உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சில பல கதைகளைச் சொல்கின்றன. வலது காலைப் பார்க்கிறேன். முட்டி பெயர்ந்த தழும்பு. அதற்குப் பின்னால் ஒரு கதை. கணுக்காலுக்கு மேல் இருக்கும் தீப்புண்ணின் தழும்பு. அது சூந்து விளையாடும் போது ஏற்பட்டது. அதன் நினைவுகள்.
என் மெய்யின் ஒவ்வொரு கூறினையும் நேசிக்கிறேன். இவ்வுலகில் எத்தனை பேருக்கு, தத்தம் உடலின் பாகங்களைக் கண்டு, பேசி, உளம் மகிழ்ந்து, அவற்றுடன் ஒன்றிப் போக நேரம் வாய்க்கிறது? அல்லது மனம் இருக்கிறது?? என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன். செருக்குக் கொள்கிறேன். அதில் என்ன தவறு இருக்க முடியும்?! என் மெய்யைச் சிலாகித்து, அவற்றின் அங்கத்துக் கூறுகளின் ஆரோக்கியத்தைப் பார்த்து மகிழ்வதில் நான்தானே முதன்மையானவாக இருக்க முடியும்?
வாரம் ஒருமுறை விரல் நகங்களை வெட்டுகிறேன் அல்லது தூய்மைப்படுத்தி அழகு பார்க்கிறேன். பல் மராமத்துச் செய்கிறேன். தசைநார்கள் சுருங்கி விரியச் செய்கிறேன் அனுதினமும். கண்கள்? அவனியின் அழகை எனக்கு ஊட்டும் கண்களைப் பாராது இருப்பேனா? இன்னும் இருப்பனவெல்லாம் என்னோடு, நானிருக்கும் வரை உடன் வருவன. அவற்றின் மீது நம்பிக்கை வைத்துத்தானே, ஒவ்வொரு நாளும் பிறக்கிறது எனக்கு?!
நான் கடவுளைத் தொழுவது இல்லை. மாறாக என் அங்க அவயங்களைத் தொழுகிறேன். மாறாமல் பணியாற்றும் அவற்றுக்கு, என்றென்றும் விசுவாசமாக இருக்க விரும்புகிறேன்.
1997 ஆம் ஆண்டு, பெரும் விபத்தில் சிக்கி, என் வலதுகால் முட்டி பெயர்ந்து, முட்டியின் கிண்ணம் சிதறி இருந்தது. பார்த்த மருத்துவரெலாம், அறுவை சிகிச்சை செய்து அவற்றை ஒன்று கூட்டி உள்ளே வைத்துப் பார்க்கலாம். ஆனால், காலை மடக்கும் கோணம் வெகுவாகக் குறைந்து நடப்பதில் பழுது ஏற்படும் என்றுச் சொன்னார்கள். எனவே இப்படியே விட்டு விடலாம் எனப் பரிந்துரைத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக, நான் விபத்தில் சிக்குண்டது என் குடும்பத்தாருக்கே தெரியாது. உண்ணக் கொடுத்ததும், உண்டு கழித்ததை அப்புறப்படுத்தியதுமான எல்லாமும் உடன் இருந்த நண்பர்கள்தான்.
எனக்கும் என் அங்க அவயங்களுக்குமான பிணைப்பு அதிகம். இருபத்தி மூன்று நாட்கள் கழிந்த பின்னர், யூத மருத்துவர் சுலோமோ சேப்மேன் என்பாரிடம் வாதிட்டேன். நீங்கள் ஒன்று கூட்டி வையுங்கள், அவை என் சொல் கேட்கும். அல்லாவிடில் நான் மரணத்தைத் தழுவுவேன் என இறுதியாகச் சொல்லிவிட்டேன்.
மருத்துவர் சேப்மேன் அவர்கள் வியந்தார்கள். ”உன்னிடம் மன உறுதி இருக்கிறது; நான் உனக்குச் செய்கிறேன்” என்று சொல்லி பெயர்ந்த எலும்புகளையும் கிண்ணத்தையும் பொருத்திக் கம்பிகள் கொண்டு முடிச்சுப் போட்டுவிட்டார்.
அனுதினமும் வலதுகால் முட்டியோடு பேசினேன். வலது காலை மடக்க முடியாது. தூக்க முடியாது. இடுப்பில் இருந்து செயலாற்றுவதற்கு மட்டும் உடற்கூறு பயிற்சியாளர் வந்து போய்க் கொண்டு இருந்தார். என் மன உறுதியைக் கண்ட அவர், பெருமளவில் உதவி செய்தார்.
சிறு மணல் மூட்டைகளை கணுக்காலில் இட்டுத் தூக்குவேன். தேகப் பயிற்சி சாலையில் இருக்கும் உருட்டுகளைக் கால்கள் கொண்டு உருட்டுவேன். வலி, தாங்க முடியாத வலி. முட்டியும் நானும் பேசிக் கொள்வது மட்டும் நிற்கவில்லை. இன்னும், இன்னும் என என் மனமும், முட்டியும் ஒருங்கே இருந்து செயலாற்றின. மனத்திண்மை என்பது வென்று காட்டியது.
இறுதியாக, 1999ஆம் ஆண்டு, ஊடோடிய கம்பிகள் உருவப்பட்டன. சப்பணம் இட்டு அமர்ந்து காட்டினேன். சேப்மேன் அவர்கள் வானளாவக் குதித்தார். இவற்றை எல்லாம் குறிப்பிடக் காரணம்? மனத்திண்மையின் வலுவைச் சுட்டிக் காட்டத்தான்.
இன்றோடு, மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இப்படியெலாம் எழுத வந்து மூன்றாண்டுகள் நிறைவினை எய்துகிறது. பெருமிதமாய் உணர்கிறேன்.
என் அங்க அவயங்களை எப்படி நேசிக்கிறேனோ, எப்படிப் பேணிப் பாதுகாக்கிறேனோ, அப்படியாக என் சிந்தனைகளையும் எழுத்தையும் பேணுவேன். எழுதுவது எதாகட்டும், முதலில் அவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டேன்.
இம்மூன்று ஆண்டுகளாக, என்னுடன் பயணித்து வரும் சக நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
21 comments:
பிரமிக்க வைக்கும் தன்னம்பிக்கை. பாராட்டுக்கள்!
///என் அங்க அவயங்களை எப்படி நேசிக்கிறேனோ, எப்படிப் பேணிப் பாதுகாக்கிறேனோ, அப்படியாக என் சிந்தனைகளையும் எழுத்தையும் பேணுவேன். எழுதுவது எதாகட்டும், முதலில் அவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டேன்.////
......
அருமை. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
அருமை நண்பரே!!!!!!!!!!!
வாழ்த்துக்கள்
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்குப் பொருத்தமான இடுகை. வாழ்த்துகள்.
மனஉறுதிக்கு வந்தனங்கள்...
மூன்றாண்டு நிறைவிற்க்கும்...
ஆமாம் வாழ்க்கையில் இழக்ககூடாதது தன்னம்பிக்கை தான்.....
வாழ்த்துக்கள் ஆசானே!
உங்கள் மன தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 55/100 மார்க். நன்றி!
உங்களைப்பார்த்து பெருமைப்படுகிறேன் பங்காளி..!!!
வாழ்த்துகள் வார்த்தைகளின்றி....
பழமை ......
||அல்லாவிடில் நான் மரணத்தைத் தழுவுவேன் என இறுதியாகச் சொல்லிவிட்டேன்.||
அந்த முட்டியைப் பார்க்கும் போதெல்லாம் அதிர்ச்சியடைந்திருக்கிறேன்... ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன்!!!
என்ன சொல்லிப் பாரட்ட, இந்த வெறிகொண்ட தன்னம்பிக்கைக்கு!
-0-
நான்காவது ஆண்டு துவக்கத்திற்கு வாழ்த்துகள்ங்க மாப்பு
வாழ்த்துக்கள் !!
என் அங்க அவயங்களை எப்படி நேசிக்கிறேனோ....அப்படி என்னுடன் பயணித்து வரும்...வணக்கமுங்க.
//என் அங்க அவயங்களை எப்படி நேசிக்கிறேனோ, எப்படிப் பேணிப் பாதுகாக்கிறேனோ, அப்படியாக என் சிந்தனைகளையும் எழுத்தையும் பேணுவேன். எழுதுவது எதாகட்டும், முதலில் அவை எனக்குப் பிடித்திருக்க வேண்டும் என்பதில் பின்வாங்க மாட்டேன்.//
நன்று ... பார்த்துக்கொள்ளவும் ....
மன உறுதி இல்லையென்றால் எதுவுமே விழலுக்கே ....
அன்புடன்
சிங்கை நாதன்
நம்பிக்கை இல்லையேல் வருங்கால வாழ்க்கை இல்லை.
காலையில் உங்க பதிவைப் படித்ததும் மனதிற்கு நிறைவாய் இருந்தது. வாழ்த்துக்கள் உங்க
எழுத்துக்கும், உங்க மனதிடத்துக்கும்!
//அனுதினமும் வலதுகால் முட்டியோடு பேசினேன்//
நாம உடல்நலம் குன்றினால் தொடர்புடைய உறுப்புகள்ட்ட பேசுறது நல்லது. என்ன நோவா இருந்தாலும் இந்த உரையாடல் அதுல இருந்து விடுபட ரொம்பவே உதவும்.
அற்புதம். வாசிக்கும் நபர்களில் சிலருக்கேனும் தன் மீது நம்பிக்கை வரும். இன்று வலை சரத்தில் உங்களின் இந்த பதிவை சுட்டியதால் இந்த நல்ல பதிவை வாசிக்க முடிந்தது
நலம் பெற்று மீண்டதில் மகிழ்ச்சி. ஒரு தன்னம்பிக்கைக் குறும்படமே எடுக்கலாம் போல.
அவயங்களோடு பேசுவது என்னிடம் மட்டும் உள்ள ஒரு வியாதி என்று இதுகாறும் நினைத்துக்கொண்டிருந்தேன் :))
நண்பரே, உங்களை பார்த்தாலெ தன்னம்பிக்கை வந்துவிடுகிறதே!
Post a Comment