5/01/2011

நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை!!

கடந்த நான்கு ஆண்டுகளாய், வாரா வாரமும் வந்து செல்லும் இடம். நான்காண்டுகளாக இடம் பெற்று வரும் ஒவ்வொரு வளர்ச்சியின் படியைக் கடந்தே வந்து செல்கிறேன். நான்கு பிரம்மாண்டாமான ஓடுபாதைகளைக் கொண்டது. ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட நான்கரைக் கோடி மக்கள் கால் பதிக்கும் விமான நிலையமாக உருவெடுத்து நிற்பதுதான், சார்லட் டக்ளசுபன்னாட்டு விமான நிலையம்.

1935ம் ஆண்டு வாக்கில் நகர விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு, 1954ம் ஆண்டு பயணியருக்கான கூடுதல் வசதிகளுடன், சார்லட் நகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மாநகரத் தலைவர் பென் எல்பர்ட் டக்ளசு என்பாரின் நினைவாக, அவரது பெயருடன் மிளிர்ந்து நின்றது சார்லட் டக்ளசு விமான நிலையம்.

மாநகரமும், தென்மாகாணங்களும் இயந்திர யுகத்தில் பெருவளர்ச்சி கண்டது. அவ்வளர்ச்சிக்கு ஈடு கொடுத்துப் பெரும்பங்கு வகித்தது சார்லட் டக்ளசு விமான நிலையம். 1978ம் ஆண்டு வாக்கில் இருந்து பன்னாட்டு முனையமாக, மற்ற நகரத்து விமானங்கள் எல்லாம் வந்து போகுமிடமாக உருவெடுத்தது CLT.

1990ம் ஆண்டுக்குப் பின்னர், பேங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் U.S.ஏர்வேசு முதலான நிறுவனங்கள் பெருமளவில் விமான நிலையத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதன் பயனாக, விமான ஓடுபாதைகள் கூடிக் கொண்டே செல்கின்றன.

2012ஆம் ஆண்டில் சார்லட் டக்ளசு விமான நிலையமானது, அயல்நாட்டு விமானப் பயணிகளுக்கென பிரத்தியேக முனையத்தை நிறுவ இருக்கிறது. நிச்சயமாக, இந்திய துணைக்கண்டத்தையும் அரசி நகராம சார்லட் நகரத்தையும் இணைக்கும் விதமாக, விமானங்கள் இயங்கத் துவங்கும் என்பதே இந்தியர்களின் கனவாக இருக்கிறது. குறிப்பாக, Jet Airways மற்றும் ஏற்கனவே சார்லட் நகரில் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் Lufthansa முதலானவை நம் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யக்கூடும் என நம்பப்படுகிறது.

இத்தகைய விமான நிலையத்திற்குத்தான் நாமும் வந்து சென்று கொண்டிருக்கிறோம் இந்நான்காண்டுகளாக. பிரிவு ’C’ முனைய வாயிலை அண்மித்து இருப்பது Starbucks குளம்பியகம். புறப்பாட்டு நாளான ஞாயிறு அல்லது திங்கள் மற்றும் வந்து சேரும் நாளான வியாழக் கிழமைகளில் தவறாது கடைக்குச் செல்வது நம் வழக்கம்.

கடையின் உரிமையாளர் பீற்றர் சேகல், அக்கடையில் பணிபுரியும் சாரா, எமிலி, பெத், ஏஞ்சலா உள்ளிட்ட யாவருக்கும் நாம் வெகு பரிச்சயம். நம் தலையைக் கண்டாலே போது, நாம் சொல்லுமுன்னரே நமக்கு விருப்பமான Grande Extra-hot White Mocha பானத்தை தயாரிக்க முற்படும் அளவுக்கு இருக்கிறது எங்களுள்ளான பரிச்சயம். வழமைபோல அளவளாவினோம். மகளது படத்தைக் காண்பித்ததும், வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள்.

மெம்ஃபிசு நகருக்குச் செல்வதாகத் தெரிவித்தேன். நகரைப் பற்றிய தகவலைப் பகர்ந்தார்கள். பின்னர் வலதுபுறமாகத் திரும்பினேன். கவ்வுகழலி(shoes) மிளிர் நிலையம் நடத்தி வரும் 'யகான்' நம்மைப் பார்த்துச் சிரித்தார்.

வழமையான உரையாடலுக்குப் பின்னர், கைக்கடியாரத்தில் நேரத்தை அவதானித்தேன். இன்னும் நேரமிருக்கிறதை உணர்ந்து, மிளிர் நிலையத்தில் உயரப் பெற்றிருக்கும் இருக்கையில் ஏறி அமர்ந்து, என் மூடுகழலிகளுக்கு மிளிர்புச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். வியப்புடன் நோக்கினார்.
 யகானின் கவ்வுகழலி மிளிர் நிலையம். எப்போதும் ஆட்கள் நிரம்பி இருப்பர். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் உபரியாகக் கிடக்கிறது.

 மிளிர்ப்பு வேலைகள் துவங்கு முன்னரான எமது கவ்வுகழலியின் நிலை.

 சிறிதளவு நீரைத் தெளித்த பின், தூரிகையைத் துளாவுகிறார் யகான்.

கவ்வுகழலிகள் துணியால் துடைக்கப்படுகிறது.

 தூரிகையால் கவ்வுகழலிகள் தூய்மைப்படுத்தப்படுகிறது..

 மிளிர்ப்புக் களிம்பு கொண்டு, கவ்வுகழலிகள் பூசப்படுகின்றன.

 கையுறையிட்ட கைகள் கழல்கள் இரண்டையும் தொக்கடம்(massage) இடுகின்றன. கால்களுக்குள் குருதிப் பாய்ச்சல் வேகமெடுக்க, எடுக்கச் சுகமான உணர்வுகளும் பெருக்கெடுக்கின்றன.

 மிளிர்ப்புக் கோல் கொண்டு கவ்வுகழலிகளுக்கு மிளிர்ப்பு ஏற்றுகிறார் யகான்.

 மிளிர்ப்புக் குறைச்சலாக இருக்குமிடங்களில், எரிகோல் கொண்டு வர்ணத்தை  உருக்கிப் பாயவிடும் காட்சி.

 எரிகோல் கொண்டு, இடுக்களிலெல்லாம் வர்ணம் ஊடுருவச் செய்கிறார் யகான்.
 கருந்துணியால் தோய்த்துத் தோய்த்து மிளிர்ப்பு ஏற்றுகிறார். கூடவே தொக்கடச் சுகத்தையும் நமக்குள் ஏற்றுகிறார்.

 மீண்டும் பூச்சுக்கோல் கொண்டு மெருகேற்றுகிறார்.

 வர்ணம் நாலாபுறமும் செல்லும் இலக்கோடு, துணியால் தோய்க்கப்படுகிறது கழலிகள்.

 இறுதிக்கட்ட வேலைகள். 
மிளிர்ப்பு!!

எல்லாம் முடிந்து, உரையாடத் துவங்குகிறோம் நாம்.

“எவ்வளவுங்க யகான்?”

“அஞ்சு வெள்ளி!”

“ஆகா; இவ்வளவு அருமையான வேலைக்கு அஞ்சே அஞ்சுதானா? இந்தாங்க ஏழு வெள்ளி!!”

”ஏ, உங்ககிட்டப் பணமா? வேண்டவே வேண்டாம்!!”

“ஆமா; தனிப்பட்ட கேள்வி ஒன்னு!”

“சொல்லுங்க!”

“ஒரு நாளைக்கு எவ்வளவு தேறும்?”

“எல்லாம் போக, நானூறுல இருந்து ஐநூறு!!”

கிர்ர்ர்ர்ர்..... நானூறு ஒரு நாளைக்கு. மாதத்துக்கு 12000; ஆண்டுக்கு 144, 000 வெள்ளிகள்.  நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை! வாழ்க உழைப்பாளிகள்!!

17 comments:

vasu balaji said...

இஃகி இஃகி அப்ப பஸ்ல சொன்னது?:)). கவ்வு கழலி அழகு.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் ..

பழமைபேசி said...

பாலாண்ணே, இலண்டன் சீமாட்டி இந்தக் கேள்வியக் கேட்பாங்கன்னு இருந்தேன்... நீங்க முந்திகிட்டீங்க....

பரவாயில்லை, நான் அவர்கிட்ட முன்கூட்டியே, படம் எடுப்பதற்கும் கேள்விகளும் அனுமதி வாங்கிட்டுதான் எல்லாமும்.... மெய்நிகர்ப் பெயரும், படமும் தவிர்க்கச் சொன்னார்... தவிர்த்திருக்கிறேன்...

இஃகி!

ஓலை said...

Nice.

Not to mention about you. But I want this system to go away however the income is. It will be nice if we do overselves. Please don't take it personally.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தமிழ்ச்சொற்கள் கலக்கலாக இருக்கின்றன..

பழமைபேசி said...

@@ஓலை

ஓலையாரே, இது என்ன நம்ப ஊரா? உயர்வு, தாழ்வுன்னு எல்லாம் சொல்றதுக்கு.... it is just a profession like anything else... பல் மருத்துவர், பல்லைக் கழுவுறாரு... காலையில இருந்து, சாயுங்காலம் வரைக்கும் அதுலயே வுழுந்து கிடக்குறாரே? it is just a perception... we shouldn't treat ill anyone that I agree... but why should we ashamed about the profession?

செய்யும் தொழிலே தெய்வம்!!

புதுகை.அப்துல்லா said...

உங்க தமிழ் மிளிர்கிறது :)

கூத்தாடி said...

கவ்வு கழலி அட இது புதுசா இருக்கே..

சரி நாடா என்றால் Tape

Shoe Lace ஐ தமிழ்படுத்தினால்?

பழமைபேசி said...

@@ SHAN -சைலேஷ் ஆனந்த்

இலேசு என்பதே தமிழ்ச் சொல்தானுங்க... கழலி இலேசுன்னே சொல்லலாம்!!

a said...

அண்ணே : தமிழ் மிளிரும் அழகு....

Unknown said...

வணக்கம் சார்,

சார்லட் ஏர்போர்ட் எப்பவும் மறக்கமுடியாது ...முதல் முறை அங்க வந்தப்ப, immegration -la என்னை 1 மணிநேரம் உக்கார வெச்சாங்க (i think for wrong identity).
ஹ்ம்ம் பழைய ஞாபகம்.
ஏர்போர்ட்-ல உங்களுக்கு நெறைய நண்பர்கள் இருப்பது உங்கள் நட்பின் அடையாளம்.

-வெங்கி

Unknown said...

வணக்கம் சார்,

சார்லட் ஏர்போர்ட் எப்பவும் மறக்கமுடியாது ...முதல் முறை அங்க வந்தப்ப, immegration -la என்னை 1 மணிநேரம் உக்கார வெச்சாங்க (i think for wrong identity).
ஹ்ம்ம் பழைய ஞாபகம்.
ஏர்போர்ட்-ல உங்களுக்கு நெறைய நண்பர்கள் இருப்பது உங்கள் நட்பின் அடையாளம்.

-வெங்கி

ஈரோடு கதிர் said...

||ஏ, உங்ககிட்டப் பணமா? வேண்டவே வேண்டாம்!!”||

ஏனுங்க மாப்பு வட்டிப்பணத்துல கழிச்சுட்டுக்குடுப்பாரா?

---
கவ்வுகழலி
அடடா!!!

ஈரோடு கதிர் said...

||இஃகி இஃகி அப்ப பஸ்ல சொன்னது?:)). கவ்வு கழலி அழகு.||

அய்ய்யே இன்னும் இந்த பஸ்சு வெளையாட்டு விடலையா?

ILA (a) இளா said...

||இஃகி இஃகி அப்ப பஸ்ல சொன்னது?:)). கவ்வு கழலி அழகு.||
ஹீம், Shoes.. better

KRISHNARAJ said...

DEAR MAPLAI
"kavvu kalali" tamil name for "shoe"
great. we are all used to "shoe" even in tamil. (i dont have tamil fond in my system. hence in english)
KRISHNARAJ P.R.

இராஜராஜேஸ்வரி said...

மிளிர் நிலையத்தில் உயரப் பெற்றிருக்கும் இருக்கையில் ஏறி அமர்ந்து, என் மூடுகழலிகளுக்கு மிளிர்புச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். வியப்புடன் நோக்கினார்.//
அழகுத் தமிழை நாங்களும் தானே வியப்புடன் பார்க்கிறோம்.