆண்டுதோறும் தமிழ் விழாக் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்ததே.

பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழாவானது, எதிர்வரும் யூலை மாதம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நாட்களின்போது, தென் கரோலைனா மாகாணம், எழிலார்ந்த கடற்கரை நகரமாம் சார்ல்சுடன் நகரில் நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரும், தமிழ்ப் பண்பாட்டை அமெரிக்க மண்ணில் நிலைநாட்டுவதற்கு அயராது உழைத்து வரும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தாரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை மிக விமரிசையாகச் செய்து வருகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து வருவோர்க்கு ஏதுவான தங்குமிடங்கள், பசியாற உண்டி வழங்கல், குழந்தைகள் சக உறவினரோடு இருந்து மகிழ்ந்திடக் கூடங்கள், தமிழ்ச் சான்றோர்தம் விழுமியங்களை ஆய்ந்து பருகிட பல மேடைகள், குடும்பத்தார் இருந்து களித்திடப் பல பண்பாட்டு நிகழ்வுகள் என எண்ணற்ற கூறுகளை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டதுதான் இத்திருவிழா.

திருவிழா இடம் பெறுகிற நகரமோ, ஒரு எழிலார்ந்த நகரம். நகரெங்கும் பச்சைப் பட்டுடத்திய புல்வெளிகள், வரலாற்றுப் பெருமை போற்றும் புராதனச் சின்னங்கள், அழகு கொஞ்சும் கடற்கரைகள், கண்களுக்கு விருந்தூட்டும் மீனகம் என ஏராளமான இன்னபிற அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதுதான் சார்ல்சுடன் நகரம்(Charleston, SC). இது ஒரு ஆகச் சிறந்த சுற்றுலாத்தளம் ஆகும்.

இவ்விழாவில், குணச்சித்திர நடிகர் நாசர் அவர்கள், கனடிய பாராளுமன்ற உறுப்பினர் இராதிகா சித்சபேசன், கவிஞர் நா.முத்துக்குமார், பாடகர்கள் A.V.இரமணன், உமா இரமணன், பிரசன்னா, திண்டுக்கல் சக்தி நாட்டியக் குழுவினர், கானா பழனி, திருப்புவனம் ஆத்மநாதன், ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள், கோடைமழை வித்யா, புதுகை பூபாளம் குழுவினர் மற்றும் கனடிய, அமெரிக்க உள்ளூர்த் தமிழர்களும் இணைந்து, மூன்று நாட்களுக்குமாக பல நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

இவை மட்டுமல்லாது, இணை அமர்வுகளாக வலைஞர் சங்கமம், வணிகக் குமுகாயம், பல்வேறு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் கூடல், மருத்துவ ஆய்வு அரங்கம், தமிழ் அரசியலமைப்புக் கூட்டம் எனப் பல நிகழ்வுகளும் இடம் பெற உள்ளன. விழா குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பேரவை வலைதளம் மற்றும் விழா நறுக்கு ஆகியனவற்றைப் பாவிக்கவும்.

யூலை 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்கள் பெருவார ஈறு என்பதனால், ஒவ்வொரு தமிழரும் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்து தம்மையும் கட்டமைப்பையும் வலுப்பெறச் செய்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

விழாவில், திரு. நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள் வழங்க இருக்கும் விநாடி வினா, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தலைமை ஏற்று, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம் எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும் கவியரங்கம், மரியாதைக்குரிய ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் நடுவராக இருந்து, தமிழைச் சிதைப்பது ஊடகங்களா? பொதுமக்களா?? எனும் தலைப்பில் இடம் பெற இருக்கும் பட்டிமண்டபம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுடையோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் அவர்களின் தமிழ்ப் பணியினை நினைவு கூறும் விதமாக, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாக அமைய இருக்கிற இத்திருவிழாவின் போது, எழில்நகரமாம் சார்ல்சுடன் நகரில் உங்களை எல்லாம் சந்தித்து இன்புறக் காத்திருக்கிறோம். தமிழால் இணைந்தோம்! நட்பு பாராட்டுவோம்!! வாரீர், வாரீர்!!!

பணிவுடன்,
பழமைபேசி,
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைப் பிரதிநிதி,
அரசி நகரத் தமிழ்ச் சங்கம்.

8 comments:

நிரூபன் said...

ஜீன் மாதம் தமிழ் மழையால் வட அமெரிக்கா அதிரப் போகிறது. கலக்குங்க சகோ.

நிரூபன் said...

முத்தமிழால் தமிழ்த் தாய்க்கு விழா எடுக்கும் உங்கள் முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் சகோ.

பழமைபேசி said...

:-0)

சினிமாக்காரங்க தேவைதானா?? சென்ற ஆண்டின் வாய்க்கா, வரப்பு!! இஃகி, இஃகி!!!

Anonymous said...

அருமை அருமை ! வட அமெரிக்காவில் தான் நானும் இருக்கின்றேன்.. ஆனால் கல்வி, வேலை மற்றும் விசாப் பிரச்சனைகளால் இவ்வாண்டு என்னால் வரமுடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். விழா வெற்றிப் பெற வாழ்த்துக்கள் சகோ.

- இரவீ - said...

வாழ்த்துகள்!!!

Anonymous said...

விழா சிறப்புற வாழ்த்துக்கள் ..

பழமைபேசி said...

முந்தைய செய்தி குறித்த மாற்றங்கள்

அப்பாதுரை said...

விழாக்காண வாழ்த்துக்கள்.
(அடுத்த வருடமாவது இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்.)