6/03/2011

ஏலாதி

ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு வகை சூர்ணம். இது மெய்யுக்குப் பொலிவையும் வலிமையையும் ஊட்டித் தெம்பையும் தர வல்லது. அது போலவே, மாந்தனது வாழ்வுக்குச் சிறபபைத் தரும்விதமாக ஆறு கூறுகளை உள்ளடக்கி அறத்தை நல்குவது, பதினென்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி. கணிமேதாவியார் என்பார் இந்நூலின் ஆசிரியர்.

மும்மருந்துகளின் பெயரால் அமைந்த நூல்கள் யாவை என ஒருவர் நம்மைக் கேட்க, நாமும் அதனை அறியும் பொருட்டு விழைந்தவரானோம். திரிகடுகம், சிறுபஞ்சமூலம் மற்றும் ஏலாதி ஆகிய நூல்களே அவை. இதன் நீட்சியாக ஏலாதியை வாசிக்கத் துவங்கியதில், நம்மனதைக் கொள்ளை கொண்டது கீழ்வரும் செய்யுளானது.

இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல - எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு.

இடையின் அழகோ, தோளின் அழகோ, ஈடில்லா மற்ற அழகோ, நடை அழகோ, நாணத்தின் கண் வெளிப்படும் அழகோ, கழுத்தின் அழகோ அழகல்ல. எண்ணொடு கூடிய எழுத்தின் அழகே அழகு என்கிறார் கணிமேதாவியார்.

இங்கேதான் நாம் சற்று மாறுபடுகிறோம். ‘எண் எழுத்து இகழேல்’ என்று சொன்னார் ஒளவையார். ’எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ எனக் கொன்றை வேந்தனிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே, அய்யன் திருவள்ளுவர் சொல்கிறார், ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்கிறார்.

இவற்றுக்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் யாது? எண்களும், எழுத்துகளும் உண்டான கல்வியைக் கண்ணாய்ப் பாவித்தல் வேண்டும் என்கிறார்கள். இப்படி நேரிடையாகக் கல்வி எனப் பொருள் கொள்ளலாகாது என்கிறோம் நாம். ”கல்வி எனும் அதிகாரத்துக்கு உடபட்டுத்தானே வருகிறது இக்குறள்? எனவே, எண்ணும் எழுத்தும் எனக் கல்வியைத்தான் குறிப்பிடுகிறார்” என வாதிடூகிறார்கள்.

”எண்ணமும் அதற்கொத்த எழுத்தையும் இகழேல்; எண்ணமும் அதற்கான எழுத்தும் கண்ணெனப் பாவித்தல் வேண்டும்” என்பதன் தொடர்ச்சியாக, எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு எனப் பொருள் கொள்கிறோம்.

மாந்தனின் அகத்தைப் படம் பிடித்துக் காட்டுவது எழுத்து. அதாவது, அத்தருணத்தில், மாந்தனின் எண்ணம் எவ்வாறு இருந்ததென்பதை அவன் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆக, தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்படும் அவன் எண்ணங்களின் எழுத்துகள் அவனைச் செம்மைப்படுத்தும் என்றாகிறது.

இன்றைய நவீன யுகத்தில், எண்ணங்களை ஒலி மற்றும் ஒளியினூடாகப் பதிவு செய்யக்கூடிய ஊடகம் வாய்த்திருக்கிறது. என்றாலும் கூட, எழுத்திற்கு இருக்கும் சிறப்பு வெகுவாகத் தனித்தன்மை கொண்டதாகும். அதுவும், தன் எண்ணங்களைத் தத்தம் தாய் மொழியில் எழுதிப் பின்னோக்கிப் பார்த்தலில் மனம் பேரின்பம் அடைகிறது. வாழ்வு செம்மையாகிறது.

உதாரணத்திற்கு இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர், அட்லாண்டா நகரில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் கலந்து கொண்டேன். அந்த மூன்று நாட்களும், எம் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். அத்தருணத்தில் எம்மனதில் எழுந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை எழுதி வைத்திருக்கிறேன். மனம் சோர்வுறும் தருணத்திலெல்லாம் அவற்றை மீள்வாசகம் செய்கிறேன். புத்துணர்வு பெறுகிறேன்.

வாசிப்பதன் மூலம் புத்துணர்வு கொள்ள முடிகிறது என்றால், அதற்கான அடிப்படை என்ன? தாய் மொழி! தாய் மொழியில் விளைந்த எண்ணம். எண்ணங்களை அப்படியப்படியே தன் தாய்மொழியில் பதியப்பட்ட எழுத்து. இன்றைக்கும், என்றைக்கும் கிடைக்கப் போகிற பேரின்பத்திற்குக் காரணம் அதுதானே?

எனவேதான், கணிமேதாவியாரின் ஏலாதியில் சொல்லப்பட்டு இருக்கிற “எண்ணொடு எழுத்தின் வனப்பே வனப்பு’ என்கிற வாசகம் நம்முள் ஈர்ப்பை உயிர்ப்பிக்கிறது. எண்ணங்கள் ஊற்றெடுக்க வைப்பதில், தாய்மொழியின் பங்கு அளப்பரியதும் மகத்தானதுமாகும்.

புலம்பெயர்ந்த மண்ணிலே, தாய்மொழியைச் சீராட்டிப் பாராட்டித் தேன்போல் நுகரும் பாங்கில் நமக்கு வாய்த்ததுதான், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழா! ஆண்டு தோறும் நனிச் சிறப்போடு சிறப்பெய்தி நம்மையும் சிறக்க வைக்கும் விழா!! ஏலாதியைப் போல், கலை, இலக்கியம், பண்பாடு, மரபு போற்றுதல், அறம் பேணல், உரிமை காத்தல் ஆகிய அறுமருந்தும் பெற, நாமனைவரும் ஒன்று கூடுவோம் தமிழர் திருவிழாவில்!!

--பழமைபேசி.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

புலம்பெயர்ந்த மண்ணிலே, தாய்மொழியைச் சீராட்டிப் பாராட்டித் தேன்போல் நுகரும் பாங்கில்//

ஏலாதியாய் ஏற்புடைய அருமையான கருத்துக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.