வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் விழாவுக்காக சேன் ஆண்டேனியோ நகரில் இறங்கியதுமே குதூகலம் பற்றிக்கொண்டது. வாட்சாப்குழுக்களில் எதிர்கொண்ட முகங்களெலாம் நேர்கொள்வதன் நிமித்தம் பீறிட்ட அகவூற்றின்கண் வழிந்தோடிய அன்பின் ஆறு அது.
இருட்டின் வாடை அடிக்கத் துவங்கியதும் தாகசாந்திக்கான ஏக்கம் பிறப்பது இயல்புதானே? இயல்பின்கண் மருங்கில் கூடத் துவங்கியது கூட்டம். யாரோ இருவர் வந்து கூட்டத்தினூடாக உட்கார்ந்து கொண்டனர்.
தாகசாந்திக் கூடலில் எல்லா ஆட்களும் நம் ஆட்கள்தானே? கூட்டாஞ்சோற்றில் ஏது உன்வீட்டுச்சோறு, என் வீட்டுச்சோறு?? எல்லாமும் ஒரே சோறு, அது கூட்டாஞ்சோறுதான். இருந்தாலும், முனைவர் பாரதி பாண்டிக்குப் பொறுக்க முடியவில்லை. எங்க ஊர்ல இருந்து வந்திருக்காங்க, சமையல் தாதா இவரு, அப்படி இப்படியென! நண்பர்களைப் பற்றி வியந்தோதாவிட்டால் கொலைக் குற்றத்துக்கு ஆளாக நேரிடுமேயென்கின்ற பதைபதைப்பு அவருக்கு. சரி, சரி, எதுன்னாலும் கண்ல காமிச்சிட்டுப் பேசுங்கய்யா என்பது போல உட்கார்ந்திருந்தது கூட்டம்.
அதிகாலை ஒரு நான்கு மணி இருக்கும். அவரவர், அவரவர் உடம்பை வேண்டா வெறுப்பாகக் கிடத்திக் கொண்டனர். இடையில் எத்தனை எத்தனையோ பேச்சுகள், இடப்பெயர்வுகள். நான் காலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து ஒரு லிட்டர் தண்ணியாவது இருக்கும். குடித்து உடலை நீர்மயப்படுத்திக் கொண்டு, ஓடைப்பக்கம் நடைபயிலச் சென்றேன். யாரையும் காணோம். இளமசக்கைக் கருக்கலில் யாரோ பின் தொடர்வது போன்ற ஓர் உணர்வு. முனைவர் கபிலன் அவர்கள். அளவளாவிக் கொண்டே போனோம் வந்தோம்.
ஜூலையிலிருந்து நவம்பர் மாதத்துக்கு வந்துவிட்டோம் இப்போது. பேரவையின் 38ஆவது விழா ’கிக்-ஆஃப் மீட்டிங்’. கூட்டமெல்லாம் முடிந்து, உள்ளூரில் இருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று விழாவுக்கான ஆதரவு நாடல் சந்திப்புகள். மீண்டும் இருட்டு வாடை. இஃகிஃகி. உணவகத்துக்குச் சென்று, தீரத்தீர உண்டாட்டும் நீராட்டும். கொப்பளிக்க கொப்பளிக்கப் பேச்சுகள், கெக்கலிப்புகள். அதனூடாகத் தலைவர் போட்டாரே ஒரு போடு, “கவனிப்பெல்லா வலுவா இருக்கூ. ஆனா இதைவெச்சி ஆர்டர் குடுப்பம்னெல்லா ஆரும் எதிர்பார்க்கக் கூடாது; எல்லா முறைப்படிதா நடக்கும்”. ஓவெனச் சிரித்துவிட்டனர் எல்லாரும். சந்தடிசாக்கில், அப்படியே மதுரை விழாவுக்கும் கொடையை உறுதிப்படுத்திக் கொண்டார் முனைவர் பாரதி பாண்டி, கருமமே கண்ணாளனாக.
மதுரை மாநாடு முடிந்து பிப்ரவரிக்கு வந்துவிட்டோம். பேசிக்கொண்டிருக்கையில், அதென்ன பண்றீங்க? இதென்ன பண்றீங்கயென கேள்விக்கணைகள். ’எப்பா யேய், இதெல்லா எனுக்குத் தெரியாதுப்பா, இரு நீயி’ எனச் சொல்லிக் கொண்டே உணவுநாயகன் ஷான் பச்சமுத்து அவர்களைக் கோர்த்துவுட்டு விட்டேன். அவரை கூப்பிடு, இவரைக் கூப்பிடுயென, அழைப்பில், சிக்காகோ சரவணன், ஷான் பச்சமுத்து, இரத்தினகுமார், விஜய் சாந்தலிங்கம், திருமலைஞானம், இப்படிப் பலரும் அதெப்படி, இதெப்படி, இப்படிப் பலவாறாக நீண்டன பேச்சுகள். உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, திருக்குறள் மாநாடு, முதல்வர் விழா, அந்த விழா, இந்த விழா, எனப் பலவிழாக்களின் அனுபவங்களும் அணிகோர்த்து நின்றன. ’நீங்க பேசுங்க, நம்ம வேலை முடிஞ்ச்’ என்கிற பாங்கில் நாம் இறங்கிக் கொண்டோம்.
மே மாதத்தில் பூங்காக்கூடல். அன்றுமாலை மீண்டும் அளவளாவல். நாம் சும்மா உப்புக்குச்சப்பாணியாக, பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். உணவில் இன்ன பொருள் சேர்க்கக் கூடாது, இன்னது சேர்க்க வேண்டுமென்றெல்லாம் உணவுக்குழுவினரே ரெசிப்பிகளை ரிப்பேர் செய்து கொண்டிருந்தனர். சாப்பாட்டு மன்னன்கள் வேலை அது. நமக்கு ஒன்றும் விளங்கவில்லை. பின்னாளில் அறிந்து கொண்டது, அத்தனையையும் உணவகத்தார் ஏற்றுக் கொண்டனராம்.
லைம் அண்ட் லெமன், சங்கம் என்பது இருவேறு நிறுவனங்கள். ஓராண்டாக, பேரவையுடன் கலந்து பழகி, கற்றுக் கொண்ட தகவல்களையெல்லாம் அடுத்த நிறுவனத்துக்கும் கொடுத்துத் திட்டமிடுதலுக்குத் துணைபோகின்றது லைம் அண்ட் லெமன். சந்தையில்தான் இரு வேறு நிறுவனங்கள். விழாவில் நாம் எல்லாரும் தமிழர்கள்தானே?! இவையெல்லாம் நம் சிற்றறிவுக்கு உட்பட்டவை. இது போல இனி என்னென்னவெல்லாமோ? இப்படியாகத்தான், பாரதி பாண்டி, ஷான் பச்சமுத்து, ஜெயராஜ் கனகராஜ், ஆனந்த் செல்வராஜ், மோகன் வைரக்கண்ணு குழுவினர் படைத்தார்கள் அன்னச்சத்திரம் 2025.
Strategy in the details, dedication in the execution. 🎯
-பழமைபேசி.