5/05/2011

ஒஞ்சியுண்ட்டு வந்தேன்!

இந்தவாட்டி ஊருக்குப் போய்ட்டு வந்ததுல, கொஞ்சத்தை உள்ள புடிச்சுப் போட்டுட்டு வந்தேன். எங்க ஊட்டுக்குப் பக்கத்துல ஒரு கண்ணால மண்டபம் இருக்குங்க. அங்க ஒரு படுகக் குடும்பம், அந்த மண்டபத்துக்குப் பண்ணாடி வேலை செஞ்சிட்டு, அதுக்குள்ளயே குடி இருக்காங்க.

அவங்க ஊட்டுப் பொண்ணு ஒன்னு, என்ற மகளோட வெளையாட வந்துச்சு. வந்ததும், நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்..., நான் ஒஞ்சியுண்ட்டு வந்தேன்னு மழலைத்தனமா சொல்லிட்டு இருந்ததுங்க. ஊட்ல ஒறம்பரைக எல்லாம் இருக்கும் போதே போயி, ஊட்டுக்காரிகிட்ட அந்தப் பொண்ணு என்னவோ சொல்லுதே அது என்ன, என்னன்னு மறுக்கா, மறுக்கா கேட்டுட்டே இருந்தேன்.

என்னோட தொல்லை தாங்காத எங்க மாமா ஒருத்தரு, “மாப்பிள்ளை வாங்க சித்த”ன்னு சொல்லி அந்தப் பக்கம் கூட்டிட்டுப் போனாரு. “ஏன் மாப்பிளை, பொண்டு புள்ளைக இருக்குற எடத்துல வுடாம நச்சரீங்களே?”.

“இல்லீங்க மாமா, அந்த ஒஞ்சியுண்ட்டு வர்றது....”

“இன்னும் நீங்க அத வுடலையா? அந்தக் குழந்தை, தாய்ப்பால் உண்ட்டு வந்ததைத்தான் சொல்லுதுங்க”

நெம்ப சங்கட்டமாப் போச்சுது. வண்டியக் கிளப்பிட்டு தெக்க தோட்டம் போனவன், ஒறம்பரைக எல்லாம் ஊட்டுல இருந்து கிளம்பினவுட்டுத்தானுங்க வூட்டுக்கே வந்தேன். வந்ததும் நடந்தது அர்ச்சனை, ஏகத்துக்குமு!! அவ்வ்வ்.....

=========================

காண்ட்ரேக்டருங்றாங்க... ஆள் ஏஜெண்ட்டுங்கராங்க... இப்ப எல்லாம் எந்த ஊர்லயும், இந்திக்காரவங்கதான் தோட்டங்காடுகளுக்கு வேலை பார்க்க வர்றாங்க. அவங்களைக் கூட்டியாறதுக்கு ஒருத்தன். ஏஜெண்ட்டுன்னு சொல்லி அவனுக்கு நெம்ப மரியாதை.

அப்படித்தானுங்க, நானும் பெரியபாப்பநூத்துல இருக்குற எங்க பெரியம்மாவிங்க தோட்டத்துல உக்காண்ட்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்தாரு. அதைப் பார்த்த எங்க நங்கை, எங்க பெரியம்மாகிட்டப் போயிச் சொன்னாங்க, “ஏனுங், அந்த ஏஜெண்ட் வந்துருக்காருங்க!”, அப்படின்னு.

ஊட்டுக்குள்ள அரிசி அரிச்சிட்டு இருந்த எங்க பெரியம்மா சொல்லுச்சு, “யாரந்த கொத்துக்காரனா? இருக்கச் சொல்லு.. அவனுக்கு ரெண்டு கொத்து புடிச்சிட்டுத்தான் தரோணும் இந்தவாட்டி!”, அப்படின்னுச்சு. இஃகிஃகி, உங்களுக்கு எதும் புரியுதாங்க? இதானுங்க நம்பூர்ப் பழமைங்றது!!

கொத்துக்காரன்னு சொன்னா, கூலி வேலைக்கு ஆள் கூட்டியாறவனுங்க. கொத்து அப்படின்னு சொன்னா, கூட்டம், திரள், கும்பல்னு மொத்தமா இருக்குறதை சொல்றதுங்க. பூங்கொத்துன்னு சொல்றம் இல்லீங்களா? அது போல!

அப்படி, மொத்தமா ஆள் கூட்டியாறவன் கொத்துக்காரன். பத்து ஆள் கூட்டியாந்தா, ஒரு ஆள் கூலி அவனுக்கு. அந்த கூலியச் சொல்றது, கொத்து. அப்படி, அவனுக்கு குடுக்க வேண்டிய பணத்துல, ரெண்டு கொத்துப் பணத்தைத்தான் தரக்கூடாதுன்னு சொல்லிச் சொல்றாங்க எங்க பெரியம்மா. அவன் இனி என்ன மொள்ளமாரித்தனம் செய்தானோ? எங்க பெரியம்மா என்ன திருகுத்தனம் செய்தோ தெரீலீங்களே??

15 comments:

ஓலை said...

தமிழ் நாட்டுக்குப் போனா நம் மக்கள் மொழி தெரியாம/புரியாம கஷ்டப் படக் கூடாதுன்னு இங்க திணியோ திணின்னு திணிக்கிறோம். இந்த வசனம் நமக்கே ஆடிடும் போல இருக்கே.

படிக்கிற காலத்தில ஒரு தடவ தென் தமிழநாட்டுப் பக்கம் போயிட்டு என்ன சொல்றாங்கன்னுப் புரியாம முழிச்ச முழி மறக்க முடியாது.

Mahesh said...

அட !!!!

yaanan.wordpress.com said...

தமிழ்நாட்டுக்கு வ்ந்தீர்களா?
யாணன்

yogesh said...

பெரிம்மாக்கிட்ட தெரிஞ்சிக்கிட்டு அடுத்த பதிவுல போடுங்களேன்....

vasu balaji said...

பழமைக்கே பழமை சொல்லி குடுத்துச்சே பாப்பா:))

கல்வெட்டு said...

ஒஞ்சியுண்ட்டு இது ==> உறிஞ்சி+உண்டு என்பதல்லவா?

என்ன அருமையான சொல் இது!

முலைப்பாலை தாய்ப்பாலாக்கி அது பற்றிப் பேசுவதுகூட கேவலமாய் ஆபாசமாய் அல்லது unparliamentary word ஆகிவிட்டதே கொடுமை. :-((

Breast Mil, Brest Cancer என்று சுலபமாக பேசச் சொல்ல முடுயும் கேடுகெட்ட சமுதாயம் தனது சொந்த வார்த்தைகளையும் அதைப் பொதுவில் பாவிப்பதையும் ஏற்க மறுக்கிறதே! போலிச் சமூகம். :-((

*

பழமைபேசி said...

@@கல்வெட்டு

ஆமாங்க; நானும் விடாம, ஒஞ்சின்னா என்ன? ஒஞ்சின்னா என்னன்னு கேட்கவும், அவங்க மற்ற பெண்கள் மத்தியில பேச விரும்பலை போலிருக்கு.

தனியா இருக்கும் போது கேட்டிருந்தா, ஒரு வேளை முலை என்றோ அல்லது ஆங்கிலத்தில் breast என்றோ சொல்லி இருக்கக் கூடும். ஆனால், நகரத்தில் இச்சொல் வாடிக்கையில் இல்லாதது வருத்தமே.

கிராமத்தில், ஒற்றைத் தலைவலி கண்டவர்களுக்கு முலைப்பால் பத்து போடுவார்கள் எங்கள் ஊரில்.

நான் சிறு வயதில் இருக்கும் போது, சர்வசாதரணமாக என்னை மற்ற வீடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள், “போடா, போயி பத்துப் போடுறதுக்கு முலைப்பால் வாங்கி வரச் சொன்னாங்கன்னு சொல்லி வாங்கிட்டு வா” எனச் சிறு கிண்ணத்தைக் கொடுத்தனுப்புவார்கள்.

Kumky said...

பழமை...

மொழியின் வசீகரம் அளப்பறியதென நிரூபணமாகிறது.

நசரேயன் said...

//தென் தமிழநாட்டுப் பக்கம் போயிட்டு என்ன சொல்றாங்கன்னுப் புரியாம முழிச்ச முழி மறக்க முடியாது.//

எங்க ?

மதுரை சரவணன் said...

ithu koththu illeengka... sirichchen... pakirvukku vaalththukkal

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
உங்கள் தமிழ் அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

ஓலை said...

Tuticorin (thoothukudi, thirunelveli) #For thalabathi

ஆ.ஞானசேகரன் said...

//எதும் புரியுதாங்க? இதானுங்க நம்பூர்ப் பழமைங்றது!!//

ம்ம்ம்ம் பழமை பழமைதாங்க...

இராஜராஜேஸ்வரி said...

இதானுங்க நம்பூர்ப் பழமைங்றது!!

sultangulam@blogspot.com said...

//யாரந்த கொத்துக்காரனா? இருக்கச் சொல்லு.. அவனுக்கு ரெண்டு கொத்து புடிச்சிட்டுத்தான் தரோணும் இந்தவாட்டி!', அப்படின்னுச்சு. இஃகிஃகி, உங்களுக்கு எதும் புரியுதாங்க?//
எங்க ஊரில் கொத்துக்காரன்னா வீடு கட்டித்தர கொத்தனார், சித்தாள் முதலிய ஆட்களை கொண்டு வரும் மேஸ்திரிக்கு சொல்வார்கள். "ரெண்டு கொத்து புடிச்சிட்டுத்தான் தரணும் இந்தவாட்டி" என்றால் இரண்டு கொத்தனார்களின் சம்பளத்தை தராமல் பிடித்து வைத்துக் கொண்டு குறிப்பிட்ட வேலை சரியாய் செய்து முடித்ததும் தருவதற்கு சொல்வார்கள்.
உங்க பக்கத்துக்கும் நம்ம பக்கத்துக்கும் பேச்சுல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு போலருக்கு :))
பதிவு அருமைங்க.