5/17/2011

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம் - நாலடியார்.

கொங்கு நாட்டிலே, மேட்டிமை பொருந்திய அரசியலாளர்களின் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு ஏழையாகிப் போன ஒரு உழவனுக்குப் பிறந்து, வீழ்ந்தது வீழ்ந்ததுதான் என்றிலாமல், விதைப்போர் மரிப்பினும் விதைக்கப்பட்டவை மேலெழும் எனக் கருதிய தாய் தகப்பனால், அறம் வழுவா ஆசிரியன்மார் சிலரால், முட்டி மோதி, தட்டுத் தடுமாறி, காலத்தின் போக்கில் சிங்கப்பூர் அடித்துச் செல்லப்பட்டவனானேன்.

'ஆமாவா'த்தமிழ் கேட்டு பூரித்துப் போனாலும் கூட, அங்கு வாழும் தமிழரின் நிலை கண்டு கலங்கிப் போனேன். 1968ஆம் ஆண்டு விடுதலையாகிப் போன ஒரு நாட்டிலே, பெரும்பாலான தமிழரெலாம் பொருளாதாரத்தில் வெகுவாகப் பின்தங்கி இருந்தார்கள். அந்நாட்டு அரசியல் கட்டமைப்பும் நம்மவர்க்கு ஏதுவாக இல்லை என்பதே எம் கருத்து. ஆனால், என் நண்பர்கள் இன்னமும் கூட அதை ஏற்க மறுக்கிறார்கள்.

இருபத்து ஏழு மாதங்களுக்குப் பிறகு, இந்தோனேயம் மற்றும் மலேய நாடுகளுக்குச் செல்கிறோம். சில காலம், அங்குமிங்குமாக நகர்கிறது. அங்கும் தமிழினம், வெகுவாகப் பின்தங்கியே இருக்கக் காண்கிறோம். இம்மூன்று நாடுகளிலும், அடுத்தடுத்த தலைமுறையினர் மேன்மை பெறுகிறார்கள் எனச் சொன்னாலும் கூட, அந்த வளர்ச்சியின் ஏற்றமானது வெகு மத்திபமாகவே இருக்கிறது.

கிழக்காசிய நாடுகளை அடுத்து, மேற்படிப்புக்காக கனடா நாட்டிற்குச் செல்கிறோம். அங்கேதான் நமக்கும், ஈழத் தமிழர்களுக்குமான அணுக்கம் பிறக்கிறது. டொரொண்டோ, மோண்ட்ரியால் மற்றும் ஒட்டாவா நகரங்களில் தமிழ் மக்கள் செறிவாகக் குடியேறி இருந்தார்கள்.

அவர்களைக் கண்டதும், மாபெரும் சோரவிரக்தி எம்மைக் கப்பியது. இரவு, பகல் என்று பாராது, அயராமல் உழைத்து, உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்கள். பெற்ற பிள்ளைகளை வளர்க்க வேண்டும். தாயகத்தில் ஓடி ஓடிப் பிழைக்கும் பெற்றோருக்கு காசு, பணம் அனுப்ப வேண்டும். அண்ணன் பிள்ளை, தமக்கை பிள்ளை எனப் பேதம் பாராது, அவர்களையும் புலம் பெயரச் செய்ய வேண்டுமென ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.

உழைத்தார்கள்; உழைத்தார்கள். உயிர் போகுமளவுக்கு உழைத்தார்கள். ரெண்டு வேலை; இராவுக்கொரு வேலை, பகலுக்கொரு வேலையென உண்ணாமல், உறங்காமல் வேலை பார்த்தார்கள்.

ஊருக்கு காசு அனுப்ப வேணும் மணி சார் என்பார். அக்காவென்ட பெட்டை கொழும்பு வந்து நிக்கிறா, அவளை இங்கால கொண்டாறணும் மணி சார் என்பார். இங்க இருக்குற ஒரு பொடியனை வெச்சு, அண்ணண்ட பெட்டைக்கு இசுபான்சர் செய்யப் பண்ணனும் மணி சார் என்பார். இப்படியாக, ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.

அநீதி, எங்கும் அநீதி. தாயகத்தில் இருந்து அழைத்து வரப் பணம் வாங்கிய இடைத்தரகனிடம் அநீதி. சிங்களப் படையின் அநியாயத் தாக்குதலில் சிக்குண்டு போன அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மருத்துவம் பார்க்கக் கடனாகப் பணம் கொடுத்தவனின் அநீதி.

புலம் பெயர்ந்து வந்து புகுந்த நாட்டில் தமக்கும், தன்னினத்துக்கும் அவப் பெயரை உண்டாக்கும் காடையர்களிடம் அநீதி. குழுக்கள் அமைத்துக் கொண்டு செய்யும் இக்காடையர்களின் மோதல்களால், ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தின் மீதான அநீதி.

இத்தனையையும் பொறுத்துக் கொண்டு உழைத்தார் தமிழ் மக்கள். அயராது உழைத்திட்டார் தமிழ் மக்கள். புனரமைப்புப் பணிகள்; வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகள்; தத்தம் குழந்தைகளுக்குப் புகுத்திட்டார் மொழியறிவு. வளர்த்திட்டார் தமிழ்ப் பண்பாடு. திறந்துவிட்டார் கல்விக் கண்.

பிள்ளைகள், நம் பிள்ளைகள், கூட்டம் கூட்டமாய்ச் சென்றிட்டார் பாடசாலைகளுக்கு. டொரொண்டோ பல்கலைக் கழகம், யார்க் பல்கலைக் கழகம், வாட்டர்லூ பல்கலைக் கழகம், ஒட்டாவாப் பல்கலைக் கழகம், மேற்குக் கனடியப் பல்கலைக் கழகங்கள் என எங்கும் மாணவர்கள்; நம் தமிழ் மாணவர்கள்!!

காசு, காசெண்டு எங்களைப் போல அலைஞ்சு திரிய வேணாம் பிள்ளாய். இனத்துல நாமும் மனுசரெண்டு காமிக்க வேணும் பிள்ளாய். நல்லாப் படிச்சு, நாட்டு மக்களுக்கு நாம யாரெண்டு காண்பிக்க வேணும் பிள்ளாய் எனக் காண்போரை எல்லாம் பாராட்டிச் சீராட்டி ஊக்கமளிப்பார் ஏக்ராஜ் அண்ணாச்சி.

இன்றைக்கு எத்துனை பேருக்கு, அந்த சமூக சேவகர், தமிழ் மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏக்ராஜ் அண்ணாச்சியைத் தெரியும் என்று தெரியவில்லை.

“வெடிஞ்சா, நீதிமன்றஞ் செல்ல வேணும்; வடிவான கதை ஒன்டு எழுதித் எழுதித்தாங்கோ!”வெனக் கேட்டபடியே அவர்தம் அறைக் கதவுகள் தட்டப்படும் விடியற்காலை மூன்று மணிக்கு. இராவு வேலை முடிந்து, கடுங்குளிரில் வந்து தட்டும் அவனது வேண்டுகோள்கள் செவிமடுக்கப்படும். அண்ணாச்சி எழுதும் கதையில்தான் இருக்கிறது தட்டப்பட்டவனின் அகதிமனுவை ஏற்பதுவும், அவனது சந்ததிக்கான குடியுரிமையும்!!

அண்ணாச்சி எழுந்து போய்க் கதவைத் திறந்து விட்டு, அவனுக்கேற்ற கதையை எழுதிக் கொடுத்துப் பாடம் அடித்துச் சத்தியம் வாங்குவார், “நீ உண்ட பிள்ளைகளைப் படிக்க வெப்பேனெண்டு சத்தியஞ் செய்” என. கதறி அழுது கொண்டே சத்தியம் செய்வான் அந்த அபலை. அண்ணாச்சியைத் தெரியாத தமிழன் இருக்க முடியாது அக்கால கட்டத்தில். அவர் ஒரு இசுகார்பரோ காந்தி!

வாரம் ஒருமுறையாவது அவரது அறையில் நான் தங்குவது வழக்கம். அடிக்கடி சொல்வார். “பாருங்க மணி. இந்தத் தமிழ்ப் பிள்ளைகள் எல்லாம், முதல்த் தலைமுறைப் பிள்ளைகள். எந்த நாட்டிலும் முதல்த் தலைமுறையினர் ஓங்கினதா வரலாறு கிடையாது. ஆனால், அதை நம் ஈழத்துப் பிள்ளைகள் முறியடிப்பார்கள்” என்பார்.

அப்படிச் சொன்ன மாமனிதன், நீண்ட நாட்கள் வாழப் பணித்திருக்கவில்லை. ஒட்டுமொத்த இசுகார்பரோ(Scarborough) தமிழ் மக்களும் கண்ணீர் வடித்தனர். தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஒரு தாய் அழுதாள், “என்ட பிள்ளைகள் அரசாள வேணுமெண்டு சொல்வீயளே அண்ணாச்சி?! இப்படிக் கண்டுங் காணமப் போயிட்டீகளே அண்ணாச்சி?!” எனக் கண்ணீர் உகுத்த காட்சி இன்னும் அப்படியே கண் முன்னே நிழலாடுகிறது.

அவர் மறைந்த ஆண்டு, 1998! இதோ, பதின்மூன்று, பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னால், அவரது காலத்தில், அவரால் வாழ்த்தப்பட்ட பிள்ளைகள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்று, கனடிய தேசிய நீரோட்டத்தில் சுடர்விட்டு ஒளிர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரமாயிரம் தமிழ்ப் பிள்ளைகள் பல்வேறு பட்டங்கள் பெற்று வெளியேறுகிறார்கள்.

சிங்கப்பூரிலும், மலேயாவிலும், இந்தோனேயத்திலும் நிகழாத அற்புதம், கனடாவிலே, அமெரிக்காவிலே எண்ணிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக நிகழ்கிறது. மருத்துவம், பொறியியல்துறை, சட்டத்துறை எனச் சகல துறைகளிலும் நம்மவர்கள் பொன்னாய் மிளிர்கிறார்கள். தமிழகத்து மாணவர்களைக் கூட மிஞ்சி விட்டார் இப்பிள்ளைகள்.

அரசாட்சி! மக்களுக்குச் சேவை புரிவது அரசியல் பணி. சமூகப் பங்களிப்பைச் செவ்வனே செய்வது அரசியல் பணி. சட்ட திட்டங்களைத் தெரிவதும், செய்வதும், நடைமுறைப் படுத்துவதும் அரசியல் பணி. அன்றைய ஏக்ராஜ் அண்ணாச்சியின் கனவு, நம் தமிழ்ப் பிள்ளைகளின் கைகளில் அரசாட்சி.

இன்றோ, அன்றோ, என்றோ என இருந்திடாமல், எமக்குள்ளேயே இருக்கிறான் நமன் என நினைத்து, அல்லன நீக்கி, மாட்சிமை பொருந்தச் செய்யுங்கால் அன்பும், அறமும், ஆட்சியும் நமக்கே!!

எந்த நாட்டின் குடிமகனாய் இருக்கிறாயோ, அந்த நாட்டுக்குப் பணி செய்வதே முதற்கடமை. அடுத்தபட்சமாக, நின்னை நினை. நும் முந்தை, நின் மொழி, நும் மரபு, நும் பண்பாடு எனச் சகலதுமாய் நின் தனித்தன்மை காத்திடுக. நீயும் ஓங்குவாய்! நின் மக்களும் ஓங்குவர்!!

ஆம், கனடாவையோ, அமெரிக்காவையோ நாளை ஒரு தமிழ்ப் பிள்ளை ஆளக் கூடும். ஏன்? அது உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கூட இருக்கலாம்!!

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!

23 comments:

saarvaakan said...

//"விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!"//
அருமையான பதிவு நண்பரே,
உள்ளத்தில் இருந்த வந்த வார்த்தைகள்
வாழ்த்துகள்

நா. கணேசன் said...

நல்ல பதிவு. ரசித்து வாசித்தேன்.

அன்புடன்,
கொங்குகிழான்

Chitra said...

நம்பிக்கையூட்டும் பதிவு. :-)

அகல்விளக்கு said...

நம்பிக்கை ஊட்டும் பதிவு...

Anonymous said...

நல்லதொரு பதிவு ....

// சிங்கப்பூரிலும், மலேயாவிலும், இந்தோனேயத்திலும் நிகழாத அற்புதம், கனடாவிலே, அமெரிக்காவிலே எண்ணிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள்ளாக நிகழ்கிறது. மருத்துவம், பொறியியல்துறை, சட்டத்துறை எனச் சகல துறைகளிலும் நம்மவர்கள் பொன்னாய் மிளிர்கிறார்கள். //

தமிழகத்துக்கும் - ஈழத்துக்கும் தாவிய எனது முப்பாட்டனர்கள் காலம் தொட்டு, சென்னையில் குப்பைக் கொட்டிய எனது தந்தையரின் காலம் வரைக்கும் கிடைக்காத வாய்ப்பினை ... கனடா தேசம் பலருக்குத் தந்துக் கொண்டிருக்கின்றது. வாய்ப்புகளின் தேசம் என்றழைக்கப்படும் கனடாவின் புவியல் எனக்கு ஒவ்வாதவை ஆயினும், இங்குள்ள மக்களின் பண்பும், சிந்தனையும், உழைப்பும், அனைவரையும் சமமாக மதிக்கும் மனோபாவமும் நிச்சயம் போற்றுதலுக்குரியது...

ஈழத் தமிழர் மட்டுமல்ல, பல ஆண்டு முன் தமிழக கரைகளை விட்டு விலகிய கரிப்பியன் - கயானா இந்தியர்கள், சீனர்கள், பிலிப்பைனர்கள், இந்தியர்கள், என அனைத்து தேச மக்களையும் ஒன்று போல அரவணைத்து சோறு போட்டு, பற்பல வாய்ப்புகளை நல்கும் கனடாவுக்கு பெரிய ஓ !!! போடணும்.

நற்பயனாய் இந்நாட்டின் தேசியக் கீதமும் ஓ கனடாவென ஆரம்பிக்கின்றது ...

vasu balaji said...

அருமை

ஜோதிஜி said...

நீண்ட நாளைக்குப் பிறகு உணர்ந்து எழுதி இருப்பீங்க போலிருக்கு. வெகுவாய் சந்தோஷப்பட்டேன். இது போன்ற மகிழ்வான தருணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்க மணி.

Unknown said...

We love u all guyz...KeeP o gng...

செந்திலான் said...

மிகச்சிறந்த இடுகை!!
இயல்பிலேயே தமிழர்களின் தொழில் முனையும் திறன் குறைவு தான். நாம் சிறந்த கூலிகள் அவ்வளவே. தமிழ் நாட்டில் கூட என்ன நிலைமை? எத்தனை பெரிய தொழில் நிறவனங்களை தமிழர்கள் நடத்துகிறார்கள்? நமக்குத் தேவை ஒரு பாதுகாப்பான வேலை,குடும்பம் நிம்மதி என்ற அளவில் முடிந்துவிடுகிறது. மிகப் பெரிய தொழில் குழுமங்கள் என்று எதுவும் நம்மவர்களின் கட்டுப் பாட்டில் இல்லை ஒரு சில விதி விலக்குகளை நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
சிங்கப்பூரின் அரசியல் அமைப்பின் படி அனைவரும் சமமாகவே பாவிக்கப் படுகிறார்கள்.கொஞ்சம் இறுக்கமான அமைப்பு அது. நம்மிடம் இல்லாத ஒற்றுமை,தொழில் முனைவுத்திறன் சீனர்களிடம் இருக்கிறது அதனால் அவர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்
இங்கே பெங்களுருவில் இருக்கும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் கூட ஆமாவா தமிழர்கள் தான் அதை அப்படியா என்று தான் சொல்ல வேண்டும் என்று பலரிடம் சொல்லி விட்டேன். அது கன்னட சகவாசத்தினால் வந்தது. அது அப்படியா என்பதற்கு கன்னடத்தில் அவுதா என்று சொல்லி சொல்லி அதைப்போலவே ஆமாவா என்றாகி விட்டது. சிங்கையில் எதனாலோ?
இங்கு கூட இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் கூட எந்த முன்னேற்றமும் இன்றி கூலிகளாகத்தான் இருக்கிறார்கள் அதே சேரிகள் இங்கும் இவர்களின் நிலை மாற்ற தமிழ் சங்க அங்கத்தினர் என்ன செய்தார்கள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஊற்று என்ற இதழை வெளியிட்டு அதில் கருநாடகத்தை ஈழத்துக்கு ஒப்பிட்டு(மிகைப்படுத்தி தான்) எழுதுகிறார்கள்.

Mahesh said...

நெகிழ்வான பதிவு.. உண்மை உறைக்கிறது....

உண்மை இவ்வாரிருக்க... .தன்னைத் தானே 'தமிழினத் தலைவன்' என்று கூறி மகிழ்ந்து கொள்வோரை என்னென்பது?

ஈரோடு கதிர் said...

அற்புதமான பகிர்வு!

Mahi_Granny said...

நல்ல ஒரு பதிவை படித்த திருப்தி.

Mahi_Granny said...

தமிழ் தேடி நட்பு கொள்ளும் இயல்புக்கு பாராட்டுக்கள்

Saminathan said...

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

நிரூபன் said...

ஆரம்ப அறிமுகமே நாலடியார் பாடலுடன் அமர்க்களமாக இருக்கே. இருங்க பதிவினைப் படித்து விட்டு வாறேன்.

நிரூபன் said...

காலத்தின் போக்கில் சிங்கப்பூர் அடித்துச் செல்லப்பட்டவனானேன்//

தங்களின் முதல் பந்தியில் சுய
அறிமுகம்...அழகான மொழி நடையில் இலக்கிய நயம் சொட்ட எழுதப்பட்டிருக்கிறது.

நிரூபன் said...

ஊருக்கு காசு அனுப்ப வேணும் மணி சார் என்பார். அக்காவென்ட பெட்டை கொழும்பு வந்து நிக்கிறா, அவளை இங்கால கொண்டாறணும் மணி சார் என்பார். இங்க இருக்குற ஒரு பொடியனை வெச்சு, அண்ணண்ட பெட்டைக்கு இசுபான்சர் செய்யப் பண்ணனும் மணி சார் என்பார். இப்படியாக, ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் கனவுகள்.//

ஈழத் தமிழை உங்கள் பதிவில் அப்பளுக்கின்றிப் பார்க்கையில் நெஞ்சம் குளிர்கிறது.

நிரூபன் said...

அப்படிச் சொன்ன மாமனிதன், நீண்ட நாட்கள் வாழப் பணித்திருக்கவில்லை. ஒட்டுமொத்த இசுகார்பரோ(Scarborough) தமிழ் மக்களும் கண்ணீர் வடித்தனர்.//

இறைவனின் செயல் இது தானே.
நல்லவர்களை வெகு சீக்கிரம் அழைத்து விடுவான்.

நிரூபன் said...

அன்றைய ஏக்ராஜ் அண்ணாச்சியின் கனவு, நம் தமிழ்ப் பிள்ளைகளின் கைகளில் அரசாட்சி.//

ம்....அற்புதமான ஒரு பதிவு, அதுவும் இக் கால யதார்தத்தின் மூலம், எதிர் காலத்தில் எம்மவர் எவ்வாறெல்லாம் இருப்பார் என்பதனை எண்ணிப் பார்க்க வைக்கும் பதிவு.

நிரூபன் said...

விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!//

நெஞ்சுரம் நிறைந்த வாழ்க்கையினை நிமிர வைக்கும் வரிகள்!

Anonymous said...

/////விதைப்போர் வீழ்ந்திடினும், விதைகள் வீழ்வதே இல!!/// மறுக்க முடியாத வரி..

KRISHNARAJ said...

HEART TOUCHING ARTICLE
krishnaraj P.R.

KRISHNARAJ said...

HEART TOUCHING ARTICLE
KRISHNARAJ P.R.