5/19/2009

இலங்கை வைத்துக் கொண்ட சூன்யம்...

தெற்காசிய அரசாட்சி போன்றதொரு கயமைத்தனம் வாய்ந்த ஒன்று இந்தப் புவியில் வேறொன்றும் இருக்க முடியாது. இந்தியா, பாகிசுதான், ஆப்கானிசுதான், வங்காள தேசம், நேபாளம், பூடான், இலங்கை, ஈழம், பர்மா, மாலத்தீவுகள் அடங்கிய இந்த பகுதியில, என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது?? ஒருவருக்கொருவர் வைத்துக் கொள்ளும் சூன்யம் நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழிய, குறைந்த பாடில்லை. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு, தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூன்யம்தான், தற்போது நிகழ்ந்து வரும் கபட நாடகங்களும், செயல்களும்.

பெரிய பெரிய வல்லரசுகளே, செய்த தவறுகளுக்கு உண்டான விளைவுகளை அறுவடை செய்யும் இவ்வேளையில், மனிதர்களைக் கொன்று குவித்தும், கபட நாடகங்கள் ஆடுவதின் மூலம் நம்பகத் தன்மையைக் குலைத்துக் கொண்டும், நன்றாக மாட்டிக் கொண்டது இலங்கை என்பதே உண்மை.

தமிழர்கள் என்று பார்த்தால், உலகம் முழுமைக்கும் பரவலாக கிட்டத்தட்ட எட்டு கோடிப் பேர் இருக்கலாம் எனத் தெரிகிறது.


இந்தியா - 6,50,00,000
ரெயூனியன் - 1,25,000
இலங்கை - 35,00,000
பிஜி - 80,000
மொரிசீயசு - 1,00,000
மலேயம் - 18,00,000
சிங்கப்பூர்- 2,50,000
கனடா - 3,50,000
சுவிட்சர்லாந்து - 45,000
ஆப்பிரிக்க நாடுகள்- 3,00,000 (இராகவன் ஐயா மற்றும் உருப்புடாதது அணிமா சேர்த்து)
பிரித்தானியா - 2,00,000
இதர நாடுகள் - 15,00,000

அண்மைக் காலமாக அவர்களது படிப்பறிவும், பொருளாதார வளர்ச்சியும் வெகு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதும் கவனிக்கத் தக்கது. இப்படியாக தமிழர்கள், உலகில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. நடப்புத் தலைமுறையினர் வரையிலும், மாறாமல் இருந்து வரும் குறைபாடு ஒன்று என்றால், அது சகிப்புத்தன்மை இல்லாமை என்பது சொல்லித் தெரிவது இல்லை. ஆனால், வரும் தலைமுறையினர் நன்கு கற்றுத் தேர்வதோடு மட்டுமில்லாமல், ஆளுமை பொருந்திய வண்ணம் இருக்கிறார்கள். அது கண்டு இந்தியா மட்டுமல்ல, அகில உலகமும் வியந்த வண்ணம் இருப்பதுவும் கண்கூடு. ஆகவே, தமிழனைத் தமிழனாய் மதித்துச் செயல்பட்டாக வேண்டிய நிலை வந்தே தீரும்.

உதாரணத்திற்கு, நடப்பு ஆண்டில் இந்திய ஆட்சியாளர் பணித்துறையில் (IAS) தேர்வு பெற்ற தமிழர் எண்ணிக்கை 96 பேர். மொத்த தேர்ச்சி 791 பேர். பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு இலக்கத்தில் இருந்தாலே அது பெரிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், இதில் பெரும்பங்கு வகிக்கும் சைதை துரைசாமி அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றி கூறுவது நம் கடமை. ஆகவே, தமிழன் என்றாவது ஒரு நாள் ஆள்வான், அவனது கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நண்பர்களே, அந்த நல்ல நம்பிக்கையோடு தொடர்வோம் வாருங்கள் தமிழோடு! சிங்கை நண்பர் அ.ஞானியார் காணொளிக் கருவி என்று அவரது இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறார். எமக்கு அதை வாசிக்கையில், வாசிப்புத் தட்டுகிறது அன்பர்களே. அப்படியானால், என்னதான் சொல்வது?

ஆங்கிலத்திலே, tool, equipment, instrument என்று தனிப்பட்ட சொற்கள் கொண்டு புழங்குகிறோம் அல்லவா? அதைப் போலவே தமிழிலும். இதனால், ஒன்றைச் சரியாகக் குறிப்பிட முடியும். Tools are objects to work with and that is generic. Instrument is not generic, it has pre-defined purpose and an instrument is also a piece of equipment. Equipment is an aggregation term of instruments.

ஆயுதம், கருவி, சாதனம் என்பதைக் கேள்வியுற்று இருப்பீர்களல்லவா? இந்த சொற்களையும் மேலே சொன்ன விளக்கத்தையும் பொருத்தி பாருங்கள், எளிதில் இனம் காணமுடியும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறோம். ஆக, எதுவும் ஆயுதம் ஆகலாம். ஒரு செயலைக் கருத்தில் கொண்டு செய்வன கருவி. ஒரு காட்சியை நிழலாகப் பிடிப்பது, நிழல்படக் கருவி. ஒலி, ஒளி என ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பிடித்துக் காண்பிக்கும் சாதனம், காணொளிச் சாதனம். ஒருவருக்கு, அழகூட்டக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்டவற்றைச் சொல்வது, அழகு சாதனப் பொருட்கள். இந்த மூன்று சொற்கள் தவிர, பொறி, எத்தனம், எந்திரம் என்று நிறைய உள்ளது. ஆனாலும், மேற்கூறிய மூன்றுமே அடிப்படை.

பாதிப்பும், தாக்கமும் பெரும்பாலும் சரிவர பாவிக்கப்படுவது இல்லை. இது தமிழில் மட்டுமே அல்ல, ஆங்கிலத்திலும்தான். Yes, 'effect' and 'affect' are used interchangeably with wrong interpretation often. When you affect something, you produce an effect on it. பாதிக்கப்படும் போது, நம்முள் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், சகிப்புத்தன்மை கொண்டு, உணர்ச்சி வயப்படாமல் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவோம், நாளை நம் கையில்!!!

5/18/2009

கடைசி நேர பிரச்சாரம் தோற்கட்டும்!



உடல் கிடைத்திருக்கிறதா? காண்பிக்க வேண்டியதுதானே?? ஊடகங்களே, அழுவாச்சி நாடகங்கள் எதுவும் கைவசம் இல்லையோ??

உண்மையாக இருப்பினும், தோல்வி யாருக்கு? அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது வெற்றியா??

தூக்கிலிட்ட போதும், வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்?



என் விழிகளினைக் காண
இயலாது திரும்புமாறும்
என் முறுவலினை ஏந்த
இயலாது குனியுமாறும்
உன் உளம் பலம்குன்றிற்றா?
உண்மையில் அன்பு செய்த
முன்னைய நிலையை மூட
முனைந்தனையா இப்போது?

இறப்புற்ற கணங்களெல்லாம்
உண்மையில் இறப்பதில்லை.
பிறப்புற்று எம் வாழ்க்கை ஏட்டின்
பின்புறம் தொடர்ந்து நிற்கும்.
மறப்புற்று வாழ்தல் பொய்
அம் மணித் துகள்களினை.

நாங்கள்
இறப்புற்ற போதும்
அந்தக் கணங்களோ
இறப்பதில்லை!

5/12/2009

புன்னைப்பூ!


இளவஞ்சிப்பூ பூத்திருக்க
புன்னைப்பூவும் பூக்குமல்லோ?
துணைக்கந்த ஆத்திப்பூவும்
அழகழகா அரும்புமல்லோ??

அன்புள்ள வாசகர்களே! வணக்கம்!! எமக்கென்று ஒரு வலைப்பூ உண்டுபண்ணி பதினொரு மாதங்கள் ஆயினும், ஆரம்ப காலத்தில் நண்பர்கள் மட்டுமே வாசிக்கும் வண்ணம் இருந்தது. பின்னர், சில மாதங்கள் கழித்து மெதுவாக பதிவுலகிலும் நுழைந்தோம். மிக நல்ல அனுபவம். திரும்பிப் பார்க்கையில் மிக வியப்பாகவும் மகிழ்வாகவும் உள்ளது.

இன்னும் எழுதுவதற்கு கிராமத்து நினைவுகளும், வட்டார வழக்குகளும், தமிழ் சார்ந்த விபரங்களும், புனைவுகளும், நனவுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இது பூக்கும் காலமன்றோ? முதலில் எள்ளுத் தாத்தா எழுதிய வைத்தியம் எனும் தொடரைத் துவங்கினோம். இன்னும் அது முற்றுப் பெறவே இல்லை. மீதம் இருக்கும் விபரங்களையும் எழுதத்தான் வேண்டும். ஆனாலும் இது மொட்டு மலரும் காலமன்றோ??

பின்னர், சித்திரக்கவி வரிசையில் பாடல்கள் எழுத, கவி காளமேகத்தின் தாக்கம் எனும் தொடரைத் துவங்கினோம். துணைக்கு, அண்ணன் மகேசு அடியெடுத்துக் கொடுக்க, கனவில் கவி காளமேகம் என்ற தொடரையும் துவங்கினோம். இந்த இரண்டும் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆயினும் இது அலரி விரியும் பொழுதன்றோ?!

அதன் பின்னர், கிராமியத்து நனவுகளோடு நடப்பு நிகழ்வுகளையும் கலந்து கொடுக்க பள்ளையம் எனும் தொடர் கண்டோம். அதுவும் நிலுவையில்தான்! பதிவது புரிதலே ஆயினும், இனிவரும் நேரம் செந்தும்பை செவக்கும் நேரமன்றோ?! ஆகவேதான் அன்பர்களே, ஓரிரு திங்கள் கழிந்து மறுமலர்ச்சியுடன் திரும்பும் வரையில், உங்களுக்கு பணிவான வணக்கமும் நன்றியும் சொல்லி விடைபெறுகிறேன்!!

பழமைபேசி (எ) மெளன. மணிவாசகம்.

பொள்ளாச்சி: ஓட்டு நோம்பி, ஒரு கண்ணோட்டம்!

அன்பர் குறும்பன் அவர்கள் கொங்கு பகுதியில் தேர்தல் நிலைமை குறித்து மிகவும் ஆவலாய் இருப்பதோடு, யாரும் அலசி ஆராய்ந்து பதிவிடவில்லையே என்ற ஆதங்கத்திலும் இருக்கிறார். எனவேதான், இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த இடுகையை இடுகிறேன். எங்கேயோ அமெரிக்காவில் பெட்டி அடித்துக் கொண்டிருப்பவனுக்கு பொள்ளாச்சியைப் பற்றி என்ன தெரியும் என்று வினவலாம். நியாயமான கேள்விதான்!

செவ்வாய் கிரகத்தைப் பற்றி இங்கிருந்தே அலசுவது இல்லையா மக்களே? நான் அந்த மண்ணில் பிறந்து, பட்டி தொட்டிகளில் மாடு மேய்த்தவன், தெரிந்ததையும், மனதில் பட்டதையும், கேள்வியுற்றதையும் சொல்ல ஆசைப் படுகிறேன். ஆகவே பொறுத்துக் கொள்ளவும்! இஃகிஃகி!!

1985 வரையிலான பொள்ளாச்சி பாராளுமன்றத் தொகுதியின் வாக்காளர் மனநிலை வேறு, இப்போதைய வாக்காளர்களின் மனநிலை வேறு. 1985 வரையிலும், வேளாண்குடி மற்றும் ஏழை மக்கள் ஏகமனதாய் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களிப்பர். உடுமலை, பொள்ளாச்சி நகர்ப்புற மற்றும் பெதப்பம்பட்டி பேரூர்ப் பகுதிகளில் மட்டும் தி.மு.கழகத்திற்கு கணிசமான வாக்காளர்கள் உண்டு. ஏனைய கிராமப்புறப் பகுதிகளில் அ.தி.மு.கழகம் செல்வாக்கோடு திகழ்ந்தது. அதே வேளையில், காங்கிரசுக் கட்சிக்கும் கிராம, நகர்ப்புறப் பகுதிகளில் தி.மு.கழகத்தை விட ஆதரவு அதிகமாக இருந்தது.

நாடு விடுதலை அடைந்ததிலிருந்தே, பெரியவர் அய்யாமுத்து, அருட்செல்வர் மகாலிங்கம் ஐயா, தொழிலதிபர் வெ. வித்தியாசாகர் ஐயா, கோவிந்தராசு அவர்கள், திருமலைசாமி அவர்கள் என்று நிறைய பிரபலங்களின் ஆதரவும் காங்கிரசுக்கு உண்டு. அதுபோக, உடுமலை HMS சின்னச்சாமி, INTUC P.L. சுப்பையா முதலிய தொழிற்சங்கத் தலைவர்களின் ஆதரவும் காங்கிரசுக்கு உண்டு. இடையில், நாராயணசாமி ஐயா அவர்களின் விவசாயிகள் சங்கம் இந்தப் பகுதியில் செல்வாக்கு பெற்று, பின்னாளில் அந்த வாக்காளர்கள் தி.மு.க, பின்னர் ம.தி.மு.கவுக்குச் சென்றனர்.

இந்தப் பின்னணியில் இருந்த தொகுதியில், 1985க்குப் பிறகு வந்த கல்வியறிவு கூடிய இளைஞர்களால் போக்கு மாறத் துவங்கியது. கிராமங்களில் தி.மு.க மற்றும் இன்றைய ம.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு பெருகியது. இதன் காரணமாய், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொங்கலூர்ப் பகுதியில் என்றும் இல்லாதவாறு, 1985க்குப் பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க/ம.தி.மு.க வென்று சாதனை படைத்தது. இந்தப் பின்னணியில்தான் ம.தி.மு.கவின் கிருட்டிணன் தொடர்ந்து வெல்லவும் முடிந்தது.

இதற்கிடையில் 2006 சட்டசபைத் தேர்தல் வந்தது. தி. மு. கழகத்தில் உள்ள உள்ளூர்ப் பிரமுகர்களிடம் படுபயங்கரமான உட்கட்சிப் பூசல். அது மட்டுமல்லாது, உடன் இருந்த ம.தி.மு.கழகமும் அணி மாறியது. இதன் காரணமாய், மீண்டும் தி.மு.கழகம் பெரும்பாலான கோவைத் தொகுதிகளில் தோற்றது. அதன் விபரம் வருமாறு:

கிணத்துக்கடவு (அதிமுக) வித்தியாசம்: 5150
பொள்ளாச்சி (அதிமுக) வித்தியாசம்: 2946
உடுமலை (அதிமுக) வித்தியாசம்: 3463
வால்பாறை (காங்) வித்தியாசம்: 20979
பொங்கலூர் (திமுக) வித்தியாசம்: 53
தாராபுரம் (திமுக) வித்தியாசம்: 4712

ஆக, இந்த ஆறு தொகுதிகளில் பெற்ற வாக்குகளைப் பார்க்கும் போது திமுக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது தெரிகிறது. இனி 2009க்கு வருவோம்.

இப்பகுதியில் ம.தி.மு.க கலகலத்து விட்டது என்பதே உண்மை. மு.கண்ணப்பன் அவ்ர்கள், காட்டம்பட்டிக் கந்தசாமி அவர்கள் போன்றோரெல்லாம் இப்போது தி.மு.கழகத்தில். ஆக, அ.தி.மு.கழகம் இப்பகுதியில் வலுவிழந்திருக்கிறது. அது போக, கொங்கு முன்னேற்றப் பேரவை எழுச்சியோடு களம் காணுகிறது. இப்பகுதியில் இருக்கும் காங்கிரசார் எப்போதும் தி.மு.கவுக்கு வாக்களிப்பது கிடையாது, கூட்டணியாய் இருந்தாலும்! அவர்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பது வழக்கம்!! இந்தத் தேர்தலில் எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல், கொ.மு. பேரவைக்கு வாக்களிப்பதின் மூலம் அவர்களுக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

கூடவே, தி.மு.க மற்றும் அ.தி.மு.கழகத்தில் இருந்தும் கொ.மு.பேரவைக்கு வாக்குகள் வெகு தாராளமாகச் செல்லக்கூடும். இது போதாதென்று தே.மு.தி.கவும் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அள்ளும். இந்த இரு வேட்பாளர்களும் எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகம் கவர்கிறார்களோ அது தோற்கும். கடைசி நேரத்தில், தோற்கும் மனநிலையில் உள்ள வேட்பாளர் இந்த இரு (திமுக, அதிமுக) கட்சிகளில் யாரோ ஒருவருக்கு உள்ளடி வேலை பார்ப்பதுவும் உண்டு. ஆனால், கொ.மு.பேரவையைப் பொறுத்த மட்டில் அது நடக்க வாய்ப்பு இல்லை. ஆகவே, திருப்பூர் மச்சானுக்கு மாலை விழலாம்!


5/08/2009

ஆதாளம்!

Would you continue talking with a person who always talks about himself?


இடம்பம் கதைத்து கெம்பத்து ஓதி
சவடனை அடித்து விண்ணானம் ஆய்
ஆதாளம் உய்த்து தன்பட்டம் கொளல்
ஆவது இனிதா மோ?!

5/03/2009

கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்...

கோழிக கூப்புட,
சாவலுக கூவ,
குருவிக சிலுசிலுக்க,
பால்காரன் மணியடிக்க,
இன்னுஞ்சித்தநேரந் தூங்குவமின்னு,
இழுத்துப் போத்தயில,
எழுந்திருடா மணியா
உடலைப்பேட்டை போயித்
துணியெடுத்து தெக்கக்குடுத்துட்டு
வருவமுன்னு சொல்லி எழுப்பிஉட்டு,
குடிக்க காப்பித்தண்ணியுங் குடுக்க
நெறஞ்சமனசோட எட்டுமணி வண்டிக்கு
வாகாப் பட்டணம் போனோம்!

அந்த பட்டணத்து நடுப்புல
கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்
வித்தக்காரன் கூட்டங்கூட்ட
நானும் ரெண்டு எட்டுவெச்சு
பராக்குத்தான் பாப்பமின்னு போக,
அம்மாக்காரி சொன்னா,
ஏன்டா வேலியில போற ஓணானை
எடுத்து மடியில உட்டுக்கிற?


என்னடா இவன் தலையும் இல்லாம, வாலும் இல்லாம ஓணாங்கீணான்னு எல்லாம் பாட்டுப் படிக்கிறானேன்னு யோசிக்குறீங்களா? விசயம் இருக்கு, வாங்க பேசுலாம். போன வாரத்துல ஒரு நாளு, நம்ம கவிஞர் கயல் அவிங்க பதிவுக்கு போயி, அவங்களோட ஒரு இடுகைக்கு, நனவோடை நல்லா இருக்குன்னு சொல்ல, அவங்க நனவோடைன்னா என்னன்னு திருப்பிக் கேக்க, எனக்கு கதி கலங்கிப் போயிருச்சு.

கதி கலங்குறதுன்னா என்ன? அதுக்கு தனியா ஒரு இடுகைதான் போடணும். இப்ப குறுக்க பேசப்படாது! ஆமாங்க, அவங்க திருப்பிக் கேக்க, நாம உள்ளக்கிடக்கய வெளிப்படுத்துன விதம் நல்லாயிருக்குன்னு சொல்லிச் சமாளிச்சோம். அவங்க, தான் எழுதின கவிதைய நனவோடைன்னு சொல்லிட்டானேன்னு கோவிச்சுகுவாங்களோன்னு ஒரு சங்கடம். அந்த கையோடயே, கவிதைன்னா என்னன்னு நம்மகிட்ட இருக்குற புத்தங்கங்களைத் தூசி தட்டினோம். வலையில மேஞ்சோம். வெவரந்தெரிஞ்ச நாலு பேர்கிட்டவும் கேட்டுப் பாத்தோம்.

ம்ம்ம்... ஒன்னு ஒன்னும் ஒன்னு சொல்ல, பேசுனவங்களும் அவங்க பழமயச் சொல்ல, நமக்கு ஒரே கொழப்பமாப் போச்சு. கடசீல, கையேட்டுல சொல்லி வெச்சது ஏத்துகிடுறா மாதர இருக்கு. அதை வெளில சொன்னா, வேண்டாத பொல்லாப்பு வரும். அப்பத்தானுங்க, வேலியில போற ஓணானை எடுத்து மடியில உட்டுக்குற கதை ஞாவகத்துக்கு வந்துச்சு. பெரிய பெரிய பாட்டுகாரங்க, கவிஞருங்க சொன்னா அது சபை ஏறும். நமக்கெதுக்கு வம்பு?!

தலைவரையோ, தலைவியையோ போற்றிப் பேசுறாங்க. அது புகழுரைன்னுதான வரும்?! ஆனாக் கவிதையின்னு சொல்லுறோம். காதலிய அப்படீ இப்படீன்னு நல்லதா நாலு பழம சொல்லும் போது, வர்ணனையின்னுதான வரோணும்? ஆனா, அதையும் காதல் கவிதையின்னு சொல்லுறோம். மன்சுல தோணுற நெனப்பையெல்லாம் ஒரு சீராச் சொல்லுறோம். அதையுங் கவிதையின்னே சொல்லுறம்?! அந்தக் காலத்துல எல்லாம், சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு சொல்லி, அதுக்கு இலக்கணமுஞ் சொல்லி வெச்சாங்க. இந்த காலத்துலயும், பெரியவிங்க எல்லாம் ஒன்னு கூடி எல்லாரும் ஏத்துகிடுறா மாதர, கவிதையின்னா என்னன்னு சொல்லி வெச்சாத் தேவுல.



ஆமாங்க, உற்பத்தி பண்றதெல்லாம் கவிதை இல்லீங்களாம். சொல்ல நினைக்குறதை, இலக்கண வரம்புக்குள்ள வெச்சி செய்யுறது செய்யுள்ன்னு வருமுங்களாம். செய் + உள்வைத்து = செய்யுள். இஃகிஃகி! உள்ளக்கிடக்கைய வெளிப்படுத்துறது, நனவோடை. அதுக்கு, பெரியவங்க சொன்ன இலக்கணம் இதுதானுங்க. “வாசகர்களின் மனதைச் சுண்டியிழுக்கும் பாங்கினில், காலம், இடம் இவற்றினைப் பொருட்படுத்தாமல், மனதில் உள்ள எண்ணங்களை அலை அலையாகக் கிளப்பிவிடப்பட்ட நிலையில், நல்ல சொற்கள் கொண்டு வடிமைப்பது நனவோடை (Stream of Consciousness)!". என்னோட மனசுல எப்பிடி, அலை அலையாக் கெள்ம்புதுன்னு பாருங்க சித்த! கேவலமா இருந்தா கண்டுகிடாதீங்க சரியா?!


ஓய்வு ஒழிவு இன்றி
மூடுமந்திரம் ஓதி
அலையாய் அலைந்து
பின்னால்வர ஆட்சேர்த்து
உளம்கவர் வேடமிட்டு
மனங்கோணாப் பேச்சுப்பேசி
வினையாற்றுதல் யாதென
சிரத்தையுடன் எண்ணியதில்
ஒருநிலைக்கு வந்தாயிற்று,
வேண்டாம் அரசியல்!!!




5/02/2009

விமர்சனம்: நனவுகள்!

"எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமைபேசியின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே!"

வணக்கம் அன்பர்களே! வார இறுதி நாட்கள் இனிமையாக் கழிந்து கொண்டிருக்கையில், அன்பர் ஒருவர், நனவுகள் சிறுகதைப் புத்தகத்தைப் படித்ததின் பயனாய், நம்மோடு அளவளாவும் பொருட்டு அழைத்ததின் பேரில், நேற்றிரவு அலைபேசியில் சிறிது நேரம் விவாதித்துக் கொண்டு இருந்தோம். கதைத் தொகுப்பினைப் படித்தவர் உணர்ச்சி வயப்பட்டவராய் இருந்ததை அறிய முடிந்தது. அவருடைய பாராட்டுதலுக்கு நன்றி உடையேன்.

தானே கதையின் நாயகனாய் உணர்ந்ததாகவும், பழைய நினைவுகளை அப்படியே அள்ளி வந்ததாகவும் கூறிவிட்டு, எப்படி சிறுகதைகளை எழுதுவது என்றும் வினவினார். ”ஐயா, நானே இப்போதுதான் அரிச்சுவடியைப் புரட்டிக் கொண்டு இருக்கிறேன். நிலைமை அப்படி இருக்கையில், நான் உங்களுக்கு எப்படி?” என்று இழுத்து சமாளித்தேன்.

அவரது கேள்வி, என்னை அது பற்றி மிகவும் சிந்திக்க வைத்தது. அதன் விளைவே இந்த இடுகை! சுயஆய்வு என்றும் கூட வைத்துக் கொள்ளலாம். ’அளவளாவுதல்’ எனும் பொருளில் புனைபெயராய்ப் பழமைபேசி!. ஆனாலும் கூட, பழமையான பற்றியங்களில் நாட்டம் கொள்வதும் இயல்பாய் என்னுள் ஏற்படுகிற ஒன்றுதான். இலக்கியத்திலும் அவ்வாறே பகுப்புகள் இருப்பதைக் காணலாம். செவ்வியல் (Classicism), புனைவியல் (Romanticism), நடப்பியல் (Realism), மறுமலர்ச்சி (Renaissance) முதலியவற்றை அடிப்படையாகத் தன்னுள் வைத்திருப்பதுதான் படைப்புகள்.

அவரவர் மனநிலைக்கு ஏற்ப இவற்றில் ஏதோ ஒன்றில் அவர்களுக்கே தெரியாமல் ஆட்படுவது உண்டு. இன்றைய காலகட்டத்தில், வெகுசனப் பத்திரிகையில் பெரும்பாலும் வருபவை, தமிங்கிலத்தைக் கொண்ட நடப்பியல் மற்றும் புனைவியல் அடிப்படையிலான படைப்புகளே! கிராம வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட எவரும் நடப்பியல் அடிப்படையில், அதுவும் இந்த உலகமயமாக்கல் யுகத்தில் படைப்பது என்பது சவாலானதே; புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட! கூடவே, இயன்ற வரை தமிழில் எழுத வேண்டும் என்கிற வேட்கையும், பிடிவாதமும் இருப்பவனுக்கு நடப்பியல் கைகூடி வராதுதான்!

ஏன் வராது என்று வினவலாம், வாதிடலாம்; தனித் தமிழிலும் எழுதிப் படைக்கலாம்; ஆனால் படிப்பதற்கு வாசகர்கள் வேண்டுமல்லவா?! இந்தப் பின்னணியிலே, படைப்பாளன் தனக்குப் பிடித்த பற்றியங்களை அவனுக்குப் பிடித்த பாங்கில், ஏற்றிச் சொல்வது அவனுடைய ஏற்றல் கொள்கை (Theory of Reception). அந்த ஏற்றலில், அடிப்படையாக அவனுக்குத் தேவைப்படுவது உருக்காட்சி (Imagination), அதையே கற்பனை வளம் என்றும் சொல்கிறார்கள். கற்பனை வளம் ஒன்று மட்டுமே நல்ல படைப்பைத் தந்து விடாது. கற்பனையில் தோன்றுவதையும், கண்ணால் கண்டதையும் உள்ளத்தில், மனக் கண்களில் உருத்தோற்றத்தை உண்டு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும்.

அந்த உருக்காட்சியை, சொல்லாட்சியால் தொய்வில்லாமல் விவரிக்கலாம். சொல்லாட்சியை, சொல்வளம், தொடர், அடைமொழி, உவமை, உருவகம், சொற்சித்திரம், பழமொழி, சொலவடை, தகவல்த் தொகுப்பு என்று பல அம்சங்கள் கொண்டு செலுத்திடவும் முடியும். ஆனால், உவமையும் உருவகமும் கொண்ட வர்ணனை, வாசகனைப் படைப்பில் ஒன்றிவிடச் செய்வதற்கு மிக முக்கியம். அந்த வர்ணனை, தேவையான அளவு மட்டுமே பாவித்தல் வேண்டும், இல்லாவிடில் வாசகனின் கவனம் சிதறவும் வாய்ப்பு உள்ளது.

வெறுமனே, “மாலை நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்தான்!” என்பதை விட, “கைரேகைகள் தெரிந்தும் தெரியாமலும் மங்கிய மாலைக் கருக்கல், அங்கங்கே ஒளிச்சிதறலை நாடி ஓடும் பூச்சிகள், அந்தத் தருணத்தில் வீதியில் வேகமெடுத்தவனாய்ச் சென்று கொண்டிருந்தான்!” என்று சொல்வது காட்சியில் ஒன்ற வைக்கும் யுக்தி. அது அவனது உருக்காட்சியையும் பிரதிபலிக்கிறது. இந்த யுக்திகளோடு உருக்காட்சியை வடிமமைத்து, வேட்கை, உவகை, பால் உணர்வு, புலன் உணர்வு, அமைதி, கண்ணீர், நெகிழ்ச்சி, துன்பம், இழப்பு, வெற்றி முதலான வாழ்வியல் அங்கங்கள் கொண்டு படைப்பன எதுவும் ஒருவரை ஆட்கொள்ளும் என்றே எண்ணுகிறேன்.